உள்ளம் – 3.4

அவனின் கேள்வியில் சாலையில் நின்றிருக்கிறோம் எனக் குமரன் சிந்தையில் பதிய, தலையை சிலுப்பித் தன்னை சமன்செய்து கொண்டவன், “ஒன்னும் இல்ல திவாகர். நீங்க போய் கார்ல இருங்க. ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்!” என்றவன், மறுபுறம் சாலையைக் கடந்து விறுவிறுவென மகிழுந்தினருகே சென்று எரிபொருளை ஒரு பொத்தலில் எடுத்து வந்தான்.

தான் கீழே தள்ளிவிட்ட இருசக்கர வாகனத்தை நிமிர்த்தி எரிபொருளை நிரப்பினான்.‌ பினனர் அதை உயிர்ப்பித்துவிட்டு, “வீட்டுக்கு கிளம்பு ஷெண்பா!” என்றான் கட்டளையாய். செய்தே ஆக வேண்டும் என்றொரு தொனி அது. ஷெண்பா அசையவே இல்லை.

‘முடியாது! என்ன செய்து விடுவாய்?’ என்று இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.

“இப்போ மட்டும் ஸ்கூட்டீல நீ கிளம்பலை, நான் இங்க இருந்து நகர மாட்டேன்!” குமரன் குரல் உறுமலாய் வந்தது. அருகில் இருந்த இருவரும் அந்தக் குரலில் ஒரு நொடி திகைத்துப் போயினர். குமரனிடமிருக்கும் நிதானம் எப்போதோ தொலைந்து போயிருந்தது. அவன் உடலும் மனமும் இறுகிப் போனதை இருவரும் கவனித்தனர்.

ஷெண்பா ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகள் லேசாய் பனித்திருந்தன. அதைக் கண்டவனின் கோபம் கண நேரத்தில் முற்றிலும் தணிந்து போக, உடல் தளர்ந்தது. அந்தப் பெண்ணின் விழிகளிலிருந்து உருளும் ஒவ்வொரு சொட்டு நீரும் இவனைப் பதம் பார்க்கும் கத்திப் போல உணர்ந்தான். அவளைப் போல அவன் மனதிலும் வலி மட்டும்தானே எஞ்சியிருக்கிறது? அருகிலிருந்தவளின் கண்ணீர் இவனை அசைத்துப் பார்த்தது. அவளைத்தான் பார்த்தான். அந்தப் பார்வை, அதிலிருந்த ஏதோ ஒன்று ஷெண்பாவை அடங்கிப் போகச் சொல்லித் தூண்டியது.

எதுவும் பேசாதவள், இருசக்கர வாகனத்தில் ஏறி அமர, “பார்த்து போ ஷெண்பா!” என்றான் குமரன். குரல் முழுவதும் அவள் மீதான வாஞ்சைதான். அன்பும் அக்கறையுமான அந்தப் பேச்சு அருகிலிருந்தவளை லேசாய் வருடிப் போனது. அத்தனை மென்மையாய் கனிவாய் கூறியவனை மனோ யோசனையாய்ப் பார்த்தாள். குமரனுக்கு இப்படியெல்லாம் கூடப் பேசத் தெரியுமா என இவளது மனம் வியந்து போனது.

“எனக்கு உன் அக்கறை தேவையில்லை. அத்தனையும் நடிப்பு!” திராவகம் போல வார்த்தைகளைக் கொட்டிய ஷெண்பா நகர்ந்தாள். கொட்டிய வார்த்தைகளில் அவளிதயமும் ஒரு நொடி தவித்துதான் போனது.
குமரனின் முகம் சுருங்கிப் பின் விரிந்தது. திவாகரும் மனோவும் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மூளைக்கு உறைக்க, “போகலாம் வாங்க!” என அவர்கள் முகத்தைப் பார்க்காமல் சாலையைக் கடந்து மகிழுந்தை உயிர்ப்பித்தான். மற்ற இருவரும் அமர, பயணம் தொடர்ந்தது.

மனோ அவனது இறுகிய முகத்தையும் உடலையும் தான் பார்த்திருந்தாள். திவாகர் மேலும் எதையும் கேட்க விரும்பவில்லை. அவனுடைய தனிப்பட்ட விஷயம் என விட்டுவிட்டான். ஆனால், ஷெண்பாவின் அழுத முகம் அவனது மனத்திரையில் மீண்டும் மீண்டும் விரிந்தது‌.

வீடு வந்ததும் திவாகர் இறங்கி உள்ளே செல்ல, மனோஹரி இறங்கவே இல்லை. குமரன் அவளைக் கேள்வியாய் நோக்க, “அந்தப் பொண்ணு யாரு?” என வினவினாள். அந்தக் கேள்வியில் குமரன் உடல் மேலும் இறுகியது.

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்!” கத்தரித்தாற் போல பதில் இயம்பினான்.

