“எதுக்குங்க உங்க மேல நீங்களே பழியைப் போட்டுக்குறீங்க. எனக்குத்தான் உங்களோட வாழ கொடுத்து வைக்கலை, உங்களுக்குக் கொடுத்த வாக்கையும் காப்பாத்த முடியலை. மன்னிச்சுடுங்க!” என்ற சிந்து அவரது கைகளை அழுத்தினார். இருவருக்குள்ளும் சொல்லப்படாத காயங்களும் வேதனைகளும் வாதைகளும் ஆயிரமிருந்தன. பேச முடியவில்லை. பேசப் பேச காயங்களே விஞ்சி நிற்கும் என அந்நொடி அமைதியை இழக்க விரும்பவில்லை இரண்டு பெரியவர்களும். நடந்தது நடந்ததாகே இருக்கட்டும். இனிமேல் அதன் சுவடைப் பற்றி கூடப் பேசக் கூடாதென நினைத்தனர்.
“சிந்து…” என அழைத்த சொக்கனின் முகமும் குரலும் பரிதவித்தது. மனைவியின் விழிகளைக் கண்டவரின் இமைகள் நனைய, “சிந்து, என்னை மன்னிப்பீயா? உன்கிட்ட இருந்து ஒரு வார்த்தை மன்னிச்சுட்டேன்னு வந்துட்டாலே, என் உடம்பு நிம்மதியா போய் சேர்ந்துடும். பெத்த புள்ளையோட சாபத்தையும் பொண்டாட்டி சாபத்தையும் வாங்கிக்கிட்ட புண்ணியவான் நான்!” என்றவரின் குரலில் வேதனைக் கொட்டிக் கிடக்க, இங்கே இவருக்குத் துடித்துப் போனது.
“என்ன… என்ன நீங்க அப்போதுல இருந்து இதையே பேசுறீங்க… உங்க மேல இப்போ எனக்கு கோபம் எதுவும் இல்லைங்க. வருத்தம் மட்டும்தான். அதுவும் எப்பவோ போய்டுச்சு… விடுங்க!” என்று அவரை சமாதானம் செய்தவரின் முன்னே தண்ணீர் பொத்தலை மனோஹரி நீட்ட, அவளருகே அழுகையுடன் நின்றிருந்தாள் ஷெண்பா. தாய் தந்தை அழுகையில் அவளுக்கும் தொண்டை அடைத்துப் போனது. விம்மி வந்த அழுகையுடன் அவர்கள் அருகே அமர்ந்துவிட்டாள்.
“சிந்து மா, அப்பாவை ஏத்துக்கோங்க சிந்து மா. பழைய படி அவர்கிட்டே பேசுங்க, அவர் நல்லவர் தான். சூழ்நிலைதான் காரணம்…” என்றவள் சிந்துவின் தோளைத் தொட்டு விசும்ப, “ச்சு… ஷெண்பா குட்டி!” என அவளை தோளோடு அணைத்தார்.
“பதில் சொல்லுங்க சிந்து மா, எனக்கு இன்னைக்குத் தெரிஞ்சாகணும்… அப்பாவை நீங்க மன்னிச்சுட்டீங்களா?” என மீண்டும் அதிலே நின்ற சின்னவளைப் பார்த்துப் புன்னகைத்தவர், “அவர் என் புருஷன் டி. நீ எதுக்கு சப்போர்ட்டுக்கு வர்ற. ஏன் உன் அண்ணிக்கும் உனக்கும் ஆயிரம் இருக்க மாதிரி என் புருஷனக்கும் எனக்கும் இருக்கு… போ… போ!” கண்ணீர் வழியும் விழிகளோடு கன்னம் சுருங்கப் புன்னகைத்தவரின் உதடுகளில் நீண்ட நாளைக்குப் பின்னான ஆத்மார்த்தமான சிரிப்பு தொற்றியது. அவரது பதிலில் மற்ற இருவரும் புன்னகைத்தனர்.
சொக்கநாதனுக்கு மனைவியின் இயல்பான பேச்சில் சிரிப்பில் பத்து வருடங்கள் பத்து நிமிடத்தில் மறந்திருக்க, அவரது முகத்தையே பார்த்திருந்தார்.
“சிந்து மா, போங்க!” ஷெண்பா சிணுங்க, அவர் புன்னகைத்தார். மனோஹரி அவர்களுக்கு அருகில் நின்றவள், அமைதியான புன்னகையுடன் மூவரையும் பார்த்திருக்க, நெஞ்சம் நனைந்து போனது.
