ஆசைகள் ஈடேறக் கூடுமோ? – 7

தன்னுடன் சேர்ந்து நடந்தப் பெண்ணவளைப் பார்த்துப் புன்னகையுடன்,”உங்களுக்கு என்னோட வாழ்த்துகள் மிஸ். மதுபாலா! இன்னும் கொஞ்ச நாளில் உங்ககிட்ட ஒரு ஃபார்ம் கொடுப்போம். அதில் உங்களைப் பத்தின சில விவரங்களை நிரப்பிக் கொடுத்ததுக்கு அப்பறம் எப்போ வேணும்னாலும் உங்களுக்கு ஐடி கார்டைக் கொடுத்துடுவோம்! ஓகேவா? வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?”என அவளிடம் கனிவான குரலில் வினவினான் வெற்றிச்செல்வன். 

“ஆமாம் சார். இந்தச் சம்பள விவரத்தைப் பத்தி முதலாளி எதுவுமே சொல்லலையே! அதை நான் யார் கிட்டே விசாரிச்சுக்கனும்?”என்று தன்னுடைய முக்கியமான சந்தேகம் ஒன்றை அவனிடம் கேட்டிருந்தாள் மதுபாலா. 

“அதுவா – ங்க? நாங்க உங்களுக்குக் கொடுக்கிற அந்த ஃபார்மை நீங்க நிரப்பித் தந்ததுமே உங்களுக்கு நம்ம எம். டி தான் ஐடி கார்டைத் தருவார். அப்போ அவரே அதைப் பத்தின தெளிவான விவரத்தைச் சொல்லுவார்”என்று அவளுக்குப் பதிலளிக்கவும், 

“அப்போ சரிங்க சார்”என்றவளை அவளுக்காக ஒதுக்கிக் கொடுத்த வேலையையும், அதற்கான இடத்தையும் காண்பித்து, 

“இனிமேல் இது தான் நீங்க வேலை செய்யப் போற இடம்! உங்களோட டிசைன்ஸ்ஸை முதலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆஃபீஸர் கிட்டே கொடுத்து அப்ரூவல் வாங்கியதுக்கு அப்பறமாகத் தான் அதை நீங்கத் தைக்க ஆரம்பிக்கனும். அதையெல்லாம் தச்சு முடிச்சதுமே  கவனமாக எடுத்துட்டு வந்து இந்தக் கவுண்டரில் கொடுங்க! அதுக்கப்புறம் மத்ததை எல்லாம் அவங்கப் பார்த்துப்பாங்க! உங்களுக்குத் தெரிஞ்ச வேலைகளைத் தவிர்த்து தெரியாத வேலைகளையும் கூட நாங்க உங்களுக்குக் கத்துக் கொடுக்கத் தயாராக இருக்கோம்! அதுக்கும் இங்கே தனியாகப் பயிற்சிகளைத் தர்றோம்!”என்று அவளுக்கு மேலும் சில தகவல்களைச் சொல்லி முடித்து விட்டிருந்தான் வெற்றிச்செல்வன். 

“நீங்க எனக்குத் தெளிவாகப் புரியுற மாதிரி எல்லாத்தையும் சொல்லி இருக்கீங்க! ரொம்பத் தேங்க்ஸ் சார்”என்று அவனுக்கு மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்தாள் மதுபாலா. 

அதைக் கேட்டதும்,”அது தானே இங்கே என்னோட வேலையே ம்மா? அதுக்கெல்லாம் நன்றித் தேவையில்லை. நீங்க உங்களோட வேலையை ஆரம்பிக்கலாம்”என்றுரைத்து விட்டு அவளுக்கு மீண்டுமொரு முறைத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு அங்கேயிருந்து அகன்று விடவும், 

உடனே அங்கேயிருந்த அதி நவீனத் தையல் இயந்திரம் மற்றும் மற்றப் பொருட்களைத் தனது விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு ஆச்சரியத்துடன் பார்வையிடத் தொடங்கிய பெண்ணவளைத், 

தனது அறையிலிருந்த மடிக்கணினியின் உதவியுடன் மதுபாலாவின் செய்கைகள் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தப் புகழேந்தியின் இதழ்களில் புன்னகையைத் தருவித்து விட்டிருந்தது! 

