அவளது கரங்களை விடுவித்தவன், “எத்தனை நாளா இப்படி பேசணும்னு நினைச்ச மனோ. அப்பா நீ பேசுன பேச்சுல உடைஞ்சு போய்ட்டாரு. என்ன பண்றோம், பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீயா டி?” திவாகர் சீறினான்.
“ஏன் திவா, அப்பா செய்றது தப்புன்னு உனக்கும் தெரியும் இல்ல. நீ கூட அதை எடுத்து சொல்ல மாட்டீயா?” விரக்தியாய்க் கேட்டாள்.
“என்ன தப்பைக் கண்டுட்ட நீ? ஹம்ம்… சொல்லு. நம்ம ஒன்னும் அடிதடியை தொழிலா பண்ணலை. பிஸ்னஸ்ல போட்டியா இருக்கவங்களைதான் அடிக்கிறோம். குமரன் அவனாதான் இங்க வந்து வேலைக்கு சேர்ந்தான். நம்ம யாரு வாழ்க்கையும் தானா போய்க் கெடுக்கலை. அதைப் புரிஞ்சுக்க!” அவனின் நியாயத்தில் இவளுக்கு கோபம் வந்தது.
“ஓஹோ... அப்போ குமரன் விஷயத்துல அப்பா செஞ்சது தப்பா தெரியலை உனக்கு?” கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டாள்.
“இத்தனை வருஷமா குமரன் இங்க வேலை பார்க்குறான். அப்ப எல்லாம் உனக்கு இதைக் கேட்கணும்னு தோணலை. இப்போ ஏன் இந்தப் பேச்சு? அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த எண்ணத்துல கேட்ட நீ, ஒரு நிமிஷம் கூட யோசிக்கலையா? இதெல்லாம் ஒத்து வருமா இல்லையான்னு?” திவாகர் பொறுமையாய் வினவினான். தர்க்கம் புரிந்தால் கடைசிவரை வார்த்தைகளும் காயங்களும் மட்டுமே எஞ்சி நிற்கும் எனப் பொறுமையைக் கையிலெடுத்திருந்தான் பொறுப்பான அண்ணனாய். தங்கை வாழ்க்கை மீதிருந்த கடமையுணர்வும் பொறுப்புணர்வும் அவனை நிதானம் கொள்ள வைத்தது.
அவனை நிமிர்ந்து பார்த்த மனோவின் விழிகள் பனித்தன.
“அதெல்லாம் உனக்குப் புரியாது திவா. என் வாழ்க்கை அவர் கூடதான்னு முடிவு பண்ணிட்டேன். அதை மாத்த முடியாது!” குரல் தழுதழுத்தது பெண்ணுக்கு.
அமைதியாய் அவளை ஆழப் பார்த்தவன், “அப்பா செஞ்ச தப்புக்கு பிரயாச்சித்தம் பண்றேன்னு, சிம்பதில அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறீயா மனோ?” என அவன் வினவவும், விழுக்கென நிமிர்ந்து பார்த்த மனோவின் இதழ்கள் கேலியாய் வளைந்தன.
“சிம்பதினா, அவரை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்லை திவா. அப்பா கிட்ட இருந்து பிரிச்சு, வேற நல்ல வேலை, குடும்பம்னு அமைச்சுக் கொடுக்க முடியுமே. கண்டிப்பா இது சிம்பதி இல்லை!” உறுதியாய் மறுத்தாள்.
“எனக்குத் தெரிஞ்சு இது நடக்க வாய்ப்பே இல்லை மனோ. அப்பா எந்தக் காலத்திலும் சம்மதிக்க மாட்டாரு!” திவாகர் குரல் தந்தையை நான் நன்கறிவேன் என உணர்த்தியது. இது போகாத ஊருக்கான வழியென மனம் மனோவை நினைத்துக் கவலையைப் பூசிக்கொண்டது.
