“அண்ணி… நான் அத்தையாகிட்டேன்!” என்ற ஷெண்பா துள்ளிக் குதித்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட, திவாகர் தங்கயை சிரிப்புடன் பார்த்திருந்தான். சொக்கநாதனுக்குக் கால் தரையில் இல்லை. அடுத்தடுத்து நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகள் அவரை பேச்சிழக்கச் செய்திருந்தன.
கொஞ்சம் தள்ளி நின்று தன்னைப் பார்த்திருந்தவரைப் பார்த்த மனோவுக்குப் பரிதாபமாகப் போய்விட்டது. அவருக்குத் தன்னருகே வர வேண்டும் மகிழ்ச்சியைப் பகிர வேண்டும் என்ற உந்துதல் மனம் முழுவதும் இருந்தாலும், மகனுக்குப் பயந்து சொக்கன் வராதிருந்தார். அவரைப் பார்த்து ஆறுதலாய்ப் புன்னகைத்தவள், “அத்தை, மாமாவோட சேர்ந்து நில்லுங்க!” என்று அவர்களை நிற்க வைத்தவள், “உங்கக் குடும்ப வாரிசுதான் மாமா. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க!” எனக் குழந்தையும் சேர்த்துப் பன்மையில் விளித்தாள்.
அவரது விழிகளில் ஈரம் படர, “உன் நல்ல மனசுக்கு எம்புள்ளையோட ரொம்ப நல்லா இருப்ப மா!” என்றவரின் கரம் நெகிழ்ந்து போய் அவளது தலையைத் தடவின. ஷெண்பா அவர்களை ஆசையாய்ப் பார்த்திருந்தாள். மனோஹரியை அவளுக்கு அத்தனைப் பிடித்துப் போனது.
குமரன் முகம் இறுக இதைப் பார்த்திருக்க, திவாகரிடம் பேசலாம் என அழைத்த ராதாவிடம் நடந்த அனைத்தையும் அவன் ஒப்பித்திருக்க, அவர் அப்போதே கிளம்பி மகளைக் காண விரைந்திருந்தார்.
சொக்கநாதன் விடைபெற யத்தனிக்க, கணவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், “மாமா, இது உங்க வீடு. நீங்க எப்போ வேணாலும் வரலாம், போகலாம். அத்தையைப் பார்க்க, உங்க மருமகளை, பேரக் குழந்தையைப் பார்க்க வரலாம். யாரும் உங்களை வரக்கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க!” என்றாள் அழுத்தமாய். குமரன் அவளை முறைக்க, அதையெல்லாம் அசட்டை செய்தாள் பெண். சொக்கநாதன் முகத்தில் ஏனோ நிராசை படர, மகனையே பார்த்திருந்தார். குமரன் அவர் பார்வையை உணர்ந்தாலும் விழிகளை தந்தையின் புறம் நகர்த்தவே இல்லை. அவர் விடை பெற்றதும் தான்
சிந்துவிற்கு மூச்சே வெளிவந்தது.
குமரன் மனோ அருகே செல்ல விழைய, இடையில் நுழைந்திருந்தாள் ஷெண்பா.
“அண்ணா, அண்ணி மேல எந்தத் தப்பும் இல்ல. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். அவங்களை அடிக்காத நீ, இப்போ ப்ரெக்னன்டா வேற இருக்காங்க குமரா… ப்ளீஸ் டா!” என்றாள் இறைஞ்சும் பார்வையுடன். இப்போது தமையன் அவளை முறைத்தான். மனைவியிடம் ஆசையாய் நெருங்கியவனுக்கு இடைஞ்சலாய் வந்திருந்தாள் ஷெண்பா. அந்த எரிச்சல் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“ஷெண்பா…” என ஏதோ பேச வந்தவன் கன்னத்தில் சிந்துவின் கரம் இடியாய் இறங்கியது.
