“ஏன்டி, ஏன்?” எனக் கேட்டவனுக்கு அப்படியொரு ஆற்றாமை. என்ன செய்துவிட்டேன் இந்தப் பெண்ணிற்கு நான்? எதற்கு இப்படியொரு அன்பு. என மனம் அடித்துக் கொண்டது. கோபமாய் வந்தது, அப்படியே கன்னத்தோடு அறையும் வேகம். அமைதியாய்ப் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான். இவர்கள் சத்தத்தில் செவிலியர் உள்ளே வந்துவிட்டார்.
“ஏம்மா, இதென்ன உங்க வீடா? புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் வீட்ல போய் வச்சுக்கோங்க!” என்றவர் மனோவின் அருகே விரைந்து, “கையைக் கொஞ்ச நேரம் அசைக்காம இருக்க முடியாதா உங்களால?” எனத் திட்டிக்கொண்டே கைகளில் வழியும் குருதியைத் துடைத்துப் பஞ்சை வைத்து அழுத்தினார்.
“ஐஞ்சு நிமிஷத்துல டாக்டர் வந்துடுவாங்க. அதுவரைக்கும் சத்தம் போடாதீங்க மா!” என்றவர் நிமிர்ந்து குமரனிடம், “சார், இது ஹாஸ்பிடல். அதை ஞாபகம் வச்சுக்கோங்க!” என வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினார்.
குமரன் மனோவை அழுத்தமாய்ப் பார்த்தான். விழிகளில் வழியும் நீரைத் துடைக்கத் தோன்றாது அவளது பார்வையும் அவனிடம்தான்.
“கல்யாணம் பண்ணிக்கலாம்!” அவன் வாயிலிருந்து வார்த்தை உதிர்ந்ததும், இவளின் விழிகள் மீண்டும் வேக வேகமாக நனைந்தன.
“நேத்து இதே வாய்தான் என்னை வேண்டாம், பிடிக்கலைன்னு சொன்னதும், இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றதும். இப்படி மாத்தி மாத்திப் பேசுறவரை என்னால நம்ப முடியாது. என் அப்பா மேல உங்களுக்கு இருக்க விசுவாசத்துல மறுபடியும் வேணாம்னு சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?” கோபம் கொப்பளிக்க சீறலாய்க் கேட்டாள். ஏனோ நேற்றைய குமரனின் வார்த்தைகளை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ஆறாத வடுவாய் மனதோடு தேங்கி நின்று, அத்தனை சித்தரவதை செய்து கொண்டிருந்தது. அது கொடுத்த சினத்தில் அவனிடம் கத்தியிருந்தாள்.
அவள் பேசுவதை முகத்தில் சலனமில்லாது கேட்டவன், அடிபட்டிருந்த கரத்தின் மேற்புறம் தோள்பட்டைக்கு கீழே அழுத்திப் பிடித்தான். “இனி நீயே வேணாம்னு சொன்னாலும், என்னால உன்னை விடமுடியாது. இந்த மனோஹரி எனக்கு வேணும்!” அழுத்தமாய் அவளது விழிபார்த்து உரைத்தவனைக் கண்டவளுக்கு அந்த வார்த்தை எத்தனை பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது என வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. ஏனோ இத்தனை நாட்களின் போராட்டம் இதற்குத் தானே? இந்த ஒரு வார்த்தைக்கு தானே?
வேண்டும் என்றொரு வார்த்தையில் மொத்த யுத்தமும் முடிவிற்கு வந்திருந்தது. இத்தனை நாட்கள் தனியாளாய் நின்று அனைவரிடமும் போராடி ஓய்ந்திருந்த மனது அந்த வார்த்தையில் தனக்கொரு உதவிக்கரம் நீண்டதில் பெரிய நிம்மதி பிறந்தது. தான் மட்டுமே இவன் வேண்டும் எனப் போராடிய களத்தில், குமரனும் அருகே நிற்கும்போது எதிர்கொண்ட பிரச்சனைகள் எல்லாம் தூள்தூளாய் சிதறிப் போயின. அழுகைக் கேவி வந்தது. சத்தம் போட்டு அழுது தீர்க்க வேண்டும் என்றொரு உந்துதல் பெண்ணுக்கு.
‘போடா… போ. இதை சொல்ல உனக்கு இத்தனை நாட்கள் தேவைப்பட்டதா?’ ரோஷமனம் ஒருபுறம் கோபத்தை இழுத்துப் பிடிக்க முயல, சத்தியமாய் முடியவில்லை அவளால்.
