விரல்கள் நடுங்க அலைபேசியைக் கையில் வைத்திருந்தாள் மனோ. குமரன் இலக்கத்தை பத்து முறைக்கும் மேல் தட்டச்சு செய்து அழித்து என மனம் அந்நொடி செத்து செத்துப் பிழைத்துப் போக, அழைத்துவிட்டாள். ஒரே மனதாக அழைத்துவிட்டாள் குமரனுக்கு.
‘அழைப்பை ஏற்று விடாதே! நிமிடத்தில் எனக்கும் உனக்குமான தொடர்பு அறுந்து விழப் போகிறது!’ என உள்ளம் கத்தி இரைச்சலிட, உடையவனோ ஏற்றுவிட்டான் அழைப்பை. இவள் பேச்சிழந்து, செயலிழந்து போனாள்.
“சொல்லு!” குமரன் குரல் கேட்டதும் பொல பொலவென விழிகளில் நீர் சொட்டியது. குரல் அடைத்துப் போக, சத்தியமாய் நீ வேண்டாம் என சொல்லும் போது இவளது மனமும் அதனோடு இணைந்து இறந்திருக்கும் என்பது உறுதி. உதட்டைக் கடித்து கேவலைக் கட்டுப்படுத்த முயன்றாள். நடந்த அனைத்தையும் கொட்டி கவிழ்த்திவிடு என மனம் கதறியது.
“மனோ!” அவன் வாயிலிருந்து தன் பெயரைக் கேட்டதும் இவளிடம் மெல்லிய விசும்பல். அது குமரனை அடைந்ததும் அவன் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து நொடியில் எழுந்துவிட்டான். சிறிது சிறிதாக இவளது அழுகைப் பெரிதாகியது.
“மனோ, என்னாச்சு டி… எதுக்கு இப்போ அழற…” இவளது அழுகையில் அவன் பல்லைக் கடித்தான். மனம் பரிதவித்துப் போனது அந்த அழுகையிலும் விசும்பலிலும்.
“மனோ… அழாம என்ன நடந்ததுன்னு சொல்ற!” அதட்டலிட்டவனின் ஒரு கரம் அலைபேசியை செவிக்கும் தோள்பட்டைக்கும் இடையில் பொறுத்த, வலதுகை சாவியை வாகனத்தில் பொறுத்தியது. நொடியில் அதை உயிர்ப்பித்து அவளது வீட்டை நோக்கிப் பறந்தான். இந்தப் பெண்ணின் அழுகை அவனை அதிகமாகப் பாதித்து தொலைத்தது.
அழுதுகொண்டிருந்தவள், திக்கித் திணறி, “எனக்கு நீங்க… நீங்க வேணாம்!” என்றிருந்தாள். அந்த வார்த்தையைக் கூறும் போதே பாதி செத்துவிட்டாள். குபுகுபுவென வழிந்த நீர் முகத்தை நனைத்தது. விசும்பியபடியே சரியாய் தெளிவில்லாதக் குரலில் கேட்ட மனோவின் குரலில் இவனுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது. அந்த வார்த்தையை விட, அதைக் கூறும்போது அவளது வலியும் வேதனையும் இவனறிந்ததும், கோபம் பொங்கியது.
“மனோ, முதல்ல அழுறதை நிறுத்திட்டு, என்ன நடந்ததுன்னு சொல்ற…” சொல்லியே ஆக வேண்டும் என்றொரு தொனி அது. இவளுக்குத் தொண்டை அடைத்துப் போக, “எனக்கு நீங்க வேணாம்! இந்தக் குமரன் வேணாம்! என்னை மன்னிச்சுடுங்க!” எனத் தேம்பியழுதவளின் கண்ணீர் இவனது நிம்மதியைப் பறித்திருந்தது. பாடாய் படுத்தினாள் இந்தப் பெண் மனோஹரி.
“வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்!” குமரன் பல்லிடுக்கில் வார்த்தை அவளை சமாதானம் செய்ய விழைய, “வராதீங்க… நீங்க இங்க வரக்கூடாது!” என அழுத்தமாய்க் கூறியபடி அழைப்பைத் துண்டித்தவள், அலைபேசியைத் தூக்கியெறிந்திருந்தாள்.