“கட்டுன பெண்டாட்டியைக் கை நீட்டி அடிச்சுட்டா, பெரிய ஆம்பளை நினைப்பா குமரா? அவளை அடிக்கிற உரிமையை யார் உனக்கு கொடுத்தா. இனியொரு முறை அவளைக் கைநீட்டி அடிச்ச, நான் சும்மா இருப்பேன்னு நினைக்காத!” என்று கோபத்தில் இரைந்தவர், “என்ன கோபமா இருந்தாலும் வாயாலதான் பேசணும். இதுதான் உனக்கு கடைசி தடவை!” என எச்சரித்தார். குமரன் எதுவும் பேசாது அவரையே வெறிக்க,
“அத்தை… விடுங்க. ஏதோ கோபத்துல அடிச்சுட்டாரு. மத்தபடி என்னை அடிக்கணும்னு நினைச்செல்லாம் அடிக்கலை. நீங்க டென்ஷனாகாதீங்க!” என மனோஹரி அவரை சமாதானம் செய்தாள். இருந்தும் குமரன் செய்கையில் கோபத்தில்தான் இருந்தாள். என்ன நினைத்து இவர் என்னை கை நீட்டி அடித்தார் என மனம் கொதித்தது.
திவாகரும் குமரனை முறைத்தான். “மனோ, நீ கிளம்பு நான் உன்னை நம்ப வீட்ல விட்டுட்டுப் போறேன்!” என்றான் கடித்த பற்களுடன்.
“ம்ப்ச்… என்ன பேசுற திவா, நான் எதுக்கு அங்கப் போகணும்?” என மனோ புரியாது வினவினாள்.
“அம்மா இப்போ வந்துடுவாங்க, உன்னைக் கூட்டீட்டுப் போறேன்னு சொன்னாங்க!” என விளக்கம் கொடுத்தான்.
“ச்சு… அறிவிருக்கா டா உனக்கு? இந்த நேரத்துல அவங்களை எதுக்கு அலைய விட்ற? எதுக்குக் கால் பண்ணி சொன்ன?” எனக் காட்டமாய்க் கேட்டாள்.
“இவன் உன்னை அடிச்சு மயக்கம் போட வைப்பான். அதை அமைதியா பார்த்துட்டு நிக்கணுமா?” என்ற திவாகர் குமரனை முறைத்துக்கொண்டே,
“குமரா, இனியொரு முறை என் தங்கச்சி மேல உன் கை பட்டுச்சு, நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான். குமரன் அவனது பேச்சை அசட்டை செய்வது போல நிற்க, ராதாமணி வந்துவிட்டார்.
“மனோ… ரொம்ப சந்தோஷமா இருக்கு டி!” என்றவர் மகளைக் கட்டியணைத்தார். அத்தனை மகிழ்ச்சி அந்தப் பெண்மணிக்கு. மகள் தாயாகப் போகிறாள், அதைவிட தான் அம்மாச்சியாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி முகத்தில் ததும்பி வழிந்தது. அவளது கன்னம் வழித்து நெட்டி முறித்தார். விழியோரம் சந்தோஷக் கண்ணீர் படர்ந்தது.
“ம்மா…” என மகள் அவரை அதட்ட, ராதாவுக்கு அப்போதுதான் கால் தரையில் பதிந்தது.
அந்நொடிதான் புறத்தூண்டல் உறைக்க, திரும்பி குமரனைப் பார்த்தவரின் பார்வை அத்தனை உவகையாய் இல்லை. “என்ன பிரச்சனையா இருந்தாலும் கையை நீட்டி அடிக்கிறது எல்லாம் சரியில்லை குமரா. வாயும் வயிறுமா இருக்கப் புள்ளையைக் கை நீட்டி அடிச்சிருக்க நீ. ஒன்னு கிடக்க ஒன்னாகியிருந்தா, என்ன பண்றது?” என ஆதங்கத்துடன் கேட்டார் அவர். குமரன் பதில் கூறாது அவரை நோக்க, “ம்மா… அத்தை அவர்கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டாங்க. நீ ஆரம்பிக்காத மா. வந்து உக்காரு முதல்ல!” என அவர் கையைப் பிடித்தாள் மனோஹரி.
