உள்ளம் – 8.2

அவனைத்தான் மனோஹரியும் நோக்கினாள். ‘கரத்தை மட்டுமல்ல, அதோடு என்னையும் உதறிவிடாதே! தாங்கமாட்டேன்!’ பதபதைக்கும் மனதும் துடிதுடித்துப் போன உள்ளத்துடன் குமரனைப் பார்த்தாள். இறைஞ்சும் விழிகளும் ஏக்கமான முகமுமாய், தாயைக் கண்ட சேயின் தவிப்புடன் அவனைப் பார்த்தவளின் விழிகளில் கீழிமைத் தொட்டு மேழிமை வரை மெதுமெதுவாக நீர் தளும்பத் துவங்கியது.

அந்த முகத்தில், அந்தப் பாவனையில், ஏனோ நிராதரவாக நின்றிருந்தவளுக்கு பற்றுக்கோல் கிடைத்த திருப்தியில் விழியோரம் துளிர்த்த சிறுகீற்று நம்பிக்கையில், உவர் நீரில் குமரன் நிதானித்தான்.
மனோஹரி அவனை நிதானிக்க வைத்திருந்தாள். மனம் ஒரு நொடி இந்தப் பெண்ணின் கண்ணீரில் நனைந்து, கனிந்து போனது. அவனது வாழ்வில் பொறுமை என்னும் அத்தியாயத்தை விருப்பும் வெறுப்புமாய் இணைத்தான்.

பத்து வருடங்களுக்கு முன்பு நடுவீதியில் தானிருந்த நிலையில்தான் இவள் இருக்கிறாள். தனக்கென யாருமில்லாத தனித்து நிற்பது போலொரு நிராதரவான நிலை கொடுமையிலும் உச்சக் கட்டக் கொடுமை. மனோ கரத்தின் வெம்மையும் பிசுபிசுப்பும், அந்தப் பார்வையில் அவன் கண்ட தவிப்பும் குமரனை, அவன் கோபத்தை மொத்தமாய் அமிழ்த்தியிருந்தது.

ஒரு நொடி விழிகளை மூடித் திறந்த குமரனின் செய்கையில், அது தந்த நம்பிக்கையில் அவனோடு நன்றாய் ஒட்டி நின்றவளின் உடல், அவனது அருகாமையில் மெதுவாய் தளர்ந்தது. இன்னுமே அவன் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். இறுமாப்பு, கோபம், தன்னகங்காரம் என அந்நொடி எதையுமே அவளால் இழுத்துப் பிடிக்க முடியவில்லை. நேசம் கொண்டவனிடமே அந்த நேசத்தை தக்க வைக்கப் போராடும் கொடுமை நெஞ்சுக்குழி வரை வாதையைப் பரப்பி, உள்ளத்தைக் கூர் கத்தியால் குத்திக் கிழித்தது.

“மனோ, என்னடி பண்ற? முதல்ல அவன் கையை விடு!” ராதாமணி கோபத்தில் என்ன செய்வது எனத் தெரியாது மகளிடம் இரைந்தார்.

“மனோ, என்ன பண்ற நீ?” திவாகர் தங்கையைப் பிடித்திழுக்க முயல,
“திவா… அமைதியா இரு!” என அவனிடமிருந்து நகர்ந்திருந்தாள்.
ரங்கராஜன் மகளின் செயலில் அதிருப்தியாக, அவரது முகம் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனது.

“உங்கப் பொண்ணு எதுக்காக அந்தப் பையன் கையைப் பிடிச்சிட்டு நிக்கிறா?” நிர்மலாவின் கணவர் வினவ, வந்திருந்த மூவரும் இருக்கையிலிருந்து எழுந்திருந்தனர். அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாத ராதா கணவர் முகத்தைப் பார்க்க, ரங்கராஜன் மகளை அனல் கக்கும் விழிகளால் எரித்திருந்தார்.

“அது… அது வந்து அண்ணா!” ராதாமணி பதில் கூற இயலாது திக்கித் திணறி, மனோஹரியை நினைத்து மனதிற்குள் குமைந்தார். ‘இவளைப் பெற்றதற்குப் பெறாமலே இருந்திருக்கலாம்!’ என மனம் முழுவதும் கோபம் கனன்றத் தொடங்கியது.

யாரும் பதிலளிக்காது நொடிகள் பல கடக்க, “நிர்மலா ஆன்ட்டி, அங்கிள், இவர் பேர் திருக்குமரன். இவரைதான் எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டம். அம்மா, அப்பா திடீர்னு உங்களை வரச் சொல்லிட்டாங்க. நீங்க வர்றது எனக்குத் தெரியாது.
நடந்த தப்புக்கு நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன்!” லேசாய் தடுமாறினாலும், உறுதியாய் உரைத்திருந்தாள் மனோஹரி. அந்தப் பேச்சில் வந்திருந்தவர்களின் முகத்தில் அதிருப்தி தெறித்தது. மாப்பிள்ளையின் முகம் ஏமாற்றத்தில் வாடிப் போனது.

“மனோ, என்னடி பேசுற?” ராதாமணி கோபத்தில் மகளது தோளில் அடிக்க, அசையாது நின்றாள். கை மட்டும் இன்னும் குமரனைத்தான் சமீபித்திருந்தது. அவனைவிடவே இல்லை. ரங்கராஜனுக்கு மகளின் செய்கையில் , அது கொடுத்த அவமானக் குன்றலில் முகம் கன்றி மேலும் சிவந்தது.

