உள்ளம் – 5.2

“பொய் சொல்லாதீங்க பா. திவாகர் மாதிரியா அவரை நீங்க நடத்துறீங்க. எங்க எந்தப் பிரச்சனைனாலும் குமரன் உங்களுக்கு வேணும். அடிதடி பண்ண, கோர்ட் கேஸ் போட வேணும். பிஸ்னஸைப் பார்க்க, அதை டெவலப் பண்ணன்னு எல்லா வேலையும் அவர் செய்யணும். எங்க, உங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க, அதே அடிதடிக்கு திவாகரை உங்களால அனுப்ப முடியுமான்னு? அது முடியாது! யார் எப்படிப் போனாலும் உங்க பிள்ளைக நல்லா இருக்கணும். உங்க தொழில் நல்லா நடக்கணும். அவ்ளோதானே உங்களுக்கு வேணும். அடுத்தவன் மகன் எப்படிப் போனால், நமக்கென்ன? அப்படித்தானே பா?” மனோவின் கேள்வியில், பேச்சில் அதன் சாரம்சத்தில் ரங்கராஜன் முழுதாய் அதிர்ந்து போனார். ‘என்ன பேசுகிறாள் இவள்?’ என பெற்றவர் உள்ளம் குமைந்தது.

“மனோ, என்ன பேசுற டி நீ, அவன் ஒன்னும் சும்மா வேலை பார்க்கலை. சம்பளம் கொடுக்குறோம். அதைப் புரிஞ்சுக்கோ” ராதாமணியின் குரல் கோபத்துடன் இடையில் ஒலித்தது. மகளின் பேச்சு அவரை வெகுவாய் சீண்டியது.

ரங்கராஜன் பேச்சின்றி மகளைப் பார்த்தார். அவளது ஒவ்வொரு சொல்லும் இவரைக் குற்றம் சாட்டியது. உள்ளம் வெதும்பிப் போனார்.

“ச்சு… சும்மா சம்பளம் கொடுத்தேன்னு சொல்லாதீங்க மா. அப்பாவுக்கு குமரனை நம்ம வீட்ல வச்சுக்கிறதுல ஒரு குரூர திருப்தி, அற்பமான சந்தோஷம். அவர் எதிரியோட பையன், நமக்கு கீழே சம்பளம் வாங்கிட்டு வேலை பார்க்குறதைப் பார்த்து சந்தோஷப்படுறாரு…” மனதிலிருந்த ஆதங்கத்தைக் கொட்டியிருந்தாள் மனோ. அவள் பேசப் பேச ரங்கராஜன் உடைந்து போவதை உணர்ந்து மகளாய் உள்ளம் துடித்துப் போனது. ஆனால், அவளுக்கும் வேறு வழியில்லை. இப்போது பேசாது அமைதியாக இருந்துவிட்டால், குமரனோடான அவள் வாழ்க்கை வெறும் கானல்நீர்தான். கைசேராமலே போய் விடும் என மனம் அஞ்சி நடுங்கியது.

வலித்தாலும் இது தந்தைக்கான மருந்துதான். அவர் செய்த தவறை சுட்டிக்காட்டாதுவிட்டால், தந்தை தன் தவறை உணராமலே போய்விடுவார் என்ற ஆற்றாமையில் கோபத்திலும் வார்த்தைகளை திராவகம் போல வீசினாள்.

“மனோ, அப்பாகிட்ட ஏன் இப்படி பேசுற? இதெல்லாம் அப்புறம் பேசலாம். முதல்ல நீ ரூம்க்குள்ள போ!” திவாகர் பயந்து போனான். இந்தப் பெண் பேசப் பேச ரங்கராஜனின் முகம் மாறியது. தளர்ந்து போய் அமர்ந்திருந்தார். இதுவரை அவரை இப்படி பார்த்ததாய் நினைவில்லை. அவரது தோற்றம் இவனை பயம் கொள்ளச் செய்தது. மனோஹரி அழுத்தமானவள், நேர்மையானவள், எல்லாவற்றையும் முகத்திற்கு முன்னே பேசுவது அவளுடைய குணம் என அறிந்தாலும், தந்தையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை அவனால் ஏற்க முடியவில்லை.

“இல்லை… நான் ஒருநாளும் அப்படி நினைச்சது இல்லை மனோ. இப்பவும் குமரன் எனக்கு மகன் மாதிரிதான். நம்ப குடும்பத்தைத் தவிர நான் நம்புற ஒரு ஆள் அவன்தான். நீ சொல்ற எந்த எண்ணமும் எனக்கு இல்ல!” ரங்கராஜன் குரல் நலிந்து வந்தது. குற்றம் செய்த மனது மகளின் பேச்சைக் ஏற்க முடியாது கூனிக் குறுகிப்போனது.