“சம்மதிப்பாரு திவா. உங்க எல்லாரோட சம்மதத்தோடவும் எங்கக் கல்யாணம் நடக்கும். கண்டிப்பா ஒடிப் போற முடிவெல்லாம் இல்லை. எனக்கு என் அப்பாவும் வேணும், குமரனும் வேணும். ரெண்டு பேரையும் விட முடியாது திவா!” இத்தனை நேரமிருந்த திமிர், அலட்சியம், கோபமெல்லாம் கடைசி வரியில் அமிழ்ந்து போக, அவளின் குரல் கலங்கி வெளிவந்தது. அவள் உள்ளே ஏதோ ஒன்று துடித்து அடங்கிப் போனது.
“மனோ, ஏன் டி, ஏன் உனக்கு அவனைப் பிடிச்சது. இது நடக்க வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சும் இப்படி பேசுற?” என்றவனின் குரல் தங்கையின் அழுகையில் அந்த முகத்தில் கண்ட தவிப்பில் துடித்தது. எப்படி, எங்கே இந்தப் பெண்ணிற்கு அவனைப் பிடித்து தொலைத்தது. அவனறிந்தவரை ஒரு சிநேகமான பார்வை, புன்னகை என எதையுமே இருவரும் பரிமாறிக் கொண்டதாக மூளையின் ஆழ்நிலை நினைவாற்றல் வரை தேடிப் பார்த்தான். எங்கேயும் அகப்படவில்லை.
“தெரியலை திவா!” என்று வேதனையாய்க் கையை இருபுறம் விரித்துக் காண்பித்துவிட்டு, கட்டிலில் பொத்தென அமர்ந்தாள். முகத்தை உள்ளங்கையில் புதைத்தவளுக்கு நெஞ்சுக் குழிவரை பயம் கவ்வியது. திவாகர் கூறியது போல நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்தாலும், அவனை விட முடியுமெனத் தோன்றவில்லை. முயற்சிக்காமல் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. எதுவென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தானே துணிந்து தந்தையிடம் பேசியிருந்தாள். அப்போதிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் இப்போது வடிந்திருந்தது.
“அப்பா அப்படி ஒத்துக்கலைன்னா, கடைசிவரை அவருக்கு மகளா, உனக்கு தங்கச்சியா இதே வீட்ல இருந்துடுவேன் திவா!” மனோஹரியின் குரலிலிருந்த உறுதி இவனை ஆட்டம்காண வைத்திருந்தது. தங்கை பதிலில் எந்த அளவிற்கு தன் முடிவில் அவள் உறுதியாக இருக்கிறாள் என அந்நொடி உணர்ந்தவனுக்கு மனதில் பெரிய பயம் துளிர்த்து கிளையைப் பரப்பியது.
“லூசா டி நீ… கிறுக்குத் தனமா பேசாத. எதா இருந்தாலும் பொறுமையா யோசிச்சு முடிவெடுக்கலாம். நான் அப்பாகிட்டே பேசுறேன்!” என்றவனுக்கு எந்த விதத்திலும் நம்பிக்கை துளிர்க்கவில்லை. இருந்தும் விழிகளில் கலக்கமும் பயமுமாய்த் தன்னை நிமிர்ந்து நோக்கிய தங்கைக்காக ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவெடுத்தான்.
“இப்போ எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? நீங்க பெத்தவ கிறுக்குத்தனமா பேசீட்டு இருக்கா. அதை எதையும் போட்டு மனசை குழப்பிக்காதீங்க. நாலு அடி போட்டா, நம்ம வழிக்கு வந்துடுவா. இப்போ குடி மூழ்கிப் போன மாதிரி உட்கார்ந்தா, எதுவும் சரியாகாது. நீங்க முதல்ல சூளைக்கு கிளம்புங்க…” கணவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து ராதாமணி பதறிப் போனார். அவரைத் தேற்ற வேண்டும் என்ற முனைப்பு வார்த்தையில் வெளிப்பட்டது.
“இன்னைக்கு எங்கேயும் போகலை ராதா…” என்ற ரங்கராஜன் எழுந்து அறைக்குள் நுழைந்தார்.
“எல்லாம் இவர் கொடுத்த செல்லம்தான். யார்கிட்டே என்ன பேசன்னு தெரியாம பேசீட்டு திரியுறா!” மகளை வசைபாடத் தொடங்கினார் தாய். அன்றைய நாளின் மகிழ்ச்சி அவர்கள் உண்ட உணவோடு செரித்திருந்தது.
