உள்ளம் – 7.2

அவரைப் பார்த்தவன், “ஹம்ம்… அது இங்க வேலைல இருந்து நிக்கப் போறேன் அண்ணே!” என்றவனின் பதிலில் ஏகத்திற்கும் எதிரிலிருந்தவரின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.

நொடியில் கையிலிருந்தக் குவளையை அருகே வைத்தவர், “ஏய் குமரா, என்னப்பா சொல்ற. உண்மையைத்தான் சொல்றீயா? ஐயா எப்படி உன்னை வேலையை விட்டுப்போக அனுமதிச்சாரு?” என அடுக்கடுக்காகக் கேள்விக்
கணைகளை வீசினார் மனிதர்.

“தனியா பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்ண்ணா. அதான் வேலையைவிட்டு விலகுறேன்!” பொய்யுரைத்திருந்தான். ஏனோ காரணத்தை முழுமையாய் உரைக்க மனம் வரவில்லை. மனோஹரியின் முகம் நொடி நேரம் எனினும் கண்முன்னே தோன்றி மறைந்திருந்தது.

அந்தப் பதிலில் முகம் மலர்ந்தவர், “அடடே! இப்போதான் உனக்கு இந்த ஐடியா தோணி இருக்கா. நல்லது பா, கண்டிப்பா தொழில் நல்லா வரும். நீ திறமையான புள்ளையாச்சே!” என உவகையுடன் கூறியவரிடம் தலையை அசைத்து விடை பெற்றவன், தன்னிடமிருந்து மாற்றுச் சாவியை எடுத்துக்கொண்டு மணல் குவாரியை நோக்கிச் சென்றிருந்தான்.

இவன் வருவதைப் பார்த்த திவாகர், “வா குமரா…” என அழைக்க, அவனுக்கு அருகேயிருந்த இருக்கையில் போய் தளர்வாய் அமர்ந்தான் குமரன்.

தன் கையிலிருந்தக் கோப்பை மேஜை மீது வைத்தவன், “இதுல சூளையோட அக்கவுண்ட்ஸ், அண்ட் எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் எல்லா டீடெய்லையும் ஃபில் பண்ணிட்டேன். இது ஆபிஸ் ரூமோட மெயின் சாவி, அப்புறம் இது ட்யூப்ளிகேட். சூளையோட சாவி மணி அண்ணாகிட்டே இருக்கு. அவர் பூட்டிட்டு உங்ககிட்ட தந்துட்றேன்னு சொல்லிட்டாரு…” குமரன் பேசப் பேச திவாகர் விழித்தான்.

‘எதற்காக இதையெல்லாம் இப்போது கூறுகிறான்?’ என அவன் முகத்தில் புரியாத பாவனைதான்.

“எதுக்கு குமரா இப்போ இதெல்லாம் ஹேண்ட் ஓவர் பண்ற?” என திவாவின் கேள்வியில் அவனுக்கு எதுவுமே தெரியாது என்றுணர்ந்தவன், தனக்கும் ரங்கராஜனுக்கும் இடையேயான உரையாடலை உரைத்தான்.

திவாகர் ஏகமாய் அதிர்ந்து போனான். “இந்த அப்பா ஏன் இப்படி பண்றார்னு தெரியலை. மனோதான் புரியாம நடந்துக்கிறார்னா, இவர் பங்குக்கு இவர் பண்றாரு…” பல்லைக் கடித்தவன், “குமரா, முதல்ல கீயை எடுத்துக்கோ. நான் அப்பாகிட்ட பேசுறேன். நீ எப்பவும் போல வேலையைப் பாரு…” என்றவனிடம் குமரன் முடியாது எனத் தலையை உறுதியாய் அசைத்திருந்தான்.

