உள்ளம் – 32.2

“அப்பாவும் அப்படித்தான் அண்ணி, அந்தப் பிரச்சனைக்குப் பிறகு எத்தனையோ தடவை சிந்துமாவை, குமரனைப் பார்க்க முயற்சி செஞ்சிருக்காரு. ஆனால், குமரன்தான் அவரைப் பார்க்க பிடிக்கலைன்னு திட்டிட்டான். அதுல இருந்து ரொம்பவே அமைதியாகிட்டாரு!” ஷெண்பா குரலில் வருத்தம் தொனித்தது.

“ஹம்ம், அப்போ இந்த ஐடியா ஒத்து வரும். ரொம்ப நாளா ரெண்டு பேரும் மீட் பண்ணவே இல்ல. சோ, இப்போ சந்திக்கும்போது அப்படியே பேசாம போக மாட்டாங்க. அட்லீஸ்ட் அவங்க பீலிங்க்ஸாவது எக்ஸ்ப்ரஸ் பண்ணுவாங்க. அதான் நமக்கு வேணும், உடனே சேர்த்து வைக்க முடியுமான்னு தெரியலை. இது ஒரு ட்ரைதான். முக்கியமான விஷயம் உங்க அண்ணன்கிட்ட இதை சொல்லிடாத. முதல்ல அவங்க ரெண்டு பேரும் பேசட்டும். அதுக்குப் பிறகு அவருக்குப் புரிய வைக்கலாம்!” என்று மனோ கூறவும், ஷெண்பா தலையைப் பலமாக அசைத்தாள்.

“தலையை ஆட்டுனா மட்டும் போதாது! உங்க அப்பாவை எப்படியாவது கோவிலுக்கு கரெக்ட் டைம்க்கு கூட்டீட்டு வரணும். இல்ல, ப்ளான் கொலாப்ஸ்ட்!” அவள் கூறி முடிக்கும் முன்னே,

“ஷ்யூர் அண்ணி, கண்டிப்பா அப்பாவை நான் கூட்டீட்டு வந்துடுவேன்!” என முந்திக்கொண்டு பதிலளித்தாள் ஷெண்பா.

பேச்சு முடிவுற, “அவ்வளோ தானே? நான் கிளம்பணும். டைமாச்சு ஷெண்பா, எதுனாலும் என் நம்பருக்கு கூப்பிடு, இல்ல மெசேஜ் பண்ணு!” என்ற மனோ கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு திரும்பவும், ஷெண்பா அவளருகே நெருங்கி நின்றாள்.

என்னவென உணரும்முன்னே அவளைக் கட்டி அணைத்திருந்த சின்னவள், “சாரி அண்ட் தேங்க்ஸ் அண்ணி, என் சிந்துமாவுக்காக நான் கூட யோசிக்கலை. பட், நீங்க இவ்வளோ தூரம் யோசிச்சு இருக்கீங்க. சந்தோஷமா இருக்கு. ஆரம்பத்துல உங்களை எனக்குப் பிடிக்கலை. என் குமரனைப் பங்குப் போட
வந்துட்டீங்களோன்னு கோபப்பட்டேன். பட், அது ரொம்ப தப்புன்னு தோணுது. என் விக்கி, குமரன் அப்புறம் அவருக்குப் பிறகு உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி. நான் எதுவும் உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி!” என்று பேசி விலகியவள் மனோவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். சிந்துவிற்கும் அவ்வப்போது இப்படித்தான் முத்தமிடுவாள். அதே போலத்தான் எண்ணி இவளுக்கும் முத்தம் கொடுத்தாள்.

ஏற்கனவே அவளது அணைப்பில் திகைத்திருந்த மனோ, இந்த முத்தத்தில் இன்னுமே கண்களை அகலவிரித்தாள். ஆனால், மற்றவளுக்கு அதெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. முகத்தில் புன்னகையுடன் ஷெண்பா அறையைவிட்டு வெளியேற, மனோ கட்டிலில் பொத்தென அமர்ந்துவிட்டாள்.

