உள்ளம் – 8.3

“செய்றதையும் செஞ்சுட்டு எவ்வளோ திமிறா பேசுறா பாருங்கங்க!” ராதா மகளின் இரண்டு கன்னத்திலும் மாற்றி மாற்றி அடிக்க, அப்போதும் வலிக்கிறது என முகத்தைச் சுளிக்காது சிலை போல நின்றாள். குமரன் விழிகள் அவளைத்தான் மொய்த்தன. அவள் தாங்கும் ஒவ்வொரு அடியிலும் இவனுக்குள்ளே ஏதோ ஒன்று துடித்து அடங்கிப் போனது. அந்த உறுதியில், அழுத்தத்தில் ஏனோ தன் சாயல் இருப்பதாய் மனம் கத்தி இரைச்சலிட்டது.

“ராதா, போதும் நிறுத்து!” இத்தனை நேரம் அமைதியாயிருந்த ரங்கராஜன், மனைவியை அதட்டி அடக்கியிருந்தார்.

“எவ்வளோ நம்பிக்கை வச்சிருந்தேன். என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டான்னு. ஒரு நிமிஷத்துல அத்தனையும் உடைச்சிட்ட இல்ல?” உடைந்துப் போய் கோபமாய் உரைத்தவரைப் பார்த்தவளுக்கும் மனம் முழுவதும் பாரம்தான். ஆனால், அதை வெளியே காண்பிக்கவில்லை.

“என் பேச்சை, என் விருப்பத்தை நீங்க மதிக்கலையே பா. மனசுல ஒருத்தரை வச்சிட்டு, எப்படிப்பா இன்னொருத்தர் முன்னாடி வந்து பொம்மை மாதிரி நிக்க முடியும். முடியாது பா! ஒன்னு குமரனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா, நான் உங்கப் பொண்ணாவே கடைசிவரை இருந்திட்றேன்!” மெல்லிய உடல் அதிர கோபமாய்க் கத்தினாள் மனோஹரி. தன்னைத் தந்தை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறாரே எனக் கோபம் வார்த்தைகளில் தெறித்தது.

“இதுதான் உன்னோட முடிவா?” ரங்கராஜன் தீவிரக் குரலில் வினவ, “ஆமா பா. இப்போ இல்லை, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என் முடிவு இதான்!” என இவள் சீறலாய் உரைக்கவும், தந்தையின் கரங்கள் மகளது கன்னத்தில் இடியாய் இறங்கியிருந்தது. ஒரு நொடி அனைவருமே ஸ்தம்பித்துப் போயினர்.

மனோஹரி உறைந்து போனாள். அவரது அடியின் வீரியத்தைத் தாங்காது உடல் தரையில் சரியப் பார்க்க, குமரன் நொடியில் அவளைத் தாங்கியிருந்தான். இறுமாப்பாயிருந்த உடலும் மனதும் தந்தையின் செய்கையில், தளர்ந்துப் போக, உதட்டோரம் குருதி வழியத் தொடங்கியது. வெளியே வராது விழிகளில் தேங்கி தஞ்சமிருந்த சூடான திரவம், குமரனை நனைத்தது. மனோஹரியின் முகம் இப்போது இவனது நெஞ்சில் புதைந்திருப்பதைக் கூட, அவளால் உணர முடியாது போனது. தந்தை அடித்த அடியைவிட, அவர் தன்னை அடித்துவிட்டாரா? என்ற அதிர்ச்சியிலே பெண் மனம் உறைந்துவிட்டது.

“அப்பா, என்ன பண்றீங்க?” திவாகர் பாய்ந்து வந்து, மனோஹரியை மறுபுறம் பிடித்து நிற்கவைத்திருந்தான். இருவரது கைப்பிடியிலிருந்தும் விலகி தன்னை நிதானப்படுத்தியவள், “பெத்தப் புள்ளையைவிட அப்படியென்னப்பா உங்களுக்கு வைராக்கியம் பெருசா போச்சு?” மனதெங்கும் பரவிய ஏமாற்றத்தையும் தந்தை அடித்துவிட்டாரே என்ற கோபத்தையும் ஆதங்கமாய்க் கொட்டிய மனோவின் முகம் மட்டும் இன்னுமே அழுத்தத்தை பிரதிபலித்தது.

“ஆமா, எனக்கு என்னோட மரியாதையும் அந்தஸ்தும், ஜாதியும்தான் முக்கியம்!” மகள் பேசப் பேச கோபத்தில் வெகுண்டெழுந்த ரங்கா மீண்டும் அவளை அடிக்கக் கரத்தைத் தூக்க, குமரன் இடையில் நுழைந்து, மனோவைத் தன் பின்னே இருத்தினான்.