நிர்மலாவின் பார்வை ஒருவித அசூயையுடன் குமரனின் மீது படர, அதை உணர்ந்தவனின் உடல் இறுகியது. மனோவால் அதை உணர முடிந்தது. இவளது உள்ளம் தவித்து துடித்துப் போனது.

“என்ன ரங்கா, உன் பொண்ணை ஒழுங்கா வளர்க்க மாட்டீயா? ஒரு வேலைக்காரனைப் போய் பிடிச்சிருக்குன்னு சொல்றா?” என்றவரின் குரலில் தங்களை அவமானப்படுத்திவிட்ட கோபமும் காழ்ப்புணர்ச்சியும் தெரிந்தது.

“ஆன்ட்டி, வார்த்தையை அடக்கிப் பேசுங்க. அவர் வேலைதானே பார்த்தாரு. அதுக்கு ஏன் உங்க முகம் இப்படிப் போகுது. நீங்க கிளம்பலாம். எங்களோட ஃபேமிலி பிரச்சனையை நாங்கப் பார்த்துக்குறோம்!” என்றவளின் பற்கள் சினத்தில் நறநறக்கும் சத்தம் அனைவருக்குமே கேட்டது. அவரது பார்வையும் குரலும் குமரனை இறக்கித் தாழ்த்திப் பேசுவதைக் கண்டு, இத்தனை நேரம் பெரியவர்கள் என்ற மரியாதையில் அமைதி காத்தவளின் பொறுமை காற்றில் கரைந்திருந்தது.

“ஏன் ராதா, ஒத்தைப் பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியலை உங்களுக்கு? இவளுக்கெல்லாம் இருக்க வாய்க்கு, உங்க வீட்டு மானத்தைக் கப்பலேத்தப் போறா!” நிர்மலா கோபமாய்ப் பேச,

“ம்மா… போதும் வாங்க நம்ப போகலாம்!” என மாப்பிள்ளை, தன் தாயின் கரத்தை இழுத்துக்கொண்டு போனான். அவனது தந்தையும் ரங்கராஜனை அதிருப்தியாய்ப் பார்த்துவிட்டு வெளியேற, வீடே ஒரு நிமிடம் நிசப்தமாக இருந்தது.

“ஏங்க, நான்தான் சொன்னே இல்லங்க, உங்க மக ஊரைக் கூட்டி நம்பளை அசிங்கப்படுத்தப் போறான்னு. கேட்டீங்களா? மக, மகன்னு அவளைத் தலையில தூக்கி வச்சு ஆடுனீங்க. அதுக்கு தக்க சன்மானம் கொடுத்துட்டா இவ!” கை வலிக்க வலிக்க மனோவின் முதுகில் ஓங்கி அடித்தார். அது தந்த வலியிலும் வேதனையிலும் விழிகளில் நீர் தளும்பி நின்றாலும், ஒரு சொட்டு நீரைக் கூட வெளியேற்றாது அழுத்தமாய்ப் பெற்றவரைப் பார்த்தாள். அவரும் மகளைத்தான் பார்த்தார். இத்தனை வருடம் பாசத்தை பொழிந்து வளர்த்த மகள், தன்னை, தன் பேச்சை மீறியிருக்கிறாள். தன்னை அவமானப்படுத்தியிருக்கிறாள் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நெஞ்சு கோபத்தில் துடி துடித்துப் போக, அது கண்களில் விரவியது.

திவாகர், “ம்மா… அவளை அடிக்கிறதை நிப்பாட்டுங்க மா!” என ராதாமணியை மனோவிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தான். தந்தையின் பார்வை அவனது அடிவயிறு வரை பயபந்தை உருளச் செய்தது. ஆனால், அதற்கு காரணக்கர்த்தாவோ அசையாது நின்றாள். அவளது பார்வை பெற்றவர்களைக் குற்றம் சாட்டியது. தன் அனுமதியின்றி அவர்களை வரக்கூறியது உங்களுடையத் தவறு என விழிகளில் திரையிடும் நீருடன் பார்த்தாள்.

ரங்கராஜனின் பார்வை குமரனைச் சந்திக்கவும், அவனும் அவரைப் பார்த்தான். ‘நீயுமா?’ என அவர் உடைந்து போய்ப் பார்க்க, அவன் எதுவுமே பேசவில்லை.

‘ஆமாம்’ என்றோ ‘இல்லை!’ என்றோ எந்தவித முகமாற்றமும் இல்லாது அழுத்தமாய் இறுகிப் போய் நின்றான். அவரது பார்வை இருவரது கோர்த்திருந்த கரத்தில் நிலைக்க, மனோவிடமிருந்து தன் கையை உருவினான்.

தந்தை பார்வை உமிழ்ந்தக் கேள்வியை உள்வாங்கியவள், “அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பா. நான் தான் அவரைப் ஃபோன் பண்ணி வரச் சொன்னேன். இப்போ வரை அவர் உங்களுக்கு உண்மையாதான் இருக்காரு!” கோபமாய் ஆங்காரமாய் அவளிடமிருந்து வார்த்தைகள் வந்துவிழ,

error: Content is protected !!
Scroll to Top