‘விடமாட்டான்! இந்தக் குமரன் செத்தால் கூட இனி என்னை விட மாட்டான்!’ மனது தேம்பியழுதது. சந்தோஷ ஆர்பரிப்புக் கூட கண்களில் நீரைத் தளும்பச் செய்தது. அன்பு, பாசம், நம்பிக்கை என எதையும் ஈரம் படாமல் பெற முடிவதில்லை மனித மனதால். அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், குனிந்து உதட்டைக் கடித்து கேவிய அழுகையை அடக்கினாள்.
“அப்பா ஒத்துக்க மாட்டாரு!” கலங்கியக் குரலில் கூறியவளை உருத்து விழித்தவன், “ஏன் இத்தனை நாள் அது உனக்குத் தெரியாதா?” என அவள் கேட்டக் கேள்வியை குமரன் திருப்பிக் கேட்டான்.
விழிகளில் நீருடன் அவனை முறைத்தவள், “அப்பா ஒத்துக்கிற வரை நம்ம கல்யாணம் நடக்காது. அவர் சம்மதமும் ரொம்ப முக்கியம். உங்களுக்காக அவரையும், அவருக்காக உங்களையும் என்னால விட முடியாது!” உதட்டைக் கடித்து உறுதியாய் உரைத்தவளின் முகம் அவனை தவிப்பாய் நோக்கியது. இறைஞ்சும் பார்வையுடன் தன்னைக் கண்டவளிடம் கோபத்தைக் காண்பிக்க முடியவில்லை குமரனால்.
“உங்கப்பா ஒத்துப்பாரு!” இவன் குரலின் உறுதியில் மனோ முகத்தில் லேசான கலவர ரேகை படர்ந்தன.
“உங்கப்பா ஒத்துப்பாரு, ஒத்துக்கணும்…” என்று உரைத்தவன் குரலில் அதெல்லாம் இப்போது தனக்குப் பெரிதாய் இல்லையென்றொரு பாவனை. முடிவெடுப்பதற்கு முன்னே ஆயிரம் முறை சாதகப் பாதகங்களை ஆராயும் மனித மனம், இதுதான் பாதை என தீர்மானித்தப் பிறகு எதையும் பெரிது படுத்தாது அலட்சியமாய்க் கடக்கும். அந்த மனநிலைதான் இப்போது குமரனுக்கு.
‘என்னால முடியலை குமரா!’ என தோளில் படர்ந்தவளின் ஸ்பரிசம் உணர்ந்த நொடியில் குமரனின் முடிவை அவனது அனுமதியின்றி மனது எடுத்திருந்தது. மனோவுடன்தான் தன் வாழ்க்கை என்றானப்பின், ரங்கராஜன் மீது அவன் கொண்ட அன்பும், விசுவாசமும் பின்னகர்ந்திருந்தது.
ஏனோ அந்நியர்கள் முன்னிலையில் தன் வீட்டு வேலைக்காரன் என்ற வார்த்தையிலே அவரது நேசம் தேங்கிவிட, நிர்மலா வார்த்தையில் கொதித்தெழுந்து தனக்காகப் பேசிய மனோவின் நேசம் அனைத்தையும் பின்னகர்த்திச் சென்றுவிட்டது.
‘சாகும் வரை இந்த குமரனுக்காக, இந்த குமரனுடன் போராடத் தயாராக இருக்கிறேன்!’ என உரைத்தவளை இந்த ஜென்மத்தில் அவனால் விடமுடியாது.
‘எதுவென்றாலும் பார்த்துக் கொள்ளலாம்!’ என்ற மனநிலைக்கு வந்திருந்தான் குமரன்.
மருத்துவர் வந்து மனோஹரியை பரிசோதித்து, காய்ச்சலுக்கு மாத்திரைகள் வழங்கினார். மேலும் சில பல அறிவுரைகளைக் கூறியவர், குமரனை ஏகமாய் முறைத்துத் தள்ளியிருந்தார். அவர் பார்வை உணர்ந்தவனுக்கு, அவரது எண்ணம் புரியாமல் இல்லை. ஆனால், பதில் கூற விருப்பமில்லாது விட்டுவிட்டான்.
மனோஹரியின் அலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. வீட்டிலிருக்கும் மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் அவளைக் காணாது அழைப்பை விடுக்க, அதை மனோ ஏற்கவில்லை. அவளது கையிலிருந்த அலைபேசியைப் பட்டென பிடிங்கிய குமரன், அழைப்பை ஏற்றுக் காதிற்குக் கொடுத்தான்.