உள்ளம் – 36.1

சில வருடங்களுக்குப் பிறகு,

“ஒரு இடத்துல ஓடாம நில்லு டி. அப்பாவை மாதிரியே சேட்டை. சொல் பேச்சே கேட்குறது இல்ல!” ஐந்து வயது மகளை அதட்டி உருட்டிய வண்ணம் அவளைக் குளிக்க வைத்து உடை மாற்றிக் கொண்டிருந்தாள் மனோஹரி.

“ம்மா… இந்த பட்டன் போட வேண்டாம்…” என கழுத்துக்கு கீழே முன்னிருந்த பொத்தானை அவிழ்த்தவளின் கையில் பட்டென ஒரு அடி வைத்தவள், “பிச்சுப் புடுவேன் ஜானு. இதெல்லாம் யார்கிட்டே இருந்து கத்துக்கிற. எல்லா சகவாச தோஷம்!” என முணுமுணுத்தவள், மகளின் உடையைச் சரி செய்தாள்.

“ம்மா… சரண் மட்டும் இப்படி பட்டனை அவுத்து விட்டுட்டு ஸ்கூலுக்கு வர்றான். நான் மட்டும் ஏன் போடணும்?” மகள் உதட்டைப் பிதுக்கி அழும் தோரணையில் கேட்டாள். நேற்று திவாகர் மகன் சரணிடம் சண்டையிட்டு மறுநாள் தானும் முதல் பொத்தானை போடாது வருவதாக எடுத்திருந்த சபதத்தை அன்னை தடுக்கிறாளே என முனுக்கென விழிகளில் நீர் கோர்த்தது சின்னவளுக்கு.

“நினைச்சேன் டி… அவன் பார்த்த வேலை தானா இது? வரட்டும் நாலு கொடுத்தாதான் சரி வரும். ராஸ்கல்!” என்று அதட்டும் குரலில் பேசியவள், “ஜானு, பட்டனை அவுத்துவிட்றது எல்லாம் நல்ல பழக்கம் கிடையாது. அவன்கிட்ட இருந்து எதையும் தூக்கிட்டு வராதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். முதல்ல அழறதை நிப்பாட்டு டி… கண்ணுலயே வாட்டர் டேங்க் வச்சிருப்பா!” என அவளின் விழிநீரை துடைத்து முகத்திற்கு முகப்பூச்சை பூசி பள்ளிக்குக் கிளம்ப ஆயத்தம் செய்தாள்.

“இந்தா ஜானு, பருப்பு சாதமும் உருளைக் கிழங்கும் பண்ணி இருக்கேன். எல்லாத்தையும் மிச்சம் வைக்காம சாப்பிடணும்!” என்ற சிந்து உணவு டப்பாவை கீழே வைக்க, “அம்மாச்சி…” என்ற கூச்சலுடன் திவாகரின் இருசக்கர வாகனத்திலிருந்து குதித்து வெளியே வந்தான் சரண்.

“பார்த்துப் போடா… கீழே விழுந்து வாரிக்காத!” என ஷெண்பா அதட்டலிட, அதையெல்லாம் காற்றில்விட்டவாறு துள்ளி குதித்து உள்ளே வந்தான்.

“வா டா… வா, உன்னைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். என்ன டா சொல்லி வச்சிருக்க அவகிட்ட?” என மனோ முறைக்க, “நான் ஒன்னும் சொல்லலையே அத்தை…” என இழுத்தவன் ஜானுவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.

“அம்மா… அவனைப் பாரு, சிரிக்கிறான்!” சின்னவள் சிணுங்கினாள். பின்னர் தனது குண்டு விழிகளால் அவனை முறைத்து வைத்தாள்.

“ஏய், அவன் சிரிச்சா உனக்கென்ன டி?” என்ற மனோ , “இங்க வா டா…” என அவனை இழுத்து சட்டையின் முதல் பொத்தானை மாட்டிவிட்டாள்.

“அத்த… நோ.. நோ!” என்றவன் அதை அவிழ்த்துவிட்டு சிந்துவின் பின்னே ஒளிந்து கொண்டான்.

“நீ கெட்டுப் போறதும் இல்லாம அவளுக்கும் சொல்லிக் கொடுக்குறீயா சரண். திஸ் இஸ் பேட் ஹேபிட் டா!” என்றாள் சின்னவனை முறைத்து. சிந்து சிரிப்புடன் அனைத்தையும் பார்த்திருந்தார்.

