“வர வர ரொம்ப பேசுற மனோ!” என்று அவர் பொய்க் கோபத்தோடு சமையலறைக்குள் நுழைய, பள்ளி சென்றிருந்த குழந்தைகள் வந்துவிட்டனர்.
குமரன் உள்ளே நுழைந்தவன் சொக்கனைக் கண்டும் காணாததுமாய் அறைக்குள் செல்ல, பெரியவரின் பார்வை ஏக்கத்துடன் மகனை சமீபித்தது. ஒவ்வொரு முறை அவனைக் காணும்போது சிறு பார்வை, ஒரு வார்த்தை, சின்ன தலையாட்டல் என எதையோ எதிர்பார்த்து அவரது மனம் ஏமாந்துதான் போனது. நிராசை எனத் தெரிந்தும் அவரது பார்வை மட்டும் மகனிடம் மாறவே இல்லை. ஏன் மனோஹரிக்கே சில முறை அவரைக் கண்டு இரக்கம் சுரந்தது.
கணவனும் மனைவிக்குமான தனிமையான பொழுதுகளில் அவவனிடம் மெதுவாய் சொக்கநாதனைப் பற்றிய பேச்சை தொடங்குவாள். அந்நொடியே தன் விருப்பமின்மையை முகத்தில் காண்பித்துவிடுவான் குமரன். அதனாலே அவளாலும் அவனிடம் பேச முடியவில்லை.
அவனுக்காய் என்றாவது ஒருநாள் தோன்றினால் அன்றி, கண்டிப்பாக யார் பேச்சிற்கும் உடன்பட்டு அவன் சொக்கநாதனிடம் பேச மாட்டன் என்பது மட்டும் திண்ணம். அவளும் சரி அவனது விருப்பம் என விட்டுவிட்டாள்.
“தாத்தா… எப்போ வந்தீங்க?” என ஜானுவும் சரணும் சொக்கநாதனின் மீது ஏறி அமர, அவர்களைக் கொஞ்சத் தொடங்கிவிட்டார் மனிதர். மகனுக்கும் மருமகளுக்கும் குளம்பியைக் கொடுத்த சிந்து, குழந்தைகளுக்குப் பாலை ஆற்றிக் கொடுத்தார்.
சரணை அழைத்துச் செல்ல வந்த ஷெண்பா தந்தையை இங்கே காணவும், அப்படியே அவரருகே அமர்ந்துவிட்டாள்.
“ப்பா… எப்போ வந்தீங்க? ரெண்டு வாரமா பார்க்க முடியலை உங்களை, வேலையா?” என்று அவருகே அமர்ந்தவள் பேசத் தொடங்கிவிட, திவாகரும் அமர்ந்துவிட்டான்.
சிந்து, “வாங்க தம்பி, காஃபி எடுத்துட்டு வரேன் இருங்க!” என அவனுக்கும் குளம்பியைக் கொடுத்தார். நேரம் முன்மாலை பொழுதைக் கடக்க, திவா ராதாவிற்கு அழைத்து வர தாமதமாகும் எனக் கூறினான்.
“என்ன டா… உன் பொண்டாட்டி அப்பாவைப் பார்த்ததும் அங்க உக்காந்துட்டு நகரலையா?” என ராதா கேட்டு அழைப்பைத் துண்டிக்க, அவரது பேச்சில் இவனுக்குப் புன்னகை அரும்பியது. ஷெண்பாவிற்கும் ராதாவிற்கும் எத்தனை பிணக்குகள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் அத்தனையாய் புரிந்து வைத்திருந்தனர். ஷெண்பாவும் ராதாவின் செய்கைகளை ஆருடம் போல கூறுவாள்.
“என்ன சிரிப்பு… உங்கம்மா என்ன சொன்னாங்க?” என லேசாய் உதட்டை சுழித்து அவன் கையிலிருந்த குவளையை வாங்கிக்கொண்டு நடந்தாள். திவாகரின் முகத்தில் இன்னுமே புன்னகை நீண்டது.
சிறிது நேரத்திலே வெளியே வாகனச் சத்தம் கேட்க, விக்ரமும் பைரவியும் உள்ளே நுழைந்தனர். அவளின் கையில் அவர்களது இரண்டு வயது குழந்தை ஆராத்தியா இருந்தாள்.
காலையிலே தாய்வீடு சென்றிருந்த மனைவியை அழைத்து வரச் சென்றவன் தந்தையையும் கூட்டிச் செல்லலாம் என வந்திருக்க, மொத்தக் குடும்பமும் அங்கே தான் இருந்தன.
“பெரியப்பா…” ஜானு அவனைப் பார்த்ததும் தாவ கரங்களை நீட்டி அவளைத் தூக்கினான். மறுநொடி அவனது கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள் சின்னவள்.
