“சாரி மா… நான் ரொம்ப சுயநலவாதி மா. எனக்காகன்னு இவ்வளோ யோசிக்கிற உங்களுக்கு என்ன வேணும்னு ஒருநாள் கூட யோசிக்கலை மா. என்னோட விருப்பமும் கோபமும் மட்டும்தான் பெருசுன்னு இருந்துட்டேன். என்னை மன்னிச்சுடுங்க மா!” என உடைந்து போய்க் கரகரத்துப் போனக் குரலில் பேசிய குமரன் சிந்துவை இறுக அணைத்திருந்தான். அவர் மகனின் செயலை ஒரு நொடி எதிர்பாராது திகைத்தார்.
“டேய் குமரா… என்ன டா? இங்க பாரு, அம்மா முகத்தைப் பாரு!” என அவனைத் தன் முகம் காணச் செய்தவரைப் பார்த்தவனின் முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்திருக்க, விழிகளில் நீர்க் கோர்த்திருந்தன. அவனை அப்படிக் கண்ட சிந்துவின் உள்ளம் தவித்துப் போனது.
“என் மகன் சுயநலவாதி எல்லாம் இல்ல டா. அப்படி இருந்திருந்தா, நீ அதிகமா நேசிச்ச ஷெண்பா, விக்ரம், ஏன் சுகபோகமா வாழ சொத்துன்னு அத்தனையும் தூக்கிப் போட்டுட்டு வந்திருக்க மாட்ட டா. நீ என் மகன் டா, ஒருநாளும் தப்பு பண்ண மாட்ட குமரா. நீ எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் டா!” என்று கூறிய சிந்துவுக்கும் கண்கள் கலங்கின. மகனின் விழிநீரை முந்தானையைத் தூக்கித் துடைத்துவிட்டார். அவர் பேச்சில் குமரனின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னுமின்னும் வலித்தது. தன்னையே உலகமாய் எண்ணி வாழும் இந்தப் பெண்மணிக்கு நியாயம் செய்யவில்லையோ என துடித்துப் போனான். மனோவின் வார்த்தைகள் செவியில் மோதின. உள்ளம் கலங்கிப் போனான்.
“இல்ல மா… நீங்க என்ன சொன்னாலும் நான் செஞ்சது தப்பு மா. இப்பவும் என்னால அவரை ஏத்துக்க முடியாதுதான். ஆனால், உங்களுக்கு அவரைப் பிடிக்கும் தானே மா. எனக்காகன்னு பார்த்து உங்களோட தனிப்பட்ட முடிவை மாத்த வேணாம் மா. நீங்க… நீங்க அவர் கூட பேசணும், சேரணும்னு ஆசைப்பட்டா, இனிமேல் அதுக்கு தடையா நான் வர மாட்டேன் மா. எனக்காக நீங்க வாழ்ந்தது போதும், உங்களுக்காக வாழுங்க மா!” என்றான் உறுதியான குரலில். எப்படியாவது தாயை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குரலில் கொட்டிக் கிடந்தது. அவர் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான். இவனது கரங்கள் அவரது மடியிலிருந்தன.
சிந்து பெருமூச்சுடன் மகன் தலையைக் கலைத்தார். “குமரா, உனக்கடுத்து தான்டா எல்லாமே எனக்கு. புருஷனா இருந்தாலும் என் புள்ளை இடத்தை அவரால நிரப்ப முடியாது. எவ்வளோ கஷ்டம் வந்தாலும், எல்லா இடத்துலயும் எனக்காக வந்து நின்னு, பேசி, சண்டை போட்டு, இத்தனை நாள் என்னைப் பார்த்துக்கிட்ட மகனுக்கு வேண்டாதவங்க எனக்கும் வேணாம். இந்த பேச்சை விட்டுடு டா!” என்று அவர் உரைத்தாலும், மனதில் என்னவோ நேற்றைய நிகழ்வில் புதிதாய் நம்பிக்கைத் துளிர்த்திருந்தது. மீண்டும் சொக்கநாதனுடன் வாழ்க்கையைப் பகிராவிட்டாலும், இருக்கும் சொற்ப காலங்களில் அவருடன் பேச, தன் எண்ணங்களை பகிர ஆசை பிறந்தது. குமரனுக்குப் பிடிக்காது எனத் தெரிந்தும் ஆசை துளிர்விட்டது என்னவோ உண்மை. அதை எப்போதும் போல உள்ளக்கிடங்கில் பதுக்கிவிட்டார் பெண்மணி.
