காலையில் எழுந்ததும் இரவு அழுதத் தடயம் எதுவுமின்றி பரபரப்பாய்க் கிளம்பிக் கொண்டிருந்தாள் ஷெண்பா. மனம் மட்டும் மனோவிடம் என்ன பேச வேண்டும் என மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தது. திவாகர் அவளை யோசனையாய்ப் பார்த்தவாறே உண்டு கொண்டிருந்தான். இரவு அழுததற்கும் இப்போதிருக்கும் முகத்திற்கும் துளிகூட சம்பந்தமில்லை என அவன் கண்கள் இடுங்கின.
தன்னைக் குறுகுறுவென பார்க்கும் பார்வைக் கொடுத்த உறுத்தலில் அவன் புறம் திரும்பியவள், “என்ன… என்னப் பார்வை?” என இடையில் கை வைத்து முறைத்தாள் இவள்.
அதில் புருவத்தைத் தூக்கியவன், “எப்படி டி நைட்டெல்லாம் அம்பியா இருக்க, காலைல அந்நியனா மாறிடுற?” எனக் கேட்டான். உதட்டோரம் சிரிப்பு நெளிந்தது திவாகருக்கு.
அவனது உவமையில் புன்னைகைக்க முயன்ற உதடுகளை இழுத்துப் பிடித்தவள், “உங்களைக் கட்டிக்கிட்டா, அப்படித்தானே இருக்க முடியும். பேசாம சாப்பிடுங்க…” என கிளம்பி வந்த ஷெண்பா உண்டு முடித்தாள்.
“காலைல இருந்து ஒரு மார்க்கமாதான் டி இருக்க. ஒன்னும் சரியில்லை!” என்று திவாகர் உரைக்கவும், உதட்டைச் சுழித்தாள் பெண்.
“காலேஜ் இன்னைக்கு ஹாஃப் டே தான். என்னை அண்ணன் வீட்ல இறக்கி விடுங்க!” என திவாகருடன் சென்று அங்கு இறங்கியவளின் முகம் அத்தனை தெளிவாயிருந்தது. அதில் திவாகருக்கு உதட்டோரம் புன்னகை அரும்ப, தலையை அசைத்து விடை பெற்றான்.
காலையிலே வந்து நின்ற மகளைக் கண்ட சிந்து, “என்ன ஷெண்பா, காலையிலே காலேஜ் போகாம இங்க வந்து நிக்கிற?” என வினவினார்.
“ஏன், நான் இங்க வரக் கூடாதோ?” சற்றே அங்கலாய்ப்புடன் கேட்டவள், கையிலிருந்த பையை மேஜை மீது வைத்துவிட்டு இருக்கையில் பொத்தென விழுந்தாள்.
“ப்ம்ச்… அப்படி சொல்லலை டி. காலேஜ்க்கு கிளம்பிட்டு, இங்க வந்திருக்கீயேன்னு கேட்டேன்!” என சிந்து சமாதானக் குரலில் கூறவும், “ஹம்ம்… இன்னைக்கு ஹாஃப்டே தான் சிந்து மா. பெருசா எந்த வேலையும் இல்லை, சோ லேட்டா போனாலே போதும்!” என நீட்டி முழக்கியவளின் பார்வை குமரன் அறைக் கதவை மொய்த்தது.
“சரி ஷெண்பா, சாப்டீயா? இட்லி சுட்டேன், எடுத்துட்டு வரவா?” என்ற சிந்து முந்தியை உதறிக்கொண்டு இருக்கையிலிருந்து எழ, “இப்போதான் சாப்ட்டு வரேன் மா. மதியத்துக்கு வேணா டிஃபன் கட்டிக் கொடுங்க!” என அவள் பதிலளிக்க, சரியென தலையை அசைத்தார் பெரியவர்.
“குமரன் எங்க சிந்து மா?” அவன் இல்லையென உறுதி செய்ய வினவினாள்.
“இப்போதான் சூளைக்கு அப்ரூவல் வாங்க டாக்குமெண்டை எடுத்துட்டுப் போனான். பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வந்திருந்தா, பார்த்திருக்கலாம்!” அவர் இயல்பாய்க் கூற, ‘அவனுக்குத் தெரியக் கூடாதன்னு தானே லேட்டா வந்தேன்’ என்று நினைத்தவள், “ஓ… சரி, சரி. நான் அண்ணிக்கிட்டே பேசீட்டு வரேன்!” என இயல்பாய் மனோவின் அறைக்குள் நுழைந்தாள். சிந்து அதை எட்டாவது அதிசயம் போல பார்த்திருந்தார்.
கதவு திறக்கும் ஓசையில் கண்ணாடியில் பதித்திருந்தப் பார்வையை வாயிலுக்கு மாற்றிய மனோவின் புருவம் வந்தவளைக் கண்டு கேள்வியாய் ஏறியிறங்கின.
ஷெண்பா எதுவும் பேசாது அவளை சங்கடமாய்ப் பார்க்க, “என்ன வேணும்?” எனக் கேட்ட மனோவின் குரல் ஏனோ அதட்டலாய் வந்தது.
“அண்ணி!” என்று ஷெண்பா தயங்கி ஏதோ கூற விழைய, “பரவாயில்லையே, ஒரு வழியா என்னை அண்ணியா அக்செப்ட் பண்ணிட்ட போல?” என மனோவின் இதழ்கள் வளைந்தன.
அதில் ஷெண்பா மற்றவளை லேசாய் முறைத்தாள். இவள் தோளைக் குலுக்கினாள்.
