“புள்ளி வச்ச கோலத்தைக் கூட ஒழுங்கா போட மாட்டீயா மீனாட்சி?” பணியாளைக் கடிந்தார் சுமதி. வீட்டு வாயிலில் ஒரு இருக்கைப் போட்டு அமர்ந்திருந்தவர், புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பெண்ணை அவல் போல வாயில் போட்டு மென்று வசைபாடிக் கொண்டிருந்தார். சிறிய விஷயத்திற்குக் கூடப் பெரிதாக எதிர்வினையாற்றுவது தான் அவரது வழக்கம்.
“சரிங்க மா… இதோ மாத்திட்றேன் மா!” என சுமதியின் அத்தனை வசவுகளுக்கும் வஞ்சனையின்றி மீனாட்சி தலையை அசைத்தவாறு கோலமிட்டாள். இருசக்கர வாகனம் வந்து நிற்கும் சத்தம் இருவரது செவியையும் தொட்டது.
நிமிர்ந்து பார்த்தார் சுமதி.
ஷெண்பா வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழையவும், “என்னடி காலேஜ் முடிஞ்சு வர இவ்வளோ நேரமா? ஏன் இன்னைக்கு லேட்டு?” என எழுந்து மகளின் பின்னே உள்ளே நுழைந்தார். அவர் கேள்விக்குப் பதிலளிக்காத ஷெண்பா அறைக்குள் சென்று கதவைப் பட்டென மூடினாள். மீண்டும் விழிகளில் குபுகுபுவென நீர் இறங்கியது. நீண்ட நெடிய நாட்கள் கழித்து குமரனைக் கண்டதும் உள்ளம் விம்மித் துடிக்க, படுக்கையில் பொத்தென விழுந்தாள்.
ஏனோ நினைவு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தக் கருமைப் பூசிய நிகழ்வை இப்போது வெளிச்சமிட்டு உமிழ்ந்து மனதை வாள்கொண்டு அறுக்கத் துணிந்தது. விழிகளை சிமிட்டி, மூளையைத் தட்டி விழிப்படையச் செய்தாலும் மீண்டும் கடந்து வந்தப் பாதை பின்னே மனம் தறிக்கெட்டு ஓடித் தொலைக்க, இஷ்டமின்றி செவியில் மோதிய வார்த்தைகளை உள்ளம் கிரகிக்கத் தொடங்கியது.
“ஷெண்பா மா… என் ஷெண்பா குட்டிக்கு என்ன வேணும்? எதுக்காக அழறா? உனக்கு அம்மா பனியாரம் சுட்டுத் தரவா?” எனக்கேட்டு தன்னைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சும் சிந்து நினைவை நிறைக்க, விழிகளில் நீர் கோர்த்தது.
“அவ என் தங்கச்சி, நீ அவ கூடப் பேசக் கூடாது… போடா!” விவரமறியா அகவையில் விக்ரம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு குமரனிடம் சண்டையிட்டு, அவனை தள்ளிவிட்டதும், குமரன் கீழே விழுந்திருந்தான். இவள்தான் இடைபுகுந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தாள்.
இருந்தும் விக்ரம் முறுக்கிக்கொண்டு திரிய, குமரனும் சடைத்துக்கொண்டான். இவர்கள் இருவரையும் சமாளிப்பதற்குள் ஷெண்பா திணறிப் போவாள். ஒருவருக்காக மற்றவரை அவளால் விட்டுக்கொடுக்க முடியாதே. இருவருமே அவளது வாழ்வின் ஆணிவேர். அவளுக்கென்று வரும்போது இருவருடைய கைகளும் தன்னலமின்றி எப்போதுமே நீளும். அத்தனை நேசம் விக்ரமிற்கும் குமரனிற்கும். ஷெண்பா என்றால் இருவருக்குமே அத்தனை இஷ்டம். குட்டி குட்டி கைகளுடன் கால்களுடனும் அண்ணா, அண்ணா என அவர்கள் இருவரையும் சுற்றிவரும் ஷெண்பாவை பங்கு போட முடியாது, சண்டையிட்ட காலங்கள் ஏராளம்.
பின்னர் காலம் கனிந்து வயது முதிர்ந்து, பக்குவம் துளிர்த்து நிதர்சனம் உரைத்து விக்ரமும் குமரனும் ஒருவரை ஒருவர் சகோதரராய் ஏற்றுக்கொண்ட பொக்கிஷத் தருணத்தை ஷெண்பாவால் ஒருநாள் கூட நினைக்காமல் இருக்க முடியாது. அப்போது கூட விக்ரம்தான் இறங்கி வந்தான். குமரனைவிட இரண்டு வயது பெரியவன் என்ற காரணத்தை தவிர பெரிதாய் ஒன்றும் இல்லை. அதுவும் சிந்துவின் சித்து விளையாட்டுத்தான் அவர்கள் மூவரையும் இணைத்து பாலம் கட்டியது.