‘என்ன இந்தப் பெண்?’ என அவளால் வியக்காது இருக்க முடியவில்லை. உண்மையில் குமரன் கூறியது போல இவள் குழந்தைதான் எனத் தோன்றாமல் இல்லை. இருந்தும் அவளுக்குள்ளும் பிடிவாதக் குணமும், அண்ணன்களிடம் தான் மட்டுமே முதன்மை பெற வேண்டுமென்ற குரூர சந்தோஷமும் இருக்கத்தான் செய்தன. கன்னத்தை துடைத்த மனோவின் இதழ்களில் மென்னகை படராமல் இல்லை. தான் நினைத்த அளவிற்கு அவள் மோசமில்லை என எண்ணியவாறே மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

ஷெண்பா முதல் வேலையாகத் தந்தைக்கு அழைத்து வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரும்படி வற்புறுத்த, அவரும் சரியென்று ஒப்புக்கொண்டார். தன் கணவனிடம் கூட அதைப் பகிர்வில்லை அவள். எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரியென மனதிற்குள்ளே பூட்டிக்கொண்டாள்.

ஓரிரு நாட்கள் கடந்து வெள்ளிக்கிழமை வந்துவிட, காலையிலே ஆர்வ பரபரப்புத் தொற்றிக் கொண்டது ஷெண்பாவிற்கு.
திவாகரின் பார்வை அவளிடம்தான்.

அவளை கல்லூரியில் அவன் இறக்கிவிடவும், “ஈவ்னிங் என்னைக் கூப்பிட வராதீங்க. நான் சிந்து மா கூடக் கோவிலுக்குப் போறேன்!” என்றவளின் குரல் துள்ளியது. உடல்மொழியில் கூட அகம் பிரதிபலித்தது.

“ஷெண்பா, எந்தக் கோவிலுக்குப் போற? முகம் ரொம்ப ப்ரைட்டா இருக்கே!” என்றவன், “மனோகிட்ட என்ன காலையிலே ரகசியம் பேசுன. நான் வரும்போது அமைதியாகிட்ட!” சந்தேகமாக வினவியவனைப் பார்த்து பதட்டம் படர்ந்தது பெண்ணுக்கு.

‘ஐயோ, பார்க்கலை பார்க்கலைன்னு நினைச்சா, அத்தனையும் இந்த மனுஷன் கவனிச்சிருக்காரே!’ என மனதில் அலறியவள், “ஏன்… என் அண்ணிகிட்டே எனக்குப் பேச ஆயிரம் இருக்கும். இதெல்லாம் பொண்ணுங்க விஷயம், நீங்க கேட்கக் கூடாது!” என மிரட்டல் தொனியில் பேசிவிட்டுச் சென்றவளை திவாகர் சத்தியமாய் நம்பவில்லை. தனக்குத் தெரியாமல் ஏதோ செய்கிறார்கள் என்று மட்டும் புரிந்தவன், யோசனையுடன் வேலைக்குக் கிளம்பினான்.

மாலை கல்லூரி முடிந்ததும் ஷெண்பா விரைவாய் மனோஹரியைக் காண சென்றாள். உள்ளே நுழையும்போதே, “சிந்து மா, அண்ணி கிளம்பிட்டீங்களா?” எனக் குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தவளின் உதடுகள் கூடத்தில் அமர்ந்திருந்த குமரனைக் கண்டதும் பசை போட்டது போல ஒட்டிக் கொண்டது.

“வா ஷெண்பா…” குமரன் இயல்பாய் பேசவும், ஒரு நொடி விழித்துப் பின் சிரித்து வைத்தாள்.

“என்ன வரும்போதே ஏலம் போட்டுட்டே வர்ற… ஆமா, மனோவை என்ன சொல்லி கூப்பிட்ட?” என ஆச்சர்யத்தோடு வினவினான்.

“அது… அண்ணின்னு கூப்பிட்டேன் குமரா!” என அவன் முகம் பார்க்காது கைப்பையை ஓரமாய் வைத்தாள்.

“அதிசயமா இருக்கே, எலியும் பூனையுமா இருந்தீங்களே, எப்போ சமாதானமானீங்க?” எனக் கேட்டவனின் கரங்களில் சிந்து தேநீரைத் திணித்தார்.

