தன்னெதிரே வந்து நின்ற குமரனின் அரவம் உணர்ந்தாலும் மனோஹரி நிமிரவே இல்லை. செய்யும் வேலையைக் கண்ணும் கருத்துமாகக் குனிந்தவாறே செய்து கொண்டிருந்தாள்.
குமரனுக்கு அத்தனை ஆச்சர்யம். ஒன்று அழுது வடிந்து கொண்டிருப்பாள், இல்லையென்றால் கோபமாய் இருப்பாள் என அவன் எண்ணி அறைக்குள் நுழைய, இவளோ நகத்திற்கு நகப்பூச்சை பூசிக் கொண்டிருந்தாள். அடர் அழல் நிறத்திலிருந்த நகப்பூச்சை ஒவ்வொரு விரலுக்காய்ப் பூசினாள்.
‘வெளியே எத்தனைப் பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியே இவள்தான். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இவளென்னவென்றால் நெயில்பாலிஷ் வைத்துக் கொண்டிருக்கிறாளே!’ எனக் கோபமாய் மனதிற்குள் பல்லைக் கடித்தான் குமரன். முகம் சினத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தது.
ஒரு நிமிடம் பேசாது திகைத்துப் பின் கோபத்தை தத்தெடுத்து தன்னை மீட்டுக் கொண்டவன், “மனோ…” அதட்டலாய் அவளை விளித்தான். வெளியே அமர்ந்திருந்த ரங்கராஜனின் நிலையும் இவனது கோபத்தை இப்போது ஓரடுக்கு உயர்த்தியிருக்க, குரலில் அது தெறித்தது.
அவன் அதட்டலும் சினமும் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்றொரு பாவனைதான் இவளிடத்தில். அவன் குரல் கொடுக்க விழைந்த எந்தவித அதிர்வுமின்றி நிதானமாய் அவனது கால்களிலிருந்து பார்வையை மெதுவாய் உயர்த்தி மார்பு, முகம் உதடு, மூக்கு எனப் பதித்து இறுதியாய் அவன் விழிகளைச் சந்தித்தவளைப் பார்த்து இவனுக்கு ஏக எரிச்சல் முகத்தில் விரவியது.
‘என்ன வேணும்?’ என வார்த்தையில்லாது விழிகளாலே வினவினாள். அது கூட ஏனோ திமிறின் மறுமொழியாய்த் தோன்றித் தொலைத்தது இவனுக்கு.
மூணடெழுந்த சினத்தை வெகுவாய்க் கட்டுப்படுத்தி அவளை முறைத்து, “நேத்து என்ன இன்டன்ஷனோட அப்படி பேசுன நீ?” என்றவனின் வார்த்தைகள் பல்லிடுக்கில் வெளிவந்தன. என்ன முயன்றும் கோபத்தை வார்த்தை வழியாய் உமிழ்ந்திருந்தான்.
“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்றதை தவிர பெருசா ஒரு இன்டென்ஷனும் இப்போதைக்கு எனக்கில்ல!” எதுவுமே நடவாதது போலொரு பாவனை அவளது முகத்திலும் குரலிலும். பொறுமையாய்ப் பதுமையாய்ப் பதிலளித்தாள். முகத்தில் ஆழ்ந்த அமைதி அவனைக் காண்கையில் இப்போது இந்நொடி உதித்திருந்தது. ஆனாலும் சிவந்திருந்த விழிகளும் வெளுத்துப் போயிருந்த முகமும் பெண்ணின் அகத்தைப் புடம் போட்ட தங்கம் போல பளிச்சென காண்பித்துக் கொடுத்தன.
அவளது பதிலில் அலட்சியத்தில் ஓங்கி அறைந்து விடு என மூளை நொடியில் கட்டளைப் பிறப்பிக்க, வலது கையை உயர்த்திப் பின்னேகொண்டு சென்று பிடரி முடியைக் கோதி, தன்னை சமன் செய்ய முயன்றான்.
“நான் ஒன்னும் கடையில விக்கிற பொம்மை இல்ல. உங்கப்பாகிட்டே பெர்த்டே கிஃப்டா என்னைக் கேட்க!” அத்தனை சூடாய் வந்தது குமரனின் குரல். கோபத்தில் குரலை உயர்த்தாது அழுத்தமாய் அவளை ஊடுருவியபடி கேள்வியை வீசினான்.
