அந்தப் புகைப்படத்தைத் தொட்டு தடவிப் பார்த்தாள். இது போலொரு புகைப்படம் இனிமேல் எடுக்க வாய்ப்பில்லை என நினைத்ததும், மனம் வலித்தது.
அப்படியேபடுத்தவள், அந்தப் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்தியவாறு நெடுநேரம் கட்டிலில் கிடந்தாள். விழிகளை மூடியதும், தான் பேசிய சுடு சொல்லில் முகம் வாடி நின்ற குமரன் சமீபித்தான். அந்நிலையில் அந்த முகத்தில் அதிலிருந்த பாவனை சர்வ நிச்சயமாய் அவளை இன்று தூங்க விடாது, கொன்று தின்றுவிடும் என்பது திண்ணம். நடந்த நிகழ்வுக்குப் பின்னே எத்தனையோ முறை குமரன் ஷெண்பாவை சந்திக்க முயன்றிருக்கிறான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள்.
‘வேண்டாம் எனத் தூக்கியெறிந்துவிட்டுப் போனவனிடம் அன்பை, நேசத்தை யாசிக்க மனம் வரவில்லை. அந்த வாரத்தைகள் அளவு கடந்தக் காயத்தை அவளுள் தோற்றுவித்திருந்தது. குமரன் தங்களுக்காகத்தான் பேசினான் என்பது பின்னாளில் பக்குவப்பட்ட பின் மனம் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து தொலைத்தது.
அதற்குப் பின்னர் ஒருமுறை இவளாக அழைத்து மீண்டும் வீட்டிற்கு வருமாறு கெஞ்ச, குமரன் இறுகிப் போய் அழைப்பைத் துண்டித்திருக்க, ஷெண்பா வெறுத்துப் போனாள். கோபம், யார் மீது காட்டுவது எனத் தெரியாது ஒவ்வொரு முறை குமரனைக் காணும்போது வார்த்தையால் அவனை சுட்டுப் பொசுக்கினாள். ஆனால், அதற்கெல்லாம் ஒரு வார்த்தைக் கூட பதிலுக்கு குமரன் உரைத்ததில்லை. அதில் மீண்டும் காயம்பட்டது என்னவோ ஷெண்பாதான். அவன் முகம் வாடி, வதங்கும்போது இவளுக்கு மனதே வலிக்கும்.
இவள் இப்படியென்றால், விக்ரம் குமரனோடிருந்த தொடர்பை அன்றே முடித்திருந்தான். எத்தனைக் கெஞ்சியும் அழைத்தும் கூட வீட்டைவிட்டுச் சென்றவனை அவன் மன்னிக்கத் தயாராகவில்லை. அவன் மட்டும் சிந்துவுடன் தனியாளாய் கஷ்டப்படுவதை பார்க்கையில் இவனது உள்ளம் வெதும்பும். ஷெண்பாவும் விக்ரமும் படித்து முடித்துவிட்டு நல்ல வேலையிலிருக்க, குமரன் பள்ளியோடு படிப்பை நிறுத்தியதற்கு விக்ரம் தாங்களும் ஒரு வகையில் காரணம் என குற்ற உணர்வில் மறுகிய நாட்கள் ஏராளம். இன்னும் சொல்லப்படாத, சிந்தையில் எட்டாத நிகழ்வுகள் எல்லாம் இவர்கள் மூவரின் வாழ்க்கையும் ஒரு சுழற்று சுழற்றியிருந்தன.
பண்ணையிலிருந்து அலுவல் முடிந்து வந்த விக்ரம் மகிழுந்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட சுமதி, “மினாட்சி, விக்ரமுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா!” என கட்டளைப் பிறப்பித்தார்.
உள்ளே நுழைந்தவன் மின்விசிறியை உயிர்ப்பித்தவாறு நீள்விருக்கையில் பொத்தென அமர்ந்தான். இன்று கோழிப் பண்ணையில் வேலை கொஞ்சம் அதிகம். அதனால் உடல் ஓய்விற்குக் கெஞ்சியது. சட்டையிலிருந்த இரண்டு பொத்தான்களை வலது கை அவிழ்த்து விட, இடது கையால் நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தான்.
சுமதி மகனுக்கு தேநீரை எடுத்துவந்து கொடுத்தார். அதை வாங்கி விக்ரம் பருகவும், அவனருகே அமர்ந்தவர், “உன் தங்கச்சிக்கும் உனக்கும் ஏதும் சண்டையா டா?” என வினவினார்.
