உள்ளம் – 31.2

“சரியான சுயநலவாதி கூட்டம் நீங்க எல்லாம். உங்களையே சுத்தி சுத்தி வர்ற அந்த மனுஷியை சொல்லணும்…” வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவள், “உங்க அப்பா, அம்மா உங்களை சரியா வளர்க்கலை. ஆனால், என் அப்பா, அம்மா என்னை நல்லா வளர்த்து இருக்காங்க. எது செஞ்சாலும் நல்லது கெட்டதை ஆராயணும்னு சொல்லிதான் வளர்த்தாங்க. அடுத்தவங்களுக்கும் மனசிருக்கும், அதை மதிக்கணும்னு என் அம்மா நிறைய தடவை சொல்லி இருக்காங்க. அதான் உங்க அண்ணனை எனக்கு எவ்வளோ பிடிஞ்சிருந்தும், அப்பா, அம்மா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண மாட்டேன்னு நின்னு, அவங்க சம்மதம் கிடைச்சதும் பண்ணேன். ஏன் உங்களை மாதிரி உன் அண்ணனை எனக்கு இழுத்துட்டுப் போகத் தெரியாமலா இருக்கு?” எனக் கேட்டு இடம் வலமாத் தலையை அசைத்தவள், “எனக்கு உங்க அண்ணன் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு என்னைப் பெத்தவங்களோட மரியாதை முக்கியம். உன்னை மாதிரி யாரைப் பத்தியும் யோசிக்காம இருக்க முடியாது என்னால… என் குணமும் அதில்லை!” என நறுக்குத் தெரித்தாற் போல பேசியவள் குரல் ஷெண்பாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருந்தது.

“ச்சு… உன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லீட்டு இருக்கேன் பாரு… இப்போ நீ என்ன நினைக்கிறன்னு நான் சொல்லவா? உங்க அன்பு அண்ணன் வந்ததும், நான் பேசுனதை ஒப்பிச்சுடுவ… அவர் கோபத்துல என்கிட்ட சண்டைக்கு வருவாரு. அதைப் பார்த்து சந்தோஷப்பட்ற குரூர மனசு தானே உன்னோடது!” என்றவளின் உதடுகள் கேலியாய் வளைய, இருக்கையிலிருந்து எழுந்தாள். சரியாய் அந்நேரம் குமரன் உள்ளே நுழைந்தான்.

விழிகளில் வழிந்த நீரைத் துடைக்கக் கூடத் தோன்றாது எதிரிலிருந்த மனோவை வெறித்துக் கொண்டிருந்தாள் ஷெண்பா. அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இவளை சாட்டை போல சுழற்றி அடித்தன. உண்மை முகத்தில் அறைந்தது. தான், தன்னுடைய விருப்பம் மட்டுமே பிரதானம் என்றிருந்து விட்டோமே! சிந்துமாவைப் பற்றி யோசிக்கவில்லையே என மனம் அந்நொடி பதைபதைத்துப் போனது.

“ஷெண்பா, என்னாச்சு… ஏன் அழற?” அவளுடைய முகத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கியவனின் மூளைக்குள் மணியடித்தது. மனைவியைத் திரும்பிப் பார்த்தவன், “மனோ, அவகிட்ட என்ன பேசுன?” என அவளை அதட்டிக் கேட்டான்.

“நான் என்ன பேசுனேன்.. உங்க தங்கச்சியைக் கேளுங்க. என்கிட்ட எதுக்கு கேட்குறீங்க?” கையைக் கட்டி நின்றவளின் பாவனையில் அத்தனை அலட்சியம். ஷெண்பாவின் பார்வையும் அவளிடம்தான். ‘நீ அவரிடம் நான் பேசியதைக் கூறினாலும் அது எந்த வகையிலும் என்னைப் பாதிக்காது’ என்றொரு பாவனையில் நின்றிருந்தாள் மனோ.

“ஷெண்பா, உன்கிட்டதான் கேட்குறேன்… ஏன் அழற?” எனக் குமரன் இருமுறை உலுக்கியப் பிறகு நிகழ்காலத்திற்கு வந்து, “அண்ணா…” என அவனை இறுக அணைத்தவளுக்கு அழுகைத் தொண்டையை அடைத்தது. கேவி வந்த தேம்பலுடன் அவன் முகம் பார்க்காது குனிந்தாள். உடல் அழுகையில் குலுங்கியது.

“ஷெண்பா… ஷெண்பா மா, என்னாச்சு டா… ஏன் இப்படி அழற? என்ன பிரச்சனை?” குமரன் பதட்டமாய்க் கேட்க, மனோஹரி உதட்டை வளைத்து அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.