அந்தப் பார்வையில், அந்தக் கேள்வியில் திகைத்த மனோ, “நான் அந்த மாதிரி அர்த்தத்துல கேட்கலை!” எனப் பதகளிப்புடன் அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள். அவனது தவறான புரிதலில் இவளுக்குப் பதறிப் போனது.
“நீ எந்த அர்த்தத்துல கேட்டிருந்தாலும், அதுக்கு ஒரே மீனிங்தான்!” தன்னைக் கண்கள் இடுங்கப் பார்த்தவனின் பார்வையில் இவள் அமைதியாகிப் போனாள். தான் கூறுவதைப் புரிந்து கொள்ள தயாராக இல்லாதவனிடம் பேசுவது விழலுக்கு இரைத்த நீரென வீணாகிவிடும் என உதட்டைப் பூட்டிக் கொண்டாள்.
“கண்டமேனிக்கு உளறீட்டு இருக்காத மனோ. உங்கப்பா ரொம்ப உடைஞ்சுப் போய்ட்டாரு. அவர் இப்படி இருந்து நான் பார்த்தது இல்லை. என்ன சொல்றோம், பேசுறோம்னு முதல்ல புரிஞ்சுட்டு பேசு…” சீற்றத்துடன் பேசியவனைப் பார்த்தவள்,
“ஓஹோ! நான் பேசுனது எல்லாம் உங்களுக்கு உளறலா தெரிஞ்சுதா?” என எள்ளலாகக் கேட்டாள். மனம் வலித்தது அருகிலிருந்தவனின் பேச்சில். தான் எத்தனை தூரம் இவனோடான வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்க, இவனுக்கு நான் பேசியவை எல்லாம் உளறலா என ஏகமாய்க் கோபம் மூண்டது.
“ஆமா! நீ பேசுனது எல்லாம் உளறல்தான். நடக்கவே வாய்ப்பில்லாததைப் பேசும்போதே தெரியலை, நீ ஒரு முட்டாள். இந்த எண்ணத்தை முதல்ல உன் மனசுலருந்து அழி!” பொறுமைக்கு இலக்கணம் தெரியாது அதை கைவிட்ட குமரன் குரல் அந்த அறையின் அமைதியைக் கிழித்து, எங்கும் எதிரொலித்தன.
“ஏன் நடக்காது, நடக்கும். இந்த ஜென்மத்துல எனக்குக் கல்யாணம்னா அது உங்கக் கூடதான். உங்களால நினைச்சா கூட அதை மாத்த முடியாது!” நீ பேசுவதையெல்லாம் என்னால் ஏற்க முடியாது என்று வெகு அலட்சிமாகப் பதில் கூறினாள் மனோஹரி. தன் காதலை வார்த்தைக்கு வார்த்தை உளறல் எனக் கூறியவனிடம் ஏனோ தன்மானம் அடிபட்டதைப் போல மனதில் சுருக்கென்று வலியெழுந்தது.
இருக்கையிலிருந்து எழுந்து அவனது முகத்தைப் பார்க்காது வதனத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டவளின் விழிகளில் நீர் திரையிட்டது. வெளியே வரவா? என அனுமதி கேட்டு நிற்கும் நீரை உதட்டைக் கடித்து, விழிகளை சிமிட்டி உள்ளிழுத்தாள். அவன் முன்னே அழுவதை தன்மானம் கொண்ட மனது அனுமதிக்கவில்லை.
மனோவின் பேச்சில், அதிலிருந்த உறுதியில், அலட்சியமான பாவனையில், சீண்டப்பட்ட குமரன், அவளுக்கு அருகில் சென்றான். அவள் அசையவே இல்லை.
“உங்க அப்பாவே சம்மதிச்சாலும், என்னோட அனுமதி இல்லாம எதுவும் நடக்க விடமாட்டேன். புரிஞ்சுதா மனோஹரி!” சூடாய் செவியில் மோதிய அவனின் மூச்சுக் காற்றில் இவளது உடல் ஒரு நொடி அதிர, அவனைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் என்ன இருந்தது என ஆராயவெல்லாம் எனக்கு நேரமில்லை என்பது போல குமரன் விறுவிறுவென வெளியேறியிருந்தான்.
மனோஹரியின் இந்த அழுத்தமான அலட்சியமானப் பேச்சு குமரனின் கோபத்திற்குத் தூபம் போட, மேலும் அவனது தன்மானத்தை சீண்டியிருந்தது. அவன் நினைத்தால் கூட மாற்ற முடியாது என்றிருந்தவளின் பேச்சு இவனது தன்முனைப்பை தட்டிவிட்டிருந்தது. எதிரும் புதிருமாய் இருப்பவர்களின் வாழ்க்கை மட்டும் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை செவ்வென செய்து கொண்டிருந்தது.