ஒரு சிறிய சந்திப்பு, பேச்சு, ஸ்பரிசம், ஒரு சொட்டுக் கண்ணீர், ஒரு யாசிப்பான பார்வை என்ன செய்யும்? பேசவே கூடாது என வருடங்களாக மனதில் பூட்டி வைத்திருந்த வைராக்கியங்களை மெதுவாய் உதிரச் செய்யும், உடலையும் மனதையும் தளரச் செய்யும். உதட்டோரம் புன்னகை பூக்கச் செய்யும். வேண்டாமென உதறிவிட்ட உறவுச் சங்கிலியை மீண்டும் இழுத்துக் கட்டி காயங்களை மறக்கச் செய்யும். இதுதானே வாழ்க்கை, சண்டை, சச்சரவுகள், கோபம் என ஆயிரமிருந்தாலும் தன்னவர்கள் எனும்போது அதெல்லாம் தூள் தூளாகச் சிதறிவிடுகின்றன. அன்பெனும் சொல் செய்யும் மாய வித்தை அது. பிரபஞ்சத்தைக் கட்டி வைத்திருக்கும் மெல்லிய இறக்கை அது… பறந்தாலும் மடை மாறாது… குணம் மாறாது, நிறம் மாறாது, தனக்கானவர்களுக்காக காத்திருக்கும் பாங்கில் மனதை உருக்கிவிடும், காயங்களை உதிரச் செய்யும், புதிதாய் பூப் போலொரு நேசத்தை மலரச் செய்து சுகந்தத்தை பரப்பும்.
சிந்து நிமிர்ந்து மனோவைப் பார்த்தார். அந்தப் பார்வையில் என்ன இருந்தது என இவளால் அறிய முடியவில்லை. தலையை அசைத்தவருக்கு அருகே அமர்ந்தவளின் நெற்றியோரம் அவரது உதடுகள் பதிந்து மீள, விழியோரம் துளிர்த்த நீர் அவள் கரத்தில் பட்டு மோட்சம் பெற்றது.
“மனோ மா…” என்றவரை சின்ன சிரிப்புடன் பார்த்திருந்தாள் மனோஹரி.
“சிந்து மா… எனக்கு!” ஷெண்பா முகத்தைத் தூக்கி வைக்க, அனைவருக்கும் புன்னகை பூத்தது.
“என் செல்லத்துக்கு இல்லாததா?” எனக் கேட்டவர், அவளது நெற்றியில் முத்தமிட்டார்.
“ரொம்ப நன்றி மா!” குரல் நெகிழ சொக்கநாதன் உரைக்க, “மாமா, நான் எதுவுமே செய்யலை. ஒரே ஒரு தடவை உங்களை மீட் பண்ண வைச்சேன் அவ்வளோதான். ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்துச்சு, உங்களுக்கு இடையில இருக்க நேசமும் புரிதலும் உங்களை சேர்க்கும்னு!” என்றவள், “வாழ்ற கொஞ்ச நாள் நம்ம நேசிச்சவங்களோட நிறைவா வாழ்ந்துட்டு போய்டணும் மாமா. யாரும் யாருக்கும் வாரண்டி, கேரண்டி கொடுக்குறதில்லையே! எனக்கு என் அத்தை சந்தோஷம், விருப்பம் முக்கியமா போச்சு. கொஞ்சம் செல்பிஷ்தான் நான். உங்களுக்காக செய்யலை, என் அத்தைக்காகத்தான்!” என்று அவள் இயல்பாகக் கூறவும், சொக்கன் வலது கை உயர்ந்து அவளது தலையைத் தடவியது.
சிறிது நேரம் ஷெண்பா பேச, மூவரும் கேட்டிருந்தனர்.
நேரம் கடக்கவும், சிந்து எழுந்து நின்றார். அவரது முகம் கணவரை சமீபிக்க, அவரும் மனைவியைத்தான் பார்த்திருந்தார். நீண்டு கிடந்த இந்தப் பொழுதின் நீட்சி முடியாது தொடர வேண்டும் என்றொரு ஏக்கம் இருவரிடமும். இத்தனை வருடங்கள் கழித்து கணவனின் கதகதப்பான கரங்களில் பதிந்த தன் கரத்தை அந்தப் பெண்மணிக்கு விளக்க விருப்பமில்லை. இருந்தும் சென்றுதானே ஆகவேண்டும் எனப் பெருமூச்சை வெளிவிட்ட சொக்கநாதன், “நான் வரேன் சிந்து, வரேன் மா…” என்றார்.
“மாமா, இவ்வளோ தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போவீங்களா, ஒரெட்டு வந்து உங்க மகன் உழைச்சு கட்டுன வீட்டைப் பார்த்துட்டுப் போங்க!” என்று மனோ கூறவும், “குமரன் வீட்ல இருப்பான். நான் வந்தா கோபப்படுவான் மா!” என்றார் ஏங்கிய குரலில்.
