உள்ளம் – 33.1

குமரன் சொக்கநாதனை அந்நொடி எதிர்பார்க்கவில்லை. முகம் நொடியில் கோபத்தில் தகிக்கத் தொடங்க, அவனின் அனல் பார்வை அவரை சுட்டது.

“மாமா, ஏன் அங்கேயே நிக்குறீங்க? உள்ள வாங்க…” என்ற மனோஹரி அவரது கையைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமர வைக்க, சொக்கன் பார்வை முழுவதும் மகனிடம்தான். அவனது கோப முகம் இவரை கலங்கச் செய்ய, அவனைப் பரிதவிப்பாய்ப் பார்த்திருந்தார். மன்னிப்பைக் கோரும் யாசிப்பான பார்வை பார்த்தவரிலிருந்து நொடியில் விழிகளை நகர்த்திய குமரனின் விழிகள் அழுத்தமாக மனைவியிடம் பதிந்தது. அவள்தான் இதற்குக் காரணம் என உணர்ந்ததும் சுறுசுறுவென கோபம் மூண்டெழுந்தது. என்ன நினைப்பில் இந்தப் பெண் இதையெல்லாம் செய்கிறாள் என்ற எண்ணம் அவனை தகிக்கச் செய்தது. இதற்காகத்தான் இந்த கோவில் நாடகமா எனத் தோன்றவும், பல்லைக் கடித்தான்.

சிந்து மகனை தவிப்பாய்ப் பார்த்திருக்க, “அத்தை, மாமாவுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வாங்க. முத முதல்லா சொந்த மகன் வீட்டுக்கு வந்திருக்காரு!” என்றவளை குமரன் விழிகளால் பொசுக்கினான். சிந்து கையைப் பிசைந்தவாறு நிற்க, “அத்தை, உங்களைத்தான் சொன்னேன். போங்க!” என அவள் அதட்டலிட, மகன் முகத்தைத் தயங்கிப் பார்த்தவாறே சமையலறைக்குள் நுழைந்திருந்தார் பெண்மணி.

“மனோ… ரூம்க்குள்ள வா!” என்ற குமரன் பல்லைக் கடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து கோபம் முழுவதையும் கதவில் காட்டினான். விழிகள் சிவக்கத் தொடங்கின மனைவியின் பேச்சில், செயலில்.

“மனோ… என்ன இது?” திவாகர் குரல் முழுவதும் பதற்றம். இதெல்லாம் இப்போது தேவைதானா என்றொரு கண்டனப் பார்வை வேறு அவனிடம். குமரனின் கோபம் முழுவதும் தன் தங்கையிடம் தான் எனும்போது தமையனாய் அவனுக்குத் துடித்துப் போனது.

“திவா, நான் அவர்கிட்ட பேசீட்டு வரேன். பயப்படாத!” என்றவள், “ஷெண்பா, உங்கப்பா கூட பேசீட்டு இரு. உங்க அண்ணனை சமாதானம் செஞ்சு கூட்டீட்டு வரேன்!” என்றவளின் இயல்பான பேச்சில் ஷெண்பாவிற்கு பயம் தொண்டையைக் கவ்வியது.

“அண்ணி, கோபத்துல அடுச்சுடப் போறான் குமரன்!” மனோவின் கையை சின்னவள் பிடிக்க, “ச்சு… நான் பார்த்துக்கிறேன்” என்று அறைக்குள் நுழைந்தவளை அழுத்தமாய்ப் பார்த்த குமரன், “அந்தாளை எதுக்கு டி கூட்டீட்டு வந்த?” எனக் கோபத்தில் வார்த்தையைக் கடித்துத் துப்பினான். கண்மண் தெரியாத கோபம் அவனுள் கனன்றத் தொடங்கியது.

“என்ன அந்தாளு… அவர் உங்கப்பா, அதை நியாபகம் வச்சுக்கோங்க. இது அவர் மகன் வீடு, அவர் பொண்டாட்டியைப் பார்க்க வந்துருக்காரு!” என்றாள் இவள் அழுத்தமாய்.

“வாயை உடைச்சுடுவேன் டி. யாருக்கு யார் அப்பா?” என்ற குமரன் குரலில் சீற்றம் நிரம்பி வழிந்தது.

“ப்ம்ச்… பத்து வருஷத்துக்கு முன்ன நடந்ததையே கட்டி அழாம, கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாங்க முதல்ல. உங்களுக்கு உங்கப்பா வேணாம். ஆனால், என் அத்தைக்கு வயசான காலத்துல ஒரு துணை வேணும். அதான் அவங்களை சேர்த்து வச்சேன். உங்களை மாதிரி சுயநலமா என்னால யோசிக்க முடியாது!” பட்டென உரைத்தவளை விழிகளால் உருத்து விழித்தான் கணவன்.