“பேட் ஹேபிட்னா மாமா மட்டும் ஏன் பட்டன் போட மாட்றாங்க அத்த?” இவன் கேட்கவும், வெளியே சென்றிருந்த குமரன் உள்ளே நுழைந்தான். அவன் சட்டையின் முதல் பொத்தான் அவிழ்ந்திருக்க, “காரணக்கர்த்தாவே, வாங்க! உங்க தங்கச்சி மகன் கேட்குற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்க!” என்றவள் கணவனை முறைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“அவ முறைக்கிற அளவுக்கு என்ன டா கேட்டீங்க?” எனக் குமரன் சரணை ஒரு கையிலும் ஜானுவை மறுகையிலும் தூக்கினான்.

“மாமா… நீங்க பர்ஸ்ட் பட்டன் போடலை இல்ல. இது பேட் ஹேபிட்டா?” சரண் கேட்க, “சே… சே அப்படியெல்லாம் இல்ல டா. வெயிலுக்கு வேர்க்குதுன்னு அவுத்து விட்டிருக்கேன். இதுல என்ன டா பேட் ஹேபிட்?” என வினவியவன் வாயிலுக்கு நடந்தான்.

“ஹம்ம்… உங்களை மாதிரி எங்களுக்கும் வேர்த்துச்சா, அதான் பட்டனை கழட்டி விட்டோம்…” என்று இருவரும் ஒரு சேர உரைக்க, குமரனிடம் பேச்சில்லை. ஒரு நொடி திகைத்தவன், “அடப்பாவிகளா! அவகிட்டே என்னை அடிவாங்காம விட மாட்டீங்க போல?” எனக் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அமர்த்தி அதை இயக்கினான்.

“மாமா…” சரண் சிணுங்க, “ப்பா…” என மகளும் ஒருபுறம் சிணுங்கினாள்.

“சரி… சரி. போகும்போது ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன். அமைதியா வாங்க டா!” எனக் குழந்தைகளை அழைத்துச் சென்று பனிக்கூழ் வாங்கிக் கொடுத்து பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான்.

மகன் உணவுண்ண அமர, “இந்த ரெண்டு பூரியை சாப்பிடு குமரா, சூடா சுட்டு எடுத்துட்டு வரேன்!” என்ற சிந்து அடுக்களைக்குள் நுழைந்தார். மனோஹரி மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.

“மனோ, பூரி சுட்டுட்டேன் பாரு. வந்து எடுத்துட்டு போய் அவனுக்கு ரெண்டு வச்சுட்டு நீயும் சாப்பிடு…” என்று சிந்து எட்டி குரல் கொடுக்க, “ஹம்ம்… வரேன் அத்தை…” என்றவள் புடவையின் மடிப்பை சரி செய்தவாறே பூரியை அவரிடமிருந்து வாங்கி குமரன் தட்டில் வைத்தாள்.

புடவை மறைக்காத இடை பளிச்சென கண்களை நிறைக்க சமையலறையில் ஒரு கண்ணை வைத்திருந்தவன் நறுக்கென்று மனைவியின் இடையில் கிள்ளி வைத்தான். ஒரு நொடி திடுக்கிட்டவள், “என்ன பண்றீங்க?” என அடிக்குரலில் இரைந்தவாறே உணவுண்ண அமர்ந்தாள்.

உதட்டிலேறிய சிரிப்புடன் உண்டுமுடித்து குமரன் சூளைக்குக் கிளம்ப, மனோ மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்றாள். சிந்து வேலையெல்லாம் முடித்துவிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்துவிட்டார்.

கடந்து சென்ற சில வருடங்களில் அனைவரின் வாழ்க்கையிலும் அத்தனை மாற்றங்கள் புகுந்திருந்தன. குமரன் சிந்து பெயரில் சொந்தமாக சூளை ஒன்றை ஆரம்பிக்க, அது இன்று பல கிளைகளைத் திருச்சியில் பரப்பியிருந்தது. அதற்கு முக்கியக் காரணம் குமரனின் தொழில் பக்தியும், அயராத உழைப்பும்தான். பத்து வருடங்கள் கற்றுக் கொண்ட தொழில் யுக்திகளையும் நெளிவு சுழிவுகளையும் அனுபவங்களையும் வைத்து தனக்கான தொழில் வட்டத்தை நன்றாய்ப் பெருக்கிக் கொண்டான். ஐந்து வருடங்களில் அவனின் வளர்ச்சி அதிகம் என்று எண்ணமளவிற்கு தொழிலை விரிவடைய வைத்திருந்தான்.

மனோஹரி கருவுற்ற இரண்டு மாதங்களிலே ஷெண்பாவும் தாய்மையடைந்திருக்க, ராதாமணி அவர்களைத் தனியே விடவில்லை. கணவரிடம் பேசி மகனையும் மருமகளையும் அருகே வைத்துப் பார்த்துக் கொண்டார்.

