என் உள்ளம் கேட்குமே – 11.1

குமரன் பேசிச்சென்று முழுதாக இரண்டு நாட்கள் கடந்திருந்தன. அவன் சென்றதிலிருந்தே ரங்கராஜன் ஒருவரிடமும் பேசவில்லை. அறைக்குளே அடைந்து கிடந்தார். செங்கல் சூளைக்குச் சென்று திரும்பினார். அவ்வளவுதான் என் எதிர்வினை என்பது போல அவரது பாவனையிருந்தது.

மனைவியிடமும் மகனிடமும் கூட மனிதர் பேசவில்லை. முகம் மட்டும் எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது.‌ உடல்நிலை முடியாத பொழுது கூட என் தந்தையை மீறி என்னால் வீட்டைவிட்டு வரமாட்டேன் என்றுரைத்த மகளின் வார்த்தை அவரை அழுத்தமாய்ப் பாதித்திருந்தது.

எங்கே பெண்ணை தான் சரியாக வளர்க்கவில்லையோ என எண்ணிக்‌ கொண்டிருந்தவரின் நினைப்பை தூள் தூளாக்கியிருந்தாள் மனோஹரி. எத்தனை பிரச்சனைகள், வாதைகள், வலிகள், அடிகள் என அத்தனையும் தாங்கினாலும் தான் வேண்டும், தன்னுடைய சம்மதம் வேண்டும் என்ற மனோவின் உறுதி இவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்திருந்தது.

‘வேண்டாம், முடியாது!’ என்று மலையளவு உறுதியாயிருந்த மனிதரை மகள் என்னும் மடு மொத்தமாய் புரட்டிப் போட்டிருந்தது.

திவாகர் மறுநாள் தங்கைக்காக தந்தையை முதன்முதலாக எதிர்த்துப் பேசிவிட்டிருந்தான். ஏனோ வாடியக் கொடியாய் கிடந்த மனோஹரியைப் பார்த்து அவனது உள்ளம் வெதும்பிப் போனது. இந்த ஜாதி வெறியும், அந்தஸ்தும், பகையும் தன் தங்கையை அழித்துவிடுமோ என்ற பயம் அவனை அத்தனை
உறுதியாய் ரங்காவிடம் பேசவைத்தது.

“அப்பா, எத்தனை நாள் நீங்க யோசிச்சாலும், மனோ முடிவை மாத்திக்கப் போறதில்லை பா. குமரன் மாதிரி ஒருத்தனை நீங்கத் தேடுனாலும் கிடைக்கமாட்டான். இத்தனை வருஷத்துல அவனை எதாவது ஒரு விஷயத்துல உங்களால குறை சொல்ல முடியுமா? எனக்குத் தெரிஞ்சு எந்த இடத்துலயும் அவன் தவறலை. அந்த ஜாதியில பிறந்ததுலயோ, இல்லை நம்ம அளவுக்கு வசதி இல்லாததிலயோ அவனோட தப்பு எதுவுமே இல்லையே பா. இதுவரைக்கும் எல்லாத்துலயும் அவனோட நேர்மை தான் பேசியிருக்கு. அதைவிட, அவன் உங்களுக்காக செஞ்சது ரொம்ப ரொம்ப அதிகம் பா. உங்க மேல அதிகமா மரியாதையும் அன்பும், விசுவாசமும் வச்சிருக்கான். அதை நீங்களே கெடுத்துக்காதீங்க பா. அவன் மேல குத்தம் சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்லை. மனோதான் எல்லாத்துக்கும் ஆரம்பப் புள்ளி. அவளை நம்மளால மாத்த முடியாது. அதனால, நீஙகக் கொஞ்சம் இறங்கி வாங்க,
அவளோட ஆசையை நிறைவேத்துங்கப்பா!” யோசனையாய் அமர்ந்திருந்த தந்தையிடம் திவாகர் அழுத்தாய்ப் பேச, அவனை நிமிர்ந்து பார்த்தாரொழிய ஒரு வார்த்தை பேசவில்லை ரங்கா. அது கொடுத்த உந்துதலில் திவாகர் பேச்சைத் தொடர்ந்தான்.

“ஜாதி, அந்தஸ்து எல்லாம் நீங்கப் பெத்த பொண்ணை விட முக்கியம் இல்லையே பா. சின்ன வயசுல இருந்து என்னைவிட ஒரு மடங்கு அவளை அதிகமாதானே பார்த்துக்கிட்டீங்க. அப்புறம் ஏன் பா இந்த விஷயத்துல இவ்வளோ பிடிவாதம் பிடிக்குறீங்க? யாரோ ஒரு பையனை அவ கைக்காட்டலை பா. நீங்க எனக்கடுத்து அதிகமா நம்பிக்கை வச்சிருக்க குமரனைதானே கைக்காட்டுனா. உங்கப் பையன் மாதிரின்னு சொன்ன ஒருத்தனைத்தான் அவ விரும்புறா. என் ஸ்தானத்துல அவனை நீங்க வச்சிருக்கீங்கன்னா, அவன் மேல உங்களோட நம்பிக்கை அதிகம் தானே?” திவாகர் ஆதங்கமாய்ப் பேச, ரங்காவிடம் பதிலில்லை. அவனை வெறித்தார்.

“அவ கேட்ட கேள்வியைத்தான் நான் இப்போ கேட்குறேன். சொக்கநாதன் பையன் குமரன்தான் உங்கப் பிரச்சனைன்னா, ஏன் இத்தனை நாள் அவன் இங்க வேலை பார்க்கும்போது அது உங்களுக்குத் தோணலை?” என சுள்ளெனக் கேட்டவனை ரங்கா கோபமாய்ப் பார்த்தார்.

