உள்ளம் – 32.3

தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிய ஷெண்பா யார் மீதோ பலமாய் மோதி நிற்க, திவாகர்தான் நின்றிருந்தான். அன்றைக்கு வேலை குறைவாக இருக்கவும், மனைவி இங்கே வருவதாய் உரைத்தது நினைவு வர, வந்துவிட்டான்.

‘கடவுளே, அடுத்து என்னைக் கட்டுனவரா?’ என மனதில் அலறியவள், “என்னங்க?” என பவ்வியமாக வினவினாள்.

மூன்று பேரையும் ஒன்றாய் பார்த்தவன், “மூனு பேரும் தனியா போறீங்களா? வாங்க நானே கோவில்ல விட்டுட்டு வரேன்!” என திவாகர் கூறிய நொடி, “வேணாம்!” என இரண்டு குரல்கள் வெளிவந்தன. சிந்துவின் பார்வை இப்போது மகளையும் மருமகளையும் கேள்வியாய் நோக்கியது. அவரும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார். அவர்கள் செய்கையில் ஏனோ திருட்டுத்தனம் இருப்பதாகக் கண்டு கொண்டாலும் என்னவென அவரால் ஊகிக்க முடியவில்லை.

“அத்தை, திவா வேணாம். இப்போதான் அவனும் வர்றான், டயர்டா இருப்பான். அதனால ரெஸ்ட் எடுக்கட்டும்!” என அவரைப் பேச விடாது செய்த மனோ, “திவா, நாங்கப் போய்ட்டு உன் பொண்டாட்டியை பத்திரமா கூட்டீட்டு வந்துட்றோம். நீ போ உள்ள!” என கேலியாய் கூறி நகர்ந்திருந்தாள்.

‘யப்பா முருகா, உன் கோவிலுக்கு வர்றதுக்குள்ள நாக்குத் தள்ளிடும் போல!’ என பொருமிய ஷெண்பா கிடைத்த இடைவெளியில் தந்தைக்கு அழைத்து அவர் எங்கேயிருக்கிறார் என உறுதி செய்து கொண்டாள்.

கோவிலின் உள்ளே நுழைந்ததும் சிந்து கடவுளைத் தரிசிக்க சென்றுவிட, பெண்கள் இருவரும் நின்றுவிட்டனர். “ஷெண்பா, மாமா எங்கே இருக்கார்னு கேளு!” என்ற மனோ அங்கிருந்தக் கூட்டத்தில் கண்களை மெதுவாக ஓட்டினாள்.

ஷெண்பா சொக்கநாதனுக்கு அழைக்க, “இங்க கோவிலுக்குப் பின்னாடி இருக்க மரத்தடியில உட்கார்ந்து இருக்கேன் டா!” என்றவர் அப்போதுதான் கடவுளை தரிசித்துவிட்டு அமர்ந்தார். ஏன் மகள் தன்னை இவ்வளவு தூரம் வற்புறுத்தி அழைக்க வேண்டுமென மனம் அதிலே உழன்று கொண்டிருந்தது.

“சரிங்கப்பா, அங்கேயே இருங்க. நாங்க வந்துட்றோம்!” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள். மூவரும் கடவுளை தரிசித்துவிட்டு கோவிலை சுற்ற செல்ல, தூரத்திலே தந்தையைக் கண்டுவிட்டாள் ஷெண்பா.

“அண்ணி, அப்பா அதோ இருக்காரு!” இவள் கிசுகிசுப்புடன் கையை அவரை நோக்கி நீட்ட, “ஷ்… இங்கே நில்லு. அத்தை போகட்டும்!” என மனோ அவர்கள் நடையை நிதானப்படுத்த, இருவரும் பின்னடைந்திருந்தனர்.

சிந்து அமைதியாய் கோவிலை சுற்றிக் கொண்டிருக்க, சொக்கன் மனைவியைப் பார்த்துவிட்டார். அது அவர்தானா என மனம் நொடியில் பரிதவிக்க, அமர்ந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டார். சிந்துவின் பார்வையும் ஏதேச்சையாக கணவரிடம் குவிய, அவருக்கு அத்தனை அதிர்ச்சி. இருவரது உலகமும் ஒரு நொடி நின்று போனது. இதயம் துடிக்க மறந்திருந்த நொடி இரு ஜோடி விழிகளிலும் சரசரவென நீர் தளும்பத் தொடங்கியது.

பத்து வருடங்கள் கழித்து மனைவியைக் காணவும் சொக்கனுக்கு நெஞ்சடைத்துப் போக, வியர்த்து வழிந்தது. முழுவதுமாகத் தலை நரைத்து விழிகள் உள்ளே சென்று உடல் இளைத்துக் கருத்துப் போயிருந்த சிந்து அவருள் ஒரு போர்க்களத்தை நிகழ்த்தியிருக்க, மனிதர் உடைந்து போனார். அவரது வயது, இருக்கும் சூழல் எல்லாம் மறந்த நிலை. மனைவி மட்டுமே பிரதானமாகியிருக்க, கால்களை நகர்த்த முயற்சித்தார். ஏனோ வேரோடிப் போய் நின்றுவிட, நகர முடியவில்லை.