“வேணாம் திவாகர், விடுங்க. இனிமே நான் இங்க வேலை பார்க்குறது சரி வராது. உங்கப்பா எடுத்த முடிவு ரொம்ப சரி. நான் வரேன்!” என்று எழுந்தவன், “வேறெதுவும் டீடெய்ல்ஸ் வேணும்னா கால் பண்ணுங்க. நான் சொல்றேன்.‌..” எனக் கூறியவனுக்கும் குவாரிக்கும் சூளைக்குமான தொடர்பு அந்நொடி அறுந்திருந்தது.

திவாகருக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை. இத்தனை பெரிய முடிவை ரங்கராஜன் எடுத்திருக்க வேண்டாம் என மனம் அடித்துக் கொண்டது. நடந்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. குமரனின் இருப்பு இந்த சூளையில் குவாரியில் என எங்கும் நிறைந்து கிளைப் பரப்பிக் கிடக்க, இவரென்னவென்றால் எதையும் யோசிக்காது அவனை வேலையைவிட்டு நீக்கியிருக்கிறாரே என மனதில் குமைந்தான்.

குமரன் எழவும், இவனும் எழுந்து நின்றான். பத்து வருட உறவாகிற்றே! நொடியில் அறுந்து விழும்போது இருவருக்குமே ஏதோ சொல்ல முடியாத உணர்வு தொண்டையில் தொக்கி நின்றது. இரண்டொரு வயது வேறுபாடுகள்தான் இருவருக்கும். சகஜமான பேச்சோ, உரிமையோ, உறவோ இல்லையெனினும் அதீத புரிதல் இருவரையும் இத்தனை வருடங்களாகப் பிணைத்திருக்க, அது இன்று முடிவுக்கு வந்திருந்ததை இருவரும் ஏற்றுக் கொள்ள முயன்றனர்.

“சாரி குமரா, என் தங்கச்சியோ அப்பாவோ உன்னைக் கஷ்டப்படுத்தியிருந்தா, ஐ யம் ரியலி சாரி!” திவாகர் தயக்கமாய்ப் புன்னகைக்கவும், குமரன் தலையைப் புரிதலாய் அசைத்து விடைபெற்றிருந்தான்.

திவாகர் மாலை வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் தந்தையிடம் அவரது முடிவை தவறானது என வாதிட, ரங்கராஜன் தன் முடிவில் உறுதியாயிருந்துவிட்டார். அவனும் இந்த விஷயத்தில் மேலும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்துவிட்டான்.

அடுத்தடுத்த நாட்கள் எப்போதும் போல நகர ஆரம்பித்திருந்தன. மனோஹரி யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. திவாகரிடம் மட்டும் இரண்டொரு வார்த்தைகளை உதிர்த்தாள்.

ராதாமணி அவ்வப்போது தனது தேள் கொட்டும் வார்த்தைகளால் மகளை சாட, மனோஹரியும் பதிலுக்கு பதில் காரமாய் பதிலளித்திருந்தாள். சில சமயம் வாக்குவாதத்தின் நீட்சியாய் சண்டை உருவாக, ரங்கராஜன் மனைவியைதான் கடிந்தார். மகளை ஒரு வார்த்தை பேசவில்லை. அதில் இவளுக்கு லேசாய் குற்றக் குறுகுறுப்பு மனதை அரித்துத் தொலைத்தது.

சில நாட்களாக மனோஹரி இருசக்கர வாகனத்தில் தனியாளாய் பணிக்குச் சென்று திரும்ப, கடந்த ஒரு வாரத்தில் அதுவே பழகியிருந்தது. யாருடைய துணையும் தேவையில்லை என்ற தன்முனைப்பு அவளை தன்னிச்சையாய் செயல்பட உந்தியிருந்தது.

திவாகருக்கு பணிச்சுமை கூடிப் போனது. குமரனுடைய பணிகளும் இவன் பொறுப்பின் கீழ் வந்திருக்க, அதை சமாளிக்க முடியாது திணறித்தான் போனான். ரங்கராஜன் கட்சிப் பணிகளை ஒதுக்கிவிட்டு, குமரன் இடத்தை நிரப்ப முயன்றார். ஆனாலும் இருவராலும் அவனது இடத்தை நிரப்ப முடியாது போனது. இன்றல்ல, என்றுமே அவனது இடத்தை இருவராலும் நிரப்ப முடியாது என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்தது.

