உள்ளம் – 6.1

மனோஹரியின் பேச்சும் செயலும் வீட்டையே உலுக்கியிருக்க, அன்றைய நாளின் மகிழ்ச்சி மெத்தமாய் அமிழ்ந்து போயிருந்தது. ராதாமணி மகளைத் திட்டிக் கொண்டேனும் மதிய உணவைச் சமைத்து முடித்திருந்தார்.

ஆனால், ஒருவருமே உணவுண்ண வரவில்லை. சாப்பிடும் மனநிலை யாருக்கும் இல்லாது போக, சமைத்த உணவெல்லாம் வீணாகிவிட்டிருந்தது. ராதா எவ்வளோ வற்புறுத்தியும், ரங்கராஜன் உணவுண்ண மறுத்தவர், அறையிலே முடங்கிவிட, மனோ வெளியே வரவேயில்லை. திவாகருக்கு தலைக்கு மேல் வேலையிருக்க, எதுவும் பேசாது காலையிலே குவாரிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

கணவர் உண்ணவில்லை என்ற கோபத்தில் மனோஹரியை உணவுண்ண கூப்பிடவில்லை பெண்மணி. திவாகர் மதியம் வீட்டிற்கே வரவில்லை. மாலை வேலை முடிந்துதான் வந்தான். ஏனோ, அவனுக்கு வர விருப்பமுமில்லை. தங்கை ஒருபுறமும் தந்தை ஒருபுறமும் அவனைக் வருத்தியிருந்தனர்.

அழுதழுது விழிகள் சிவந்து ஏக்கமாய்த் தன்னை நோக்கிய மனோஹரியும், தளர்ந்து போய்விட்டிருந்த ரங்கராஜனும் சிந்தையை ஆக்கிரமித்ததில் குவாரியில் பணியைக் கூட அவனால் சரிவர செய்ய இயலவில்லை.

திவாகர் வீட்டிற்குள் நுழைய, ஆள் அரவமின்றி அதீத அமைதியைத் தத்தெடுத்திருந்தது வீடு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு புறமாயிருக்க, இருளடைந்து வெறுமையாய்க் கிடந்த இல்லமே அவனை வரவேற்றது.

எந்த வருடமும் மனோஹரியின் பிறந்தநாளான்று வீடு இப்படி அமைதியாய் இருந்ததாக அவனுக்கு நினைவில்லை. பிறந்தநாள் அன்று இருவரும் சேர்ந்து வீட்டை தலைகீழாக மாற்றாத குறை ஒன்று மட்டுமே. மற்றபடி அத்தனை மகிழ்ச்சியுடன் அந்த நாள் முடிவடையும். ஆனால், இப்போது மகிழ்ச்சி என்ற வார்த்தையின் சுவடைத் தேடியலைய வேண்டியதாய் இருந்தது திவாகருக்கு.

இப்படி அறைக்குள் முடங்கிக் கிடக்கிறாளே என தங்கையை நினைத்து ஒருபுறம் கவலை அரித்தது. எத்தனையோ பேர் இருக்கும் பட்சத்தில் இந்தக் குமரனை ஏன் இவளுக்குப் பிடித்துத் தொலைத்தது என நூறாவது முறையாக அவளை மனதில் திட்டித் தீர்த்தான். இன்னுமே மனோவின் பேச்சு காதிலே எதிரொலித்துக் கொண்டிருப்பது போலொரு பிரம்மை.

‘அப்படியென்ன இந்தப் பெண்ணிற்கு அவன் மீது பிடித்தம். எப்போது முகிழ்த்தது இது? இந்தளவிற்கு குரலில் உறுதியிருக்கிறது என்றால், கண்டிப்பாக சாதகப் பாதங்களை அலசி ஆராயாது இந்த முடிவை அவள் எடுத்திருக்க வாய்ப்பில்லை. எத்தனை நாள், எத்தனை மாதங்கள், எத்தனை வருடப் பிடித்தமோ இது?’ என எண்ணியவனின் சிந்தையை சிக்கனமின்றி எண்ண அலைகள் ஆக்கிமித்திருந்தன.

மெதுவாய் இரவு கவிழத் துவங்க, மாலை மங்கியது. இத்தனை நேர மனப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தவராய் ரங்கராஜன் எழுந்து அமர்ந்தார். காலையிலிருந்து யோசித்து யோசித்து மனதில் இறுக்கம் மட்டுமே எஞ்சியிருந்தது அந்தப் பெரியவருக்கு. என்னவென சொல்ல முடியாத பாரம் மனதோரம் துளிர்த்து, அரிக்கத் துவங்கியது. அந்த பாரம் முழுவதிலும் குமரனும் மனோவும் மட்டுமே நிறைந்து நனைந்து போயிருந்தனர்.

தலை வலி அதிகமாய் அவரை வதைக்க, நெற்றியைச் சுருக்கியவர், எப்போதாவது அணியும் மூக்குக் கண்ணாடியை மேஜையிலிருந்து எடுத்தார். கழிவறை சென்று வந்துவிட்டு, கண்ணாடியை எடுத்து அணிந்துக்கொண்டு, வெளியே வர ராதாமணி கூடத்தில்தான் இருந்தார். கணவரைப் பார்த்ததும் எழுந்து அவரருகே விரைந்தார்.