“உட்கார்றதுக்கு வரலை மனோ, நீ முதல்ல கிளம்பு. அங்க என் கூட வா!” என்றவரை முறைத்தவள், “எதுக்கு மா அங்க. அதுவும் இந்த நேரத்துல? எதுவா இருந்தாலும் நீ கிளம்பு. காலையில நான் வரேன், இல்ல நீ வா, பேசிக்கலாம்!” என்றாள் மறுப்பாய். அவளுக்கு கணவனிடம் பேசித் தீர்க்க, சண்டையிட ஆயிரமிருந்தன.
“இல்ல மனோ, நீ இங்க இருக்குறது சரிவராது. உனக்கும் வாய் நிக்காது. ரெண்டு பேரும் மறுபடியும் சண்டை போட்டா நல்லா இருக்காது. காலையில எல்லாத்தையும் பேசிக்கலாம். நீ என் கூட வா!” என்று ராதா ஒரேடியாய் நின்றுவிட்டார். மகளை அழைத்து செல்ல வேண்டும் என்ற பிடிவாதமிருந்தது அவரிடம். அதைவிட மனோவை குமரன் கைநீட்டி அடித்ததை தாயாய்ப் பொறுத்துப் போக முடியவில்லை. அத்தனை செல்லமாக வளர்த்தவளை தாங்கள் கூட அடித்திராத போது, இவன் அடித்துவிட்டானே என்ற கோபம் மனதில் கனன்றது.
“மனோ, அவங்கதான் இவ்வளோ தூரம் கூப்பிட்றாங்க இல்ல. போய்ட்டு வா, இங்க இருந்தா மறுபடியும் இவன் அடிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? இப்போ எல்லாம் கை நீளுது இவனுக்கு!” என்ற சிந்து மகனை முறைத்தார்.
குமரன் மனோவைப் பார்த்தான்.
‘போகக் கூடாது!’ என்றொரு கட்டளை அதிலிருக்க, அதில் சீண்டப்பட்டாள். அவனைப் புருவம் சுருக்கி முறைத்தவள், “சரி மா, வரேன்!” என்றாள். கணவன் மீது அத்தனை கோபம் மனைவிக்கு. ஆயிரம் கோபமிருந்தாலும் இத்தனை பேரின் முன்பு அவனிடம் கேட்க விரும்பாது அமைதியாய் இருந்தாள்.
“சரி சம்பந்தி, நாங்கப் போய்ட்டு காலைல வரோம்!” என்ற ராதா மகளோடு கிளம்ப, “பத்திரமா இரு மனோ…” என மருமகளின் கன்னம் வருடி அனுப்பினார் சிந்து. குமரன் அவளை உருத்துவிழித்தான். தன்னை மீறிச் சென்றவளின் மீது கனல் பார்வை வீசியவனை அலட்சியம் செய்து அவள் கிளம்பியிருக்க, திவாகரும் ஷெண்பாவும் கூட விடை பெற்றனர்.
திவாகர் செல்லும் வழியிலே ஷெண்பாவை பேசி ஒரு வழியாக்கியிருந்தான். அத்தனை பேச்சு பேசியவனிடம் இவள் ஒரு வார்த்தைப் பதிலளிக்காது அமைதியாய் வர, “வாயைத் திறந்து பதில் சொல்லு ஷெண்பா.
நான் அப்போவே கேட்டேன்ல, என்னப் பண்ண போறீங்கன்னு. ஏன் என்கிட்ட சொல்லலை?” எனக் காட்டமாய்க் கேட்டான்.
