உங்க விஷயத்துல உங்களோட அப்பா இப்படித்தான் இருக்கணும்னு, இருப்பார்னு நீங்களா ஒரு கற்பனையைப் பண்ணிக்கிட்டீங்க. அந்தக் கற்பனைக்கு ஏத்த மாதிரி அவர் இல்லைன்ற ஏமாற்றம் உங்களுக்குள்ள கோபமா உருமாறியிருக்கு. ஏன், கடைசிவரை நீங்க இப்படியே இருந்துடலாம். ஆனால், உங்கம்மாவை கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா?
என்னதான் எத்தனை பேர் சுத்தி இருந்தாலும் அவங்க தனிமையை உணர்ந்துட்டுதான் இருக்காங்க. உங்ககிட்ட அவங்களால ஷேர் பண்ண முடியாது. ஏன்னா, நீங்க அவங்களோட பையன். பட், என்னால அவங்களைப் புரிஞ்சுக்க முடிஞ்சதுங்க.
உங்களுக்காக உங்களுக்காகன்னு எல்லாத்தையும் விட்டுட்டு பத்து வருஷமா தனியா இருக்க உங்கம்மாவைப் பத்தி பொறுமையா யோசிச்சு பாருங்க. உங்கம்மாவும் உங்களை மாதிரி மாமா வேணாம்னு நினைச்சா, அது வேறங்க. பட், நீங்க தான் இப்போ அவங்க வாழ்க்கையில உங்கப்பா வேணாம்னு உங்களோட முடிவை திணிக்கப் பார்க்குறீங்க. அது உங்களுக்குப் புரியுதா?
இப்போ கூட நீங்க வேணாம்னு சொல்லவும், அத்தை மாமாவை வேணாம்னு சொல்ல ஒரு நொடி யோசிக்க மாட்டாங்க. பிகாஸ், ஷி லவ்ஸ் யூ மோர் தன் ஆல். அவங்க உலகமே நீங்தான். நான் ஒவ்வொரு முறை அவங்க கிட்டே பேசும்போது, ‘இதுக்குப்புறம் எனக்கென்ன மா. என் பையன் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்’னு சொல்லுவாங்க. இனிமேலும் அதான் சொல்லுவாங்க.
உங்களையே நேசிக்கிற உங்க அம்மாவுக்காக உங்கக் கோபத்தை கொஞ்சம் தள்ளி வைக்கிறது எனக்குத் தப்பா தெரியலை.
தப்பு செய்யாத மனுஷங்கன்னு இந்த உலகத்துல யாருமே இல்லங்க! ஏன் நீங்க இதுவரைக்கும் எந்தத் தப்பும் செய்யலையா? அவங்கவங்க சூழ்நிலைதான் காரணம். சொக்கநாதன் மாமா மாதிரி இருக்க எத்தனையோ பேர் இந்த உலகத்துல வாழலையா? அவங்களுக்கு குடும்பம் இல்லையா? உங்கப்பாவோட குணம் இதுதான்னு உங்களுக்கு நீங்கப் புரிய வைக்க முயற்சி செஞ்சீங்கன்னா, நான் சொல்றது எதுவும் தப்பா தோணாது உங்களுக்கு. அவர் செஞ்ச தப்பை நான் நியாயப்படுத்தலைங்க. என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குப் புரிய வைக்கிறேன்…” என்றவள் பேச்சில் குமரனிடம் அத்தனை அமைதி.