“ச்சு… போங்க பா. நான் இந்த விஷயத்துல நீங்க சொல்ற எந்த நியாயத்தையும் ஏத்துக்க மாட்டேன். நீங்க அவருக்கு செஞ்சது பெரிய பாவம். பதினேழு வயசுல உங்ககிட்ட வேலை கேட்டு வந்தவர்கிட்டே இதெல்லாம் சரிவராது, போய் ஒழுங்கா படின்னு சொல்ல உங்களுக்கு எவ்வளோ நேரமாகியிருக்கும். ஆனால், அதை நீங்க செய்யவே இல்லையே. ஏன் பா, ஏன் உங்களுக்குத் தோணலை. திவாகரை அந்த இடத்துல வச்சுப் பார்த்து இருக்கலாமே பா. அடுத்த வீட்டுப் பையன், அதுவும் உங்களோட எதிரியோட மகன்னதும், வேலைக்கு சேர்த்து இன்னைக்கு ஊர்ல யாரைக் கேட்டாலும் குமரன் அடிதடிக்குப் பேர் போன ரவுடின்ற அளவுக்கு பெருமையான பேரை நீங்கதானே தேடிக் கொடுத்து இருக்கீங்க?” பெருங்குரலெடுத்துக் கத்திய மனோஹரியின் மனம் முழுவதும் ரணமும் வலியும்தான். தன் தந்தை செயலை அவளால் ஒருபோதும் மன்னிக்க முடியவில்லை. குமரனின் வாழ்க்கை இப்படியானதற்கு அவரும் பெரியதொரு காரணம் என்ற எண்ணம் அவளைக் கொன்றுக் குவித்தது.

“போதும் மனோ, நீ ரொம்ப பேசுற. என் புருஷனைக் கைநீட்டி கேள்வி கேட்குற உரிமை யாருக்கும் இந்த வீட்ல இல்லை….” என்று திவாகரையும் சேர்த்துக் குறிப்பிட்டவர், “இதுக்கும் மேல அவரைப் பத்தி ஒரு வார்த்தைப் பேசுன, பெத்த புள்ளைன்னு கூடப் பார்க்க மாட்டேன். உள்ள போடி!” ராதா ரௌத்திரமாய் மனோஹரியின் கையைப் பிடித்து அறைக்குள்ளே தள்ள முயன்றார்.

“ப்ம்ச்… அப்பா இப்படி ஆனதுக்கு நீயும் முக்கிய காரணம் மா. அவர் செய்ற தப்பை ஒருநாளாவது தட்டிக் கேட்டு இருக்கீயா. எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணி, இப்போ இங்க வந்து நிக்குது மா. இன்னைக்கு ஒரு குமரன், நாளைக்கு எத்தனை பேரோ? என்னைக்குதான் நீ அவருக்கு சப்போர்ட் பண்றது தப்புன்னு உணரப் போற?” தாயின் கையை உதறித் தள்ளியவளின் வார்த்தைகள் பல்லிடுக்கில் வெளிவந்து விழுந்தன. ராதாமணியின் நியாயமெல்லாம் எப்போதும் ரங்கராஜனின் தவறுகளை மட்டும்தான் சரிக்கட்ட விழையுமே தவிர, சரி தவறு என எதையும் சீர்தூக்கிப் பார்த்திராது.

ரங்கராஜன் தொய்ந்து போய் அமர்ந்துவிட்டார். மகளின் குற்றச்சாட்டு அனைத்தும் உண்மை என மனம் சுட்டதில், குற்றவுணர்வு அவரைக் கொன்றது. குமரன் வேலை என்று வந்து நின்ற போது, சொக்கநாதனைப் பழி வாங்குவதாக எண்ணித்தான் ஒரு நொடி யோசிக்காது குமரனை வேலைக்கு நியமித்தார். ஆனால், அதற்குப் பிறகான அவனின் விசுவாசத்தில், நேர்மையில், வேலையின் மீதான அர்ப்பணிப்பில அந்த எண்ணம் கரைந்து காணாமல் போயிருந்தது. ஆனால், இப்போது மகள் கூறும்போது, அன்றே அவனை வேலைக்கு எடுத்திருக்கக் கூடாதோ என தாமதமான யோசனையை மனம் வழங்கியது.

ரங்கராஜன் தானாக அடிதடிக்கோ, சண்டைக்கோ செல்ல விரும்பமாட்டார். தொழிலை முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பும் எண்ணமும் அவரை வெகுவாய் மாற்றியிருந்தது. தொழில் எதிரிகளை பாரபட்சமின்றி எதிர்க்கத் தொடங்கினார். குமரனும் அதில் அதீத முனைப்புடன் செயல்பட்டான் எனறே சொல்ல வேண்டும். இன்று அவருக்குத் தொழில் போட்டிகள் ஏராளமிருப்பினும், குமரனைக் கருத்தில்கொண்டு அவரை நெருங்க, எதிர்க்க அஞ்சுபவர்கள் ஏராளம்.

ஆதி காலத்திலிருந்தே சொக்கநாதன் குடும்பத்திற்கும் ரங்கராஜனின் தந்தைக்கும் ஏனோ ஒத்துப் போகவில்லை. தென்முனை வடமுனை என இருதுருவமாய் இருந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் அப்படியே தொழிலில் பெரிதாய் போட்டி என்று வந்து மனக்கசப்பே எஞ்சியது. அவ்வப்போது ஏலம் எடுக்கச் செல்லும்போது, அரசாங்க டென்டர் எடுக்கச் சொல்லும் போதும் கூட மோதலிலே முடிந்திருக்க, இருவரும் ஒருவரையொருவர் எதிரியாய் பாவித்துக் கொண்டனர். இப்போது வரை அப்பிரச்சனை தீர்ந்தப்பாடில்லை.

“மனோ, போதும். நீ வா…” திவாகர் தங்கை கையைத் தரதரவென அறைக்குள் இழுத்துச் சென்றுவிட்டான்.

“கையை விடு திவா… விடுன்னு சொல்றேன் இல்ல!” அவனிடமிருந்து துள்ளியவாறே வார்த்தைகளைக் கடித்து துப்பினாள் மனோஹரி.

error: Content is protected !!
Scroll to Top