மனோஹரி ராதாவுடன் இங்கே வீட்டிற்கு வந்துவிட்டாள். உள்ளே நுழைந்ததும் தந்தை அறைக்குச் செல்ல கால்கள் பரபரத்தன. அவரைக் காண வேண்டும், தன் தாய்மையடைந்ததைக் கூறி மகிழ வேண்டும் என்றொரு உந்துதல் பெண்ணுக்கு.
‘அப்பா, நீங்க தாத்தாவாகப் போறீங்க!’ எனக் கூறி ரங்காவை அணைத்துக் கொள்ள தோன்றினாலும், மனம் முழுவதும் பயம்தான். அன்று கூறியது போலக் குழந்தையை அசிங்கம் எனக் கூறிவிடுவாரோ என்ற நினைப்பே வசம்பை விழுங்கியது போலிருக்க, அவரது அறையை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டே தன்றைக்குள் நுழைந்திருந்தாள் மனோ.
இத்தனை நேர அலைப்புறுதல்கள் எல்லாம் விலகி மனம் சமன்பட சில நிமிடங்கள் தேவைப்பட்டன. விழிகளை மூடி சுவரில் சாய்ந்தமர்ந்தவளின் இதழ்களில் இப்போது நிறைவானப் புன்னகை, முகம் விகசிக்க, விழிகள் மலர முகம் தாய்மையின் பூரிப்பில் கனிந்து போயிருந்தது. கரங்கள் வயிற்றைத் தடவிக் கொடுக்க, தாய்மையடைந்ததை நினைத்து அந்நொடி செல்லரித்துப் போனது அவளுக்கு. குமரன் அடித்தது தற்காலிகமாக மறந்திருக்க, அவனிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்து அணைத்துக் கொள்ள வேண்டும் என மனம் முழுவதும் ஆசை பிறந்தது.
ராதா வற்புறுத்தி அழைத்ததும் ஏனோ அவனிடம் தங்களது காதல் சின்னத்தை ஆசையாய்க் கூற வேண்டும் என முகிழ்த்த ஆசையை கோபம் பின்னகர்த்தியிருக்க, இங்கே வந்துவிட்டாள். கன்னத்தில் கணவனின் ஐந்து விரல்களும் பதிந்து போயிருக்க, அதுவேறு வலித்தது.
‘இருக்கட்டும், பார்த்துக்கிறேன் அவரை!’ என மெல்லமாய் முணுமுணுத்தவளின் இதழ்களில் புன்னகைதான். இந்நொடி கோபமெல்லாம் காதல் அலை அடித்துச் சென்றிருக்க, நிறைவாய் உணர்ந்தாள்.
சில நொடிகளில் யாருடைய அரவமோ கேட்க, நிமிர்ந்து பார்த்தாள் மனோ. ரங்கராஜன் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் கொஞ்சம் பயமும் எதிர்பார்ப்புமாய் ஏறிட்டவளின் விழிகளில் மெல்ல ஈரம் படர்ந்தது.
எதுவும் பேசாது அருகில் வந்து நின்றவரின் கரங்கள் மகளின் கன்னத்தை வருட, தவிப்பாய் அவரைப் பார்த்திருந்தவள், அப்படியே இடையோடு அணைத்துக் கொண்டாள். தொண்டை லேசாய் அடைத்துப் போனதுஅவளுக்கு.
“அப்பா…” என அழைத்தவளுக்கு விழிநீர் பொங்க, அதை துடைத்துக் கொண்டாள். “நீங்க தாத்தாவாகப் போறீங்கப்பா. ரொம்ப ஆசையா உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன். ஆனாலும் பயம், அன்னைக்கு சொன்ன மாதிரி என் குழந்தையை அசிங்கம்னு சொல்லிடாதீங்க ப்பா. ப்ளீஸ் பா! உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட முடியாம மனசு முழுக்க பயமா இருக்கு பா!” என மெலிதாய் தேம்பினாள் மனோஹரி. ரங்கராஜன் கரங்கள் அப்படியே இயக்கத்தை நிறுத்த, மகளை அதிர்ந்து பார்த்தார். தன்னை நினைத்தே அவருக்கு அருவருத்துப் போனது. பெற்ற மகள், ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று தன்னிடம் பேசக் கூட அஞ்சுமளவு தன் நடவடிக்கை இருந்துவிட்டதே என எண்ணியவரின் விழிகளிலிருந்து நீர் சரசரவென வழிய, அவளது தலையைத் தடவிக் கொடுத்தார். மனம் முழுவதும் அப்படியொரு வலி அவருக்கு.