“ஷெண்பா, இப்ப தானே சொன்னேன் அழாதன்னு, மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்டீயா?” என்ற சிந்து, இரண்டு தோசைகளை அவளுக்காக சுட்டு எடுத்து வந்திருந்தார்.

“ம்மா, எதுக்கு இவ இப்படி அழறா?” குமரன் பார்வை தாயை சமீபிக்க, அவர் திவாகர் ரங்காவைப் பார்த்துப் பேசியதை விளக்கினார்.

“அதை சொல்லித்தான் அழுதுட்டு இருந்தா டா. சமாதானம் பண்ணிட்டு தோசை சுடலாம்னு போனேன், அதுக்குள்ள மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்டா!” என்றவர் சேலை முந்தானையால் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

“மொறுகலா தோசை சுட்டிருக்கேன்… உட்காரு டி, நானே ஊட்டுறேன்!” என அவளை அருகே அமர்த்தி உணவை ஊட்டுபவரைப் பார்த்து இவளுக்கு நெஞ்சடைத்துப் போன உணர்வு. தங்களையே உலகமென சுற்றி வரும் இந்தப் பெண்மணிக்கு தாங்கள் நியாயம் செய்யவில்லையோ என்ற கேள்வி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்ற ஆரம்பித்தது. உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கியவள், “சாரி சிந்து மா!” என்றாள் குற்றவுணர்வு மேவியக் குரலில்.

அவள் கூற்றின் சாரம்சம் புரியாத சிந்து, “ச்சு… அதான் சொன்னேன் இல்லை டா. அதை விடு நீ, சாப்பிடு!” என அதட்டி உருட்டி அவளுக்கு உணவை ஊட்டிவிட, சத்தியமாய் உணவு ருசிக்கவில்லை, தொண்டைக்கு கீழே இறங்கவில்லை. குமரன் பெருமூச்சைவிட்டு அகன்றான்.

உணவை உண்டு முடித்தவள், “சிந்து மா, இந்த பத்து வருஷத்துல ஒரு தடவைக் கூட அப்பாவைப் பார்த்துப் பேசணும்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?” என வினவ, சிந்துவின் முகத்தில் அத்தனை அதிர்ச்சி. அவரது பாவனையே உள்ளத்தை எடுத்துரைக்க, மனோவின் வார்த்தைகள் ஷெண்பாவை நெருஞ்சியாய்த் தைத்தன.

இப்போது மகளாய் அல்ல, சகப்பெண்ணாய் சிந்துவின் உணர்வுகளை முதன்முதலாக உள்வாங்கினாள். அவரது முகமே விருப்பத்தை எடுத்து இயம்ப, இத்தனை நாட்கள் இந்தப் பெண்மணியின் விருப்பத்தை மதிக்காது விட்டுவிட்டோம் என்ற உண்மையை அறிந்து வருந்தினாள்.

“ப்ம்ச்…ஷெண்பா, எதுக்கு இந்தப் பேச்சு இப்போ, விடு!” என அகன்றவர் இல்லையென ஒரு வார்த்தைக் கூறாததிலே ஷெண்பாவிற்குப் புரிந்தது. சிந்து வாயைத் திறந்து உரைக்கவில்லை. ஆனால், சொக்கநாதன் எத்தனையோ முறை சிந்துவைப் பற்றி வருந்திப் பேசியதைக் கேட்டிருக்கிறாள். இரண்டு பெரியவர்களுக்கும் ஒருவரின் அருகாமை மற்றவருக்கு வேண்டுமென புரிந்தது.‌ அவளறிந்தவரை சிந்துவும் சொக்கநாதனும் ஆதர்ச தம்பதிகள். வாய் வழியாய் உரைக்காது தந்தையின் முகம் பார்த்து அவரது அகம் அறியும் சிந்துவைக் கண்டு சிறு வயதிலே வியந்திருக்கிறாள். இருவருக்கும் இடையில் சுமதி, தங்கம்மாளைத் தவிர்த்து பிரச்சனைகள் என்று பெரிதாய் எதுவும் இருந்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்திருக்கிறார்கள், தாங்கள்தான் அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் எனத் தாமதாய் புத்திக்குப் புரிய, உவர் நீரைத் துடைத்துக் கொண்டாள். அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது மூளை சற்றே மழுங்கியிருந்தது. அழுத முகம் வீங்கிப் போய்விட்டது.

திவாகர் அவளை அழைத்துச் செல்ல வந்தான். அவனிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசாதவள், வீட்டிற்கு சென்றதும் உடைமாற்றி அமைதியாய் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள். அவளைப் புருவம் சுருங்கப் பார்த்த திவாகருக்கு மனைவியின் முகத்தை வைத்து அழுதிருக்கிறாள் என்பது புரிந்தது. என்னவென்று யோசித்துக் கொண்டே தானும் உடைமாற்றிவிட்டு அவளருகே படுத்தான்.