செங்கல் சூளையின் அலுவலக அறையில் அமர்ந்திருந்த குமரனின் மனம் முழுவதும் மனோஹரியின் பேச்சுதான். எந்த எண்ணத்தில் இந்தப் பெண் அப்படிக் கேட்டாள் என சுத்தமாய் அவனுக்குப் புரியவில்லை. அதுவும் தன் மீது இப்படியொரு எண்ணமா அவளுக்கு? என ஆச்சர்யம் மனதெங்கும் வியாபித்தாலும், கோபமும் கனன்றத் தொடங்கியது.
‘நான் என்ன கடையில் விற்கும் பொம்மையா? இவள் பிறந்தநாளிற்கு கேட்டதும் பரிசளிக்க?’ என்ற எண்ணம் அவனது தன்மானத்தை சீண்டியிருக்க, கொதித்துப் போனான். இவள் விருப்பப்பட்டால் உடனே நடந்துவிட வேண்டுமோ? என்ற தன்னகங்காரம் வந்தமர்ந்து கொள்ள, நிதானம் பின்னகர்ந்திருந்தது. இந்தப் பெண் மனோஹரி விஷயத்தில் மட்டும் அவனால் பொறுமை என்ற சொல்லை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. எப்போதுமே தன்னைக் குற்றக் கண்ணோடு பார்க்கும் அவளுக்கும் எனக்கும் எந்த விதத்திலும் பொருந்தாதது மனம் அடித்துக் கூறியது.
தன்னைக் கண்டாலே அலட்சியம் செய்யும் பாவனையும், சண்டையிடத் துடிக்கும் உதடுகளும், கோபமாய் பார்க்கும் விழிகளும் என அவளை நினைத்தால் இவைதான் மனதை நிறைத்தன. ஒரு நாள் ஒரு நொடி கூட தன்னை ஆர்வம் மின்ன அவள் பார்த்தது இல்லை. எப்போதும் குற்றக் கண்ணோடு, பூதக் கண்ணாடியோடு சுற்றுபவளுக்கு எப்போது எப்படி இந்த மாதிரியொரு எண்ணம் துளிர்த்தது என சிந்தை ஒருபுறம் அலைந்து கொண்டிருக்க, ஒரே நாளில் அவனது மொத்த நிம்மதியையும் பறித்திருந்தாள் இந்தப் பெண் மனோஹரி.
அதைவிட தன்னை முன்னிறுத்தி அங்கே என்ன விவாதங்கள் நடை பெற்றிருக்கும் என மனம் ஒரு புறம் அதையே சுற்றி வர, தலை வலித்தது.
மனோஹரியின் தன் மீதான எண்ணத்திற்கு தான் சிறிதளவும் காரணமில்லை என அவனுக்குத் தெரிந்தாலும் அவர்கள் வீட்டினர் என்ன நினைப்பார்கள் எனத் தோன்ற, அப்பட்டமாய் எரிச்சல் முகத்தில் விரவியது. மனோஹரியின் பேச்சில் இவனுக்கு இப்போது கோபமாய் வந்து தொலைத்தது. யார் மீதும் காண்பிக்க முடியாது, பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வேலை எதுவுமே ஓடவில்லை. மனோவின் முகமும் பேச்சும்தான் மீண்டும் மீண்டும் கண்முன்னே தோன்றித் தொலைத்தது.
‘எதற்கு இவளுக்குத் தேவையில்லாத வேலை. மொத்தக் குடும்பத்தையும் கதி கலங்க வைத்திருப்பாள் இந்நேரம்!’ அவளை முற்றும் முழுதுமாய் அறிந்திருந்தவனுக்கு ஆத்திரம் பொங்கினாலும், இதில் அவன் செய்ய ஒன்றுமில்லை. ரங்கராஜனைப் பற்றி அவனுக்கு நன்றாய் தெரியும். அவன் மீதான அவர் நம்பிக்கை எந்த வகையிலும் குறைந்திடாது என. தலையை உலுக்கிக் கொண்டான். ஆனால், நாளை அவனை அழைத்த ரங்கராஜனின் நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்கவில்லை குமரன்.
உள்ளம் கேட்கும்…