“அடுத்த நிமிஷம் உயிரோட இருப்போமான்னுத் தெரியலை. ஒருவேளை உங்கப்பாவுக்கு எதுவும் ஆனப்பின்னே, அவர் கூடப் பேசியிருக்கலாம்னு உங்கம்மா வருத்தப் படலாம். ஏன், நீங்களே கூட காலம் கடந்து யோசிக்கலாம். இதெல்லாம் நம்ம கையில இல்லைங்க. வாழ்க்கை சில முடிவுகளை நம்ம விருப்பம் இல்லைன்னாலும், அதுவா திணுச்சுடும். அதை ஏத்துட்டு காலத்தோட ஓடப் பழகணும். கோ வித் த ப்ளோதான். பிளான் பண்ண மாதிரி வாழ வாழ்க்கை ஒன்னும் பிராஜெக்ட் இல்ல. உயிரும், உணர்வும் நிரம்பிய மனுஷங்க நம்மளை சுத்தி இருக்காங்க. கொஞ்சம் நிமிர்ந்து அவங்களை பாருங்க, அவங்களோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாருங்க.
மறப்போம், மன்னிப்போம் எல்லாம் வேணாம். உங்கப்பாவை நீங்க பார்க்க வேணாம், பேச வேணாம், மன்னிக்க வேணாம், ஏன் அவர் நிழலைக் கூடத் தொட வேணாம். ஒரு பொண்ணா உங்கம்மாவோட உணர்வுகளுக்கு மதிப்பைக் கொடுங்க. அதுவே பெரிய விஷயம்… ரொம்ப இல்ல, ஒரு ஐஞ்சு நிமிஷம் அத்தைகிட்ட உட்கார்ந்து இதைப் பத்தி பேசுங்க. அவங்க என்ன சொல்றாங்கன்றதை வச்சு உங்களோட முடிவை மறுபரிசீலனை பண்ணலாம்!” என்ற மனோ, “போதும், இதுக்கும் மேல இதைப்பத்தி பேச நான் விரும்பலை. நமக்குள்ள இதனால சண்டை வேணாம். விட்டுடுங்க!” என்றவள் அவனிடமிருந்து பிரிய, குமரன் மனம் குழம்பியக் குட்டையாகியிருந்தது. வேண்டுமா? வேண்டாமா? என மாற்றி மாற்றி மனதும் மூளையும் கேள்வி கேட்டு அவனை ஒரு வழியாக்கியிருந்தன.
தன்னை வெறித்துப் பார்த்தவனை நோக்கிப் புன்னகைத்தவள், அவனே குழம்பித் தெளிவாகட்டும் என விட்டுவிட்டாள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் குளிச்சுட்டு வரேன். டாக்டர் கிட்ட போய்ட்டு வரலாம்!” என்ற மனோஹரி குளித்து முடித்து தயாராகி வர, இருவரும் மருத்துவமனைக்குக் கிளம்பினர்.
“கங்கிராஜூலேஷன் டூ யூ, உங்க வொய்ப் ப்ரெக்னன்டா இருக்காங்க. வாழ்த்துக்கள் மனோ!” என மருத்துவர் கூறிப் புன்னகைக்க, இவளது உதட்டில் பூரிப்புடன் சிரிப்பு மலர்ந்தது.
குமரன் தலையை அசைத்து கேட்டவனுக்கும் முகத்தில் மென்னகை படர்ந்தது. மனதிலும் ஆசுவாசம் பிறந்தது. தங்களது தாய்மையை எண்ணி இருவரும் அகமகிழ்ந்து போயினர். குமரனுக்கு வார்த்தையே இல்லை. தான் தந்தையாகப் போகிறோம் என்ற செய்தி உறுதியானதில், என்றுமில்லாது அத்தனை மலர்வான புன்னகை பிறந்தது. மேலும் சில நிமிடங்கள் பேசிய மருத்துவர், சத்து மாத்திரைகளைக் கொடுத்தனுப்பி வைத்தார்.
ராதா இரண்டு மூன்று முறை அழைத்துக்கொண்டே இருக்க, அழைப்பை ஏற்ற மனோ, “ம்மா… டாக்டர் கன்பார்ம் பண்ணிட்டாங்க மா!” என்று கூறவும், அவருக்கும் சந்தோஷம் தாளவில்லை.