“வேணாம் சார்!” என்றவனின் குரல், அவளை அடிக்கக் கூடாது என அந்தப் பெரிய மனிதருக்குக் கட்டளையிட்டது. முதன்முதலில் ரங்காவை எதிர்த்துப் பேசியிருந்தான் குமரன். அவனது குரலின் பேதத்தில் அவர் கூட அதிர்ந்து போனார். ரங்காவின் முகம் கோபத்தில் மாறியது.

“குமரா, நீ இடையில வராதே!” அவர் குரலை உயர்த்திப் பேசினார்.

“நான் வருவேன் சார், என்னை வச்சுதானே இந்தப் பேச்சு. அதை நானே தீர்க்குறேன். அவ மேல இனிமே நீங்க கையை வைக்கக் கூடாது!” என்றவன், மீறி மனோவின் மீது கை வைத்தால் எதற்கும் தான் பொறுப்பில்லை என்பது போல அழுத்தமாய்ப் பார்த்தான். இத்தனைநாள் மரியாதை ததும்ப பார்த்த விழிகளும் மனதும் அவரது பேச்சிலும் செய்கையிலும் ரங்காவை கீழிறக்கியிருந்தது. அவனறிந்து ராதாவைக் கூட மகளிடம் ஒரு வார்த்தைக் கடிந்து பேச விடாத மனிதர், இப்படி வார்த்தைகளாலும் செய்கையாலும் அவளைக் காயப்படுத்தியதை ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“குமரா, வாயை அடக்கிப் பேசு. எங்கப் பொண்ணு அவ. அவளை அடிக்க எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு!” ராதாமணி தன் கணவரைப் போயும் போயும் ஒரு வேலைக்காரன் எதிர்த்துப் பேசுவதா? எனக் கொதித்துப் போனார்.

‘எல்லாம் தான் பெத்தவளால் வந்தது!’ எனக் கோபம் இருமடங்காக உயர்ந்திருந்தது. அவரது பேச்சில் ஒரு நொடி ரௌத்திரமாய் அவரை உருத்து விழித்தவன், சடுதியில்
திரும்பி மனோஹரியின் கையைத் தரதரவென இழுத்துப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தான்.

“டேய்! என்ன டா பண்ற… கதவைத் தொற!” ராதாமணி பதற்றத்துடன் கதவைத் தட்டினார்‌.

“ராதா, அமைதியா இரு!” ரங்கராஜனுக்குத் தெரியும், குமரன் தன் வார்த்தைகளை மீற மாட்டான் என்று. அவன் மீது அந்த மனிதருக்கு இந்நொடி கூட நம்பிக்கை குறையவில்லை என்பதே உண்மை.

“குமரா!” திவாகர் கூட அவன் செயலில் அதிர்ந்து கோபத்தில் பல்லைக் கடித்தான்.

அறைக்குள் சென்று சினத்தில் மனோவை உதறித் தள்ளியிருந்தான் குமரன். அத்தனைக் கோபம்! ஏகக் கோபம், சினம், ரௌத்திரம். எதிரிலிருந்தவளின் மீது அவனால் காண்பிக்க முடியவில்லை. ஏற்கனவே பெற்றவர்களின் கோபத்தில் முகமெல்லாம் விரல்களின் அச்சுப் பதிந்து போயிருந்தது. உதட்டோரம் ரங்கராஜனின் செய்கையில் குருதி உறைந்துப் போயிருக்க, அவன் உதறலில் நிலைத் தடுமாறி சுவற்றில் கைப்பதித்து தன்னை நிலைப்படுத்தினாள்.

“ஏன் டி, ஏன் என் உசுரை வாங்குற? அதான் அவ்வளோ சொல்றாங்க இல்ல. வேற ஒருத்தனைக் கட்டீட்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே? அடி வாங்கி சாகப் போறீயா?” குமரனின் குரல் கர்ஜனையாய் வெளி வந்தது.

அவனது பேச்சிலும் அதன் சாரம்சத்திலும் வெகுண்டெழுந்த மனோ, “நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க சொல்ல வேணாம். எனக்குத் தெரியும்!” என்றாள் ரோஷக் குரலில். கேவி வந்த அழுகையை அடக்கி, துடித்த மனதின் தவிப்பை முகத்தில் காட்டிவிடாதவாறு தன் முன்னே நின்றவனை உருத்து விழித்தாள்.

“மனோ!” கோபத்தில் அவளை அறையச் சென்ற கரத்தைக் கட்டுப்படுத்தி பின்னகர்ந்தான் குமரன். ஒரு நொடி தாமதித்திருந்தாலும், அவனது மொத்தக் கோபமும் ஒரே அறையில் அவளது கன்னத்தில் இறங்கியிருக்கும். தாங்கியிருக்கமாட்டாளே என முதன் முதலாய் அவளுக்காக குமரன் மனம் தவித்துப் போனது.