அதனாலேயே, அவளிடமிருந்து தன் கண்களை அகற்றிக் கொள்ள முடியாமல் சில கணங்களுக்கு அவளது அறையில் இருந்த கேமராவை மட்டுமே ஆழ்ந்துப் பார்வையிட்டான். 

அப்பொழுது அவனது அறைக்கு வெளியே இருந்து அவனது காரியதரிசியின் குரல் கேட்டதுமே, 

தான் பார்த்துக் கொண்டிருந்த கேமராவின் போக்கை மாற்றி வைத்து விட்டு, 

“உள்ளே வாங்க மிஸ்டர். வெற்றிச்செல்வன்”என அனுமதி அளித்தான் புகழேந்தி. 

உடனே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவனை அமரச் சொல்லி விட்டு அவனைக் கூர்மையாகப் பார்க்கவும்,

“சார்! நான் மிஸ். மதுபாலாவுக்கு அவங்களோட வேலைகளைப் பத்தியும், நம்மக் கம்பெனியில் இருக்கிற மத்த விஷயங்களைப் பத்தியும் விளக்கமாகச் சொல்லிட்டேன்! அவங்கச் சம்பளத்தைப் பத்திக் கேட்டாங்க! அதுக்கும் நாம மத்தப் புதுசாக சேர்றவங்க கிட்டே என்னச் சொல்லுவோமோ, அதே பதிலையே அவங்களுக்கும் சொல்லிட்டேன்!”என்றவனோ,

தனக்கும், மதுபாலாவிற்கும் இடையே நடந்த உரையாடலை அவனிடம் முழுமையாக விவரித்து முடித்திருந்தான் வெற்றிச்செல்வன்.

அதைக் கேட்டுத் திருப்தி அடைந்து விட்டு,”ம்ஹ்ம். வெரி குட்! அவங்களுக்கு வேற ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை எங்கிட்டயே நேரடியாக வந்து கேட்கச் சொல்லுங்க  இப்போ நீங்கப் போகலாம்!”என அறிவுறுத்தி அவனை அனுப்பி வைத்து விட்டான் புகழேந்தி. 

தனது முதலாளியின் அறையிலிருந்து வெளியேறிய வெற்றிச்செல்வனுக்கோ, அவன் உதிர்த்த வார்த்தைகள் எதுவும் வித்தியாசமாகப்படவில்லை என்று கூறலாம்! 

ஏனெனில், தனது முதலாளி இப்படி புதிதாக வேலையில் சேரும் அனைவரிடமும் இதைக் கூறச் சொல்லுவார் என்பதாலேயே அவனிடம் குற்றம் கண்டறியாமல் மதுபாலாவின் அறைக்குச் சென்றுத் தன்னிடம் முதலாளிச் சொன்னதை அவளிடம் தெரிவித்து விட்டான். 

அதைக் கேட்டவளோ,”அப்படியா சார்? எனக்கு இனிமேல் ஏதாவது சந்தேகங்கள் வந்தால் நான் கண்டிப்பாகச் சார் கிட்டேயே நேரடியாக கேட்டுக்கிறேன்”எனத் தன்னுடைய கருவிழிகள் விரியப் புன்னகையுடன் கூறி அனுப்பி விட்டுத் தனக்கு அன்று என்ன வேலைக் கொடுத்து உள்ளார்கள் என்பதை தனது வழிகாட்டியிடம் கேட்டறிந்து கொண்டு அதைச் செய்யலானாள் மதுபாலா. 

அதைக் கேமராவில் கண்ணுற்றப் பின்னர் தான், தானும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுத் தனது பணியைத் தொடர்ந்தான் புகழேந்தி. 

அதே சமயத்தில் தனக்கு வேலைக் கிடைத்தச் மகிழ்வான செய்தியைத் தனது தோழி பிரேமாவிடம் இங்கேயே கூறி விடலாம் என்ற எண்ணத்தை அடியோடு துடைத்து எறிந்து விட்டிருந்தாள் மதுபாலா. 

