உள்ளம் – 34.3

அனல் பார்வை பாரத்தான்.

“ஏன் டி நேத்து நான் போக வேணாம்னு சொல்லியும் இங்க வந்த?” எனக் கேட்டவன் குரலில் அத்தனை காரம். இரவெல்லாம் அவனுடைய தவிப்பை அவன் மட்டுமே அறிவான். இந்தப் பெண்ணிற்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை போல என விம்மித் தவித்த மனதுடன் கடுப்பாய்க் கேட்டான்.

“ஆமா, இவர் கை நீட்டி அடிப்பாரு. நாங்க அங்கேயே அமைதியா இருக்கணுமா?” மனோ பல்லைக் கடித்தாள்.

“நீ செஞ்ச காரியத்துக்கு அடிக்காம கொஞ்சவா டி முடியும்?” வார்த்தைகள் சூடாய் வந்தன.

“என்ன என்ன செஞ்சேன் நான்? உங்கப்பாவை உங்க அம்மாவோட சேர்த்து வச்சேன். அதுல தப்பு இருக்கதா எனக்குத் தெரியலை!” என்றவளின் குரலில் அத்தனைக் கோபம். தன்னுடைய செயல் எந்த வகையிலும் தவறில்லை என்பது போல நின்றிருந்தாள்.

“மறுபடியும் மறுபடியும் அந்தாளை அப்பான்னு சொல்லாத டி. வெறியாகுது!” என குமரன் சீற்றத்துடன் கூறினான்.

“ப்ம்ச்… நான் நேத்து சொன்னதுதான்ங்க. நீங்க ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் அவர் உங்கப்பா இல்லைன்னு ஆகாது!” என்றாள் இவள் எரிச்சலாய்.

“எதுவா இருந்தாலும் அவரை மறுபடியும் எங்க வாழ்க்கைக்குள்ள வர வைக்கிற எண்ணம் எனக்கில்லை மனோ!” என்று குமரன் உறுதியாய் உரைத்தான்.

“எங்க வாழ்க்கைன்னு நீங்க எதை சொல்றீங்க… அத்தையும் சேர்த்தா? உங்களுக்குத்தான் பொண்டாட்டி நான் ஒருத்தி இருக்கேன். இதுதான் நம்ம வாழ்க்கை, அது அத்தையோட வாழ்க்கை. அவங்க விருப்பமும் முடிவும் தான் முக்கியம். அவங்க மாமாவை வேணாம்னு சொன்னா, அவர் வேணாம். ஆனால், அத்தைக்கு மாமாவோட மறுபடியும் பேசணும், சேரணும்னு விரும்புறாங்க!” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

அவளை உருத்து விழித்தக் குமரன், “இப்போ என்ன சொல்ல வர மனோ, அந்தாள் செஞ்சது எல்லாத்தையும் மறந்து மன்னிச்சு அவரை ஏத்துக்கணும். அப்படித்தானே?” எனக் கேட்டவன் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெறித்தது.

“மறப்போம் மன்னிப்போம்னு வெறும் ரெண்டு வார்த்தையில நீ சொல்லிடுவ டி. பத்து வருஷம் வாழ்ந்த எங்களுக்குத்தான் தெரியும்… எனக்கு அவர் நல்ல அப்பாவா இல்லைன்னு நான் என்னைக்கும் கவலைப்பட்டது இல்லை டி. கட்டுன பொண்டாட்டிக்கு ஒன்னுன்னும் போது கூட அவருக்குத் துடிக்கலை இல்ல. எப்பேர்ப்பட்ட கோழையா இருந்தாலும், பொண்டாட்டிக்கு எதுவும்னா முன்னாடி வந்து நின்னு சண்டை
போடுவாங்க. அப்படி இருக்கும்போது எங்க அம்மாவுக்காக ஒரு வார்த்தைக் கூடப் பேசாத இந்த மாதிரி கோழைக் கூட சுயமரியாதை இழந்து என் அம்மாவுக்கு ஒரு வாழ்க்கை தேவையில்லை மனோ!” என்றவன் வார்த்தைகள் கோபத்தில் கனன்றன.

“அவர் செஞ்ச தப்பை மறந்துடுங்க, மன்னிச்சுடுங்கன்னு நான் சொல்லலை. சொக்கநாதன் மாமா செஞ்சது ரொம்ப பெரிய தப்புதான். உங்க நிலைமைல இருந்தா, நானும் உங்களை மாதிரிதான் ரியாக்ட் பண்ணியிருப்பேன். உங்களோட வலியும் வேதனையும் எனக்குப் புரியாம இல்லை. அத்தையோட வலி புரிஞ்சனாலதான் இந்த முடிவை நான் எடுத்தேன். உங்களுக்கு அப்பா வேணாம்னா, அவர் கூடப் பேசாதீங்க. ஆனால், உங்கம்மாவைப் பேசக் கூடாதுன்னு நீங்க சொல்லக் கூடாது. அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை!” மனோஹரி தன் பிடியிலே நிற்க, அவளை வெற்றுப் பார்வை பார்த்தான் குமரன். பத்து வருடங்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் வலியின் சாயல் அவன் முகத்தில் படர்ந்தது.

தங்க இடமின்றி, மூன்று வேளை உணவு கிடைக்காது எத்தனை போராட்டங்கள், வலிகள், வேதனைகள். அதைவிட தன் தாயைப் பற்றி எத்தனை அவதூரான பேச்சுக்கள். இது அனைத்திற்கும் சொக்கநாதன் என்ற மனிதர் மட்டும்தானே காரணம். காதலித்து கரம் பிடிக்கத் தெரிந்தவருக்கு, அந்த மனைவியை பாதுகாக்கக் தெரியவில்லையே. இப்படி கோழையாய் இருக்கும் மனிதருக்கு எதற்கு மனைவி என்ற சீற்றம் அவனிடம்.