“உனக்குப் புரியவே புரியாதா டி? கொஞ்ச நேரத்துக்கு முன்ன அந்தம்மா பார்த்துச்சே, அந்த. பார்வை மாதிரிதான் நம்ம கல்யாணம் பண்ணாலும் இருக்கும். பரவாயில்லையா?” இவன் பல்லிடுக்கில் வினவினான். குரலில் ஆற்றாமை நிரம்பி வழிந்தது‌.

“அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்றதுக்காக எல்லாம் என்னால வாழ முடியாது. என் வாழ்க்கை, என் இஷ்டம். உங்களைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்!” என்றுரைத்தவளின் குரலில் வெகு அழுத்தம்.

“எந்த ஜென்மத்துலயும் அது நடக்காது. நடக்காத ஒன்னுக்கு ஆசைப்பட்றதை மொத விடு மனோ. எனக்கு உன்னைப் பிடிக்கலை! எனக்கு நீ வேணாம்!” என்று கோபமாய் உரைத்தவனின் வார்த்தையில் இவள் மொத்தமாய் உடைந்துப் போனாள். வாழ்க்கையில் இரண்டாவது முறையாக தன்மீது நேசம் கொண்ட காரணத்திற்காக இன்னொரு பெண்ணை வார்த்தைகளால் வதைத்திருந்தான் குமரன்.
தன் காதலுக்கு, காதலனே எதிரியாய் மாறியதை நினைத்து மனோவின் மனம் ஊமையாய் அழுதது.

“ஓஹோ… பிடிக்கலையா?” அவன் வார்த்தைக் கொடுத்த வலியையும் கோபத்தையும் ஒருங்கே குரலில் தேக்கியவள், “பரவாயில்லை, நீங்க பிடிக்கலைன்னதும் நான் அழுகவெல்லாம் மாட்டேன். முதல்ல கிளம்புங்க!” என்றாள் சீறலாய். கைகளைக் கட்டி விழிகளில் கோபத்தைக் காண்பித்து முகத்தை வேறுபுறம் திருப்பி நின்றவளின் கண்களில் குபுகுபுவென நீர் வழிய, தொண்டை அடைத்துப் போனது.

அவளது தாடையை அழுத்தமாகப் பற்றி தன்புறம் திருப்பியவன், “அப்படியென்னத்தைதான் என்கிட்ட கண்ட டி? உன் பிடிவாதம் போகவே போகாதா?” இத்தனை நாட்கள் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்த கேள்வியை குமரன் கொட்டிவிட, இவளது விழிகள் வேகவேகமாய் நனைந்தன.

அவனது கரத்தையும் சேர்த்து உவர்நீர் நனைக்க, அவன் கையைத் தட்டிவிட்ட மனோ, “கெட் லாஸ்ட் ஃப்ரம் மை ரூம்!” என குமரன் முன்பு கையைக் கோபத்துடன் நீட்டி வெளியே செல் என்பதைப் போல கட்டளை பிறபித்தாள்.

‘பிடிக்காது, முடியாது! என்ற உன்னிடம் மேலும் விவாதம் செய்து, காதலை யாசிக்க விருப்பமில்லை. போய் விடு!’ என்ற கோபம் அவள் முகத்தில்.

மனோவின் வதனத்தை, அதிலிருந்தப் பாவனையை உள்வாங்கியவன், “இந்தக் கல்யாணம், உன்னோட நினைப்பு எல்லாம் மணல் கோட்டை!” என வெகுவாய் நிதானத்திற்கு வந்திருந்தக் குமரன் அழுத்தி அவளது விழிகளைப் பார்த்து உச்சரித்தான். மனோவிடம் எந்த உணர்வும் இல்லை. உணர்விழந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

‘போடா…போ. என் வாழ்க்கை நீ இல்லையென்றாலும் நின்றுவிடப் போவதில்லை. கணணெதிரே மீண்டும் வந்து விடாதே!’ கத்தி கூச்சல் போட்ட மனதின் ஆர்பரிப்புகளை எல்லாம் உதட்டில் தேக்கி விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தவளின் மனம் மொத்தமாய் சில்லு சில்லாக உடைந்திருக்க, குமரன் கதவைத் திறந்து யாரையும் காணாது வெளியேறியிருந்தான்.

‘நீ எனக்கு வேண்டாம்! திருமணம் செய்ய முடியாது!’ என வார்த்தைக்கு வார்த்தை உரைத்தவனை, ‘உங்கள் மகள்தான் வேண்டும்!’ என மறுநாளே கேட்க வைத்திருந்தாள் மனோஹரி. குமரனின் கையணைவில் வந்து நின்ற மனோஹரியிடம் மொத்தக் கோபத்தையும் காண்பித்திருந்தார் ராதாமணி.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top