“மிஸ் யூ ப்பா!” என்றவளின் மழலையில் இவனுக்கு புன்னகை அரும்பியது. கைகளைக் கட்டி அவனின் முன்பு நின்றிருந்த சரண் அவனை ஏகத்திற்கும் முறைத்தான்.
“என் சரண் செல்லத்துக்கு என்ன கோபம்?” என்று அவன் கேட்கவும், “லாஸ்ட் டைமே அவனுக்கு ரிமோட் கார் வாங்கித் தரேன்னு ஏமாத்திட்ட விக்கி நீ. பாவம் புள்ளை ஏமாந்துட்டான்!” ஷெண்பாவும் தமையனை முறைத்தாள்.
விக்ரம் சரணையும் ஜானுவையும் தூக்கிச் சென்று அவர்களுக்காக வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை நீட்டவும், சின்னவன் குஷியாகிப் போனான்.
“தேங்க் யூ மாமா… ஆராவை நானே கட்டிக்கிறேன்!” என பொம்மையைக் கையில் தூக்கிக்கொண்டு அவன் ஓட்டம் பிடிக்க, இவன் திகைத்துப் போனான்.
“டேய், சேட்டைக்காரா… நில்லு டா. யாரு உனக்கு இதெல்லாம் சொல்லித் தர்றா!” என்றவனின் பேச்சை கேட்க சின்னவன் அங்கில்லை.
“பிள்ளையைப் பெக்க சொன்னா, அறுந்தவாலைப் பெத்து வச்சிருக்கா என் தங்கச்சி…” என்ற முணுமுணுப்புடன் அவன் நகர்ந்தான்.
“டேய் சரண், நீ ஆராவைக் கட்டிக்க கூடாது. என்னைதான் கட்டிக்கணும்!” ஜானு அவன் பின்னே ஓட, “போடி… எனக்கு ஆரா பாப்பாதான் பிடிக்கும். நான் அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!” என்று சரண் கூற, அவர்கள் முன்னே மனோஹரி உக்கிரமாய் நின்றிருந்தாள்.
“டேய், இந்த வயசுல என்ன பேச்சு உனக்கு?” என சரண் காதை அவள் திருக, “மம்மி… அத்தை அடிக்கிறா!” என சின்னவன் அலறினான்.
“அண்ணி… என்ன பண்றீங்க?” அவளை முறைத்துக் கொண்டே குழந்தையைத் தன்புறம் இழுத்து தூக்கி இடுப்பில் வைத்தாள் ஷெண்பா.
“ஏன் ஷெண்பா… அவனுக்கு வாய் ரொம்ப ஆகிடுச்சு. என்ன பேசுனான்னு கேளு!” மனோ கோபமாய் கூற,
“என்ன… சின்ன பையன் எதாவது பேசி இருப்பான். அதுக்கு புள்ளையை அடிப்பீங்களா?” என சீறியவள், “டேய், என்ன டா பேசுன?” என மகனையும் அதட்டினாள்.
“ம்மா… நீதானே மா கேட்ட, ஜானுவைக் கட்டிக்கிறீயா? ஆராவைக் கட்டிக்கிறீயான்னு. நான் ஆராவை கட்டிக்கப் போறேன்னு சொன்னேன். அத்தை அடிக்கிறா!” அழும் குரலில் சின்னவன் கூறினான் . அவனின் பேச்சில் ஷெண்பா திருதிருவென விழிக்க, “இதெல்லாம் உன் வேலையா?” என மனோவின் பார்வை இப்போது அவளைச் சுட்டது.
“அண்ணி, அது சும்மா விளையாட்டுக்கு பையன்கிட்ட கேட்டேன். அதை அவன் நியாபகம் வச்சு பேசிட்டான். விடுங்க!” என்றாள் சமாளிப்பாய்.
“என்ன பேசுற ஷெண்பா, இதெல்லாம் குழந்தைங்ககிட்டே பேசுற விஷயமா?” என இவள் குரலை உயர்த்தவும், ஷெண்பாவின் முகம் வாடிப் போனது.
“என்ன பிரச்சனை… என்னாச்சு ஷெண்பா?” குமரன் தூரத்திலிருந்து இவர்களை கவனித்தவன் இடையில் நுழையவும், “அதானே பார்த்தேன். மூக்கு வேர்த்துடுச்சா உங்களுக்கு?” என அவனிடம் காய்ந்தாள் மனோ. அவளை முறைத்தக் குமரன், “குழந்தையைக் கொடு ஷெண்பா!” என சரணைத் தூக்கிக்கொண்டு தங்கையை அழைத்துச் சென்றுவிட்டான்.
