“கை வலிக்கும்ங்க, என்னை இறக்கி விடுங்க!” என்றாள் சுகமான அலுப்புடன்.
“உன்னை மட்டும் தூக்குனாதான் டி கை வலிக்கும். என் புள்ளையை சேர்த்து தூக்குனா, அது சுகமான சுமை டி!” என்றவன் உதடுகளில் கேலிச்சிரிப்பு ஏறின. எதைக் கூறினால் மனைவி கோபம் கொள்வாள் என அவனறிந்ததே.
“ஓஹோ… அப்போ எதுக்கு என்னைத் தூக்குனீங்க. விடுங்க முதல்ல!” என அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்தாள் மனோ.
கோபத்தில் தூரச் சென்று முதுக் காட்டி நின்றவள், “புள்ளையைத் தூக்குனா வலிக்காது. எங்களைத் தூக்குனா வலிக்குமோ?” என முணுமுணுத்தவளைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்து பின்னிருந்து அணைத்தவன், “என்னடி முனங்கீட்டு இருக்க. எதுனாலும் தைரியமா சொல்லு!” என்றான் நக்கலாய்.
தன் வயிற்றில் கோர்த்திருந்த கரத்தில் ஒரு அடி வைத்தவள், “எனக்கென்ன பயம். முதல்ல கையை எடுங்க... புள்ளைக்காகத் தூக்குனவரு இப்போ என்னை எதுக்காகக் கட்டிப் பிடிக்கணும்?” என்றாள் காரமாய்.
“ப்ம்ச்… இப்போ கூட என் மகளைத்தான் டி கட்டிப் பிடிச்சிருக்கேன்!” என வயிற்றைத் தொட்டு காண்பிக்கவும், “போயா… ஏதாவது சொல்லிடப் போறேன்!” என்றாள் கோபமாய். அதில் கணவனுக்கு சிரிப்பு பொங்கியது. கோபம் வந்ததும் மரியாதையைக் காற்றில் கலக்க விட்டிருந்தாள்.
“அடிப்பாவி… புருஷன் டி நானு!” என்றான் சன்ன சிரிப்பும் போலி ஆச்சர்யமுமாய். அவனைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டு மனோ வெளியே செல்ல, இவனிடம் இன்னுமே சிரிப்பு தொற்றிக் கொண்டது.
அத்தனை நிறைவாய் உணர்ந்தது மனது இந்தப் பெண்ணருகில் மட்டும். என்ன இருக்கிறதென ஆராயத் தோன்றவில்லை. மொத்தமாய் மனோஹரியை கொள்ளைக் கொள்ளையாய் லட்சம் முறை உள்ளம் காதல் செய்ததது. முகத்தில் சிரிப்புடனே வேலைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான் குமரன்.
திவாகர் மனோவிற்கு அழைத்துப் பேசினான். அவனது குரலில் தங்கையின் வாழ்க்கை மீதான கவலைக் கொட்டிக் கிடந்தது. அதை கோபமாய் வெளிப்படுத்தினான்.
“திவா, நீ இவ்வளோ கோபப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. எல்லாம் நல்லதுதானே டா நடந்திருக்கு. நீ என்னைப் பத்தி யோசிக்காம வேலையைப் பாரு!” என்றாள் தங்கை.
“மனோ, இனிமே எது செய்றதா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யணும். நீயா எதுவும் பண்ணீட்டு இருக்காத!” என்றான் கட்டுப்புடன். தன் வார்த்தைகளை தங்கை கேட்க மாட்டேன் என்கிறாளே என்ற ஆதங்கம் திவா குரலில் வெளிப்பட்டது.
“ப்ம்ச்… சரி. உன்கிட்ட சொல்லீட்டு செய்றேன்…” என்றாள் சலிப்பாய்.
“ஹம்ம்… சரி. உடம்பைப் பார்த்துக்கோ. நான் நைட் கால் பண்றேன்!” என அவன் அழைப்பைத் துண்டிக்கவும், ஷெண்பா அழைத்துவிட்டாள்.
“புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் வேற வேலையே இல்லையா?” போலி அலுப்பாய் மனோ வினவ,
“அண்ணி…” என அவள் முறைத்தாள்.
“சரி, சரி… எதுக்கு நீ கால் பண்ண?” இவள் அதட்டலாய்க் கேட்க, “என்னாச்சு அண்ணி. வீட்ல எதுவும் பிரச்சனையா? சாரி அண்ணி, குமரன் உங்களை அடிச்சது தப்புதான்!” என்றாள் வருத்தமாய். இவளுக்கு சிரிப்பு வந்தது. இருவரும் சமாதானமடைந்து அரைநாளே கடந்திருக்க, இவள் இப்போதுதான் ஆரம்பிக்கிறாள் என எண்ணிப் புன்னகைத்தாள்.
“ஆமா, தப்புன்னு உனக்குத் தெரியுது. உங்க அண்ணனுக்குத் தெரியலையே! என்ன பண்ண?” மனோ போலியான பெருமூச்சை வெளிவிட்டாள்.
“அண்ணி, குமரன் இந்த விஷயத்துல மட்டும் அப்படித்தான். யாரு பேச்சையும் கேட்க மாட்டான். அவனுக்குப் பதிலா நான் சாரி கேட்குறேன்!” என்றாள் பதறிய குரலில்.
“அதெல்லாம் வேணாம் ஷெண்பா. நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன். எனக்கு உங்க அண்ணனை இப்போலாம் பிடிக்கலை. பேசாம, என் அம்மா வீட்லயே இருந்துக்கலாம்னு இருக்கேன்!” என்று அசாரது மனோ பேசவும், ஷெண்பா திகைத்தாள்.
“ஐயோ! அண்ணி, இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இவ்வளோ பெரிய முடிவெடுக்குறீங்க. குமரன் வரட்டும், பொறுமையா பேசிக்கலாம்!” என்றாள் பதறிய குரலில். அவளது பேச்சு இவளுள் பயபந்தை உருளச் செய்திருந்தது.
“இல்ல ஷெண்பா, இதெல்லாம் ஒத்து வராது. அத்து விட்றலாம். உங்க அண்ணன் சாரின்னு கூடக் கேட்க மாட்டாரு. அவர் கூட நான் எதுக்கு வாழணும்!” இவள் பேசவும், அவளுக்கு விழிகள் கலங்கி கண்ணீர் வெளிவந்தது.
“அண்ணி, ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க. அண்ணன் ரொம்ப நல்லவன். ஏதோ கோபத்துல கை நீட்டிட்டான். இப்போ நீங்க ப்ரெக்னன்டா வேற இருக்கீங்க. அண்ணனை விட்டுப் பிரிஞ்சு போகாதீங்க!” என்றவளிடம் மெல்லிய தேம்பல் வெளிப்பட, இங்கே மனோ அதிர்ந்தாள்.
“ஏய் ஷெண்பா, எதுக்கு நீ அழற இப்போ… நான் சும்மா சொன்னேன் மா. முதல்ல அழறதை நிப்பாட்டு!” என்றாள் அதட்டலாய்.
“உண்மையா அண்ணி, குமரனை விட்டுட்டுப் போக மாட்டீங்க தானே?” என்றவளின் ஒருக்கரம் கண்ணீரைத் துடைத்துவிட, தேம்பினாள்.
“ஷ்… நான் உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ஷெண்பா!” என்றவள் காலையிலிருந்து நடந்த அனைத்தையும் கூறவும், சின்னவளுக்குப் பேச்சே வரவில்லை. மறுநொடி ஆர்ப்பாட்டமாய்க் கத்த ஆரம்பித்தாள்.
“அண்ணி… நீங்க சொல்றது உண்மையா? என்னால நம்பவே முடியலை. இத்தனை வருஷத்துல எங்க யாராலும் பண்ண முடியாததை நீங்கப் பண்ணீட்டிங்க. சந்தோஷத்துல பேச்சே வரலை. தேங்க் யூ சோ மச் அண்ணி, ஐ லவ் யூ… லைக் யூ. நீங்க மட்டும் நேர்ல இருந்தா ஹக் பண்ணி கிஸ் பண்ணி இருப்பேன்!” என அவள் துள்ளிக் குதிக்கவும் இவளுக்கு அப்படியொரு சிரிப்பு.