“நீங்க கோபமா முறைச்சதும், இதெல்லாம் உண்மை இல்லைன்னு ஆகிடாதுப்பா. நீங்களே யோசிங்க, நாளைக்கு உங்களுக்கு ஒன்னுன்னா, ஜாதிப் பெருமை பேசுற ஒருத்தரும் உங்கக் கூட வரமாட்டங்க. உங்கப் பொண்ணு வருவாப்பா, அவ உலகமே நம்மதான். உங்க வார்த்தையை மீறி போகமாட்டேன்னு மயக்கத்துல இருக்கும்போது கூட சொன்னாளே பா மனோ. இந்த ஜென்மத்துல அவளா வீட்டைவிட்டு வெளியேற மாட்டா. நீங்களா அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாதான் உண்டு.
அவ எந்த இடத்துலயும் உங்களை இறக்கவோ, அசிங்கப்படுத்தவோ நினைக்கலை. ஏன் குமரன் சம்மதிச்ச உடனே, அவனைக் கல்யாணம் பண்ணீட்டு வந்து நின்னிருந்தா, என்ன பண்ணி இருக்க முடியும் உங்களால? எதுவுமே செஞ்சிருக்க முடியாது. அப்படி நடந்திருந்தா நம்மளுக்குத்தான் அசிங்கம். நம்மளே அவ கல்யாணத்தை நடத்தி வச்சுடலாம் பா. விருப்பம் இருக்கோ, இல்லையோ, இதை நீங்க ஏத்துக்கிட்டுதான் ஆகணும்! நம்ம வாழ்க்கையில நடக்குற எல்லாமே நமக்குப் பிடிச்ச மாதிரி நடக்குதா என்ன? அது மாதிரிதான் பா இதுவும். சம்மதிக்க உங்க மனசை சரி கட்டுங்க!” மனதில் இத்தனை நாட்கள் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்ததைக் கொட்டிவிட்ட திருப்தியில் திவா அகன்றுவிட்டான். இதற்கு மேலும் இந்த மனிதர் ஜாதியைக் கட்டிக்கொண்டு அழுதால், அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை. அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவனாய் குமரனுக்கும் மனோஹரிக்கும் திருமணம் முடித்துவிட வேண்டியதுதான் என எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனால், தங்கை ஒத்துக்கொள்ள மாட்டாளே என்ற ஆதங்கமும் மனதில் படர்ந்தது. இதற்கு மேல் தான் பேசியதை தந்தை யோசிக்கட்டும் என இவன் கிளம்பிவிட்டான். அவர்கள் இருவரும் இந்தப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும் என்ற எண்ணத்தில் இவன் அடுத்து அவரிடம் பேசுவதாய் இல்ல என முடிவெடுத்தான்.

ராதாமணியிடம் இரண்டு நாட்கள் பேச்சே இல்லை. மகளைக் கவனித்துக் கொள்வது மட்டும்தான் தன்னுடைய பிரதான வேலை என்பது போல மனோவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவளின் உடல்நிலை தேற்ற என்னென்ன செய்ய வேண்டும் என அவரது செயலில் அக்கறை கொட்டிக் கிடந்தது.

கண்முன்னே வாழை இலைபோல துவண்டு விழுந்த மகளின் முன் ஜாதி, அந்தஸ்து அதைவிட கணவரின் வார்த்தைகள் கூட பின்னகர்ந்து, அவள் மட்டுமே முன்னின்றிருந்தாள். இரண்டு நாட்களாகப் பெண்மணி தன்னறைக்குக் கூட செல்லவில்லை. இவளது அறையிலே அமர்ந்து மகளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்து அவளைத் தேற்றியிருந்தார். சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்தவளை அரட்டி மிரட்டி ஊட்டிவிட்டார். மருந்து மாத்திரைகளை சரியான நேரத்திற்கு விழுங்க வைத்தார்.

மனோவிற்கு கடந்து சென்ற மூன்று நாட்களிலே உடல்நிலை நன்றாகத் தேறியிருந்தது. சொட்டு உறக்கம் இல்லாது தன்னை இவ்வளவு அக்கறையாய் கனிவாய்ப் பார்த்துக் கொள்ளும் தாயிடம் இவளது கோபம் நிலைக்கவில்லை. அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் மனதிலிருந்தவை அல்ல. வெறும் ஆதங்கத்தில்தான் பேசியிருந்தார் என மகளுக்குப் புரிந்தது. அவ்வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தியிருந்தன தான். ஆனால், நீரடித்து நீர் ஒரு போதும் விலகுவதில்லையே!

மனோ அறிந்தது வரை ராதாவின் உலகமே பிள்ளைகள் இருவர்தான். காலையில் எழுந்து தங்களுக்கென பார்த்து பார்த்து சமைத்து, எல்லாவற்றையும் முன்னின்று செய்யும் அவரது செயல்களுக்குப் பின்னே தங்கள் மீதான அன்பே பிரதானமாய் இருக்கும்.

அப்படிபட்டவர் தன்னைக் கோபமாய் பேசியதற்குக் காரணம் மகள் அறியாமையில், அவரது நிலையிலிருந்த பார்த்தால், குமரன் கணவரிடம் வேலை செய்யும் ஊழியன் மட்டுமே. அப்படியிருக்கும் பட்சத்தில் அவனுடனான மகளின் வாழ்வு கண்டிப்பாக சுகிக்காது. அதைவிட சிறுவயதிலிருந்தே ஜாதி என்னும் வேப்பங்காயை அவருக்கு அரைத்து உண்ணக் கொடுத்திருந்த சமூகமும் அதற்கொரு பெருங்காரணி.

error: Content is protected !!
Scroll to Top