அவரது கேள்வியில் முகத்தைச் சுருக்கியவன், “இல்லையே மா!” எனத் தோளை குலுக்கினான்.
“அப்புறம் ஏன் டா அவ மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கா? வந்ததும் வராததுமா ரூம்க்குள்ள போய் அடைஞ்சவதான், இன்னும் வெளிய வரல. என்னென்னுத் தெரியலை. காலைல காலேஜ் போகும்போது நல்லாதான் போனா…” என்றவரின் பதிலில் விக்ரமின் விழிகள் யோசனையாய்த் தங்கை அறைக் கதவில் படிந்தன.
“நான் என்னென்னு கேக்குறேன் மா…” பதில் இயம்பியவன், குவளையைத் தாயின் கையில் கொடுத்துவிட்டு எழுந்து சென்று அவளது அறைக் கதவைத் தட்டினான்.
“ஷெண்பா… ஷெண்பா!” இவன் குரல் கேட்டதும் எழுந்தவள், “இதோ வரேன் ண்ணா!” என முகம் கழுவி உடை மாற்றி வெளியே வந்தாள்.
அழுது சிவந்திருந்த விழிகளும் வீங்கியிருந்த முகமும் அவளது நிலையை அப்பட்டமாய் எடுத்துரைத்தன. தங்கை முகத்தைப் பார்த்த விக்ரம், “என்னாச்சு ஷெண்பா, ஏன் அழுதிருக்க?” என வினவினான்.
“ஒன்னும் இல்லை விக்கி!” என்றவள் அவன் முகத்தைப் பார்க்காது குனிந்து கொண்டாள். குரல் லேசாய் தழுதழுத்து அகத்தை அப்பட்டமாய் பறைச்சாற்றியது.
“ஏன்டி, எதுக்கு இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்க, காலேஜ்ல வாத்தியாருங்க எதுவும் திட்டீட்டாங்களா டி?” சுமதி மகளின் அருகில் வந்தார். அவரது குரலில் அத்தனை படபடப்பு.
“ப்ம்ச்… ஒன்னும் இல்லை மா. உன் வேலையை மட்டும் பாரு நீ…” அவரைப் பார்த்து கோபமாய் இரைந்தாள். விக்ரம் ஷெண்பாவைப் பார்த்தான். இப்படியெல்லாம் அவள் யாரிடமும் எடுத்தெறிந்து பேசுபவள் இல்லையே. என்னவாகிற்று இவளுக்கு என புரியவில்லை அவனுக்கு.
கல்லூரியில் வேறு ஏதாவது பிரச்சனையாய் இருக்குமோ என ஊகித்தவன், “ம்மா, பசிக்குது. போய் சாப்பாடு எடுத்து வைங்க…” என சுமதியிடம் கூறி, அவரை அகற்ற முயன்றான்.
மகன் பசி என்றதும் சுமதி, “மீனாட்சி, மாவை எடுத்து வெளியே வை. நான் வந்து இட்லியை ஊத்துறேன்” என விரைவாய் சமையலறைக்குள் நுழைந்திருந்தார்.
ஷெண்பாவின் கையைப் பிடித்திழுத்து அறைக்குள் நுழைந்து கதவை அடைத்த விக்ரம், “இப்போ என்னாச்சுன்னு சொல்ற ஷெண்பா…” என அதட்டலாய்க் கேட்டான். விழிகள் பனிக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “குமரனைப் பார்த்தேன்…” எனத் தேம்பிக் கொண்டே நடந்த நிகழ்வை விளக்கினாள்.
அந்தப் பெயரில் ஷெண்பா பதிலில் விக்ரம் தாடை இறுகியது. “ரோட்ல ஆயிரம் பேர், போவாங்க, வருவாங்க. அதுக்கென்ன இப்போ?” என தான் தோன்றித் தனமாய் அலட்சியத்துடன் கேட்டான்.
விக்ரம் கையிலிருந்த தன் கரத்தை உருவிய ஷெண்பா அவனை முறைத்தாள். “வேணாம்னு சொன்னவனுக்காக உன்னோட கண்ணீரை வேஸ்ட் பண்ணாத. எமோஷனல் இடியட் ஆகாத!” என விக்ரம் கோபமாய் உரைத்ததும், ஷெண்பா அவன் முன்னே கையை நீட்டினாள் பேசாதே என்பது போல. நின்றிருந்த விழிகள் மீண்டும் உடைப்பெடுக்க, கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின.