என் உள்ளம் கேட்குமே 10.1

தானி சென்று ஒரு மருத்துவமனை முன்பு நிற்க, ஓட்டுநருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு மனோஹரியைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான் குமரன்.

பிரதான சாலையின் முகப்பில் அமைந்திருந்த அந்த சிறிய மருத்துவமனையில் இவர்கள் காத்திருக்க, இரண்டு நோயாளிகளுக்குப் பின்னே அழைக்கப்பட்டனர்.

மனோவை பரிசோதித்த மருத்துவர், “ஏன் திடீர்னு மயக்கம்?” எனக் கேட்டு இதயத் துடிப்பையும் உடலின் வெப்பநிலையும் ஆராய்ந்தார்.

“இரண்டு நாளா சாப்பிடலை டாக்டர்!” குமரன் கூறவும்,

“ஏன் மா, ரெண்டு நாளா சாப்பிடாம இருந்தா உடம்பு என்னாகுறது. ஏற்கனவே ரொம்ப விக்கா இருக்க மாதிரி இருக்கீங்க?” எனக் காய்ந்த மருத்துவரின் பார்வை மனோவின் கன்னத்தை சமீபிக்க, அடித்த தடம் அப்படியேயிருந்தது.

அதில் குமரனை நிமிர்ந்து ஒரு முறைப்பைப் பரிசளித்தவர், “குடும்பத்துல ஆயிரம் பிரச்சனை இருக்கும் மா. அதுக்காக சாப்பிடாம இருந்தா, எல்லாம் சரியாகிடுமா? இனிமே இப்படியெல்லாம் பண்ணாதீங்க!” எனத் திட்டினார்.
மனோ எதுவுமே பேசும் நிலையில் இல்லை, அமைதியாய் இருந்தாள்.

“நர்ஸ், இன்ஜெக்சன் ஒன்னு போடுங்க. குளுக்கோஸை ட்ரிப்ஸல போட்டுவிடுங்க!” என செவியலியரைப் பணித்தார் பெண் மருத்துவர்.

மொத்தமே இரண்டு அறைகள் மட்டுமே இருந்தன அந்த மருத்துவமனையில். ஒரு அறையில் குழந்தை ஒன்று படுத்திருக்க, மற்றொரு அறையில் மனோஹரியைப் படுக்க வைத்து கையில் ஊசியைக் குற்றி குளுக்கோஸை ஏற்றிவிட்டார் செவிலியர். அது கொடுத்த வலியை முகத்தைச் சுளித்துப் பொறுத்துக் கொண்டவளின் இமைகள் மூடியிருந்தன. தளர்வாய் படுத்திருந்தவளைக் காண உள்ளம் பிசைந்தது இவனுக்கு.

“ட்ரிப்ஸ் ஏறி முடிஞ்சதும் என்னைக் கூப்பிடுங்க சார்!” செவிலியர் அகல, அங்கேயே ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டான் குமரன். சிறிது நேரத்தில் குளுக்கோஸ் ஏறி முடிய, இவன் சென்று செவிலியரை அழைத்து வந்தான்.

“டாக்டர் வந்து ஒரு தடவைப் பார்த்ததும் நீங்க கிளம்பலாம்!” என அவர் சென்றதும், மனோ எழுந்து கட்டிலின் விளிம்பில் சாய்ந்து அமர்ந்தாள்.

குமரன் அவளை அழுத்தமாய்ப் பார்த்தான். அந்தப் பார்வை தன்னைப் பாதிக்கவில்லை என்பது போல இவள் அமர்ந்திருந்தாள். முகம் அழுதழுது வீங்கியிருக்க, விழிகள் ஆழ்சிவப்பு நிறத்திலிருந்தன. துவரி நிறத்தில் சுரிதார் அணிந்திருந்தவளின் ஒருபக்கத் துப்பட்டா தோளில் வழிந்தது. காலையில் வகுடெடுத்துப் பின்னியிருந்த தலை தளர்ந்திருக்க, இரண்டு நாட்களில் ஓய்ந்து போயிருந்தாள் பெண். முகத்தில் தெரியும் அலட்சியம் அலண்டு போயிருக்க, கண்ணைச் சுற்றி கருவளையம் படர்ந்திருந்தன.

அவனறிந்த வரை புறத்தோற்றத்திற்கு அத்தனை மதிப்பு கொடுப்பாள் மனோஹரி‌. எங்கு செல்ல வேண்டுமன்றாலும் அவ்வளவு மெனக்கெடலுடன் தன்னை அழகுபடுத்துவாள். ஆனால், இப்போது அழகின் சுவடுகூட அவளிடம் தென்படவில்லை. அவளின் ஒரு கரம் ஊசியேற்றப்பட்டிருந்த மற்றொரு கரத்தை தடவியபடி இருந்தன. அவன் பார்வைத் தொடர்ந்து தொல்லை செய்ததில் எரிச்சலானவளின் முகத்தில் கோபம் படர்ந்தது.