“இவரும் திருந்தமாட்டாரு. அவளையும் திருந்த விடமாட்டாரு!” என முணுமுணுத்தவளைப் பார்த்து திவாகர் சிரிக்க, பைரவி அவளருகே வந்தாள். ஆராத்யாவை சிந்து வாங்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
“அக்கா… அங்க மட்டும் இல்ல. இங்கேயும் அதேதான். திருத்த முடியாது. விடுங்க!” என அவள் கூற, மனோவிடம் பெருமூச்சு மட்டும் வெளிவந்தது.
எல்லோரும் கூடியிருக்க பெண்கள் சமைத்து முடிய, இரவு உணவு ஆரம்பமானது. தந்தைமார்கள் தங்களது குழந்தைக்கு உணவை ஊட்டி உண்டு முடிய நேரமானது.
சிறிது நேரம் பேசிவிட்டு திவாகரும் ஷெண்பாவும் விடை பெற்றனர். சரண் அவர்கள் தோளில் தூங்கி வழிந்த வண்ணமிருந்தான்.
“பத்திரமா போங்க…” என்று சிந்து அவர்களை அனுப்பி வைத்தார். சொக்கநாதன் இரவு அங்கேயே தங்க முடிவு செய்திருக்க, விக்ரமும் பைரவியும் குழந்தையுடன் கிளம்பிவிட்டனர்.
“நீங்க போய் ரூம்ல படுங்க. நான் பாத்திரத்தைத் தேய்ச்சுட்டு வரேன்!” என்ற சிந்து முந்தானையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, சொக்கநாதன்
மனைவியின் அறைக்குச் சென்றார்.
குமரன் தொழிலில் கண்ட முன்னேற்றம் வீட்டிலும் பிரதிபலித்திருந்தது. பழைய வீட்டை இடிக்காது அப்படியே மாற்றி பெரிய வீடாக நான்கு அறைகள் வைத்து புதுபித்திருந்தான். அவ்வப்போது விக்ரம், அவனது மனைவி, திவா, ஷெண்பா என தங்க நேர, இதுதான் வசதியாக இருக்குமென யோசித்து ஆரம்பத்திலே மாற்றிவிட்டான்.
ஜானு குமரனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்க, அப்படியே அவளை அறைக்குத் தூக்கிச் சென்று மகளுக்கென்று வாங்கிய சிறிய கட்டிலில் அவளைப் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தான்.
மனோ சிந்துவிற்கு உதவச் சென்றுவிட்டாள். அவர் பாத்திரங்களைத் தேய்க்க, இவள் கழுவி வைக்க, வேலை சிறிது நேரத்திலே முடிந்தது.
“டைமாச்சு… போய் படு மனோ!” என்ற அவர் நகர, மனோவும் தங்களது அறைக்குள் நுழைந்தாள். இரவு உடையில் தூக்கிக் கட்டிய கொண்டையுடன் இருந்தாள். தாலிக் கயிறுடன் கழுத்திலிருந்த முருகன் படமிட்ட கழுத்தணியும் ஆடைக்குள் மறைந்து கிடந்தன.
மனைவி வரவும் குழந்தையிடமிருந்து பிரிந்து எழுந்தவன் அவளருகே செல்ல, “இன்னும் வலி சரியாகலை!” என மூக்கைச் சுருக்கி கைகளை அதன்மீது வைத்துத் தொட்டுக் காண்பித்தாள். அதைக் கண்டு கொள்ளாதவன் முகத்தில் கள்ளப் புன்னகை. தன்னுடைய பொய்யைக் கணவன் கண்டு பிடித்துவிட்டான் என லேசாய் சிவந்தாள் மனைவி. அவளை முழுதாய் சிவக்க வைக்கும் எண்ணம் அவனுக்கு.
ஐந்து வருடங்களாகப் போராடி ஒரு வழியாய் அவளை கடந்த வாரம்தான் மூக்கு குத்த ஒப்புக்கொள்ள வைத்திருந்தான் குமரன். முடியவே முடியாது என்று அடமாய் இருந்தவளை அவன் முத்தமிட்டுக் கெஞ்சி கொஞ்சி அதட்டி சம்மதிக்க வைக்க, அவனது கெஞ்சல் அத்தனைப் பிடித்தது பெண்ணுக்கு. அதற்காகவே இத்தனை நாட்கள் அவனை அலைய வைத்து ஒரு வழியாய் சம்மதம் தெரிவிக்க, ஒரு டப்பா நிறைய மூக்குத்திகள் வாங்கி வந்துவிட்டான்.
