உள்ளம் – 36.2

வாரத்திற்கு ஒருநாள் கோவிலில் சந்திப்பு அப்படியே வீடுவரை சென்றிருந்தது. குமரன் இல்லாத போது வீட்டிற்கு வந்து சென்ற சொக்கநாதன் மகனைக் காணும் ஆசையில் அவனிருக்கும் போதும் வர ஆரம்பித்திருந்தார். அவரின் வருகை குமரனுக்கு அத்தனை உவப்பாய் இல்லையெனினும் தாய்க்காக பொறுத்துப் போனான். சொக்கநாதன் வரும் நேரங்களில் மலர்ந்த முகத்தோடு இருக்கும் சிந்துவைக் காண்கையில் சொக்கநாதனை சகித்துக் கொள்வது அவனுக்குப் பெரிதாய் தோன்றவில்லை. அதனாலே அவரைக் கண்டும் காணாதும் கடக்க ஆரம்பித்தான்.

முதலில் இங்கே வந்து மனைவியைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் சொக்கநாதன் அவ்வப்போது ஓரிரு நாட்கள் இங்கேயே தங்க ஆரம்பித்திருக்க, சுமதியின் புலம்பல்களும் சண்டைகளும் அடங்கிப் போயின. எங்கே தான் சண்டையிட்டால் கணவர் அங்கேயே தங்கிவிடுவாரோ என்ற பயம் அவரை வாயடைக்கச் செய்திருக்க, அவரது கத்தல்கள் முடிவிற்கு வந்தன. தங்கம்மாளின் பேச்சிற்கும் மதிப்பில்லாது போனது.

நாட்கள் செல்ல செல்ல வயது மூப்பின் காரணமாக தங்கம்மாளின் நடமாட்டம் குறையத் தொடங்க, பக்கவாதத்தில் ஒரு கையும் காலும் செயலிழந்து போய் மொத்தமாய் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டார். சொக்கநாதனின் செய்கையிலிருந்தக் கோபத்தை சுமதி மாமியாரின் மீது காண்பிக்கத் தொடங்கினார். இவரால்தான் தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்ற காழ்ப்புணர்ச்சியில் சுமதி தங்கம்மாளை சரிவர பார்த்துக் கொள்ளாது விட்டுவிட்டார்.

தங்கம்மாளால் பிறர் துணையில்லாது தனித்து செயல்பட முடியாது போக, வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கே பணியாளர்களை எதிர்பார்க்க வேண்டியதாகப் போயிற்று. நியூட்டனின் மூன்றாம் விதி போல அவரது கீழான செயல்களுக்கு எதிர்வினையாக வாழ்க்கை நரகமாய் நகரத் தொடங்கியது.

சுமதி கணவரின் துணையின்றி நிற்கதியில்லாது நின்று போனார். மகள் மீதிருந்தக் கோபத்தில் அவளைப் புறக்கணித்திருக்க, ஷெண்பாவும் தாயின் கோபம் குறையட்டும் என அவரிடம் பேசாது விட்டுவிட்டாள்‌. விக்ரமிற்கும் வேலை வேலையென அதன்பின்னே ஓடத் தொடங்க, சுமதிக்குத் தனிமை கொடுமையாக மாறத் தொடங்கியது.

ஒருவரும் இன்றி வீட்டில் தனியாக உணரத் தொடங்க, மனதில் அழுத்தம் உருவாகியது. நாளடைவில் அவருக்குப் பேச்சுத் துணைக்கு கூட ஆளின்றி போய்விட, மொத்தமாக ஒடுங்கிப் போனார். சிந்து இந்த வீட்டிலிருந்த அதே நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மூளை மனது இரண்டுமே வாழ்க்கையை வெறுத்துப் போனது.

சுமதியாக சொக்கநாதனிடம் பேசச் சென்றால் அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. தனது கடந்த கால நடவடிக்கையின் எதிர்வினை இப்போது பெண்ணை சுட, அதன் வெப்பம் தாக்காது சுருண்டு போனார். சிந்துவிற்கு தான் செய்த செயல் தனக்கே இப்போது நிகழ்கிறதே என மனம் தாமதமாய் புத்திக் கூற, உடைந்து போனார். கோபம், வீம்பு, வீராப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாது காற்றில் கலந்திருக்க, ஷெண்பாவிற்கு அழைத்துக் கதறிவிட்டார்.