சில நிமிடங்கள் மௌனமாய்க் கழிய, “என்னை மன்னிச்சிடு மா!” என்ற ரங்காவின் குரல் தழுதழுத்துப் போக, மனோஹரி விழிகளில் வழியும் நீருடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். தந்தையின் முகம் தெளிவில்லாது தெரிந்தது. இமை சிமிட்டி நீரை உள்ளிழுத்துக்கொண்டு அவரைத் தவிப்பாய்ப் பார்த்தவள்,
“அப்பா…” என உதட்டைக் கடித்து அழுகையை அடக்கி அவரைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். ஆனாலும் சிரிக்க முடியவில்லை.
“என்னை மன்னிச்சிடு மனோ, ஜாதி, மதம், அந்தஸ்து தான் பெருசுன்னு நினைச்சு எல்லாரையும் உதாசீனப்படுத்துனதுக்கு காலம் எனக்கு நல்ல தண்டனை கொடுத்துடுச்சு. பெத்த புள்ளை கூட என்னை மதிக்காம கல்யாணம் பண்ணிட்டான். யாருமே எனக்காக இல்லைன்னு ஒரு எண்ணம் வர ஆரம்பிச்சுடுச்சு. மனுஷங்க தான் பெருசு, மனுச மனசுதான் பெருசுன்னு ஆணியடிச்ச மாதிரி நடந்த எல்லமே எனக்குப் புரிய வச்சிடுச்சு. நான் பெத்த புள்ளை எனனை ஏமாத்துனாலும், நான் வளர்த்த குமரன் என்னை ஏமாத்த மாட்டான் மா. எனக்குன்னு வந்ததும் எதையும் யோசிக்காமல் வந்து நின்னான்… எப்பவுமே அவன் வந்து நிப்பான்!” என்றவர் விழி நீரைத் துடைத்தார். மனதில் குமரன் மீதான நம்பிக்கை பிரவாகமாகப் பொங்கியிருந்தது.
“என் பொண்ணு எப்பவும் தப்பான முடிவெடுக்க மாட்டான்னு நிரூபிச்சுட்ட மனோ… நான், நான் தான் ரொம்ப தப்பானவன். நான் வாழ்ந்த வாழ்க்கை அப்படி. சின்ன வயசுல இருந்தே ஜாதி, மதம்னு அது பின்னாடியே ஓடி என் காலம் முடிஞ்சு போச்சு… கோபம்தான், என் பொண்ணு என்னை மீறிக் கல்யாணம் பண்றான்னு ஒரு கோபம். அதான், அதுல அப்படியெல்லாம் பேசீட்டேன் மா!” என்றவர் பார்வையும் குரலும் மகளைத் இறைஞ்சுதலாய் நோக்கின.
“மன்னிச்சுடு மனோ!” என்றவர் குலுங்கி அழவும், “அப்பா… என்னப்பா, நடந்ததை எதுவும் பேச வேண்டாம் பா. அது முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் விடுங்க!” என்றவளுக்கு தந்தையின் வார்த்தைகளை இந்த பிறவியில் மன்னிக்க முடியாதுதான். அதனால்தான் அவர் பேசியதை மறக்க முயற்சித்தாள்.
அதைவிட, ரங்காவின் இந்த மனமாற்றம் அவர் பேசிய வார்த்தைகளைக் காற்றில் கலக்கச் செய்திருக்க, “ப்பா… நீங்க தாத்தாவாகப் போறீங்க!” என்று கலங்கிய விழிகளுடன் புன்னகைத்தாள். மனதிலிருந்து வந்த ஆத்மார்த்தமான புன்னகை அது. வார்த்தைகள் எந்தவித பயமும் இல்லாது தெளிவாய் மகிழ்ச்சியுடன் வந்தன.