பத்து வருடங்கள் என்பது வெறும் வார்த்தையல்ல, அவர்கள் வேதனையின் சுவடும், முள்பாதைகளும்
தானே. குமரனின் இளமைக்காலம் இதில் சிதைந்து, அவனது வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றனர். அப்படி இருக்கையில் மீண்டும் அந்த மனிதரின் நிழல் தங்கள் வாழ்க்கையில் வேண்டாம் என ஒரு நொடி கூட யோசிக்காது முடிவெடுத்திருந்தான் குமரன்.

“மனோ, உனக்கு இந்த ஜென்மத்துல புரியாது. அப்பா, அம்மாவோட சந்தோஷமா வாழ்ந்த உனக்கு எங்க வாழ்க்கையைப் பத்தி புரிஞ்சுக்க முடியாது!” என்றவனின் குரல் தாயை நினைத்து, அவர் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை நினைத்து கலங்கிப் போக, இங்கே மனோவிற்குத் துடித்துப் போனது.

“ப்ம்ச்… என்னங்க!” என அவனது கையை இவள் பிடிக்க, அதை உதறியவன், “ஏன் இப்படி இருக்கீங்கன்னு எத்தனை தடவை கேட்டிருக்க நீ… நான் இப்படியானதுக்கு அந்த மனுஷன் தான்டி காரணம். நான், இந்தக் குமரன், இப்போ உன் முன்னாடி நான் இப்படி இருக்கதுக்கு அவர்
மட்டும்தான்டி காரணம்!” என்றவன் குரலில் வேதனை ததும்பியிருக்க, இதற்கு மேலும் பேச எதுவுமில்லை என்பது போல அவன் நகரப் பார்க்க, மனோ முன்னே மறித்தது போல நின்றாள்.

“வழியை விடு மனோ!” கோபமாய்ப் பல்லைக் கடித்தவனின் கரத்தை பிடித்திழுத்து வந்து கட்டிலில் அமர வைத்தவள் நின்று கொண்டே அவனை வயிற்றோடு இறுக அணைத்தாள். குமரன் கைகள் மனைவியைத் தொடக் கூட விழையவில்லை. இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

ஒரு பெருமூச்சை வெளிவிட்டாள், “அத்தை நடந்ததை எல்லாம் சொல்லும்போது அது எனக்கு வெறும் கதை. ஆனால், அதெல்லாம் உங்க வாழ்க்கையில நீங்கப்பட்ட கஷ்டம்னு தெரிஞ்சப்போ, அவ்வளோ வேதனையா இருந்துச்சு எனக்கு. இன்னுமே அத்தை அந்தக் கஷ்டத்துலதான் இருக்காங்க. அவங்களை அதுல இருந்து மீட்கத்தான் போராடுறேன் நான். ஒரு ரெண்டு நிமிஷம் நான் பேசுறதை அமைதியா கேளுங்க. அப்புறம் உங்களோட விருப்பம்தான்!” என்றவள் அவன் முகத்தைப் பார்க்க, குமரனிடம் பதிலில்லை.

அது கொடுத்த தைரியத்தில் மனோஹரியே தொடர்ந்தாள்.
“உங்களுக்கு மட்டும்தான் கஷ்டம்னு நினைச்சீங்களா? ஏன் உங்கம்மாவும் தானே அவ்வளவு கஷ்டத்தையும் தாங்குனாங்க. அப்போ உங்களைவிட அவங்களுக்குத்தானே அதிகக் கோபம் வரணும். ஏன் வரலைன்னு யோசிச்சீங்களா? கோபம் இருக்கலாம். இந்த பத்து வருஷமா வைராக்கியத்தோட உங்கப்பாவை பார்க்காம இருக்கப்போ கோபம் இருக்கலாம். ஆனால், அவரைப் பார்த்தப்போ அந்தக் கோபம் எல்லாம் எங்கப் போச்சுன்னு அவங்களுக்கே தெரியாது. ரெண்டு பேரும் அழுது மன்னிப்பு கேட்டு பரஸ்பரமா அன்பை பரிமாறி உங்கம்மா சிரிச்சப்போ, இதுவரைக்கும் அவங்க முகத்துல அந்த மாதிரி சிரிப்பை பார்த்ததே இல்லைன்னு நான் நினைச்சேன்.

உங்களை மாதிரி, இல்லை உங்களைவிட அந்த மனுஷிதான் அவ்வளோ பட்டிருக்காங்க வாழ்க்கையில. இருந்தும் உங்கப்பா வேணும்னு நினைக்கிறாங்க. காரணம் அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க. ஏன் காதலிக்கும்போது சிந்து அத்தைக்கு மாமாவோட குணம் தெரியாதா என்ன? எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணாங்க. அதனாலே அவங்களுக்கு மாமாவோட குணம் கோபத்தைக் கொடுத்துச்சு தவிர, ஏமாற்றத்தைக் கொடுக்கலை. எவ்வளோ நாளைக்கு அவங்களால கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியும்? ஒரு வருஷம், ரெண்டு வருஷம்… பத்து வருஷம் இப்போ கரைஞ்சு காணாம போய்டுச்சு.

error: Content is protected !!
Scroll to Top