“சரி டி, பைக்லதானே போனீங்க. பார்த்து பத்திரமா வீட்டுக்குப் போங்க. சாயங்காலம் நான் அங்க வரேன். நீ அலையாத!” என மகிழ்ச்சி ததும்ப உரைத்து அவர் அழைப்பைத் துண்டிக்க, இவர்கள் நேரே வீட்டிற்குச் சென்றனர்.
மனோஹரி உள்ளே நுழைய, சிந்து அவளுக்காகத்தான் காத்திருந்தார். தன்னுடைய முகத்தை எதிர்பார்ப்புடன் நோக்கியவரைப் பார்த்து, “டாக்டர் கன்பார்ம் பண்ணிட்டாங்க அத்தை!” என சிரிப்புடன் கூறி மெலிதாய் வெட்கப்பட்டாள் பெண்.
“ரொம்ப சந்தோஷம் மனோ மா. வா, வந்து இங்க உட்காரு!” என மருமகளின் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமர வைத்தார் சிந்து. குமரன் அவர்களைக் கவனித்தவாறே அறைக்குள் சென்றுவிட்டான்.
“டாக்டர் என்ன சொன்னாங்க? மாத்திரை மருந்து எதுவும் கொடுத்தாங்களா?” என அவர் வினவ, மருத்துவரின் பரிந்துரையை எல்லாம் மாமியாரிடம் ஒப்பித்தாள் மனோ.
“சரி மனோ, காலைல சாப்ட்டது தானே. இப்போ மதியம் ஆகப் போகுது. நான் போய் உனக்கு குடிக்க எதாவதுகொண்டு வரேன்!” என சிந்து நகரப் போக, அவரது கையைப் பிடித்து அமர்த்தினாள்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் அத்தை. இப்போ நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லுங்க… நேத்து நடந்ததை அப்படியே மறந்துட்டீங்க போல?” என வினவ, “ச்சு… என்ன மனோ. இப்போ எதுக்கு அந்தப் பேச்சு. விடுமா!” என்றவருக்கு அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்ற பாவனை முகத்தில்.
“என்ன என்ன விடும்மா. அப்படியெல்லாம் விட முடியாது அத்தை. இப்போவே பேசி ஒரு முடிவை எடுக்குறோம்!” என்று அழுத்தமாய்க் கூறியவள், “உங்களுக்கு சொக்கநாதன் மாமா கூட சேரணும்னு ஆசை இல்லையா? அவர் வேணாமா?” என வினவினாள். சிந்துவிடம் பதிலில்லை. அவளை வெறுமையாகப் பார்த்தார்.
“என்ன பார்க்குறீங்க அத்தை. நான் உங்களுக்காகத்தான் இவ்வளோ கஷ்டப்படுறேன். உங்களோட மனசுல இருக்கதை மட்டும் சொல்லுங்க, புள்ளைக்காகப் பார்க்குறேன், புடலங்கக்காகப் பார்க்குறேன்ற பேச்சே வேணாம். உங்க விருப்பம் முக்கியம்!” என்று அழுத்திக் கூறினாள்.
“அட மனோ மா, ஏன் இப்படி பேசுற. நான் முன்னமே சொன்னது மாதிரிதான். என் காலம் முடிஞ்சது. என் வாழ்க்கையே இனிமே என் பையனோட சந்தோஷம்தான். அவனுக்கு இல்லாதது எதுவும் என்கிட்ட இல்லை. அவனுக்காகத்தான் நான் இருக்கேன். அதனால அவனுக்கு வேணாம்னா எனக்கும் வேணாம். அது எவ்வளோ பெரிய விஷயமா இருந்தாலும்!”
“அதுல மாமாவும் அடக்கமா அத்தை? அப்போ அவரைப் பார்த்து நீங்கப் பேசுனது, அழுதது எல்லாம் சும்மாவா? நான் கூட நிஜம்னு நம்பிட்டேன்!” என்றாள் எள்ளலாய். அவரிடம் பதிலில்லை.