“யம்மா தாயே! நீ நேர்ல இல்லாதது நல்லதா போச்சு. உன்னோட இந்த தேங்க்ஸே எனக்குப் போதும்… போம்மா!” என்றாள் சிரிப்புடன்.
“அண்ணி… போங்க, உங்கக் கூடப் பேச மாட்டேன்!” என சிணுங்கலாய் உரைத்தவள், அலைபேசியிலே முத்தத்தைக் கொடுத்து அழைப்பைத் துண்டித்தாள்.
‘ஷப்பா… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம் போல. முடியலைடா குட்டி… உங்கப்பா பேமிலி ரொம்ப படுத்துறாங்க!’ என சின்ன சிரிப்புடன் குழந்தையைத் தடவிக் கொடுத்தாள் மனோ. இன்றைய நாளே சுகமாய் சென்றது.
மாலை ராதா வந்து மகளைப் பார்த்து விசாரித்து இனிப்பு, காரம் என அனைத்தும் வாங்கி வந்து கொடுத்துவிட்டுச் சென்றார். திவாகரும் ஷெண்பாவும் கூட வந்துவிட, வீடே கலகலவென்றிருந்தது.
ஷெண்பா மனோவை அண்ணி, அண்ணி எனச் சுற்றி வந்து கட்டியணைத்து முத்தமிட, இவள் திணறிப் போனாள். வீட்டிற்குக் கிளம்பும் வரையிலுமே அவளது அட்டகாசம் தாங்காது மனோ அயர்ந்துதான் போனாள்.
அனைவரும் விடை பெற உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்த மனோவிற்கு முகத்திலிருந்த புன்னகை வாடவேயில்லை. கையிலிருந்த நகப்பூச்சைக் கண்டவளுக்கு நீண்ட நாட்களாய் தான் அதை மாற்றவில்லை என எண்ணம் வர, நகப்பூச்சு வைத்திருந்தப் பெட்டியை வெளியே எடுத்தாள்.
சோண நிறத்தில் ஒரு நகப்பூச்சை எடுத்து காலுக்கிட்டு முடித்து கைகளுக்கும் வைக்க, கடைக்குச் சென்றிருந்த குமரன் வந்துவிட்டான். மதியம் நடந்த ஊடலை இன்னுமே மனோ பிடித்துக்கொண்டு கோப முகத்தை அவனை நோக்கி வீசினாள்.
சின்ன சிரிப்புடன் அவளை நோக்கி வந்தக் குமரன், “ஹக்கும்…” என நகப்பூச்சைப் பார்த்துத் தொண்டையைக் கணைத்தான்.
“என்ன?” நிமிர்ந்து அவனை முறைத்தவள், இரண்டு கைகளுக்கும் வைத்து முடித்து காய வைப்பதற்காக கரங்களை விரிக்க, அதில் கிடைத்த இடைவெளியில் மனைவினுள் புகுந்திருந்தான் கணவன்.
“என்ன பண்றீங்க நீங்க?” அவன் செயலை எதிர்பாராது திகைத்தவள் திணறலாய்க் கேட்க, “இந்த செட்டபுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் குறையா இருந்துச்சு டி! அதை மட்டும் வச்சுட்டா ஆல் பெர்பெக்ட்!” என அவளது தலையில் குமரன் அணைத்தவாறே மல்லிகையைச் சூட, மனோவின் கன்னம் சிவந்து போனது.
“எனக்கொன்னும் வேணாம். முதல்ல தள்ளுங்க!” என்று இவள் கூற, கணவன் அப்படியே அவளை அணைத்துக் கொண்டான். அவன் முகம் பதிந்ததும் உடல் கூசியவள், “நெயில் பாலிஷ் அழிஞ்சிடும். ஒழுங்கா தள்ளுங்க!” என்றாள் மிரட்டலாய்.