மெல்லிய புன்னகையுடன் தன்னையே பார்த்திருந்த தாயைக் கண்டவனுக்கு மனோஹரியின் கூற்றுதான் நினைவு வந்தது. தனக்காக எனப் பார்த்துத் தாயை எந்த வகையிலும் கட்டாயப்படுத்தக் கூடாது என எண்ணியவன், “ம்மா… ப்ளீஸ் மா. என்னால அவரை அக்செப்ட் பண்ணிக்க முடியாதுதான். ஆனால், உங்க விஷயத்துல இனிமே நான் எதையும் கட்டாயப்படுத்த மாட்டேன். உங்க விருப்பம்தான் முக்கியம். எனக்காகன்னு எதையும் நீங்க செய்யக் கூடாது!” என அவரது கைகளை தன் கரங்களுக்குள் பொதிந்தவனின் பார்வை தாயிடம் இறைஞ்சியது. நேற்றைய தன்னுடைய செயல் அவரை எந்தளவிற்கு வருத்தியிருக்கிறது என மகனால் புரிந்து கொள்ள முடிந்தது. இவனது முகம் கசங்கிப் போக,
லேசாய் விழிகளில் நீருடன் தன்னையே தவிப்பாய் நோக்கும் மகனைப் பார்த்த சிந்து, “குமாரா… விடு டா. எதையும் இப்படித்தான் நடக்கணும், அப்படித்தான் நடக்கணும்னு நம்ம முடிவெடுத்தா, கடவுள் வேற எதாவது ஒன்னை செய்வாராம். அது போலதான் இதுவும். இனிமே நான் இதுல செய்ய எதுவுமே இல்லை. அந்த மனுஷனுக்கு நான் தேவைன்னா அவர் வரட்டும். அப்போ என் முடிவை நான் மாத்திப்பேன். நீங்க ரெண்டு பேரும் இதைப் பத்தி பேசுறது இதுதான் கடைசி தடவை. என்னைக் கொண்டு உங்களுக்கு இடையில பிரச்சனை எதுவும் வரக்கூடாது!” என்று அவர் குரல் மிரட்டலாய் வெளிவர, மனோவின் விழியோரம் ஈரம் சுரக்க , மாறாய் உதட்டில் புன்னகை முகிழ்த்தது. மாமியாரையும் கணவனையும் பார்த்துப் மனதார புன்னகைத்தாள். இந்த மாற்றத்திற்காகத்தானே அவளின் அத்தனை மெனக்கெடல்களும். தான் கற்பனையாய் வரைந்த ஓவியத்தின் நிஜமான பிம்பம் கண்முன்னே பிரதிபிம்பமாய் நிற்க, அவளுக்கு மகிழ்ச்சி ததும்பி வழிந்தது. அவளது உள்ளம் கேட்டுவிட்டது.
குமரன் உதட்டில் ஆறுதலானப் புன்னகை பிறந்தது. தாயின் வார்த்தைகள் அவனுக்குள் ஒரு ஆசுவாசத்தைக் கொடுக்க, மனதின் அலைப்புறுதல்கள் எல்லாம் கரைந்திருந்தன. அவரை அன்பாய் பார்த்தான் மகன்.