அது தூள் தூளாகத் சிதறிப் போக, அது போல நடந்த நிகழ்வுகள் சிதறிப் போகக் கூடாதா? என ஏங்கி அழ ஆரம்பித்தாள் மனோஹரி.
அவளின் செயலில் வார்த்தையில் இவனுக்கு கிறுகிறுத்துப் போக, நேரில் சென்று கன்னம் கன்னமாய் அறைய வேண்டும் என்ற ஆத்திரத்துடன் அவளை சந்திக்கச் சென்றான்.
பேசிவிட்டாள்! மனதில் இத்தனை நேரம் உருப்போட்டிருந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து பேசிவிட்டாள். வேண்டுமென்று இத்தனை நாட்கள் போராடியப் போராட்டத்தில் தோல்வியைத் தழுவியிருந்தவளின் ஊனும் உயிரும் அந்த வார்த்தையோடு உறைந்திருந்திருந்தது. என்ன செய்வது எனத் தெரியாது பித்துப் பிடித்ததைப் போல அமர்ந்திருந்தாள் மனோஹரி.
புறத்தூண்டல் உறைக்காது போனது. ரங்கராஜனின் பேச்சு, இவள் குமரனிடம் பேசிய பேச்சுக்கள் என அடுத்தடுத்து கண்முன்னே வந்து விழுந்தது. சிலை போல சமைந்து போன மனோவிற்கு, உலகம் காலுக்கு கீழே நழுவியிருந்தது. மனம் மட்டும் ஆயிரம் முறை குமரனிடம் மன்னிப்பை யாசிக்க, அவனே சில நிமிடங்களில் வந்து நின்றிருந்தான்.
வீட்டிற்குள்ளே நுழைந்தவன் யாரையும் கண்டு கொள்ளாது மனோ அறையின் கதவை ஓங்கித் தட்டினான்.
“மனோ, கதவைத் தொறடி!” வார்த்தையில் அனல் தெறித்தது. அந்தக் குரலில் இவளுக்குப் பயபந்து அடிவயிற்றிலிருந்து சுழன்றது. அவனை எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் நின்றிருந்த விழி நீர் மீண்டும் உடைப்பெடுக்க, உதட்டைக் கடித்து அதை அடக்கினாள்.
‘வருவான்! குமரன் வருவான்!’ என்று நம்பிக்கைக்கொண்ட மனதை ஏமாற்றாது அவளை சமீபித்திருந்தான் திருக்குமரன்.
“மனோ, இப்போ நீ கதவைத் தொறக்கலை, நானே உடைச்சு உள்ள வருவேன்!” இவனது குரலில் ராதாமணியும் திவாகரும் வெளியே வந்துவிட்டிருந்தனர். ரங்கராஜன் சற்றுமுன்னர்தான் வெளியே சென்றிருந்தார்.
“குமரா…” திவாகர் அருகே வந்துவிட்டான். ராதா என்னப் பேசுவது எனத் தெரியாது பார்வையாளராகிப் போனார்.
“மனோ…” இவன் பொறுமைக் கடக்க, எழுந்து வந்து கதவைத் திறந்த மனோஹரி அவனை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏனோ அந்த முகத்தைப் பார்த்தால், தன் முடிவு தூள் தூளாவிடுமோ என்ற பயம் நெஞ்சைக் கவ்வியது. உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியபடி தலையைக் குனிந்து கொண்டாள்.
“திவாகர், நான் உங்க தங்கச்சிக்கிட்ட பேசிட்டு வரேன்!” உள்ளே நுழைய முற்பட்டவனை தடுத்து நிறுத்திய குமரன் அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தான்.
“ஃபோன்ல சொன்னதை இப்போ சொல்லு டி!” அவன் பல்லிடுக்கில் வார்த்தைகள் வந்து விழுந்தன. அதில் உதட்டைக் கடித்த மனோஹரி அவன் முகத்தைப் பார்க்காது பக்கவாட்டில் பார்வையைப் பதித்தாள்.
“எனக்கு நீங்க வேணாம்!” குரல் அடைக்கக் கூறியவளின் விழிகளில் நீர் சரசரவென வழிந்தது.
“என் முகத்தை பார்த்து சொல்லு டி!” குமரன் கோபத்தில் இரைந்தான்.