தாயின் அழுகையில் அவளுக்குத் துடித்துப் போனது. அவர் செய்தது தவறு என்றாலும் சுமதி தாய் என்ற இடத்தில் எங்குமே தவறியதாய் நினைவில் இல்லை. சிறு வயதிலிருந்து மகனையும் மகளையும் கண்ணுக்குள் வைத்துத் தாங்கியவராயிற்றே. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடிவிட்டது. அவர் அழைத்துப் பேசிய அன்றே தாயைச் சென்று சந்தித்துப் பேசி அங்கே இரண்டு நாட்கள் தங்கினாள்.

தந்தையிடமும் தமையனிடமும் பேசி சரி செய்து அவர்களை சுமதியிடம் பேச வைத்துவிட்டே சென்றாள். விக்ரமிடம் தாயைப் பார்த்துக் கொள்ள அத்தனை முறை வற்புறுத்தி சென்றவள், தினமும் அவருக்கு அழைத்துப் பேசத் தொடங்கினாள். மகளின் பேச்சில், விக்ரமின் ஆதரவான வார்த்தைகளில் சுமதி மீண்டு வர ஆரம்பித்தார். முன்பு போல அவரது பேச்சுக்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை எனினும், இனி வரும் நாட்களாவது கணவனும் பிள்ளைகளும் முக்கியமென உணர்ந்து தன் வாயைப் பூட்டு போட்டுக் கொண்டார். அதனாலே நிறைய பிரச்சனைகளின் அடிநாதம் அடங்கிப் போனது.

விக்ரம் பண்ணையில் வேலை பார்க்கும் கணக்காளர் கணபதியின் மகள் பைரவியை காதல் திருமணம் செய்து கொண்டான். சொக்கநாதன் மகன் திருமணத்தை ஊர் மெச்சுமளவிற்கு செய்து முடித்திருந்தார். சிந்துவும் குமரனும் விக்ரம் திருமணத்தை முன்னின்று நடத்தியிருக்க, சொக்கநாதனுக்கு மனம் நிறைந்து போனது.

அவரவர் வாழ்க்கையைப் பார்த்து ஓட ஆரம்பித்து விட்டாலும் அவ்வப்போது சிறு சிறு சந்திப்புகள், விழாக்கள் என காலம் அவர்களை கட்டி வைத்திருந்தது. முன்பைவிட ஷெண்பா, விக்ரம், குமரனுக்கு இடையிலிருந்த பிணைப்பு இன்னுமே இறுகிப் போனது. ஒருவரை ஒருவர் எந்த இடத்திலுமே விட்டுக் கொடுக்காது தாங்கிக் கொண்டனர். ஆம், உண்மையில் தாங்கிக் கொண்டனர் சுக துக்கம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். சிந்து என்ற பெண்மணியின் அர்பணிப்பு அதில் அளப்பரியது. அவரைச் சுற்றித்தான் இந்த மூவரும் இப்போது இயங்கினர். மனோவும் திவாகரும் அதில் இணைந்த முக்கிய அங்கங்கள். அவர்களுக்கான கூட்டை நேசத்தால் நெய்து கொண்டனர்.

காலம் சாட்டையால் சுழற்றி அடித்து காயத்தைக் கொடுத்தது எல்லாம் பூர்வ ஜென்மம் என்பது போல சிந்துவின் வாழ்க்கையில் வசந்த காலம் வசந்தமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது. மூன்று பிள்ளைகளும் திருமணம் முடிந்து பேரன் பிள்ளைகளை அவருக்கு பரிசளித்திருக்க, பெரியவர் மகிழ்ந்து போனார். அவரது நேரம் ஜானு, சரண், ஆராத்தியாவுடன் நகர்ந்தது. சொக்கநாதனும் அதில் அடக்கம். இளமையில் தவறவிட்ட நேசக் கயிறை இருவருமே இறுக்கிப் பிடித்திருந்தனர். மூச்சு நிற்கும்வரை அதைவிடும் எண்ணம் இருவருக்குமே இல்லை.