“என்ன தேவையில்லாத விஷயம்? இப்போ அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லப் போறீங்களா? இல்லையா?” இவள் பிடிவாதமாய் நின்றாள். குரலில் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற பிடிவாதம் நிரம்பியிருந்தது.

“முடியாது. என் பெர்சனல்ல தலையிட உனக்கு உரிமை இல்லை மனோ!” குரலில் சீற்றத்துடன் அழுத்தமாய் உரைத்தான் குமரன்.

“ஓஹோ… அப்போ என்னோட பெர்சனல்ல மட்டும் நீங்கத் தலையிடுவீங்க. அப்படித்தானே?” மனோ சூடாய் வினவ, மகிழுந்திலிருந்து இறங்கியவன், அவள் பக்கக் கதவைத் திறந்தான்.

“முதல்ல இறங்கி வீட்டுக்குள்ள போ!” குமரன் பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசினான்.

“முடியாது…” எனக் கூறியவளின் கையை பிடித்திழுத்து வெளியே தள்ளியவன், மகிழுந்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். சில நிமிடங்கள் போகும் அவனையே வெறித்தவள், ‘நாளைக்கு என்ன உரிமை இருக்குன்னு சொல்றேன் மிஸ்டர் திருக்குமரன்!’ என அழுத்தமாய் அவனது பெயரை மனதில் உச்சரித்தாள்.

அவள் உள்ளே நுழைய, “குமரன் எங்க மனோ?” எனத் திவாகர் வினவினான். அவன் உள்ளே வராமல் செல்ல மாட்டானே என திவா வினவினான்‌.

“அதை ஏன் என்கிட்ட கேட்குற திவா. அவர்கிட்டயே கேளு!” என மனோ கோபமாய் இரைந்துவிட்டு சென்றாள்.

“என்ன டா, இன்னும் இவ கோபம் போகலையா? இப்படி பேசீட்டு போறா. நாளைக்கு பிறந்தநாள், மூஞ்சியை தூக்கிட்டு திரிவாளே டா!” ராதாமணி கவலையாய்க் கேட்டார்.

“ம்மா, அப்பா வந்து கொஞ்சுனா, சரியாகிடுவா மா. இதுக்கெல்லாம் எதுக்கு கவலைப்படுறீங்க?” திவாகர் இலகுவாய்க் கூறி நகர்ந்தான்.

“வாடா, சீக்கிரம் வந்துட்ட. வேலை முடிஞ்சதா? சாப்பாடு எடுத்து வைக்கவா?” சிந்து மகனை விரைவாய்க் கண்டதும் கேள்வி எழுப்பினார்.

“சாப்பாடு வேணாம் மா. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்…” தாயின் முகம் பார்க்காது அறைக்குள் நுழையப் போனவனை தடுத்து நிறுத்திவிட்டார்.

“என்னாச்சு குமரா? குரலே சரியில்லை!” எனக் கேட்டவருக்கு மகனின் குரலிலிருந்த உணர்வு ஏதோ சேதி கூறியது. அவனது முகத்தை நிமிர்த்தினார்.

“ச்சு… ஒன்னும் இல்லை. விடுங்க மா!” என எரிச்சலாய் உரைத்தான்.

“சரி டா… சரி. நீ போய் ரெஸ்ட் எடு. அப்புறம் பேசிக்கலாம்…” சிந்து குரலைத் தழைத்து மகனை சமாதானம் செய்வது போல பேச, அருகிலிருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்தவன், தலையை இரு கைகளாலும் தாக்கினான்.

“ஷெண்பாவைப் பார்த்தேன் மா!” குமரன் குரல் நலிந்து வந்தது. அவனது பதிலில் சிந்து முகம் பூவாய் மலர்ந்து போனது. “ஷெண்பா குட்டி என்ன பண்றா டா, எப்படி இருக்கா? பெரிய பொண்ணா வளர்ந்துட்டாளா?” அவளைப் பற்றி பேசியதும் சிந்துவின் முகம் நீண்ட நாளைக்குப் பின்னர் மின்னியது. அவரை நிமிர்ந்து பார்த்தவனின் வதனத்தில் என்ன இருக்கிறது எனப் பெற்றவரால் கூடக் கணிக்க முடியவில்லை.

விறுவிறுவென அறைக்குள் சென்று கதவைப் பட்டென அடைத்து யார் மீதோ இருக்கும் கோபத்தை அதன் மீது காண்பித்தான் குமரன்.

இங்கே இவன் கோபமாய் இருக்க, பிறந்தநாள் பரிசாய் குமரன் தான் வேண்டும் என்று மனோ மேலும் அந்தக் கோபத்திற்கு தூபம் போடத் தயாராய் இருந்தாள்.

உள்ளம் கேட்கும்…

error: Content is protected !!
Scroll to Top