“என்ன பார்க்குறீங்க… நீங்க, உங்க அண்ணன், தங்கச்சி எல்லாம் சுயநலவாதிங்க… பக்கா சுயநலம், உங்களுக்கு அம்மா வேணும் சரி. அந்த மனுஷிக்கு புருஷன் வேணும்னு உங்களுக்குத் தோணலை இல்ல. ஆமா! அவர் செஞ்சது தப்புதான். இல்லைன்னு சொல்லலை, அதுக்காக இந்த பத்து வருஷமா தண்டனை கொடுத்துட்டீங்களே! அது போதாதா? நீங்க ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கலனாலும் இதான் நிஜம். இந்த ஜென்மத்துல அவர்தான் உங்கப்பா. அதை யாராலும் மாத்த முடியாது!” தீர்க்கமானக் குரலில் கூறினாள் மனோஹரி.

“வாயை மூடு மனோ. பேசுறதுக்கு எல்லாம் நல்லா இருக்கும். ஆனால், வாழ்றவங்களுக்குத்தான் கஷ்டம் தெரியும்…” என்றவன் குரலில் இத்தனை நாள் அவர்கள்பட்ட வலியின் சாயல் தொற்றியிருந்தது. அது இவளுக்குள் தவிப்பைக் கூட்டினாலும், வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை. அவளுக்கும் தெரியுமே குமரன், சிந்துவின் வலிகளும் வேதனை நிரம்பிய வாழ்க்கையையும். அதனால்தானே சிந்துவையும் சொக்கநாதனையும் சேர்த்து வைக்க வேண்டுமென துடிக்கிறாள். குமரனுக்கு மனோ வேண்டும் என்பதைப் போல சிந்துவுக்கு ஒரு சொக்கன் இந்த வயதில் தோள் கொடுக்க, கலங்கிய கண்களைத் துடைத்துவிட, அன்பாய் பேசி தலைக்கோத வேண்டுமென மனம் கிடந்து அடித்துக்கொள்ள என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் எனத் துணிந்து முடிவெடுத்திருந்தாள்.

“ஏன் தெரியாம, உங்கம்மாவோட கஷ்டம் தெரிஞ்சனாலதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன். உங்களுக்குப் பிடிக்கலைன்னா, நீங்க அவர் கூடப் பேசாதீங்க. அத்தையைப் பேசக் கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை! ஏன்னா, இது அவங்களோட வாழ்க்கை.” எனப் பட்டென உரைத்தாள்.

“மனோ… என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற டி…” எனக் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கையை முறுக்கிவன், “என் அம்மா டி அவங்க… அவங்களுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்… நீ இடையில வராத!” என்றவன் கோபத்தில் அருகிலிருந்த நாற்காலியைத் தூக்கிப் போட்டான். வெளியே கேட்ட சத்தத்தில் அனைவரும் பதற்றத்துடன் கதவருகே வந்துவிட்டனர்.

“உங்க அம்மாவுக்கு என்ன வேணும்னு உங்களுக்கு இந்த ஜென்மத்துல தோணாது. அவங்க உங்க கூட சந்தோஷமா இருக்காங்கன்னு நினைக்குறீங்களா? சத்தியமா இல்லை… கடமைக்கு வாழ்ந்துட்டு இருக்காங்க!”

“சந்தோஷமா இல்லைனாலும் என் அம்மா இங்க மரியாதையோட இருக்காங்க டி. எனக்கு அவங்க மரியாதை ரொம்ப முக்கியம். இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசுன…” என்றவன் தலையை அசைத்தான்.

“கை நீட்டக் கூடாதுன்னு பார்க்கிறேன். ஒழுங்கா அந்தாளை வெளியப் போகச் சொல்லு!” என்றான். பேச்சிலே அத்தனை கோபம் தெறித்தது.

“முடியாது… என்னால அவரை வெளிய போக சொல்ல முடியாது. என் மாமனாரு அவர், என் அத்தையோட புருஷன். என் புருஷனோட அப்பா. அவருக்குத்தானே நீங்க பொறந்தீங்க. அந்த உரிமையில அந்த மனுஷன் இங்கதான் இருப்பாரு…” என்றவள், “இல்ல, உங்க அப்பத்தா சொன்ன மாதிரி அவருக்கு நீங்க பொறக்கலைன்னு சொல்லுங்க, நான் அவரை வெளிய அனுப்புறேன்… பேசுன அந்தக் கிழவியை அன்னைக்கே உண்டு இல்லைன்னு பண்ணியிருந்தா, நீங்க உங்கம்மாவுக்கு நியாயம் செஞ்சதா இருந்திருக்கும். கேவலமா வீட்டைவிட்டு வெளியே வந்து பேசுனவங்களை ஜெய்க்க வச்சுட்டீங்க நீங்க!” என்றவள் பேசப் பேச ஒரு கட்டத்தில் இழுத்துப் பிடித்தப் பொறுமைக் காற்றில் கலக்க, “வாயை மூடுடி முதல்ல!” என கர்ஜித்தவன் ஓங்கி அவளை ஒரு அறைவிட்டான். அந்நொடி அனைவரிடமும் நிசப்தம் சூழ்ந்தது. மனோ பேசும் மும்மரத்தில் அவன் அருகே வந்ததை கவனிக்காதவள் எதிர்பாராத அடியில் விழிகள் மங்கத் தொடங்க, மயங்கி சரிந்திருந்தாள். மனம் அந்த அடியில் மொத்தமாய் அடிபட்டுப் போக, விழியோரம் கணவனின் செய்கையில் ஈரம் படர்ந்தது.