ரங்காவால் சட்டென்று அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்கள் செல்ல செல்ல உண்மையை உணர்ந்து, மகனின் தவற்றை மன்னிக்க முடியவில்லை எனினும், மறந்திருந்தார். காலம் காயத்தை ஆற்றியிருக்க, அவர்களின் உறவு சுமுகமாக நகர ஆரம்பித்தது. முன்பு போலான நெருக்கம் இல்லையெனினும் ஒதுக்கமும் காண்பிக்கவில்லை மனிதர். திவாகருக்குத் தந்தையின் இந்த மனமாற்றமே அத்தனை மகிழ்ச்சியை அளித்திருந்தது.

ஷெண்பாவிற்கு திவாகர் வீட்டில் பொருந்திப் போவது அத்தனை எளிதாய் இல்லை. ராதா ஷெண்பாவை நன்றாய் கவனித்துக் கொண்டாலும் அவ்வப்போது அவர்களது திருமணம் நடந்த விதத்தைக் குறையாய் கூறி காண்பித்தவாறே இருந்தார். இது இல்லையென்றால் வேறு எதாவது ஒரு சிறு விஷயத்திற்காக இருவருக்கும் இடையில் கசப்பு உருவானது.

தாயிற்கும் தாரத்திற்கும் இடையில் திவாகர்தான் விழி பிதுங்கிப் போனான். ஒருவரை விட்டுவிட்டு மற்றவருக்கு அவனால் பேச முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பிரச்சனை என்று வரும்போது அவன் மனோஹரியைத் துணைக்கு அழைக்க வேண்டியதாகிப் போனது. அவள் திவாகர் அளவிற்குத் திணறவெல்லாம் இல்லை. யார் மீது தவறோ அதை பாரபட்சமின்றி கூறிவிட, அன்றிலிருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையிலிருந்த சண்டைகள் குறையத் தொடங்கின. மனோவின் அப்பட்டமான குற்றச் சாட்டில் இருவருமே அதிகம் பட்டுவிட தங்களுக்கு இடையேயிருந்தப் பஞ்சாயத்துகளை திவாகர்வரை செல்லவிடாது அணை போட்டுத் தடுத்துவிட்டனர்.

பத்து வருடங்கள் கழித்தான சிந்து மற்றும் சொக்கனின் சந்திப்பு அத்தோடு நின்றுவிடவில்லை. சிந்து கணவராக வந்தால் அவரை ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்க, சொக்கநாதன் தயங்கவில்லை. பத்து வருட வாழ்க்கையில் அவர் இழந்தது ஏராளம். மனைவியை, அதைவிட ஆசையாய் பெற்ற மகனை உடன் வைத்து அவனுக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமே அவரை தன்னிச்சையாய் முடிவெடுக்க வைத்திருந்தது.

எத்தனை நாளைக்குத் தாய்க்குப் பயந்து சிந்துவைப் பார்க்காதிருப்பது என தங்கம்மாளின் பேச்சை புறக்கணித்து அதை மீறியிருந்தார் சொக்கன். சுமதிக்கு கணவரின் இந்த திடீர் செய்கையில் அதிர்ச்சி. அவர் மாமியாரிடம் அதை முறையிட, வீட்டில் பெரிதாய் பிரச்சனைகள் வெடித்தன. தங்கம்மாள் மகனைப் பேசியே ஆடி தீர்த்தார். உடலில் வலு இல்லாது போனாலும் அவரது பேச்சிற்கு குறையில்லாது போனது.

சொக்கநாதன் எதற்குமே அசையவில்லை. வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் சில காலங்களாவது சிந்துவிற்காக வாழ வேண்டுமென நேசம் கொண்ட நெஞ்சம் தவித்துப் போனது. அதனாலே தாயின் பேச்சை அசட்டை செய்தார். ஒரு கட்டத்தில் சுமதியும் தங்கமாளும் அவரிடம் பேசி சண்டையிட்டு ஓய்ந்து போயினர்.

பிரச்சனை பெரிதாக வெடிக்கும் சமயத்தில், “ம்மா… டெய்லி அவர் கூட சண்டை போட்டுட்டு இருக்க நீ. ஒரு நாள் அவர் கடுப்பாகி சிந்துமா கூடவே இருந்துடலாம்னு முடிவெடுக்கப் போறாரு. அப்புறம் நானும் அங்கேயே போய்டுவேன். நீயும் இந்தக் கிழவியும் மட்டும் இந்த வீட்ல சந்தோஷமா இருங்க!” என்று விக்ரம் கோபத்தில் கத்தவும், சுமதி வாயைடைத்துப் போனார். மகன் பேச்சு அவரது வயிற்றில் பயபந்தை உருளச் செய்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top