அவனைப் போல எல்லாவற்றையும் நினைவில் வைத்து சமயோகிதமாய் செயல்பட திவாகரால் முடியவில்லை. சோர்ந்துப் போனான். இருந்தும், தான்தான் அனைத்தையும் பொறுப்பாய் கவனிக்க வேண்டும் என்ற முனைப்புடன் முடிந்தளவு அனைத்தையும் சிரத்தையுடன் திறம்பட செய்தான். சிலவற்றில் சறுக்கல் ஏற்பட, குமரனுக்கு அழைத்து யோசனைகளைப் பெற்றுக் கொண்டான்.

இரண்டு நாட்கள் வீட்லிருந்த குமரனால் அதற்குமேல் முடியவில்லை. வேலை செய்து பழகியிருந்த உடலும் மனதும் அவனை ஓய்வெடுக்க விடவில்லை. புதிதாய் வேறொரு செங்கல் சூளையில் பணிக்குச் சேர்ந்து, இன்றோடு ஐந்து நாட்கள் முடிவடைந்திருந்தன. ஏற்கனவே இந்த சூளையின் முதலாளி குமரனை நல்ல சம்பளம் தருவதாய்க் கூறி அழைத்தும், ரங்கராஜன் மீதிருந்த விசுவாசத்தால் தட்டிக் கழித்திருந்தான். ஆனால், இப்போது அவனுக்கு வேலையில்லை எனத் தெரிந்து அவராக அழைத்து வற்புறுத்தவே, இவனும் ஒப்புக் கொண்டான்.

வீட்டிலிருந்து வெறுமை முகத்தில் அறைய, தனக்கும் மாற்றம் வேண்டுமென்று புதிய சூழ்நிலையில் வேலைக்குப் பழகியிருந்தான். முதல்நாள் ஏனோ மனது இது தன்னிடம் இல்லை என முரண்டு பிடித்தது. ஏற்றுக் கொள்ள முடியாது தத்தளித்தான். ஆனால், இந்த ஐந்து நாட்களில் புதிய இடத்தை மெதுவாக மனம் உள்வாங்கிக் கொண்டது. மாற்றம் ஒன்றே மாறாதது என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சிந்துவிடம் வேலையைவிட்டு நின்றுவிட்டதாக மட்டுமே கூறினான். மற்றபடி பெரிதாய் நடந்த எதையும் அவரிடம் விளக்கவில்லை. தெரிந்தால் அவர் மனம் வருத்தம் கொள்ளும். அதனாலே சிறிய மனக்கசப்பு என அந்நொடி மனதில் உதித்த பொய்யை அவர் முகம் காணாது உரைத்து நழுவியிருந்தான். சிந்துவும் அப்போது வேறு ஏதோ வேலையிலிருந்ததால், மகனை ஊன்றிக் கவனிக்க தவறியிருந்தார். அதுவுமில்லாமல் ரங்கராஜனை எங்கேயும் கிழிறக்க மனம் ஒப்பவில்லை என்பதே உண்மை.

தானாகத் தொழில் தொடங்கும் எண்ணம் துளிர்விட்டாலும், அவ்வளவு நிதி குமரனிடம் இல்லை. பணத்தைப் புரட்ட சிறிது காலமேனும் அவனுக்குத் தேவைப்பட, அதுவரை இங்கே பணியாற்றலாம் என வேலையில் முடிந்தளவு ஒன்றிப் போனான். மூளையும் மனதும் எங்கோ ஓர் வெற்றிடத்தில் மனோஹரியின் பேச்சை அவனறியாது அசை போடும். அதையெல்லாம் பெரிதுபடுத்தவில்லை. இத்தனை வருடங்கள் உடனிருந்ததால், அப்படியொரு எண்ணம் என அந்நினைப்பைத் தட்டி நழுவவிட்டான்.

error: Content is protected !!
Scroll to Top