உள்ளம் – 8.1

குமரன் வீட்டிற்குள் நுழையவும், ராதாமணியும் ரங்கராஜனும் ஒரு நொடி அதிர்ந்து போயினர். வேலையைவிட்டுச் சென்ற அன்று அவனைக் கண்டதோடு, அடுத்து இன்றுதான் பார்க்கின்றனர்.

ராதாமணி குமரனை எரித்து விடுவது போலொரு பார்வைப் பார்த்தார். அவரது முகம் கோபத்தில் தகிக்க, ‘இவன் எதுக்கு இப்போ இங்க வந்தான்?’ வார்த்தையால் கேட்க முடியாது பல்லைக் கடித்து சினம் பொங்கும் விழிகளால் நோக்கினார்‌. சரியாய் இந்நேரத்தில் இவன் வந்ததற்கான காரணம் என்னவென மனம் ஆராய, யோசிக்க அவகாசம் கொடுக்காது மகள் உருவம் கண்முன்னே தோன்றி மறைந்தது. கண்டிப்பாக இவளது செயலாகத்தான் இருக்கும் என ஊகித்தவரின் எண்ணத்தைப் பொய்யாக்கவில்லை மனோ.

அவனைத்தான் எதிர்பார்த்தேன் என்பது போலொரு பாவனை அவளின் முகமெங்கும் விரவியிருந்தது. இனி இவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல் விடை பெற்றிருக்க, ஆறுதலாய் அவனைப் பார்த்து உதட்டை லேசாய் விரித்துப் புன்னகைக்க முயன்றாள். குமரனின் பார்வையும் அவளிடம்தான். அத்தனை ஒப்பனை செய்திருந்தும் அவள் முகத்தில், விழிகளில், அந்தப் புன்னகையில், உடல் மொழியில் ஏதோ உயிர்ப்பு குறைந்திருந்ததை இவனால் கணிக்க முடிந்தது. ஆதரவற்று நிற்கும் இந்தப் பெண்ணைக் காண்கையில் மனதில் நொடி நேரச்சலனம். திமிராய், அலட்சியமாய்ப் பார்க்கும் விழிகள் இன்று அவனைத் தவிப்பாய் நோக்குவதை உணர்ந்து, நொடியில் விழிகளைத் நகர்த்தி எதிலிருந்தோ தப்பிப்பதைப் போல ரங்கராஜனின்புறம் திரும்பினான்.

வந்திருந்த மாப்பிள்ளை வீட்டினரும் குமரனைத்தான் கேள்வியாய் நோக்கினர். ஒரு நிமிடத்தில் தன்னை மீட்ட ரங்கா, “வா குமரா, என்ன இந்த நேரம் வந்திருக்க?” என இயல்பாய் வினவினார்‌. அவர்கள் முன்னிலையில் எதையும் கேட்க விருப்பமில்லை. குமரன் வந்திருந்தால், ஏதோ காரணமாகத்தான் இருக்கும் என அவன் மீதுள்ள நம்பிக்கையில் மற்ற எண்ணங்களைக் கிடப்பில் போட்டார். இப்போது இந்தப் பையனை இங்கிருந்து அகற்றுவதே பிரதானக் கடமை என மனம் கூறியது.

குமரன் பதிலேதும் அளிக்கவில்லை. அப்போதுதான் புறத்தூண்டல் உறைத்ததைப் போல, அவனின் பார்வை மெதுவாய் வந்திருப்பவர்களைத் தொட்டு மீள, நடப்பது என்னவென மூளை சடுதியில் ஊகித்திருந்தது. ஒரு நொடி கண்ணை மூடித் திறந்தான். மனோஹரியின் மீது அப்படியொரு கோபம் வந்தது. எந்த எண்ணத்தில் இந்தப் பெண் தன்னை அழைத்திருக்கக் கூடும் என எண்ணியவனின் மனம் உலை கலனாக மாறியிருந்தது. ஏற்கனவே நடக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது இவனையும் சேர்த்துக் குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டாள். ராதாமணியின் பார்வையில் குமரன் மீதுதான் பிரதானக் குற்றம். எந்தவித முகாந்திரமும் இன்றி அவனை ஆழம் பார்த்துப் பார்வையில் பொசுக்கினார் பெண்மணி.

