என் உள்ளம் கேட்குமே‌ – 11.2

“திவா, நீ வாயை மூடு. இது எனக்கும் என் பொண்ணுக்கும் இடையில இருக்கப் பிரச்சனை! நீ உள்ள வராத…” ரங்கா மகள் கூறிய வார்த்தையில் அது கொடுத்த வலியில் இறுகிப் போனார். மகளைவிட ஜாதி அவருக்கு உயர்வாய்ப் போய்விட்டது. இறங்கி வரவே முடியவில்லை.

“நான் ஏன் பேசக் கூடாது பா? நான் பேசுவேன். உங்களுக்கு அவ மகன்னா, எனக்கு அவ தங்கச்சி. அவளுக்கு சப்போர்ட் பண்ண, எல்லா உரிமையும் எனக்கிருக்கு. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் அவளைவிட, என்னை அதிகமா காயப்படுத்தும்! எனக்கு வலிக்கிது பா! எனக்கு வலிக்கும்!” திவாகர் குரல் கலங்கி வர, மனோவை தோளோடு இறுக அணைத்தான். அவளுக்கு எதுவுமே புத்தியில் உறைக்கவில்லை. தந்தை பேசிய பேச்சுக்களின் வீரியம் உயிர் வரை அவளை ஆட்டம் காணச் செய்திருந்தது. இந்த அசிங்கம் என்ற வார்த்தையை மரித்தால் கூட அவளால் மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாதே!

‘ஏன் பா இப்படி பேசுனீங்க? ஏன் இப்படி பேசுனீங்க? அளவுக்கு அதிகமா நான் நேசிச்ச முதல் மனுஷன் நீங்க. இப்ப உங்களை நீங்களே வெறுக்க வச்சுட்டீங்களே பா!’ மனது அரற்ற, பித்துப் பிடித்தது போல திவாகர் தோளில் சாய்த்திருந்தாள்.

“திவா…” கோபமாய்ப் பேச வந்த ரங்காவை மனோவின் பேச்சு ஸ்தம்பிக்கச் செய்தது.

திவாகரிடமிருந்து பிரிந்தவள், “எனக்கு குமரன் வேணாம்!” என்றாள் பிதற்றலானக் குரலில். அது தெளிவில்லாமல் மற்ற மூவரின் செவியை அடைந்தது.

விழிகள் நீரால் தளும்ப, ரங்கா முன்பு கையைக் கூப்பினாள்.
“போதும் பா! நீங்க பேசுற பேச்சைக் கேட்க என் மனசுல தைரியம் இல்லை. நான் நேசிச்ச பாவத்துக்காக அந்த மனுஷனை இதுக்கும் மேல நீங்க ஒரு வார்த்தைப் பேசக் கூடாது. நான் ஏற்கனவே செத்துப் போய்ட்டேன். அப்பா, அப்பான்னு உங்களை மட்டுமே சுத்தி வந்த என்னை, உங்களை நீங்களே வெறுக்க வச்சுட்டீங்களே! நீங்க பேசப் பேச, உங்களை நீங்களே கீழிறக்கிக்கிறீங்க. ஜாதி உங்களுக்கு முக்கியம்னு தெரியும். ஆனால், பெத்த மகளைவிட ஜாதிதான் முக்கியம்னு இன்னைக்கு என் புத்திக்கு நல்லா உறைச்சுடுச்சு. எனக்கு குமரன் வேணாம் பா! இந்த வார்த்தையை தானே நீங்க கேட்க ஆசைப்பட்டீங்க! அதை நானே சொல்றேன் பா. எனக்கு குமரன் வேணாம்!” என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது நேசம் கொண்ட நெஞ்சு நஞ்சை விழுங்கியது போலத் துடித்து பரிதவித்தது. எதுவுமே வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள் மனோஹரி.