ஏனென்றால், சிறிது நேரத்திற்கு முன்புத் தனது முதலாளி தங்களது நட்பைப் பற்றியும், அதற்கு இந்த அலுவலகத்தில் மட்டும் கட்டுப்பாடு உள்ளது என்பதைப் பற்றியும் தெளிவாக அறிவுறுத்திய பின்னர், 

இங்கே தங்கள் இருவரின் வேலை நேரங்கள் முடியும் வரைத் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டுத் தான் அன்றைய அலுவலை முடித்துக் கொண்டு மாலையில் தனக்கு வழிகாட்டியாக இருக்கும் பெண்ணான வினோதினியிடம் அதற்குண்டான விவரங்களைத் தெரிவித்து விட்டு அலுவலக வேலை நேரம் முடிந்ததும் அவரிடமும், வெற்றிச்செல்வனிடமும் விடைபெற்றுக் கொண்டுத் தனது இல்லத்திற்குச் சென்றாள் மதுபாலா. 

ஆனால் அதை அறியாதவனோ தனது மடிக்கணினியில் அவளது அறையைப் பார்வையிட்டான் புகழேந்தி. 

அது காலியாக இருப்பது தான் அவனுக்குத் தெரிந்தது. 

உடனே அதற்கான காரணத்தை தனது காரியதரிசியிடம் கேட்க, 

அதற்கு”மிஸ். மதுபாலா ஆஃபீஸ் முடிஞ்ச உடனே வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க சார்”எனப் பதிலளித்தான் வெற்றிச்செல்வன். 

அதைக் கேட்டதுமே புகழேந்திக்கு முனுக்கென்று கோபம் எழுந்து விட்டிருந்தாலும் கூட அதை தனது முகத்தில் காட்டிக் கொள்ளாமல், 

“நாளைக்குக் காலையில் அவங்க ஆஃபீஸூக்கு வந்தவுடனேயே என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க”என்று கூறிக் காரியதரிசியை அனுப்பி விட்டுத் தானும் தனது அலுவலகப் பையை எடுத்துக் கொண்டுத் தன்னுடைய காரில் பயணித்து வீட்டிற்குப் போனான். 

தானும் அலுவலகத்தில் இருந்து நடைப் பயணத்தை ஆரம்பித்து தனது வீட்டை அடைந்திருந்தாள் மதுபாலா.

இப்போது அவளுக்கு முன்பாகவே தனது பணி நேரம் முடிந்து இல்லத்தில் இருந்தாள் சுதா. 

உடனே தனது சோர்ந்த முகத்தை மாற்றிக் கொண்டு அவளைப் பார்த்துப் பளீரென்றுப் புன்னகைத்தாள் மூத்தவள். 

அதைக் கண்டு விட்டு,”அக்கா! நீ இப்படி பளிச்சின்னு ஸ்மைல் பண்றதைப் பார்க்கவே எனக்குச் சந்தோஷமாக இருக்கு! உனக்கு வேலைக் கிடைச்சதுக்கு என்னோட வாழ்த்துகள்!”என்று கூறித் தமக்கையை மெல்ல அணைத்து விடுவிக்க, 

அதில் தானும் மகிழ்ந்து போய்,“தாங்க்ஸ் டி! இந்தா!”எனத் தனது கைப்பையில் இருந்த நியமனக் கடிதத்தை எடுத்து தங்கையிடம் தந்தாள் மதுபாலா. 

அதைப் படித்துப் பார்த்து விட்டு,”சூப்பர் க்கா! நீ அங்கேயே நல்லா வேலைப் பார்த்து, உன்னோட படிப்பையும் தொடரனும்னு நானும் கடவுள் கிட்டே வேண்டிக்கிறேன்!”என்று அவளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாள் சுதா. 

“சரி டி. இன்னும் டீயைப் போடலை தானே? நானே போட்றேன். ஓகேவா?”என்றவளிடம், 

“அதெல்லாம் நான் அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்னாடியே செஞ்சி வச்சிட்டேன்! நீ முதல்லப் போய் டிரெஸ்ஸை மாத்திட்டு வா அக்கா! நானே இன்னைக்கு டீயைப் போட்றேன்!”என்று அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டுத் தேநீரைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதைச் செயலாற்றினாள் இளையவள். 

சிறிது நேரத்திலேயே மதுபாலாவும் தயாராகி வந்து விட்டிருக்க, அவளது தங்கைச் சுதாவின் கைவண்ணத்தில்  தேநீரும் தயாராகி இருந்தது! 