“என்ன குமரா, ஏன் பதில் சொல்ல மாட்ற!” திவாகர் அவனருகே விரைந்திருந்தான். அவன் மனதில் மெலிதாய் பதட்டம். எல்லாம் நன்றாகச் சென்று பேசி முடியும் தருவாயில் இவன் வந்துவிட்டானே என மனம் அடித்துக் கொண்டது.

“இல்லை திவாகர், சாரைப் பார்க்கலாம்னு வந்தேன். முக்கியமான விஷயம் எதுவுமில்லை. அப்புறம் வரேன்!” என்றவனின் பார்வை முழுவதும் மனோவிடம்தான். அவனைத்தான் அவளும் அழுத்தமாய்ப் பார்த்தாள். நடக்கும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்தாலும், தனக்காகவென ஒரு வார்த்தைக் கூட இவன் உதிர்க்கப் போவதில்லை என்ற நிதர்சனம் உறைத்ததில், உள்ளே ஏதோ ஒன்று உடைந்திருக்க, இவள் நொறுங்கிப் போனாள். இமையோரம் துளிர்த்த மைக்ரோ சொட்டு நீர், வெளியே வரவில்லை.

கோபம் கொண்ட மனம், ‘போகட்டும் விடு. அவன் வேண்டாம்!’ எனக் கதற, காதல் கொண்ட மனது இந்நொடி தன்மானத்தை காதல் சிறையில் பிணைக்கைதியாக்கியிருந்தது.

“இந்தப் பையன், எங்க வீட்ல வேலை பார்த்தப் பையன். எதாவது வேலை விஷயமா அவரைப் பார்க்க வந்திருப்பான்…” ராதாமணி சூழ்நிலையை இயல்பாக்கி வந்திருந்த அனைவரின் பார்வைக்கும் பதிலளிக்க விழைந்தார். காரியம் கெட்டுவிடக் கூடாது எனப் பெற்ற மனம் தவித்தது.

“ஆமா கா, உங்களுக்குக் கூடக் குமரனைத் தெரியுமே! சின்ன வயசுல இருந்தே இங்கதான் வேலை பார்க்குறான்!” என்ற ரங்கராஜன் அவனைப் காணவும், அவரைப் பார்த்துத் தலையை அசைத்தவன் விடைபெற யத்தனித்த நொடி, மனோஹரி அவனருகே சென்றிருந்தாள்.

‘இந்தப் பெண் என்ன செய்கிறாள்?’ ராதாமணி பதறிப் போய் மகளருகே விரையும் முன், வெளியேறிக் கொண்டிருந்த குமரனின் கரங்களைப் பிடித்திழுத்து, அதில் தன் கரத்தை நொடியில் கோர்த்திருந்தாள் மனோஹரி.

நடந்து கொண்டிருந்தவன் நடை நிதானப்படவில்லை; மொத்தமாய் நின்று ஸ்தம்பித்துப் போனது. வியர்வையில் குளித்துப் பிசுபிசுத்துப் போன மனோ கரத்தின் வெம்மை அவனது கரங்களுடன் தணிந்து போய், மனதின் அலைப்புறதலை, அதன் வேதனையையும் வாதையும் தவிப்பையும் கடத்தியிருந்தன.
அவனது விரல்களோடு அழுத்தமாய்த் தன் விரல்களைப் புதைத்தாள். மெலிதாய் பெண்ணின் கைகளில் நடுக்கம்.

‘உன்னை விட மாட்டேன்!’ என்றொரு உணர்வு அந்தக் கரத்தோடு உறைந்து போயிருந்ததை உணர்ந்தவனின் முகம் கோபத்தில் சிவந்தது.

குமரன் ஒரு நொடி சலனப்பட்ட மனதிலிருந்து விடுபட்டவன், “மனோ!” எனப் பல்லைக் கடித்தவாறே அவள்புறம் திரும்பினான். அவளைக் கன்னத்தோடு அறைந்துவிடும் ஆத்திரம் அவனுள்ளே பிரவாகமாகப் பொங்கியது.

error: Content is protected !!
Scroll to Top