“எனக்கு குமரன் வேணாம். முடியாதுன்றதை இவ்வளோ கேவலமா, கீழ்த்தரமா உங்களால் சொல்ல முடியும்னு இன்னைக்குத்தான் எனக்குத் தெரிஞ்சது பா. சாகுற வரைக்கும் நான் இந்த வீட்ல உங்களோட ஜாதிக்கு எந்த களங்கமும் வராம இருந்துட்றேன். உங்க மக மனோ எப்போவோ செத்துட்டா. இப்போ ஜாதியைக் காப்பத்திட்டுருக்கது உங்க பொண்ணு இல்ல, வெறும் ஜடம்! இந்த ஜடத்துக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னு வேற யாரையும் கூட்டீட்டு வந்து நிறுத்துனீங்கன்னா, இந்த ஜடமும் உங்களுக்கு இல்ல!” எனக் கூறியவளின் உடலும் மனதும் மரத்துப் போய் மறித்துப் போயிருந்தது. தொண்டை அடைக்கப் பேசியவளின் பேச்சில் சுற்றியிருந்த மூவரும் ஸ்தம்பித்துப் போயினர்.

நகர மாட்டேன் என அடம்பிடித்த கால்களை கடினப்பட்டு இழுத்து அறைக்குச் செல்ல முயன்றவளை திவாகர் குரல் தடுத்து நிறுத்தியது.

“ப்பா, இந்த ஊர்ல எல்லார் முன்னாடியும் மனோவுக்கும் குமரனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வப்பேன். உங்களால தடுக்க முடிஞ்சா தடுத்துக்கோங்க!” திவாகர் பொறுமையைக் கைவிட்டவனாக சீறினான். ஏனோ தந்தைக் கொடுத்த வார்த்தை மனோவை விட இவனை அதிகமாகக் காயப்படுத்தியிருந்தது.

திவாகர் குரலும் அதிலிருந்த தவிப்பும் இவளுக்கு மேலும் அழுகையைக் கூட்ட, அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை ஏதோவொரு உணர்வு பிறந்து மேலெழுந்தது. விழியோரம் அந்தக் கரிசனத்தில் அக்கறையில் அழுகைப் பொங்கப் பார்க்க, தமையனைத் திரும்பிப் பார்த்தவள், வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள்.

“வேணாம் திவா! இந்த மனுஷன் இவ்வளோ பேசுனதுக்குப் பிறகும் எனக்கு குமரன் வேணாம். அவரைக் கல்யாணம் பண்ண முடியலனாலும், இத்தனை வருஷம் பாசமா என்னை வளர்த்த என் அப்பாவோட ஜாதியைக் காப்பாத்திட்டாவது போறேன். கேவலம் என் வாழ்க்கையை விட என் அப்பாவுக்கு அவரோட உயர்ந்த ஜாதி உசுரா போய்டுச்சு. விடு திவா! விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும். இதுக்கும் மேல அவர்கிட்ட போய் என் காதலுக்காகக் கெஞ்சவோ, கேட்கவோ என் மனசு ரெடியா இல்லை! என்னை விட்ருங்க, ப்ளீஸ்!” என்றவள், அறைக்குள் நுழைந்து கதவை‌ அடைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.

மனதும் உடலும் இதற்கு மேலும் போராடத் தெம்பில்லை என கடைசி சொட்டு நம்பிக்கையைக் கைவிட, இவள் மொத்தமாய் உடைந்து போனாள். முகத்தை உள்ளங்கையில் புதைத்தவளின் கண்ணீர் பிசுபிசுத்துப் போய் உடலையும் சேர்த்து நனைக்க, உள்ளம் தந்தையின் பேச்சில் மொத்தமாய் உறைந்துவிட்டிருந்தது.

இந்நொடி கூட நடந்த நிகழ்வு கனவாய் இருக்கக் கூடாதோ என்ற எண்ணம் தோன்றியதும், நெஞ்சம் விம்மியது. ஏனோ வாழ்வே வெறுத்த நிலை. வேண்டாம்! குமரன் எனக்கு வேண்டாம் என மூளை உருப்போட மனம் அந்த வார்த்தையில் அனலிடைப்பட்ட புழுவைப் போல துடித்துப் போனது.