பாவமாய் விழித்தவள், “நீங்க வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயம். அண்ணி வேற இந்த விஷயத்துல தலையிட்றது உங்களுக்குப் பிடிக்காது!” என்றாள்.
“அதான் உனக்கே தெரியுது இல்ல. அப்புறம் ஏன் இப்படி செஞ்சீங்க? இப்போ உங்க அண்ணன் அவன் பங்குக்கு என் தங்கச்சி கை நீட்டி அடிக்கிறான். இதே உன்னை நான் அடிச்சிருந்தா, அவன் அமைதியா இருப்பானா?” எனக் கேட்டவன் கரங்களில் மகிழுந்து பறந்தது.
“ஏன், அடிச்சுத்தான் பாருங்க. என் ரெண்டு அண்ணனும் சேர்ந்து உங்க கையை ஒடிச்சுடுவாங்க!” என்றாள் விழிகளை உருட்டி.
“ஓஹோ… அப்போ உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? உங்க அண்ணன் கையை நான் அடிச்சு ஒடிக்கவா?” என எரிச்சலாய்க் கேட்டான். இந்நொடி ஷெண்பாவின் பேச்சு அவனுக்குள் கோபத்தைக் கிளப்பியது.
“ஏன் என்கிட்ட பாயுறீங்க… அங்க அவன்கிட்டே பேச வேண்டியது தானே?” என முகத்தைத் திருப்பியவளை முடிந்தவரை முறைத்தான் திவாகர்.
சிந்து எதுவும் கூறாது அறைக்குள் அடைந்து கொள்ள, குமரனுக்கு உறக்கம் அண்டவே இல்லை. சொக்கநாதன் வந்து சென்றதை எல்லாம் மூளை தற்காலிகமாக மறந்திருக்க, மனைவி பிரதானமாகிப் போனாள். அருகில் அவள் வேண்டும், தாய்மையடைந்ததை அவள் வாயால் கேட்டுணர வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
மனோவின் வாசனை நாசியை நிறைக்க, மனதையும் நிறைத்தாள் பெண். சொக்கநாதன் வந்தது, வீட்டிலிருந்தது, மனோ அவரிடம் பேசியது என ஏகக் கோபமிருந்தாலும், அவள் கையணைவில் வேண்டுமென உடலும் மனதும் பரபரத்தது. இருவருமே எதிர்பார்க்கவில்லை. குழந்தை என்ற எண்ணமே அவனிடம் இல்லை. இப்போது இந்நொடி கூட கனவு போலிருக்க, தலையைத் தட்டிக் கொண்டான். உதட்டோரம் புன்னகைக்கு பஞ்சமில்லை. சந்தோஷமா? மகிழ்ச்சியா? ஆச்சர்யமா? என ஏதோ ஒரு உணர்வில் மிதந்தான். போதையேற்றியது போலிருக்க, விழிகளை மூடினால் மனோஹரி கண்முன்னே வந்தாள். முறைத்துக் கொண்டேனும் அவளின் அருகாமை வேண்டுமென மனம் விரும்பித் தொலைத்தது.
உறக்கம் வருவது போலத் தெரியவில்லை. தான் வேண்டாம் என்று கூறியும் வீம்புக்கென்றே சென்றவள் மீது அத்தனை கோபம் வந்தது.
தான் தந்தையாகப் போகிறோம் என்ற செய்தியை செவி உணர்ந்ததும், மனைவியை அணைக்க, உச்சி நுகர, முத்தமிட்டு மூச்சடைக்க வைக்க, சிறு புள்ளியாய் இருக்கும் மகவை ஸ்பரிசிக்க என ஆயிரம் ஆசைகள் கிளர்ந்தெழ, மனோஹரி இல்லையே என்ற ஏக்கம் கோபமாய் உருமாறியது. தூங்காது இரவைக் கடத்தியவன், மறுநாள் காலையிலே ரங்கா வீட்டில் சென்று நின்றிருந்தான்.
தொடரும்…