ரங்கா மகளின் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தவர், “ரொம்ப சந்தோஷமா இருக்கு மனோ நல்லா இரு…” என்றார் மனதார. அந்நொடி இருவரும் நெகிழ்ந்திருந்தனர்.
இத்தனை நேரம் நடந்த அனைத்தையும் பார்த்திருந்த ராதாவுக்கு மனம் நிறைந்து போனது. அவரும் பார்த்துக்கொண்டுதானே இருந்தார். இத்தனை நாட்கள் இந்த சிரிப்பிற்கும் பேச்சிற்கும்தானே பஞ்சமாகிப் போயிருந்தது. இருவரும் நகராது அப்படியே நிற்க, “போதும் அப்பனும் மகளும் படம் ஓட்டுனது. சாப்பிட வாங்க!” என அவர் நொடிப்பது போல கூறிச் செல்ல, இருவருக்கும் சிரிப்பு வந்தது.
“உனக்கு ரொம்ப பொறாமை மா. அப்பா என்கிட்ட பழையபடி பேசிட்டாருல்ல, அதான் நீ பொசுங்குற!” என்றவள் ரங்காவை ஒருமுறை அணைத்துவிடுவிக்க, நீண்ட நாட்களுக்குப் பின்னர் இருவருடைய உறவிலிருந்த விரிசல் மறைந்து போயிருக்க, தன் தந்தை தனக்கு கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்து போனாள் மனோஹரி. திருமணம் முடிந்த தினத்திலிருந்து ரங்கா தன்னிடம் எப்போதும் போல பேச மாட்டாரா என எண்ணி ஏங்கிய நாட்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருந்தார் மனிதர். அதில் மனோவுக்கு சிரிப்போடு விழியோரம் உவர் நீரும் பொங்கின.
மூவரும் உண்டு எழ, மனோஹரி நிம்மதியாய் உறங்கினாள். அருகில் கணவன் இல்லை, அவனது கையணைவு இல்லை என்பது பெரியக் குறையாய் இருந்தாலும் அசதியில் உறங்கிப் போனாள்.
ரங்கா அறைக்குச் சென்றவர் விழிகளிலிருந்த கண்ணாடியைக் கழற்றி அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு உடலை படுக்கையில் சரித்தார். விழியோரம் இன்னுமே ஈரம் மிச்சமிருக்க, அதைத் துடைக்க சென்றவரின் நினைவு திவாகர் திருமண தினத்தன்று சமீபித்தது.
ரங்கா மயங்கி சரியத் தொடங்கிய நொடி குமரன் அவரைத் தூக்கியிருக்க, அந்நொடி அவரது ஜாதி, அந்தஸ்து, கௌரவம் எல்லாம் அவனது காலடியில் புதைந்து போயிருந்தது. உயிருக்கு மதிப்பிருந்தால்தானே வாழ்க்கையே வாழ முடியும். உயிர் உடலைவிட்டு பிரிந்துவிட்டால், வாழ்க்கை ஏது? என அந்தக் கணம் அவருக்கு ஆணியடித்ததைப் போல பதிந்திருக்க, குமரனைப் பார்த்துக் கொண்டே விழியை மூடினார். தனக்குப் பின்னர் தன் குடும்பத்தை இவன் பார்த்துக் கொள்வான் என சுயநினைவு இழந்த மனம், சுயக்கட்டுப்பாட்டை உடல் இழந்த தருணம் மனம் குமரனின் மீது பெரியதொரு பொறுப்பை சுமத்தியது. அக்கணம் உயிரைவிட எதுவும் பெரிதாய் தோன்றவில்லை அந்தப் பெரியவருக்கு.
அவன் மீது தான் வைத்த நம்பிக்கை எந்த இடத்திலும் பிசகவில்லை என நினைக்கும்போது நெஞ்சம் நனைந்து போனது. அவனை கீழ்ஜாதிக்காரன், மகளுக்கு வேண்டாம் என்று கூறியதற்குக் காரணம் சொக்கநாதன்தான். அதையன்றி தனிப்பட்ட முறையில் குமரன் அவரது நம்பிக்கையை வென்ற முதலும் கடைசியுமான மனிதனும் கூட.