“அழிக்கிறதுக்கு தானே டி வைக்கிறது!” என்றவன் பேச்சின் திசையில் இவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
“இப்போ நகரப் போறீங்களா? இல்லையா?” என்று மனோ கோபமாய் உரைக்க, அதை சட்டை செய்யாதவன் தான் வைத்துவிட்ட மல்லிகையின் சுகந்தத்தை நுகரவும், இவளிடம் பேச்சில்லை.
“வேணாம்னு சொன்னேன். தள்ளுங்க!” முயன்று வரவழைத்தக் குரலில் திக்கித் திணறியவளைப் பார்த்து அமரிக்கையான புன்னகையை உதிர்த்தவன், “எனக்கு வேணுமே!” என்றான் செவியோரம் அடர்ந்தக் குரலில்.
“வே…” எனக் கூற வந்தவளின் வார்த்தை கணவனது உதட்டுக்குள் அமிழ்ந்திருந்தது. வேண்டாம் என்றவளை இரவு முழுவதும் நொடிக்கொரு முறை வேண்டுமென கூற வைத்திருந்தான் குமரன். அவனிடம் வெட்கி, கோபம் கொண்டு, சிணுங்கி இறுதியில் கணவனிடமே புக, குமரனும் அவளிடம் சரணாகதிதான். இருவருக்குமே நேசத்துடன் அழகான கூடல் அது.
அவளை அள்ளிக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட்டு, மென்மையாய் அணைத்துக் கொண்டான். “தேங்க்ஸ் டி…” என செவியோரம் கேட்ட குரலில் இவளுள் சிலிர்ப்பு.
“பரவாயில்லை!” பெருந்தன்மையாய்க் கூறியவளை இன்னுமே இழுத்துத் தன்னுடலோடு அணைத்தவன்,
“இன்னைக்கு இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் டி!” என்றான் விடாப்பிடியாக.
“என்ன?” மனோ அசிரத்தையாய்க் கேட்க, “எதுக்காக இதெல்லாம். ஏன் என்னைப் பிடிச்சது. இப்படி அடம்புடிச்சு கல்யாணம் பண்ண என்ன இருக்கு டி என்கிட்ட?” என ஆர்வமாய்க் கேட்டான். எத்தனையோ முறை குமரன் கேட்டும் அவளிடம் பதிலில்லை. எதையாவது கேலியாய்க் கூறி மழுப்பிவிடுவாள். இன்று பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு அவனிடம்.
“ப்ம்ச்… என்ன இருக்கு. ஹல்க் மாதிரி ஒரு உடம்பு. பார்க்க ஹம்ம் சுமாரான மூஞ்சி. வேறென்ன… நோ, பட் இருந்தாலும் ரொம்ப பிடிச்சதே! காரணத்தோடலாம் காதல் வராதுங்க மிஸ்டர் ஹல்க்!” என்று இழுத்துச் சின்ன சிரிப்புடன் கூறினாள். இப்போதும் கூட ஒழுங்காய் பதிலளிக்காதவளை முறைத்தான் குமரன்.
“போதும், என்னையும் என் புள்ளையும் ரொம்பப் பாடாய்ப்படுத்துறீங்க நீங்க. டயர்டா இருக்கு, தூங்க விடுங்க!” என்று மனோ மறுபுறம் திரும்பிப் படுக்க, இவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் உன்கிட்ட உண்மையை வாங்குறேன் டி!” என்றான் பல்லைக் கடித்து.
“ஹக்கும்… அந்த ஒருநாள் வரவே போறதில்லையாக்கும். பேசாம தூங்குங்க!” என அதட்டலிட்டவளின் கரம் தன் வயிற்றில் பதிந்த கையோடு தன்னுடயதைக் கோர்க்க, இருவருக்குமே புன்னகை பூத்தது. மென்மையாய் தங்களது குழந்தையும் அணைத்துக்கொண்டு இருவரும் தூங்கிப் போயினர்.