உள்ளம் – 4.3

“ஆமா, உனக்கு அவன் வேணாம். அவனுக்கு நம்ப யாருமே வேணாம். எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணாம். என் ரூமைவிட்டு வெளியே போ முதல்ல…” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் ஷெண்பா. குரலில் ஆற்றாமை பொங்கி வழிய, விக்ரமின் முகத்தை ஆதங்கத்துடன் பார்த்தாள்.

விழிகளில் சரசரவென கண்ணீர் வழிந்தது. மனம் வேதனையில் வெந்து தணிந்து போனது.
அவளது முகத்தைப் பார்த்த விக்ரம் எதுவும் சொல்லாது சில நிமிடங்கள் அங்கேயே நின்றவன், பின்னர் அறையைவிட்டு வெளியேறினான். அவன் முதுகையே வெறித்தாள் ஷெண்பா.

விக்ரம் குளித்து முடித்து அறையைவிட்டு வெளியே வர, “வா டா, இட்லி சுட்டுட்டேன். வந்து சாப்பிடு!” சுமதி மேஜைமீது உணவை எடுத்து வைத்தார்.

“வரேன் மா… அவளையும் கூப்ட்டு வரேன்…” என ஷெண்பா அறை நோக்கிச் சென்றான்.

“அவ எதுக்கு அழுதாளாம் டா. வேற எதுவும் பிரச்சனையா? உங்கப்பா வந்ததும் சொல்லணும் முத!” என்றவரின் பேச்சில் அவனது நடை நிதானப்பட்டது.

திரும்பி அவரைப் பார்த்தவன், “ச்சு… ம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க எதையும் கற்பனை பண்ணிக்காதீங்க. அவ எக்ஸாம் சரியா எழுதலைன்னு அழுதிருக்கா. நான் சமாதானம் செஞ்சுட்டேன்…” என உரைக்கவும், சுமதி மகனை நம்பவில்லை என்பது போலொரு பார்வையைப் பதிலளித்தார்.

“நீங்க நம்புனாலும், நம்பலைனாலும் அதான் நிஜம்…” இப்போது அவன் குரல் சலிப்பாய் வந்தது. சிறு சிறு விஷயத்தைக் கூட தந்தை வரை எடுத்துச் சென்று பெரியதொரு பஞ்சாயத்தைக் கூட்டுவதுதான் சுமதியின் பிரதான வேலை.

“ஏன்டி சுமதி, பொம்பளை புள்ளை அழுதான்னா, என்ன சமாச்சாரம்னு மொத அதட்டி விசாரிக்கணும். நீ உன்பாட்டுக்கு இருக்காத… காலம் கெட்டுக் கிடக்கு, பொம்பளை புள்ளை படிச்சது போதும்னு சொன்னா, இவுக அப்பன் கேட்குறானில்லை. இப்போ கண்ணைக் கசக்கிட்டு வந்து நிக்கிறா. என்னவோ? ஏதோ?” என நீட்டி முழக்கிப் பேசினார் தங்கம்மாள். சொக்கநாதனின் தாய். எண்பது வயதைக் கடந்தும் காலனைச் சந்திக்காத பெண்மணி. பெயருக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் கூட எட்டாத அளவிற்கு தரம் தாழ்ந்த எண்ணம் கொண்டவர். இன்னுமே இந்த வீட்டில் நான் சொல்வதுதான் செயலாற்ற வேண்டும் என்றொரு முனைப்பும் தன்னகங்காரமும் அவரது பேச்சின் தொனியிலே எப்போதும் தெறிக்கும்.

அவரது பதிலில் விக்ரம் ஏகத்திற்கும் எரிச்சலானான். “அப்பத்தா, அதான் அவ எக்ஸாம் நல்லா எழுதலைன்னுதான் அழறான்னு சொன்னேன் இல்ல. அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு, விடுங்க!” என்று பேச்சைத் துண்டித்திருந்தான். முன்பானால் அவருக்கு சிறிதளவேனும் மரியாதை அளிப்பான். ஆனால், தங்கம்மாவின் பேச்சும் எண்ணமும் செயலும் அவரைப் போலவே தரம் தாழ்ந்ததாகவே எப்போதுமிருக்க, இவனும் அகத்திலிருக்கும் கோபத்தையும் எரிச்சலையும் வார்த்தைகளில் கொட்டிவிடுவான்.

ஷெண்பாவின் அறைக்குள் நுழைந்தவன், அவளை உணவுண்ண அழைத்தான்‌.
“எனக்குப் பசிக்கலை. நீ போய் சாப்பிடு!” விக்ரம் முகத்தைப் பார்க்காது பதிலுரைத்தாள். இவன் பேச்சிலும் கோபம் ஒரடுக்கு ஓங்கிஉயர்ந்திருந்தது. ஆண்கள் இருவரைப் போல இறுகிய மனம் இல்லையே அவளுக்கு.