வெறும் வார்த்தைக்காக அல்லாது சொக்கநாதன் செயலிலே தன் மனமாற்றத்தை தற்போதேல்லாம் காண்பிக்க ஆரம்பித்திருக்க, சிந்து அவரது அன்பில் திளைத்துப் போனார். காதல் செய்ய வயதில்லை என்பது போல அவரது செய்கைகள் இருந்தன. அறுபது வயதில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லையே. இன்னுமே வாழ வாழ்க்கை அவர்களுக்கு மிச்சமிருக்கிறது. காயம் கண்டாலும் அதற்குப் பின்னர் கண்டிப்பாக ஒரு சுக வாழ்வு பிரசவிக்கும். நம்பிக்கை என்ற அடிநாதத்தை மீண்டும் பற்றி உறவை வலுபடுத்தினார் சொக்கநாதன். நான்கு அறைக்குள் மட்டுமே கணவனின் அன்பை அனுபவித்துப் பழகிய சிந்துவுக்கு இந்த சொக்கன் புதிது. இந்த மனிதருக்கு இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது என எண்ணி ஆச்சரியம்டைந்த நாட்கள் ஏராளம்.

கஷ்டங்களை மட்டுமே பொதியாய் சுமந்த வாழ்க்கை இன்று அவருக்கு சந்தோஷத்தை வாரி வழங்குமளவு தன் மடையை மாற்றி செழிப்பான வாழ்வை கொடுத்திருக்க, சிந்துவுக்கு குறைகள் என எதுவும் இல்லாதவொரு நிறைவான வாழ்க்கை அவரை பரிமளித்தது.

மாலை வேலை முடிந்து மனோஹரி வீட்டிற்குள் நுழைய, சிந்துவும் சொக்கநாதனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு வாரங்கள் கழித்து சொக்கன் இங்கே வந்திருக்கிறார். இடையில் வேலை அவரை இழுத்துக் கொண்டது.

மாமனாரைப் பார்த்ததும் முகம் மலரப் புன்னகைத்து, “காலைல தான் நினைச்சேன் மாமா!” கேலி சிரிப்புடன் உரைத்தவள், கைப்பையை ஓரமாய் வைத்தாள். முகம் வேலையின் காரணமாக சோர்ந்து கிடந்தாலும், மாமனாரைக் கண்டதும் உதடுகள் சிரிப்பில் நெளிந்தன.

ஆரம்பத்தில் சொக்கநாதனைக் கண்டதும் மாமா என்ற மரியாதை வார்த்தையோடு நிறுத்திக் கொள்வாள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவரது வெகுளித்தனம் புரிந்து பெரியவரிடம் கேலி பேசத் தொடங்கியிருந்தாள். சொக்கநாதன் அவளின் பேச்சில் சிரிப்பார் அன்றி ஒரு வார்த்தைக் கூட கடுமையாய் உரைத்தது இல்ல. ஏன் மனோஹரி அவரைத் திட்டினால் கூட, அதை சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளுமளவிற்கு மருமகளிடம் அவரது நன்றிக்கடன் பெரிது. அதனாலே இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் வந்திருந்தது.

அவளுடைய வார்த்தைகள் புரியாத சொக்கன், “என்னமா?” என அப்பாவியாய் வினவினார். சிந்து அவளின் கேலிப் புரிந்து முறைத்தார். அவர் முறைப்பை புறக்கணித்தவள்,

“ப்ம்ச்… அதான் என் மாமனாருக்கு என் அத்தையைப் பார்க்காம ரெண்டு வாரம் எப்படி போச்சோன்னு நினைச்சேன். நீங்களே வந்துட்டீங்க!” என்று உதட்டிலேறிய சிரிப்புடன் கூறவும், “ச்சு… மனோ, போய் ட்ரெஸை மாத்திட்டு வா. நான் காஃபி போட்றேன்!” என சிந்து மருமகளை அதட்டினார்.

“ஏன் அத்தை, மாமா வந்தா மட்டும் ஒரிஜினல் மாமியாரா மாறிட்றீங்களே! என்னவாம்?” என அவரையும் விட்டு வைக்காது மனோ பேசிச் செல்ல, பெரியவர்கள் உதட்டில் புன்னகை பூத்தது.

error: Content is protected !!
Scroll to Top