மனோஹரி மதிய பொழுதிற்கு மேல் மருத்துவமனைக்குக் கிளம்பினாள். “சாப்பிட்டு போடி. உனக்கு ஒரு ஆளு வெத்தலைப் பாக்கு வச்சு கூப்பிடணும்!” என்ற ராதாமணியின் பேச்சைக் காற்றில்விட்டவாறு வெளியேறியிருந்தாள்.
“மனோ, எப்படி போவ? ட்ரைவரைக் கூட்டீட்டுப் போ…” ரங்கராஜன் கூற, “இல்லை பா, நான் ஆட்டோவுல போய்க்கிறேன். என்னால தனியா போய்ட்டு வர முடியும்…” என்றவள், பிரதான சாலைக்குச் சென்று தானியில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றாள். அவளறிந்து தனியாக பணிக்குச் செல்லும் முதல்நாள். இதற்கு முன்பு குமரனோ அல்லது திவாகரோ கட்டாயம் உடன் வருவார்கள்.
வீட்டிலிருந்து வரும்போது ரங்கராஜனின் மகிழுந்து ஓட்டுநரிடம் இத்தனை நாள் பூட்டி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து வைக்குமாறு கூறிதான் அகன்றாள். நாளை முதல் இருசக்கர வாகனத்திலே சென்று வரலாம் என மனதில் எண்ணியிருந்தாள் மனோஹரி.
மருத்துவமனையை அடைந்ததும் வேலை அவளைப் பிடித்து வைக்க, மற்ற எண்ணங்கள் எல்லாம் பின்னகர்ந்து கொண்டன. ஒவ்வொரு குழந்தையிடமும் பேசி சிரித்து அவர்களைச் சோதிக்கும் போது ஏனோ மனதில் இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல் விடை பெற்றிருந்தது.
குமரன் நேரே செங்கல் சூளைக்குத்தான் சென்றான். ஏற்கனவே முடிக்கப்படாதிருந்த கணக்கு வழக்குகள், கொடுக்கல் வாங்கல் என அனைத்தையும் ஒரு கோப்பில் சேகரித்தான். எவ்வளவு பணம் எங்கே, யாரிடம் வைப்பிலிருக்கிறது என அனைத்தையும் அதில் எழுதி, தான் இல்லாவிட்டால் கூட தன்னுடைய இருப்பிற்கு இங்கே அவசியம் இல்லாத வகையில் அனைத்தையும் சீர்செய்து முடித்திருந்தான். அன்றைய நாள் அதிலே கழிந்திருந்தது.
எல்லாவற்றையும் முடித்து கணினியிலும் சேமித்து வைத்தவன், நிமிர்ந்து இருக்கையில் தலை சாய்த்து விழிகளை மூடினான். இதுதான், தான் இங்கே வேலை செய்யும் கடைசிநாள் என மூளைக் கூற, மனது பத்து வருடங்களாய் இங்கே தன்னுடைய வாழ்க்கையை மீட்டிப் பார்த்தது. இந்த செங்கல் சூளையிலிருந்து தானே அவனது வாழ்க்கை தொடங்கியது. அதனாலே இவ்விடம் மனதிற்கு நெருக்கமாய் மாறிப் போய்விட்டிருந்தது. இப்போது இந்த எதிர்பாராத நிரந்தரப் பிரிவில் ஒரு நொடி மனம் வருந்தினாலும், உணர்வுகளுக்கு இடம் தர விழையாமல் அனைத்தையும் விரட்டியடித்திருந்தான்.
என்றோ ஒருநாள் இங்கே, இந்த வேலையை விட்டுச் சென்றுதானே ஆக வேண்டும். இதொன்றும் அவனுக்குப் பாத்தியப்பட்ட சொத்துக்கள் இல்லையே. தான் இங்கு வெறும் தொழிலாளர் மட்டும்தான் என்பதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் அழுந்தக் கூறிப் பதிய வைத்தவன், அலுவலக அறையை ஒருமுறை இறுதியாய்ப் பார்த்தவாறு அதைப் பூட்டினான்.
“என்ன குமரா, ஆபிஸை பூட்டுற. எங்கேயும் போகப் போறீயா? வெளி வேலையா?” தங்கமணி மாலை நேரக் குளம்பியை சுவைத்தவாறே வினவினார்.