அவனது கத்தலிலே இத்தனை நேரம் தயக்கத்தோடு வாயிலில் நின்றிருந்த திவாகர் பதறிப் போய் உள்ளே நுழைய, ஷெண்பாவும் பின்னே வந்துவிட்டாள்.

குமரன் மனோ மயங்கி சரிவாள் என எதிர்பார்க்காது ஒரு நொடி அதிர்ந்து, “மனோ…” என அவளைத் தூக்கியிருக்க, திவாகர் வந்து தங்கையைத் தாங்கியிருந்தான்.

“குமரா, என்ன டா பண்ணி வச்சிருக்க என் தங்கச்சியை. அவளை கை நீட்டி அடிக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தா?” எனக் கேட்ட திவாகருக்கு தங்கையை அந்நொடி அப்படிக் கண்டதும் துடித்துப் போனது.

ஒரு நொடி என்ன செய்வது எனத் தெரியாது தடுமாறிய குமரன், அவளைத் தூக்கி வந்து வெளியே இருக்கையில் அமர வைத்தான். “ஷெண்பா, தண்ணி கொண்டு வா!” என திவாகர் கூறிய நொடி அவள் நீரோடு வந்திருக்க, முகத்தில் நீரைத் தெளித்தனர். அவள் விழிக்கவே இல்லை. லேசாய் கணவனுக்கு பயம் கவ்வத் தொடங்க, சிந்து மனோவினருகே வந்துவிட்டார்.

“பொம்பளையைக் கை நீட்டி அடிக்கிறது என்னடா பழக்கம்?” என மகனை தீயாய் முறைத்த சிந்து, மனோவின் கன்னத்தைத் தட்டினார். விழிகளைத் திறக்க முயன்றவளால் முடியாது போக, உடல் அவளது கட்டுப்பாட்டிலே இல்லை. சொக்கநாதன் பதற்றத்துடன் அனைத்தையும் பார்த்திருந்தார். தன்னால்தான் எல்லாம் என அவரது மனம் தவித்தது.

“ஷெண்பா, மூனாவது வீட்ல ஒரு நர்ஸூப் பொண்ணு இருப்பா, அவளைப் போய் கூட்டீட்டு வா!” என்ற சிந்து மனோஹரியின் முகத்தை மடியில் தாங்கினார். தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் நன்றாய் அடித்தார். சில நிமிடங்களில் செவிலியர் வந்துவிட்டார்.

“வா கனகு, என் மருமக மடக்கிட்டா, என்னென்னுப் பாரு!” என்று அவர் கூறவும், கனகா வந்து மனோஹரியை சோதித்தாள்.

சில நொடிகளில் நெற்றியைச் சுருக்கியவள், “பெரியம்மா, உங்க மருமக மாசமா இருக்காங்க. இது மசக்கை மயக்கம்தான். பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்ல, காலைல டாக்டர்கிட்டே காட்டி கன்பார்ம் பண்ணிக்கோங்க!” என அவர் கூறவும் நொடியில் அனைவரது மனநிலையும் தலைகீழாக மாறியிருந்தது. அந்நொடி ஒருவரும் இதை எதிர்பார்க்கவில்லை. திகைப்பூண்டை மிதித்தது போல குமரன் முகம்
மாறிவிட்டது.
சிந்து முகத்திலிருந்தக் கோபம் மறைந்துவிட, முகம் பூரிப்பில் நிறைந்துவிட்டது.

மனோவின் மயக்கம் தெளிய, “சரிங்க பெரியம்மா, நான் வரேன். பார்த்துக்கோங்க!” என செவிலியர் நகர, அவள் எழுந்தமர்ந்தாள். அவள் முகம் கணவனை முறைத்துத் தள்ள, அவன் என்ன உணர்வென தெரியாது திகைத்துப் போயிருந்தான். அருகே நின்றிருந்த சொக்கநாதன் எல்லாம் இப்போது அவனது சிந்தையில் பின்னகர்ந்திருக்க, மனைவியின் மீதான கோபம் தற்காலிக விடுப்பெடுத்துக் கொண்டது. தந்தை என்ற ஸ்தானத்தில் ஒருநாளும் தன்னைப் பொருத்தியிராதவனுக்கு அந்நொடி உவகையை வார்த்தையில் வரையறுக்க முடியாது திணறிப் போனான்.

“மனோ… என்னை அப்பத்தாவாக்கிட்ட நீ. சந்தோஷத்துல வார்த்தையே வரலை!” என்ற சிந்து மருமகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச, அவள் முகம் திகைத்துப் போனது. அவர் கூறுவதன் சாரம்சம் புரிந்தவளின் சிந்தை மனதில் நாட்களை எண்ண, இந்த மாதம் வர வேண்டிய மாதவிடாய் தள்ளிப் போயிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். உடல் லேசாய் சிலிர்த்துப் போனது பெண்ணுக்கு. அவள் இப்படியிருக்கும் என சிந்தித்திருக்கவே இல்லை.

error: Content is protected !!
Scroll to Top