இப்போதே சிந்துவினருகே செல்ல வேண்டும், பத்து வருடத் துயரத்தைப் பகிர்ந்து கண்ணீர் வடித்து உணர்வுகளைப் பகிர்ந்து உருக்கமாகப் பேசி, மன்னிப்பை யாசித்து மனைவியை சமாதானம் செய்ய வேண்டும் என மனம் முழுவதும் உந்துதல். சிந்துவின் உலகம் கணவரோடு உறைந்து போனது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதைக் கண்டு பரிதவித்த சொக்கன், “சிந்து!” என அழைத்து தட்டுத் தடுமாறி அவர் முன்னே நடந்தார்.

“பார்த்துங்க… கீழே விழுந்துடாதீங்க!” என சிந்து அவரின் கையைப் பிடித்து நிற்க வைத்தார். இருவருக்கும் அந்நொடி என்ன பேசுவது எனத் தெரியவில்லை. ஆனாலும் விழிகள் கலங்க, நீண்ட நாட்களுக்குப் பின்னான அருகாமையை அமைதியாய் உள்வாங்கினர். சிந்துவிற்கு சொல்லவே வேண்டாம். மகன் திருமணத்திற்குக் கூட கணவரை அழைக்க முடியவில்லையே என எண்ணி மறுகியிருந்தவருக்கு இந்த சந்திப்பு மனம் முழுவதும் களிப்பை அள்ளித் தெளித்திருந்தது.

ஷெண்பா விழிகளில் நீர் வழிய, உதட்டில் புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தவள், மனோஹரிக்கு மனதிற்குள் ஆயிரம் முறை அந்நொடி நன்றி உரைத்திருக்க, அவளும் அவர்களைத்தான் பார்த்திருந்தாள்.

சில நிமிடங்கள் மௌனத்தைக் கலைத்தார் சொக்கன். “எங்க சாகுறவரை உன்னைப் பார்க்கவே முடியாதோன்னு பயந்துட்டே இருந்தேன் சிந்து. இப்போ பார்த்துட்டேன், சந்தோஷமா சாவேன்!” என்றவரின் பேச்சில் பதறியவர், “ஏன் கோவில்ல வச்சு இப்படி பேசுறீங்க, வாயை மூடுங்க!” எனத் தழுதழுத்தக் குரலை சரிசெய்து கணவரை அதட்டினார் சிந்து. என்னப் பேச்சு இது என மனம் பதறியது அவருக்கு.

“சிந்து, என்னை மன்னிச்சுடுன்னு கேட்கக் கூட அருகதை இல்லாதவன் நான். காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டியையும் புள்ளையும் வச்சுக் காப்பாத்த துப்பில்லாதவன். நான் கல்லு மாதிரி உசுரோட இருந்தும் உங்களை இப்படி கஷ்டப்பட வச்சுட்டேனே! இந்தப் பாவியை மன்னிப்பீயா?” எனக் கேட்டு அவரது கையைப் பிடித்து அதை கண்களில் ஒற்றியவரின் விழிநீர் பெண்ணை நனைத்தது. சொக்கநாதன் உடல் அழுகையில் குலுங்கத் தொடங்க, மனதின் வருத்தத்தை வார்த்தைகளில் கொட்ட முயன்றார்.

“ஏன்ங்க, ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க… நடந்ததுக்கு எல்லாம் நீங்க காரணம் இல்ல, சந்தர்ப்ப சூழ்நிலையாலதானே இப்படி நடந்துச்சு, விடுங்க!” என்ற சிந்துவிற்கும் நடந்த நிகழ்வில் காயங்கள் அதிகம். இன்னுமே சுவடும் வலியும் அப்படியே இருந்தாலும், கணவரிடம் அதை மேலும் கூறி அவரை வருத்த விரும்பவில்லை. நடந்ததை மன்னிக்க முடியவில்லை, மறக்க முயற்சித்தார்.

“இல்ல சிந்து, நான் ஒரு கோழை. இந்தக் கோழைக்கு வாக்கப்பட்டு உன் வாழ்க்கை வீணாகிடுச்சே!” என்றவர் உடல் மேலும் குலுங்க, மனிதர் அப்படி அழுதார். இத்தனை நாட்கள் வலியும் வேதனையும் குற்ற உணர்வில் தவித்த நாட்களை எல்லாம் மனைவியிடம் இறக்கி வைத்து கண்ணீர் வடித்தவரைப் பார்த்து சிந்துவுக்கு விழியோரம் ஈரம் சுரக்க, மனம் பாரமானது.

error: Content is protected !!
Scroll to Top