விழிகளில் மீண்டும் மீண்டும் நீர் தளும்பி நிற்க, உவர் நீர் வெளியேறிக் கொண்டேயிருந்தது. கதவில் சாய்ந்து விழிகளை மூடினாள் மனோஹரி. அந்த விழிகளுக்குள் வந்து நின்றான் குமரன், திருக்குமரன். பதினேழு வயதில் வேலைக்கு வரும்போது அவனிடமிருந்த உறுதியும், உழைப்பும் அந்த வயதில் இவளை வியக்க வைத்திருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தும் நினைவை நிறைக்க, எந்தக் கணத்தில் அவன் மீதான பிடித்தம் இந்தளவிற்கு அவளை நிலைக்க வைத்தது என பெண்ணே அறியாள்.

அவளறிந்து வாழ்க்கையில் முதல்முறையாக இந்தளவிற்கு காயம்பட்டு நிற்கிறாள். ஏனோ நேசம் வைத்த மனிதனே அதை நெருப்பிலிட்டுப் பொசுக்கியதை மகளாக அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடல் அந்த நெருப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகித்துக் கொண்டிருந்தது.

“மனோ, கதவைத் திற டி!” ராதாமணியின் குரலில் பயம் அப்பிக்கிடந்தது. மகள் ஏதேனும் செய்து கொள்வாளோ எனப் பதைபதைப்புடன் அவர் வாயிலில் நின்றார். சில நிமிடங்கள் கடந்தும் அவளிடம் பதிலில்லை எனவும், தாய்க்கு வியர்க்க ஆரம்பித்தது.

“மனோ, எதுனாலும் பேசிக்கலாம் டி. அப்பாகிட்டே நான் பேசுறேன். கதவைத் தொறடி…” கலங்கியிருந்த அவரின் குரல் இவளுக்குப் புறத்தூண்டல் உறைக்கச் செய்தது.

“ம்மா… கவலைப்படாத. செத்துப் போற அளவுக்கு உன் பொண்ணு கோழையில்லை!” என சுவாதீனமாய் பேசினாள்.

“கதவைத் தொற டி நீ முதல்ல. உள்ள வந்து பேசிக்கலாம்!” அவர் பல்லைக் கடிக்க, “ப்ளிஸ் மா, அப்புறம் பேசலாம்!” என்றாள் அழுகையான குரலில். சில நிமிடங்கள் அமைதியாக கழிய, ராதாமணி கணவரிடம் பேசச் சென்றார்.

மகள் அழுத அழுகை ரங்காவை அசைத்திருந்தாலும், ஜாதி என்னும் களைக்க முடியாத களை அவரை ஆட்டுவித்திருந்தது. கல் போல சமைந்திருந்தார் மனிதர்.

“என்னங்க, ஏன்ங்க இப்படி பேசுறீங்க… அவ அழுதுட்டே ரூம்க்குள்ள உக்கார்ந்து இருக்கா. ஒன்னு கிடக்க ஒன்னு செஞ்சுக்கிடப் போறாங்க. பயமா இருக்கு… வேண்டாங்க! பெத்த பொண்ணோட சாபத்தை சம்பாரிக்காதீங்க. ஒத்தப் பொண்ணுன்னு அவ்வளோ செல்லம் கொடுத்து வளர்த்தது இப்படி அவளைப் பார்க்கவா? என்னால அவ பேசுறதைக் காது கொடுத்துக் கேட்க முடியலைங்க. ஜாதியைப் பிடிச்சிட்டு தொங்கி, புள்ளையைப் பறிக்கொடுக்க வச்சுடாதீங்க. யார் என்ன பேசுனாலும், நம்ம பொண்ணு நமக்கு முக்கியம். பேசாம
அவளை அந்தப் பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ங்க!” முதல் முறையாக ராதாமணி கணவர் முடிவை எதிர்த்திருந்தார். மகளின் அழுகையும் உடைந்த தோற்றமும் அந்தப் பெண்ணைத் துடித்துப் போகச் செய்திருந்தது. ராதாவை நிமிர்ந்து பார்த்த ரங்காவின் பார்வையில் கண்டனமிருந்தது. எதையும் அவர் பேசவில்லை. அறைக்குள் நுழைந்துவிட்டார்.

error: Content is protected !!
Scroll to Top