“ஆமா டா குமரா, நீயே கேளு. இதையே நான் கேட்டா பதில் சொல்லாம மழுப்புறா இவ. மனோகிட்ட ஒரு வார்த்தையை வாங்க முடியலை!” என சிந்துவும் பேச, ஷெண்பா இருவரையும் கீழ்க்கண்ணால் முறைத்தாள்.

“என் அண்ணி, நாங்க அடிச்சுப்போம், கூடிப்போம். நீங்க தலையிடாதீங்க!” என்று உதட்டைச் சுழித்துவிட்டு அவனது அறைக்குள் நுழைந்தாள்.

மனோவும் அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வந்து குளித்து முடித்திருந்தாள். “அண்ணி, ரெடியாகிட்டீங்களா? நான் தலையை மட்டும் வாரிக்கிறேன்!” என சீப்பை எடுத்து தலையைப் பின்னத் தொடங்கினாள்.

“ஷெண்பா, ஏன் இவ்வளோ ஹைப்பராகுற, வெளிய உங்க அண்ணனுக்கு சந்தேகம் எதுவும் வந்துடப் போகுது!” மனோ அதட்டவும், அதையெல்லாம் அவள் காதில் வாங்கிக்
கொள்ளவில்லை. மனதில் கடவுளிடம் வேண்டுதல் வைத்தவாறே கிளம்பினாள் சின்னவள்.
சிந்துவும் கிளம்பி அவர்களுக்காகக் காத்திருக்க, மனோவும் ஷெண்பாவும் வெளியே வந்தனர்.

“போகலாமா சிந்து மா, நாங்க ரெடி!” பூஜைக் கூடையைக் கையிலெடுத்துக்கொண்டு ஷெண்பா முன்னே செல்ல, “போகலாம் வாங்க, நானும் கூட வர்றேன்” என குமரன் எழுந்து நின்றான். அதில் அவளின் நடை நிற்க, பதறிப்போய் திரும்பினாள்.

“எதுக்கு, நீ எதுக்கு கூட வர்ற. நாங்களா போய்ட்டு வந்துடுவோம், வேணாம் குமரா!” என்றாள் பதற்றமாய்.

“ப்ம்ச்… நான் வீட்ல சும்மாதானே இருக்கேன். நீங்க லேடிஸ் தனியா போறீங்க, அதான் வரேன்னு சொல்றேன்” குமரன் பதிலியம்ப, ‘இன்னைக்குன்னு பார்த்தா இவனுக்கு வேலை சீக்கிரம் முடியணும்!’ மனதிற்குள் பல்லைக் கடித்தாள்.

“வருஷம் முன்னூத்து அறுபத்து ஐஞ்சு நாள்ல ஒரு நாள் கோவிலுக்கு வர்றவன் எல்லாம் இப்போ திடீர்னு வந்தா, கடவுள் பயந்துடுவார் குமரா… அதனால நீ வீட்லயே இரு, வர வேண்டாம்!” என்றாள் பதட்டத்தை மறைத்து கேலியானக் குரலில். குமரனின் சந்தேகப் பார்வை இப்போது தங்கையை மொய்த்தது.

மனோஹரி அவளை முறைத்தவள், “பத்து நிமிஷம் கோவில் வந்துடும். நீங்க எதுக்கு, நாங்க போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்!” என்று அழுத்திக் கூறியவள், “ஷெண்பா, முன்ன நட!” என்றாள் அதட்டலாய். அந்தக் குரலில் அவள் வாயிலுக்கு விரைந்தாள்.

“ஆமா டா, நீ வீட்ல இரு, யாரும் வந்தாலும் வீடு பூட்டியிருக்க மாதிரி இருக்கும். அதனால் நீ இரு, நாங்க பத்து நிமிஷத்துல சாமி கும்பிட்டுட்டு வந்துட்றோம்!” என்ற சிந்து கூறவும், குமரன் அமர்ந்துவிட்டான். இரு பெண்களும் வெளியே சென்றனர்.

error: Content is protected !!
Scroll to Top