“சாரி மா...” மீண்டுமொரு மனதார மன்னிப்பை வேண்டினான் குமரன். அவனது நெற்றியில் முத்தமிட்ட சிந்து, “என் பையன் ரொம்ப யோசிக்கிறான். அந்த மூளைக்குக் கொஞ்சம் ஓய்வு கொடு டா!” என்றார் முகம் கொள்ளா சிரிப்புடன். அவரது பேச்சில் அவனது பார்வை அத்தனை ஆசையாய் நேசத்துடன் மனோஹரியைத் தொட்டு மீண்டன. இதோ இந்தப் பெண்தானே தன் தாயின் சிரிப்பிற்குக் காரணம் என எண்ணவும், மனதை நிறைத்தாள் மனோஹரி.
இத்தனை நாட்கள் மனைவி, தன்னை நேசித்து அத்தனை கஷ்டங்களைக் கடந்து தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்தளித்தவள் என்ற முறையில் அவளின் மீது அத்தனை பிரியமும் ஈர்ப்பும் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், இந்நொடி அவள் மீதான நேசம் மனதெங்கும் வியாபிக்க, கனிந்த அகத்துடன் அவளைப் பார்த்தான். ஏன் இந்தப் பெண் தனக்காகவென இத்தனை மெனக்கெடுகிறாள் என இக்கணம் கூட அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் மனம் சுகமாய் அலுத்துக் கொண்டது அவளது அன்பில். மனைவி வசீகரிக்க மட்டுமல்ல, நேசத்தில் அவனைத் திணறச் செய்தாள்.
‘வசியக்காரீ!’ மனதில் நினைத்துப் புன்னகைத்துக் கொண்டவனில் மனோஹரி நிறைந்து கிடந்தாள், வாழ்க்கை முழுதும் நிறைந்து கிடப்பாள் என்பதும் திண்ணம்.
“கையை விட்றா குமரா. இப்படியே உட்கார்ந்திருந்தா கதையாகுமா? புள்ளைத்தாச்சி பசியோட இருக்கா. நான் போய் மதியத்துக்கு சமைக்கிறேன்!” என சிந்து போலியாய் அலுத்துக் கொள்ளவும், மகனிடம் மென்முறைப்பு.
“போடா… போ. வேலையைப் பாரு டா!” என அவர் சமையலறை நோக்கிச் செல்லவும், மனைவியினருகே சென்றான் குமரன்.
“வேலை இல்லையா உங்களுக்கு… கிளம்புங்க!” அவனருகே வருவதைப் பார்த்து மனோஹரி அதட்டவும், அவளைப் பிடித்திழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தான் கணவன்.
“என்ன… என்னங்க? என்ன வேணும்?” அவள் முறைப்பாய் வினவ, மனைவியை அள்ளி அணைத்துக் கொண்டவன் அவள் முகம் முழுவதும் அத்தனை லட்சம் முத்தங்களை இட்டான். ஒவ்வொரு முறை உதடுகள் மனோவுக்குள் குவிந்து குவிந்து விரிய, அவளுக்குள் ஆயிரம் பூக்கள் பூத்தன.
ஒவ்வொரு முத்தத்திற்கும் இடையிலும், “வசியக்காரி, மாயக்காரி. ராட்சசி! படுத்துற டி மனுஷனை!” என சுகமான புலம்பல்களும் முத்தச் சத்தங்களும் தான் பெண்ணை அடைய, மனைவியை தன்னுள் நிறைத்தான் குமரன்.
அவனது செயலில் மனோஹரிக்கு வெட்கம் படர்ந்தது. “ஏங்க…” என சிணுங்கலாய் உரைத்த உதட்டில் அழுந்த முத்தமிட்டான். மனைவியை பிரியும் எண்ணமே இல்லாதது போல அவளைத் தன்னுயரத்திற்குத் தூக்கி இறுக்கி அணைத்தான் குமரன். இருவருக்குள்ளும் இடைவெளி சுழியமானது.
மனோவும் ஆசையாய் அவனை அணைத்துக் கொண்டாள். இருவருக்குமே அந்நொடி தித்திப்பிலிருந்து மீள மனதில்லை போல. அவள்தான் முதலில் சுதாரித்தாள்.