“இப்போ சாப்பிட வரலைன்னா, நீ அழுததுக்கு கண்ணு காது மூக்கு வச்சு அம்மாவும், அப்பத்தாவும் பேச ஆரம்பிச்சுடுவாங்க. பரவாயில்லையா?” விக்ரம் வினவ, நிமிர்ந்து அவனை முறைத்தவள், சாப்பிட அமர்ந்தாள்.


“லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சது பா. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு…” திவாகர் கூற, தலையை அசைத்துக் கேட்டார் ரங்கராஜன்.

அவரது தட்டில் இரண்டு சப்பாத்திகளை இட்ட ராதாமணி, “உங்க மவளுக்கு இன்னும் கோபம் குறையலை. சாப்பிட்டுப் போய் அவளை சமாதானம் செய்ங்க…” எனக் கூற, ரங்கராஜனுக்குப் புன்னகை பிறந்தது. மனோ சிறுவயதிலிருந்தே இப்படித்தான் அவ்வப்போது சண்டையிடுவாள், முறுக்கிக் கொள்வாள்.
ரங்கராஜன் மகளைக் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்வார். இது தொடர்கதையாகிப் போன ஒன்று.

உண்டுவிட்டு மனோவின் அறைக்குள் நுழைந்தார் ரங்கராஜன். தந்தையைக் கண்டதும் மறுபுறம் திரும்பிப் படுத்தாள் மனோஹரி‌. அவளுக்கு அருகே கட்டிலில் அமர்ந்தவர், மகள் தலையைப் பாசத்துடன் கோதிக் கொடுத்தார். அந்த மென்வருடலில் இவளுக்கு விழிகள் கலங்குவது போலொரு எண்ணம்.

அவரது கையை வெடுக்கென்று தட்டிவிட்டாள் மகள். “மனோ மா, அப்பாகிட்ட என்ன டா கோபம்?” என்றவரின் குரலில் மகளின் மீதான நேசம் கொட்டிக் கிடந்தது. மகளும் மகனும்தான் அவரது உலகமே. அதிலும் தன் தாயைப் போல பிறந்திருக்கும் மகள் மீது அத்தனைப் பிரியம் அவருக்கு. வெளியே விரைப்பாய் எல்லோரையும் அதட்டி, உருட்டி வேலை வாங்கினாலும், அரசியல்வாதியாய் வலம் வந்தாலும், மகளிடம் அது என்றுமே செல்லுபடியானதில்லை. அவளருகில் மட்டும் முகமூடியை முழுவதுமாக அகற்றிவிடுவார்.

அவரது பேச்சு அவளை ஒரு நொடி கூடக் காயப்படுத்தாது. திவாகரை விட இவள்மீது பெற்றவருக்கு ஒரடுக்கு பாசம் அதிகமே. அதை அவனும் உணர்ந்திருக்கிறான். அறியாத வயதில் எப்போதாவது அதை வைத்து சண்டையிடுவான். ஆனால், வயது ஏற ஏற பக்குவமும் முதிர்ச்சியும் தங்கை மீது அக்கறையைக் கொட்ட வைத்தது. என்ன வேலை இருந்தாலும், அவள் மீதொரு கண்ணை வைத்திருப்பான். அவன் பார்வை வட்டத்தில் தான் இருப்பாள் மனோஹரி.

தந்தையின் பேச்சில் அதிலிருந்த அக்கறையில் தலையைக் கோதிய ஸ்பரிசத்தில் கண்கள் அவளறியாது கலங்கிப் போக, எழுந்தமர்ந்தாள் மனோ.

“ஏன்ப்பா அப்படி செஞ்சீங்க? அந்த மார்த்தாண்டத்துக்கும் ஒரு குடும்பம் இருக்கும் இல்ல. அவருக்கும் என்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கலாம். அவங்களை அடிச்சுட்டோம்னு ஈஸியா சொல்றீங்களே! இதெல்லாம் எந்த விதத்துல நியாயம் பா? நாளைக்கு நமக்கும் அதே நிலைமை வராதுன்னு என்ன நிச்சயம்?” என ஆற்றாமையுடன் தந்தை முகத்தைப் பார்த்து வினவினாள். கோபமில்லை, ஆனால் ஏக வருத்தமிருந்தது. தந்தையுடன் சேர்ந்து குமரனும் இப்படி செய்கிறானே என உள்ளம் அவனுக்காகவும் தவித்து தொலைத்தது. அவனை ஏன் தனக்குப் பிடித்தது என சுயப்பரிசோதனை செய்து கேள்வி கேட்டு மனம் ஓய்ந்து போயிருந்தது சமீப காலமாக.

error: Content is protected !!
Scroll to Top