சில நொடிகளை மௌனம் விழுங்கிக் கொள்ள, “அண்ணி, சாரி அண்ணி…” ஷெண்பா தயங்கியவாறு கூற, குரலில் தவறு செய்துவிட்ட குற்றக் குறுகுறுப்பும், உண்மையான இறைஞ்சுதலும் வெளிப்பட்டன.
போலி ஆச்சர்யத்தை முகத்தில் காண்பித்த மனோ, “காலையிலே வந்து ஏன் மா இப்படி ஷாக் மேல ஷாக்கை கொடுக்குற… என் குட்டி ஹார்ட் தாங்காது!” என்றாள் கேலியாய். உதட்டோரம் நக்கலான புன்னகை பூத்தது.
“அண்ணி… ஐ யம் நாட் ஜோக்கிங். சீரியஸா பேச வந்திருக்கேன்” ஷெண்பா முகத்தை சுருக்கி மற்றவளை முறைத்தாள்.
“ஓ… சரி சொல்லு, என்ன பேசணும். சீக்கிரம் எனக்கு ஹாஸ்பிடலுக்கு டைமாச்சு!” பரபரப்பாய் கூறிய மனோ நேர் வகுடெடுத்து இருபுறமும் கொண்டை ஊசியைத் தூக்கிக் குத்தினாள்.
“நீங்க நேத்து சொன்னதை நான் யோசிச்சுப் பார்த்தேன் அண்ணி. நீங்க பேசுனது ரொம்ப சரி, நான் ரொம்ப செல்பிஷ்ஷா இருந்திருக்கேன்!” என்றவள் குரலில் வருத்தம் மேவ, முகம் லேசாய் வாடிப் போனது. மனோவும் அவளைத்தான் பார்த்திருந்தாள். பதிலேதும் இயம்பவில்லை. ஆனாலும் மனதினோரம் சிறு கீற்றாய் நிம்மதி படர்ந்தது, மற்றவளின் பேச்சில். ஒரு வழியாய் இந்தப் பெண் செய்த தவறை ஒப்புக் கொண்டாளே என்ற ஆசுவாசம் மனதில் வியாபித்தது.
“நீங்க சொன்னது போல செய்யலாம் அண்ணி!” இப்போது ஷெண்பா விழிகள் மின்ன கூற,
“நான் நேத்து நிறைய சொன்னேனே. எதை செய்யலாம்னு சொல்ற நீ?” என முகத்தைச் சுருக்கிய மனோவின் கைகள் முடியைப் பின்னலிடத் தொடங்கின.
“அதான் அண்ணி, சிந்துமாவையும் அப்பாவையும் சேர்த்து வைக்கிறதைப் பத்திதான்…” இவள் இழுக்க,
“ஓ… அதுவா! ஹம்ம், உன்னால முடிஞ்சா செய்!” என்றவளின் பதிலில் ஷெண்பா முகத்தில் ஒளி மங்கத் தொடங்கியது.
“நைட்டெல்லாம் யோசிச்சேன். எனக்கு எந்த ஐடியாவும் வர மாட்டுதே!” என்றவள் குரலில் உண்மை இருந்தது. இரவு முழுவதும் இதைப் பற்றிய சிந்தனைதான் மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. மனோவின் கூற்றுப்போல சிந்துவும் சொக்கநாதனும் சமாதானமடைந்து விட்டால் எனத் தோன்றவும், அந்த எண்ணமே அத்தனை தித்திக்கச் செய்ய, எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்றுதான் விடிந்ததும் இங்கே வந்துவிட்டாள். கல்லூரிக்கு கூட அரைநாள் அவளாக விடுப்பெடுத்திருந்தாள்.
“என்கிட்ட கேட்டா, எனக்கு எப்படித் தெரியும்? ஹம்ம், நீதானே இத்தனை வருஷம் அவங்களோட வாழ்ந்திருக்க, உனக்குத் தெரியாததா எனக்குத் தோணப் போகுது!” மனோ விட்டேற்றியாகப் பேச, இவளது முகம் விழுந்து போனது. அவ்வளவுதான் என் பேச்சு என்பது போல அவள் கண்ணாடியின் புறம் திரும்பிக் கொண்டாள்.
நிமிடங்கள் கடந்தும் ஷெண்பா அதே இடத்திலே நிற்க, கடைசி பின்னலையிட்டு அதை இழுபட்டையால் இரண்டு சுற்று சுற்றி முடியைத் தூக்கி முதுகுபுறம் விட்ட மனோ, “ஷெண்பா, கதவை நல்லா சாத்தீட்டு, உள்ள வந்து உட்காரு!” எனக் கூறி பெருமூச்சுவிட்டாள்.
அவளது பேச்சில் நொடியில் சின்னவளின் முகம் மலர்ந்துவிட, கதவை நன்றாய் இழுத்து சாற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்த மனோ,
“ஹம்ம், வெள்ளிக்கிழமை எப்பவுமே அத்தை கோவிலுக்குப் போவாங்க. அன்னைக்கு உங்கப்பாவையும் வரச் சொல்லு. கோவில்ல வச்சு மீட் பண்ண வைக்கலாம்!” என்றாள்.
“மீட் பண்ற வாய்ப்பு அமையலைனா அண்ணி?”
“அதெப்படி அமையாம போகும், அதெல்லாம் மீட் பண்ண வைக்கலாம். எனக்குத் தெரிஞ்சு அத்தைக்கு மாமாவைப் பார்க்கணும், பேசணும்னு உள்ளுக்குள்ள ஆசையிருக்கு. ஆனால், மகனுக்காகப் பார்த்து அமைதியா இருக்காங்க!”