“ஆமா மனோ, அவனுக்கு இது. தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவான்!” சிந்துவும் வருத்தமாகக் கூற, அவர்களைப் பார்த்த மனோ,
“உங்கப் பையனுக்கு உங்களைப் பிடிக்காதுன்னு அவரா சொன்னாரா மாமா?” எனக் கேட்டவளை அவர் யோசனையாய் நோக்கினார்.
“அத்தையைப் புடிச்ச அளவுக்கு உங்களையும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் மாமா. உங்களைப் பத்தி ஒரு வார்த்தைப் பேசுனேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை அடிச்ச மனுஷன் அவரு. உங்க மேல கோபம் இருக்கலாம். ஆனால், ஒருநாளும் உங்களை அவரால வெறுக்க முடியாது!” என்றவள், சொக்கனை வற்புறுத்தி அழைத்தாள்.
“அண்ணி, அண்ணாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. அவன் ரொம்பக் கோபப்படுவான்!” என ஷெண்பா கூறவும், மூவரையும் முறைத்தாள் பெண்.
“ஏன் அத்தை, மாமா… அவரு தானே உங்களுக்குப் புள்ளை, நீங்க ஒன்னும் அவருக்கு புள்ளைங்க இல்லயே! ஏன் இப்படி பயப்படுறீங்க? கண்டிப்பா உங்க மகனை என்னால ஹேண்டில் பண்ண முடியும்!” என்றவள் பெருமூச்சை வெளிவிட்டாள்.
“மனோ மா, நான் அவனுக்குப் பயப்படலை. அவனோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிறேன். அதான் இத்தனை நாள் என் புருஷனை பார்க்காம இருந்துட்டேன்!” என்று சிந்து கூற, “நீங்க உங்கப் பையனோட பீலிங்ஸை மதிக்குறீங்க. ஆனால், அவர் அப்படி மதிக்கலையே அத்தை!” என்று ஆதங்கமாய் உரைத்தவள், சொக்கநாதனின் புறம் திரும்பினாள்.
“மாமா, உங்களுக்குப் பெண்டாட்டி மட்டும் வேணுமா? இல்ல புள்ளையும் வேணுமா? யோசிச்சு சொல்லுங்க… ஒரு தடவைதான் வாய்ப்புக் கிடைக்கும். கெட்டியா பிடிச்சுக்கோங்க… உங்க மகனுக்கு கோபம் வரலாம். அதுக்காக கத்தியை வச்சு குத்தவா போறாரு? கோபத்துல ரெண்டு வார்த்தைப் பேசுனாலும் உங்க ரெண்டு பேரையும் சமாதானம் செஞ்சு வைக்கிறது என் பொறுப்பு!” என்று மனோ பெரியவர்கள் முகத்தைப் பார்க்க, இருவரும் சரியென ஒப்புக் கொண்டனர்.
சொக்கநாதனின் மகிழுந்திலே நால்வரும் சென்று இறங்கினர். ஷெண்பாவின் கரங்கள் பயத்தில் பிசுபிசுத்துப் போயிருந்தன. “ஷ்… ஷெண்பா!” என அவளை அதட்டி உள்ளே அனுப்பியவள், சொக்கநாதன் தயங்கி நிற்பதைப் பார்த்து, “மாமா, உள்ளே வாங்க. இது உங்கப் புள்ளை வீடு!” என்றாள் அழுத்தமாய்.
சிந்துவும் அவரும் உள்ளே செல்ல, பின்னே மனோஹரி சென்றாள்.
நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்திருந்தவனின் கால் முன்னே இருந்த மேஜையில் நீண்டிருக்க, ஏதோ படத்தை ஒலிக்கவிட்டவாறு அதில் கவனமாய் இருந்தான் குமரன். ஷெண்பா உள்ளே நுழைய, “பத்து நிமிஷத்துல போய்ட்டு வர்றவங்க நீங்க தானா?” என போலியாய் தங்கையை முறைக்க, அவளுக்கு வியர்த்துப் போனது.
“அது… குமரா…” வார்த்தைகளற்று அவள் திக்க, “ஷெண்பா, என்னாச்சு?” என திவாகர் அவளருகே வர, அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“ஏய், என்ன ஷெண்பா?” என குமரன் எழுந்து நின்றான். சிந்துவும் சொக்கநாதனும் ஜோடியாக உள்ளே நுழைய, ஒரு கணம் திகைத்துப் போனான். மறுநொடி அவன் முகம் மாற ஆரம்பித்திருக்க, மனோஹரி வந்துவிட்டாள்.
தொடரும்…