தத்தமது தம்ளர்களை எடுத்துப் பருகிக் கொண்டே, 

“உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கிடைச்ச விஷயத்தைப் பிரேமா அக்கா கிட்டே சொல்லிட்டியா? அவங்க என்னச் சொன்னாங்க? நீங்க ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸில் வேலை பார்க்கப் போறீங்க! அதனால் இனிமேல் உங்களைக் கையிலேயே பிடிக்க முடியாது!”என்றத் தங்கையைச் சோகமாகப் பார்த்து, 

“அதுக்கு வாய்ப்பே இல்லடி! எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கிடைச்சது, நான் ஆஃபீஸில் இருந்து கிளம்பி வந்தது எல்லாம் அவளுக்கு இப்போ வரைக்கும் தெரியாது! நான் இனிமேல் தான் அவளுக்குக் கால் செஞ்சி சொல்லனும்!”என்றவளோ, 

தங்களது நட்பிற்குத் தங்கள் முதலாளி வரையறுத்துக் கொடுத்தக் கட்டுப்பாடுகளை அவளிடம் ஒப்புவித்து முடித்தாள் மதுபாலா. 

அதைக் கேட்டுத் தானும் அதிர்வுடன் தமக்கையை நோக்கி,”என்னக்கா உங்களுக்கு இப்படியொரு செக் வச்சிட்டாரு உங்களோட முதலாளி? உங்க ரெண்டு பேரையும் நினைச்சா எனக்குப் பாவமாகத் தான் இருக்கு! ஆனாலும் அவர் சொன்னதில் ஒரு நியாயம் இருக்குத் தான்க்கா!”என்றிருந்தாள் சுதா. 

“அதனால் தான் நானும் அதுக்குச் சரின்னுச் சொல்லிட்டேன்டி!”என அவளிடம் மொழிந்த சமயத்தில் அவளுடைய செல்பேசிக்குப் பிரேமாவிடம் இருந்து அழைப்பு வந்தது. 

அதை அவதானித்து விட்டு உடனே அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து, 

“பிரேமா செல்லம்!”என்று அவளிடம் கொஞ்சிப் பேசினாள் மதுபாலா. 

உடனே மறுமுனையில் இருந்தவளோ,”இங்கே பாரு! அப்படியே ஓடிப் போயிரு!”என்று எடுத்தவுடனேயே அவளிடம் பொரிந்து தள்ளினாள். 

அதில் அசடு வழிந்த தமக்கையின் முகத்தைப் பார்த்துச் சிரித்து விட்டு அவளிடமிருந்து செல்பேசியை வாங்கி அதை ஸ்பீக்கரில் போட்டுக் கீழே வைத்தாள் சுதா. 

“என்னடி லைனில் இருக்கியா? இல்லை, ஓடிட்டியா?”என்று கடுப்புடன் வினவினாள் பிரேமா. 

“ஓட எல்லாம் செய்யலைடி! நானே இப்போ தான் ஆஃபீஸில் இருந்து கால் வலிக்க நடந்து வந்தேன்! அதுக்குள்ளேயே எப்படி ஓட முடியும்? அதுவும் இல்லாமல் எனக்கு ஜாகிங் பண்றப் பழக்கம் எல்லாம் இல்லையே!”என்று பாவமான குரலில் பதிலளித்தாள் மதுபாலா. 

அதைக் கேட்டு மேலும் கோபமடைந்து,”அடியேய்! நான் அங்கே வந்தேன்னு வைய்யி அவ்வளவு தான்! நல்லா வக்கனையாக வாய் பேச மட்டும் தெரியுதுல்ல? அங்கே இருந்து கிளம்புறப்போ எனக்கு ஒரு கால் பண்ணத் தெரியலையோ? மேடம் அப்படியே நடந்தே வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டீங்க! அப்படித் தானே?”என்று கொதிப்புடன் கேட்டவளை, 

“பிரேமா! இப்போ நான் சொல்லப் போவதைக் கொஞ்சம் பொறுமையாக கேளு!”எனக் கூறி அவளை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டவளிடம், 

“சரி. சொல்லு”என்றாள் அவளது நெருங்கிய தோழி. 

  • தொடரும்

error: Content is protected !!
Scroll to Top