“எதுக்காக இப்படியே பார்த்துட்டு இருக்கீங்க?” பல்லைக் கடித்தபடி வினவினாள். தன்னை பிடிக்கவில்லை என்று முகத்திற்கு முன்னே அகம்நோக கூறியவன் எதற்கு இப்படியொரு பார்வைப் பார்க்கிறான் என்ற எரிச்சல் குரலில் கொட்டிக் கிடந்தது.

“நான் உங்கப்பா அளவுக்குப் பணக்காரன் இல்ல. உங்க வீட்ல இருக்குறது போல வசதியான வாழ்க்கையைக் கொடுக்க முடியாது!” இத்தனை நேரம் அமைதிக்குப் பேர் போயிருந்த குமரன் பேசவும், இவளது முகம் புரியாது சுருங்கின.

அந்தப் பார்வையின் பொருளுணர்ந்தவன், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உங்கப்பா அளவுக்கு என்னால உனக்கு வசதியான வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. என் வீடு சின்னது, அம்மா, நானும் மட்டும்தான் இருக்கோம். இனியும் அந்த வீட்டை மாத்துற எண்ணமில்லை எனக்கு!” என அவளை ஊன்றிப் பார்த்துக் கூறியவன் பேச்சின் சாரம்சம் உணர்ந்தவளின் முகத்தில் எள்ளலானப் புன்னகை.

“இத்தனை நாள் இது எனக்குத் தெரியாதில்லை!” எக்களிப்புடன் உதட்டைச் சுழித்தவள், “நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது உங்களைத்தான். உங்க வீட்டை இல்லை!” என்றாள் சீறலாய். அத்தனைக் கோபம் வந்தது அவளுக்கு.

‘என்ன நினைத்து இவன் இப்படியொரு வார்த்தையை என்னைப் பார்த்துக் கேட்டான்!’ என்ற ஆதங்கம் குரலில் வழிந்தது.

“நான் உன் அளவுக்குப் படிக்கலை!” அவள் முகத்தையும் விழிகளையும் ஆழம்பார்த்தான். மனோஹரி வதனத்தில் கணநேர மாற்றம் கூட இல்லை. ஏனோ அவளது முடிவில் அத்தனை உறுதியாயிருந்தாள் பெண்.

“ஸ்கூல்ல பன்னிரெண்டு வருஷமா வாட்ச்மேன் வேலை பார்த்தீங்களா?” எரிச்சல் மிகக் கேட்டாள். ஏதோ இப்போதுதான் இவனைப் பற்றிய சுயவிளக்கம் கொடுப்பதும், அவளறியாத ஒன்றை விளக்குவதும் போல பேசியவனின் பேச்சில் இவளுக்கு ஏக சினம் வந்தது. இதெல்லாம் யோசிக்காதுதான் நான் இவனைத் திருமணம் செய்யும் முடிவெடுத்திருப்பேன் என நினைத்தானா? என்ற எண்ணம் ஆத்திரத்தைக் கொடுக்க, மூக்கு முகமெல்லாம் சிவந்தது.

“என்னைக் கல்யாணம் பண்ணா, கீழ்ஜாதிக்காரன் பொண்டாட்டின்னு கடைசிவரை சொல்லிட்டே இருப்பாங்க, பரவாயில்லையா? நாளைக்கு நமக்கு குழந்தைப் பொறந்தாலும், ஜாதி அடையாளம் வச்சுத்தான் கூப்பிடுவானுங்க. எல்லாரோட பேச்சையும் கேட்க ரெடியா இருக்கீயா?” அத்தனை கோபமாய்க் கர்ஜனையாய்க் கேட்டவனின் குரல் அறையை நிறைக்க, உடல் இறுக நின்றான். நிர்மலா பார்த்த பார்வை கண்முன்னே வந்து போனது அந்த ஆடவனுக்கு.

அவன் பேசப்பேச இவளுக்கு அப்படியொரு கோபம். “நான் எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கேன். பேசுறவங்களுக்கு இருக்க வாயைவிட ரெண்டு மடங்கு என்னால திருப்பி பதில் தர முடியும்!” இவள் பதிலுக்கு இரைந்தாள்.

“வாழ்க்கை ஃபுல்லா இதைக் கேட்டுட்டே இருக்கணும் டி, பரவாயில்லையா? பதில் சொல்லி சொல்லியே சாகணும். அன்னைக்கு அந்தம்மா பார்த்த பார்வை மாதிரிதான் நம்ம வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா?” அவளருகே வந்து கோபமாய்த் தோளைப் பிடித்து உலுக்கினான் குமரன். அது கொடுத்த வலியைப் பல்லைக் கடித்துப் பொறுத்தவள், “இந்த ஜெனமம் முழுக்க குமரனுக்காக பேச நான் ரெடிதான். பேசுவேன், என் அப்பா, அம்மாவானாலும், யாரா இருந்தாலும் உங்களைப் பத்தி தப்பா பேசுனா கேப்பேன்!” பெருங்குரலெடுத்துக் கத்திக் கொண்டே வெடுக்கென்று அவன் கையைத் தட்டிவிட்டவளின் உடல் நடுங்கியது. விழிகளில் குபுகுபுவென நீர் வழிய, விழிகளில் அனல் தெறிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

error: Content is protected !!
Scroll to Top