அன்று ஷெண்பா அடைந்த மகிழ்ச்சியை சொற்களால், வார்த்தைகளால் கோர்க்க முடியாது. அதொரு அலாதியான உணர்வு. மனதில் அப்படியொரு ஆசுவாசத்தைக் கொடுத்திருந்தது அவளுக்கு. எங்கே இருவரும் எப்போதும் சண்டையிட்டு முறைத்துக்கொண்டே இருந்துவிடுவார்களோ என அப்பிஞ்சு மனதில் எத்தனையோ முறை கவலை அரித்ததது. ஆனால், அதற்கெல்லாம் அவசியமில்லை எனப் பின்னாளில் இருவரின் பிணைப்பும் பாசமும் அவளையே சில சமயம் பொறாமைப் பட வைத்தது உண்டு. இருப்பினும் புன்னகையுடன் அதை கடந்துவிட்டாள். அவர்களுக்கு இடையிலான பிரியமும் நேசமும் உள்ளத்தையும் உடலையும் ஒரு சேர உவகைக் கடலில் தள்ளி, அவர்கள் மூவரையும் இறுகப் பிணைத்திருந்து. ஷெண்பகவல்லி, திருக்குமரன், விக்ரம் என மூவரும் இணைப்பிரியாது சுற்றித் திரிந்த நாட்கள் அவர்கள் வாழ்வின் வசந்தக் காலம்.
எங்கே சென்றாலும் விக்ரம் ஒருபுறமும் குமரன் ஒருபுறமும்
ஷெண்பாவிற்கு அரணாய் இருப்பார்கள். இரண்டு தமையன்களின் அன்பையும் ஒரு சேர அனுபவித்து மகிழ்ந்த காலங்கள் இப்போது பெண்ணின் உள்ளத்தை கனக்கச் செய்தன.
“குமரா, நான் சொல்றதை கேளுண்ணா. எங்களைவிட்டுப் போகாதண்ணா! நானும் விக்ரமும் உன்னையும் சிந்துமாவையும் பார்த்துக்கிறோம். நம்ம எல்லாரும் எப்பவும் போல ஒன்னாவே இருக்கலாம் குமரா!” என பன்னிரெண்டு வயது ஷெண்பா விழிகள் வழியும் நீருடன் தேம்பிக் கொண்டே கெஞ்ச, கெஞ்ச அவளது பிஞ்சு விரல்களைக் கனத்த இதயத்துடன் இறுகிய முகத்துடன் தட்டிவிட்டிருந்தான் குமரன்.
எங்கே நிமிர்ந்து பார்த்தால் அந்தப் பிஞ்சின் நேசத்தில், விழிநீரில், அக்கறை மிகுந்த வார்த்தையில் மனம் மாறிவிடுமோ என அஞ்சியவன் இதயத்தை பல கத்திகள் நொடியில் பதம் பார்த்தன. கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டே திரும்பியும் பாராது சென்ற குமரனை நினைத்தால் இப்போதும் ஷெண்பாவிற்கு அழுகை பொங்கி நெஞ்சம் விம்மும். நடந்து பத்து வருடங்கள் கடந்தும் அவளால் குமரனை மன்னிக்கவே முடியவில்லை. பிறந்ததிலிருந்து சாகும்வரை எப்போதும் உடனிருப்பேன் என சத்தியம் செய்து அதை உடைத்துவிட்டு சென்றவனை நினைத்து ஒவ்வொரு முறையும் அவளது விழிகள் பனிக்கும், மனம் கனக்கும். சூடான திரவம் கன்னத்தில் கோடாய் இறங்கிக் கொண்டிருந்தது.
“குமரன் இல்லாத வீட்ல நானும் ஷெண்பாவும் இருக்க மாட்டோம்!” மீசை அரும்பத் தொடங்யிருந்த பதினெட்டு வயதேயான விக்ரம் வீம்பாய் உரைத்து ஷெண்பா கரத்தைப் பிடித்துக்கொண்டு குமரனோடு வெளியேற முனைந்திருந்தான். அந்த வார்த்தையில் அவர்களின் செயலில் குமரன் மொத்தமும் உடைந்திருந்தான். இந்த அகோர நேசத்தின் பிடியில் வாழ தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணம் அவனை மேலும் இறுக வைத்திருந்தது.
“நீங்க என் கூட வரக்கூடாது. அங்கேயும் வந்து என் உயிரை எடுக்கப் போறீங்களா? வராதீங்க நீங்க. உங்களைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. நீங்க ரெண்டு பேரும்தான் இதுக்குக் காரணம்!” மனம் வலிக்க பெருங்குரலெடுத்து குமரன் கத்திய போது ஷெண்பாவின் பிஞ்சு இதயம் ஸ்தம்பித்துப் போனது. உடல் நடுங்கிப் போனாள். அவளறிந்த குமரன் அவளிடம் கடிந்து ஒரு வார்த்தை ஒரு நொடி பேசியதாய் எங்குமே நினைவில் இல்லை.
விக்ரமும் அதிர்ந்து போனான். அவர்கள் இருவரையும் கோபமாய்ப் பார்த்த குமரன் சிந்துவுடன் விறுவிறுவென வெளியேறினான். நடந்ததை மனம் மீட்ட, மீண்டும் விழிகள் நனைந்தன ஷெண்பாவுக்கு. புறத்தூண்டல் எதுவும் மூளைக்கு உரைக்காது சிலை போல அமர்ந்திருந்தாள்.
சில நிமிடத்தில் அவளது நீண்ட விரல்கள் கட்டிலுக்கு அருகே நீண்டன. மேஜை மீதிருந்த தங்கள் மூவரது புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். ஷெண்பா நடுவிலிருக்க, அவளுக்கு இருபுறமும் விக்ரமும் குமரனும் நின்றிருந்தனர். மூவர் முகமும் அகமும் மகிழ்ச்சியில் மின்னின. விவரம் அறியா வயது. யார், எவர், என்னவென பகுத்தறியா வயதில், மூவரின் உதட்டிலும் கள்ளமில்லா புன்னகை பூத்திருந்தது.