“ஷெண்பா!” என தூரமிருந்தவளை அருகே இழுத்து அணைத்துக் கொண்டவனின் கரங்கள் அவளின் தலையை வருடவும், மீண்டும் ஷெண்பாவிற்கு அழுகைப் பொங்கியது.

அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவள், “நான் ரொம்ப செல்ஃபிஷ்ங்க. என் சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்னு யாரைப் பத்தியும் யோசிக்கிறது இல்லலைங்க?” என்று மெலிதாய்த் தேம்பியவளைப் பார்த்த திவாகர், “என்னாச்சு ஷெண்பா, வீட்ல யாரும் எதுவும் சொல்லீட்டாங்களா?” என வினவினான்‌.

அவன் கேள்விக்குப் பதிலளிக்காதவள், கண்ணீரை உகுக்கவும் மேலும் எதையும் கேட்காது அவளை சமாதானம் செய்து தூங்க வைத்தவனுக்கு மனைவியின் அழுகையில் தூக்கம் எட்டாக்கனியாகி இருந்தது. காலையிலே கலங்கி நின்றவளை இவனும் பார்த்தான்தான். ஆனால், அதை தனக்குக் காண்பிக்காது அவள் அகன்றிருந்ததை உணர்ந்தவன், இரவு பேசலாம் என விட்டுவிட்டான். அவர் பேசியதால்தான் இந்த அழுகை என நினைத்து அவளைத் தட்டி கொடுத்து, தலை வருடி, கன்னம் துடைத்து மெதுவாய் உறங்கச் செய்திருந்தான். என்று இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வருமென மனம் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தது.

அறைக்குள் நுழைந்த குமரனை மனோஹரி நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தாள். “சாரி மனோ…” அவன் மன்னிப்பைக் கேட்கவும், “எதுக்கு இந்த சாரி?” என அவள் புருவத்தை உயர்த்தினாள்.

“இல்ல, நீதான் கோபத்துல ஷெண்பாவை எதுவும் பேசிட்டீயோன்னு உன்கிட்ட கோபமா பேசிட்டேன் டி… சாரி!” என்றவன் அவளது கையைப் பிடிக்க, கோணலாய் மனைவியின் இதழ்கள் வளைந்தன.

“சாரியை வாபஸ் வாங்கிக்கோங்க, உங்கத் தங்கச்சி அழுததுக்கு நான்தான் காரணம். ஆமா, நீங்க வர்றதுக்கு முன்னாடி நான்தான் அவகிட்ட பேசிட்டு, சாரி அவ செஞ்ச தப்பெல்லாம் சொல்லீட்டு இருந்தேன்!” என்றாள் அலட்சியமாய்.

குமரன் அவளை முறைக்க, “இந்த முறைப்பெல்லாம் வேணாம். உங்களுக்கு உங்கத் தங்கச்சி தங்கமா இருக்கலாம், அவ என்ன பண்ணாலும் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க‌. உங்களாலதான் ஷெண்பா இப்படி இருக்கா. இனிமே மாத்தணும், அவ செஞ்ச, செய்ற தப்பை புரிய வைக்கணும். என்னால உங்களை மாதிரி அமைதியா இருக்க முடியாது. அவக் கூட சண்டை போடுவேன், திட்டுவேன், ஏன் நாளைக்கே கூட நாங்க ரெண்டு பேரும் ராசியாகிடுவோம். நீங்க உள்ள வராதீங்க!” என்று மனோ ஒரே வார்த்தையில் கணவனது பேச்சைத் தடை செய்திருக்க, அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது.

“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, போங்க… போய் படுங்க!” எனப் படுக்கையைச் சரிசெய்தாள்.

“அவளை ரொம்ப திட்டீடியா மனோ, பாவம் டி ஷெண்பா. தெரிஞ்சு எதையும் செய்ய மாட்டா!” தங்கையின் மீதான கரிசனத்தில் குமரன் வார்த்தைகள் வந்து விழ, அவனை கீழ்க்கண்ணால் முறைத்தவள், “அவளா திருந்துனா கூட, நீங்க விட மாட்டீங்க இல்ல?” எனக் கேட்டாள். அவன்
பதிலளிக்காது நகர,
‘இப்பேவே கண்ணைக் கட்டுதே!’ என நினைத்து உறங்கிப் போனாள் மனோஹரி.

மறுநாள் ஷெண்பா ஏதோ முடிவெடுத்தவளாக மனோவிடம் வந்து நின்றிருந்தாள்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top