“முடியாது! போங்க! வெளிய போங்க முதல்ல… உங்களை வர வேண்டாம்னு சொன்னேன் இல்ல. ஏன் வந்தீங்க? இது நீங்க வேலை பார்த்த முதலாளியோட வீடில்ல. இந்த மனோவோட அப்பா வீடு. வெளியே போங்க!” எனப் பலம் அனைத்தையும் திரட்டிக் கத்தியவளின் குரல் மொத்தமாய் உடைந்திருந்தது.
‘போடா! போ… என் கண்முன்னே வராதே! நீ வேணாம்!’ மனம் கூச்சலிட, கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின.
சற்று நேரம் முன்பு தான் பார்த்த பெண் இவள் தானா? என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு ஓய்ந்த தோற்றத்திலிருந்தவளைப் பார்த்து இவனுக்கு மனம் பிசைந்தது.
கோபத்தில் அவளது தாடையைப் பிடித்து அழுத்தி முகம் பார்க்க வைத்தவனை விழிகளில் நீர் தளும்ப, தவிப்பாய்ப் பார்த்தாள். கடைசியாய் அவனைப் பார்ப்பது போலொரு பார்வையை மனோஹரி கொடுக்க, “என்னாச்சு? உங்கப்பா என்ன சொன்னாரு?” என அழுத்தமாய் வினவினான் குமரன்.
அவன் கையைத் தட்டிவிட முயன்றவள், “எனக்கு நீங்க வேணாம்!” என்றாள் கலங்கிப் போய் குரல் அடைக்க.
“என்னாச்சுன்னு உன்னைக் கேட்டேன்!” என்றவனுக்கு சத்தியமாய் இவளிடம் பதிலில்லை. தந்தை கூறியதை உரைத்தால் உடைந்து விடுவானே இந்தக் குமரன் என நினைத்தொருபுறம் அழுகை வர, அவனுக்காக மனம் தவித்தது. எந்தக் காலத்திலும் தந்தையின் பேச்சு இவனை எட்டிவிடக் கூடாது என எதிர்காலத்திற்கும் சேர்த்து இப்போதே கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.
“சொல்ல மாட்டல்ல டி நீ?” குமரன் கோபத்தில் பல்லைக் கடிக்க, ‘மாட்டேன்…’ என மனோ உறுதியாய் நின்றாள்.
“நான் வேணாமா உனக்கு?” என்றவன் விழிகளையும் முகத்தையும் பார்த்தவளுக்கு மீண்டுமொரு அந்த வார்த்தையை உரைக்க சத்தியமாய் திராணியில்லை. தவிப்பாய், அதைவிட பாவமாய் தன்னைப் பார்த்தவளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தான் குமரன்.
அவளை உதறித் தள்ளியவன், “இப்போ இந்த நிமிஷம் நீ முடிவு பண்ற… உனக்கு உன் அப்பா வேணுமா? இல்லை நான் வேணுமான்னு. நான் வேணும்னா, என் கூட வந்துடு. அப்படியில்லை, நான் வேணாம்னா, எப்பவுமே நான் உனக்குக் கிடைக்க மாட்டேன்!” என்றவன் குரலில் என்ன பேச எனத் தெரியாது மனோஹரி ஸ்தம்பித்துப் போனாள்.
“சொல்லு டி!” கர்ஜனையாய் ஒலித்தக் குரலில், இவள் உதட்டைக் கடித்து, தலையை இடம் வலமாக முடியாது என்பது போல அசைத்தாள்.
‘ஏற்கனவே செத்துவிட்டேனடா! மறுபடியும் நீயும் என்னைக் கொன்றுவிடாதே!’ எனப் பார்த்தவளின் பார்வை அவனிடம் இறைஞ்சி மண்டியிட்டது.
‘சொல்லமாட்டேன். போய்விடு, இங்கிருந்து அகன்றுவிடு!’ என மனதில் ஜெபித்தவளின் வார்த்தைகள் எதிரிலிருந்தவனை அசைக்கவில்லை. உறுதியாய் நின்றவனைப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, அவனைத் துடித்துப் போய் பார்த்தாள் மனோ. பதில் சொல்லியே ஆக வேண்டும் என அழுத்தமாய் நின்றிருந்தான் குமரன்.
உள்ளம் கேட்கும்…