“அத்தை, நீங்க என்ன நினைக்குறீங்க? கல்யாணமாகி குழந்தை பிறந்ததும், பொம்பளைங்க வாழ்க்கையை புள்ளைகளுக்காக அர்பணிக்கணும்னா? அப்படியொன்னும் கட்டாயம் எதுவும் இல்லையே. குழந்தைங்க உங்களோட ஒரு பார்ட் ஆஃப் லைப் மட்டும்தான். முழு வாழ்க்கையும் கிடையாது. அவங்க பெருசா வளர்ந்து கல்யாணம் முடிஞ்சுப் போனப் பிறகும் உங்களுக்கான வாழ்க்கை மிச்சம் இருக்கு. அறுபதில்லை, எம்பது, நூறு வயசானாலும் உங்க வாழ்க்கையில எல்லா முடிவையும் எடுக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கு. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க!” மனோஹரி பேசப் பேச, சிந்து அமைதியாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“நானும் என் புள்ளையும் அந்த வீட்ல இருந்து வெளியேறும்போது அவனுக்கு வெறும் பதினேழு வயசுதான். அவனை நம்பிதான் நான் வெளிய வந்தேன் மனோ. இன்னைக்கு வரைக்கும் அந்த நம்பிக்கையை அவன் உடைக்கலை. இனிமேலும் உடைக்க மாட்டான். அந்த வீட்ல ஒவ்வொரு தடவை சண்டை வரும்போது எனக்குன்னு யாரும் இல்லையேன்னு நானா போராடி போராடி ஓஞ்சுப் போயிருக்கேன். அப்போதான் இதுவரைக்கும் என்ன நடக்குதுன்னே புரியாம இருந்த என் பையன் எனக்காக எதிர்த்துப் பேசுனான். அத்தனை நாள் காயம்பட்ட மனசுக்கு அது அவ்வளோ இதமா இருந்துச்சு. சொத்து, சுகம், பணம் ஏன் ஷெண்பா, விக்ரமைக் கூட எனக்காகன்னு தூக்கிப் போட்டவன் எம்மகன். எவ்வளோவோ கஷ்டப்பட்டப்போ கூட பூராத்தையும் அவன் தலையில் தூக்கி சுமந்தவன். இனிமேலும் எந்த வித முக சுணக்கமும் இல்லாம என்னை சுமப்பான் அவன். நான் வேலைக்குப் போறேன், நீ படின்னு சொன்னேன். அப்போ கூட குமரன் எனனை எங்கேயும் அனுப்பாம, அவனேதான் பார்த்துக்கிட்டான். இன்னைக்கு வரைக்கும் எந்த ஒரு விஷயத்துக்காகவும் எங்கேயும் என்னை நிக்கவிடலை.
அப்படிப்பட்டவனுக்காக இல்லாம யாருக்காக என்னை வாழ சொல்ற மனோ? ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்புள்ளை உசத்திதான். எனக்கு அவரைப் பிடிக்கும்தான், இல்லைன்னு சொல்லலை. ஏன் இந்த பத்து வருஷமா அந்த மனுஷன் இல்லாம வாழலையா? அதே மாதிரி இப்பவும் அவரில்லைன்னு நினைச்சுட்டு என் மிச்ச வாழ்க்கையை ஓட்டிடுவேன் மனோ. என்னைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. என்னால உங்களுக்கு இடையில எந்த சண்டையும் வரக்கூடாது. நீங்க நல்லா வாழ்ந்தாலே, அதுவே எனக்குப் போதும் மா!” என்றவர் மனதிலிருந்ததை அப்படியே உரைத்திருக்க, அனைத்தையும் கேட்ட குமரன் விழிகளிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கன்னத்தை தொட்டது. எதுவும் பேசாது விறுவிறுவெ எழுந்து வெளியே வந்தவன், சிந்துவினருகே சென்று அவரை இறுக அணைத்திருந்தான்.
“சாரி மா…” என்றவனின் வார்த்தையோடு விழிநீரும் தாயை நனைக்க, குமரன் அக்கணம் உடைந்திருந்தான்.