“என்னங்க, என்ன வேணும், டீ போட்டு எடுத்துட்டு வரவா?” என அவர் கேட்க, “தோட்டத்துல உட்காரப் போறேன் ராதா. அங்க எடுத்துட்டு வந்துக்கொடு!” என்று ரங்கராஜன் வீட்டின் பின்னேயிருந்தத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தார்.

மல்லிகைப்பூவும் சாமந்திப்பூவும் பூக்காட்டையே நிறைத்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சளும் வெள்ளையுமாய் பூக்கள் பூத்துக் குலுங்கின. இரவு நேரக் கூதக் காற்று மேனியைப் பட்டும்படாமலும் தழுவிச் செல்ல, இலக்கில்லாமல் சுற்றுப்புறத்தில் விழிகளை மேயவிட்டார் ரங்கராஜன். மனோ பேசிய பேச்சு அவரது ரத்த அழுத்தத்தை எகிற வைத்திருக்க, உடலையும் மனதையும் தளர்ந்து போகச் செய்திருந்தது.

“டீயைக் குடிங்க…” ராதாமணி குரலோடு கையும் அவரை நோக்கி நீள, சூடாயிருந்த தேநீரை சுவைக்க ஆரம்பித்தார் ரங்கராஜன். தலைவலி இப்போது மெதுவாக குறைவதை அவரால் உணர முடிந்தது‌.

தேநீரை சுவைத்து முடித்தவரின் முகத்தைதான் ராதாமணி பாரத்திருந்தார். அவரது செயலும் முகமும் அவர் எதையோ முடிவெடுத்துவிட்டதாக உரைக்க, அவரை நோக்கினார்.
இத்தனை வருட திருமண வாழ்க்கையில் கணவரை முழுதாய் அறிந்து வைத்திருந்தார் பெண்மணி.

“என் மேலதான் தப்பு ராதா!” திடீரென அமைதியைக் கிழித்துக்கொண்டு ரங்கராஜனின் குரல் ராதாவின் செவியை அடைந்தது. அவரது முகம் முழுவதும் யோசனைதான்.

“ச்சு… என்னங்க நீங்க அவ சொல்றதைப் போய் பெருசா எடுத்துக்கிட்டீங்களா?” ராதாமணி கணவரைத் தேற்றும் விதமாக அவரது இருண்ட முகத்தைப் பார்த்து வார்த்தைகளைப் பதமாய்க் கோர்த்து அவரைச் சரிசெய்ய முயன்றார்.

“இல்லை ராதா, மனோ சொல்றது சரிதான். குமரனை நான் வேலைக்கு சேர்த்திருக்கக் கூடாது. என்னோட தப்பு அது.
இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். இனிமே குமரன் என்கிட்ட வேலை பார்க்க வேணாம். அவன் வாழ்க்கையைப் பார்த்துக்கிடட்டும். தனியா தொழில் பண்ணா, என்னால முடிஞ்ச உதவியை செய்யலாம்னு இருக்கேன்!” வானத்தையே வெறித்துப் பார்த்தவாறு பேசினார்.

“ஏங்க, ஏன் இப்படி பேசுறீங்க? அவனை வேலையைவிட்டுப் போக சொல்லிட்டா மட்டும், உங்க மக உங்களுக்கு நல்லவர் பட்டம் கொடுப்பாளாக்கும். திமிரெடுத்த கழுதை, நம்ம திட்டாம செல்லம் கொடுத்து வளர்க்கவும், வாய்க்கு வந்ததைப் பேசீட்டு இருக்கா. இனியொரு வார்த்தைப் பேசட்டும், நான் அமைதியா இருக்கப் போறது இல்லை..‌.” என்றவர், “இவ ஊரைக் கூட்டி நம்மளை சந்தி சிரிக்காம விடமாட்டா. முதல்ல நம்ம சொந்தத்துலயே நல்ல பையனா பாருங்க. அவளுக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாம். எல்லா பிரச்சனைக்கும் அதான் தீர்வா இருக்கும்…” கோபத்தில் பொரிந்தார் ராதா.

மகளின் பேச்சு தன் கணவரை நிரம்ப பாதித்திருக்கிறது என்று அவரது உள்ளம் குமைந்தது. ரங்கராஜனை இப்படி காண்கையில் அவருக்கு மனம் வெதும்பியது. ரங்கராஜன் இப்படியெல்லாம் முடங்கிப் போகும் ரகமில்லை. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என எப்போதும் இறுமாப்பாய் இருப்பவர், மகளின் செயலிலும் பேச்சிலும் அடிபட்டுப் போனார்.

அவள் பேசியது வலித்தாலும், அதிலிருந்த உண்மை அவரை சுட்டது. குமரனைப் பொறுத்தவரை அவருக்கும் அவனுக்குமான உறவு ஈடுசெய்ய முடியாதது, கணிக்க முடியாதது. எதிரியின் பையன் என்ற நிலையில் வேலைக்குச் சேர்ந்திருந்தவன், எப்போது மகன் ஸ்தானத்திற்கு வந்தான் என அவர் அறியவில்லை. அவனை வேலையைவிட்டு விலக்கிவிடலாம் என்ற முடிவை எத்தனை கசப்புடன் எடுத்தார் என்பது அவர் மட்டுமே அறிந்தது.

error: Content is protected !!
Scroll to Top