அதைப் பார்த்த மனோ, “என்ன கடையா வைக்கப் போறீங்க? எதுக்கு இத்தனை?” என முறைத்தாள். பன்னிரெண்டு மூக்குத்திகள் வாங்கி வந்திருந்தான். அவனிடம் சன்னமான சிரிப்பு மட்டும்தான். பதில் இல்லை.
“போயா…” என மனைவி கடந்துவிட்டாள். ஆனால், மறுநாள் அவளே மூக்கு குத்திவிட்டு வந்து நின்றாள். இத்தனை விரைவில் எதிர்பாராத குமரன் அவளை அணைத்து மூக்கில் முத்தமிட, “என்னைத் தொட்டீங்க, அவ்ளோதான். உங்களாலதான் வலிக்குது எனக்கு. மூக்கு வீங்கிப் போச்சு!” என ஒரு வாரமாய் அவனை அருகிலே அண்டவிடவில்லை மனைவி. இன்று அவளது மறுப்புகளையும் பொய்களையும் கண்டு கொள்ளவில்லை குமரன்.
“பொய் சொல்லாதடி!” என்றவன் இடையில் கைக்கொடுத்து அவளை அணைத்து மூக்கில் மென்மையாய் முத்தமிட, மனோஹரியிடம் மெல்லிய சிலிர்ப்பு. ஜன்னல் வழி ஊடுருவிய வெளிச்சத்தில் மனைவி ஜொலிக்க, கழுத்தில் கையை வைத்து கழுத்தணியை வெளியே எடுத்தவனை முறைத்தாள் பெண். அதை அசட்டை செய்தவன் குனிந்து முருகன் படத்திற்கு முத்தமிட, “பேசாம செயினையும் மூக்குத்தியையும் கழட்டிக் கொடுத்துட்டு எங்கம்மா வீட்டுக்குப் போய்டவா நானு?”
எனக் கடுப்புடன் வினவினாள்.
அவளது பேச்சில் குமரனின் உதடுகளில் புன்னகை ஏறின. “ஏன் டி?” என்றான் சன்னமான சிரிப்புடன்.
“பின்ன என்ன… இங்க ஒரு மனுஷி நான் இருக்கேன்.. என்னை விட்டுட்டு அதுக்கே போய் நொச்சு நொச்சுன்னு முத்தம் கொடுக்குறீங்க. அது கூடவே குடும்பம் நடத்துங்க!” என நகரப் போனவளை இழுத்து இறுக அணைத்து, “நெயில் பாலிஷ் வச்சு விடவா மனோ?” என்றான் கரகரப்பாய். அதில் பெண்ணுக்கு வெட்கம் வந்துவிட, “தேவையில்லை!” என சடைத்துக்கொண்டாள்.
சிரிப்புடன் நகப்பூச்சை எடுத்தவன்
மரகதப்பச்சை நிறத்தை எடுத்து அவளது கால் விரல்களுக்கு வைத்துவிட்டான். இரண்டு கால்களையும் அவனது மடிமீது வைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளின் உதட்டில் சிரிப்பு படர்ந்தது. கர்ம சிரத்தையாய் நகப்பூச்சை வைத்துக் கொண்டிருந்தவனை ஆசையாய்ப் பார்த்திருந்தவள், “வெளிய தான் குமரன் அப்படி, இப்படி கோபக்காரன், அது இதுன்னு. ஆனால் வீட்டுக்குள்ள பொண்டாட்டி காலைப் புடிச்சுட்டிருக்காரு இந்த மனுஷன்!” கிசுகிசுப்பான குரலில் எட்டி அவனது செவியோரம் முணுமுணுத்தாள் பெண்.
அதில் புன்னகைக்க துடித்த உதடுகளை அடக்கியவன், “பொண்டாட்டி காலைப் பிடிச்சா தப்பில்லை டி!” ஆழ்ந்த பார்வையும் சிரிப்புமாய் உரைத்தவன், அவளது விரல்களுக்கு மென் முத்தமிட்டான். கூச்சத்தில் கால்களை மடக்கியவள் மலர்ந்து பின் வெட்கம்கொண்டு சிரித்தாள். குமரன் மனைவியை ஆசையாய்ப் பார்த்திருந்தான்.
கடந்த ஆறு வருடங்களில் எத்தனையோ பிணக்குகள் சண்டைகள் அதற்குப் பின்னான சமாதானங்கள், மனம் நிறைந்த புன்னகைகள், கண்ணீரோடு சிரித்த தருணங்கள், கட்டியணைத்தப் பொழுதுகள் என ஏராளம். இந்தப் புரிதலான நேசமும் தங்கள் இணையின் மீதான பரஸ்பர அன்பும் மரியாதையும் அவர்களை எப்போதும் பிணைத்திருக்கும்.
உள்ளம் சுபமாய்க் கேட்டுவிட்டது