மறுநாள் ஷெண்பா கல்லூரி முடிந்து இங்கே சிந்துவைப் பாரக்க வந்துவிட்டாள். திவாகருக்கு அழைத்து வேலை முடிந்ததும் தன்னை உடன் கூட்டிச் செல்லுமாறு கூறிவிட்டு தாயுடன் அமர்ந்துவிட்டாள்.
வந்ததிலிருந்து ஷெண்பாவின் முகம் வாட்டமாய் இருந்ததை சிந்துவும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். “ஷெண்பா குட்டி, என்னாச்சு டா? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என அவள் முகத்தை வருடினார். அவர் கைகளைப் பிடித்து தன் கரங்களில் புதைத்துக் கொண்டாள் சின்னவள்.
“ஒன்னும் இல்ல சிந்து மா, அவர் நேத்து அவங்க அப்பாகிட்ட பேசப் போனாரு!” என ஆரம்பித்தவள் சிந்துவின் முறைப்பில், “என்னோட மாமனார்கிட்டே பேசப் போனாரு…” என்று வார்த்தையைத் திருத்தி நடந்த அனைத்தையும் கூறி முடித்துப்பின், அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.
“தப்பு பண்ணிட்டோம் சிந்து மா. பாவம் அவர், எனக்காக ரொம்ப கஷ்டப்படுறாரு. நான்தான் அவசரக் குடுக்கை, எல்லாருக்கும் கஷ்டம் கொடுக்குறேன். அந்த சிட்சுவேஷன்ல எனக்கு எதுவுமே தோணலை சிந்து மா. உங்களை, குமரனைவிட்டுப் பிரியக் கூடாதுன்னு பயம் மட்டும்தான் இருந்துச்சு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால், இப்போ புரியுது, தப்புதான். திருத்த முடியாது. கட்டாயத்துக்காகத்தானே எல்லாரும் ஏத்துக்கிட்டீங்க? உங்க மனசுலயும் கசப்பு இருக்கு தானே?” எனக் கேட்டவளின் குரல் உள்ளே சென்றிருக்க, விழியோரம் ஈரம் படர்ந்தது. கொஞ்சமல்ல, தான் செய்த ஒரு தவறு அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது என புத்திக்கு உறைத்தது. இருந்தும், செய்துவிட்ட காரியத்தை மாற்ற முடியாதே என எண்ணி கண்ணீர் வடித்தாள் ஷெண்பா. சுமதி வேறு மகளை இன்னுமே முறைத்துக்கொண்டே சுற்றினார். இன்று காலையில் அவளாக அழைத்துப் பேச முயன்றபோதும் அவர் மன ஆதங்கத்தை வார்த்தைகளால் கொட்டி அழைப்பைத் துண்டிக்க, அதில் இவளுக்கு மனதில் பாரமேறியது.
எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்தை உண்டு பண்ணியிருக்க, திவாகர் முன்பு எதையும் அவள் காட்டிக்கொள்ள விழையவில்லை. ஏற்கனவே குற்ற உணர்வில் இருப்பவனை தானும் கஷ்டப்படுத்தக் கூடாது என்றுதான் நேற்று அந்தப் பேச்சை அவன் தவிர்த்ததும் அப்படியே விட்டுவிட்டாள். இருந்தும் மனதிரோம் அரித்துக்கொண்டே தான் இருந்தது. கல்லூரி முடிந்ததும் இங்கே கிளம்பி வந்துவிட்டாள். தாயின் இடத்தை சிந்துவைத் தவிர யாராலும் நிரப்ப முடியாது என மனதில் ஆழப்பதிந்திருக்க, மனப்பாரத்தை அவரிடம் இறக்கி வைக்க வந்திருந்தாள்.
ஷெண்பாவின் தலையை ஆதரவாகக் கோதிய சிந்து, “செஞ்ச தப்பை உணர்ந்துட்டாலே, இனிமே இது மாதிரி செய்ய மனசு வராது டா. தப்புதான், அதை சரிசெய்ய முடியாது. ஆனால், நீங்கதான் இந்த விஷயத்துல பெரியவங்க கோபப்பட்டாலும் விட்டுக் கொடுத்துப் போகணும். கண்டிப்பா மனோ அப்பா உங்களைப் புரிஞ்சுப்பாரு டா. இதுதான் உனக்கு கடைசி, எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு நீயா செய்யக் கூடாது. எதுவா இருந்தாலும் நல்லது, கெட்டதை யோசிச்சுப் பழகு. உங்க அண்ணன் ரெண்டு பேரும் இன்னும் உன்னைக் குழந்தையா பார்க்குறதால, நீ சின்னப்புள்ளை இல்ல. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, நாளைக்கு அந்த வீட்டுக்கு நீ வாழப் போகும்போது எல்லாரையும் அனுசரிச்சு நடக்கணும்!”
“அம்மாவும் மாமியாரும் என்னைக்கும் ஒன்னாக முடியாது ஷெண்பா. மனோகிட்ட பேசுற மாதிரி ராதா உன்கிட்ட பேச மாட்டாங்க. அதே மாதிரி நான் மனோவுக்கு அம்மா ஸ்தானத்தைப் புடிக்க முடியாது.
நீ இங்கே அடம் பிடிக்கலாம், செல்லம் கொஞ்சலாம். ஆனால், அங்க அப்படி எதுவும் செய்யக் கூடாது. உன்னோட பொறுப்பை உணரணும். நீ செய்ற எல்லாமே இப்போ ரெண்டு குடும்பத்தையும் பாதிக்கும். செஞ்ச தப்பை நினைச்சு வருந்துறதை நிறுத்து ஷெண்பா. இனி நடக்கப் போறதை யோசி. அதான் எல்லாருக்கும் நல்லது!” எனப் பேசியவருக்கு இவள் பதிலளிக்கவில்லை. மனோஹரி இரவு சமையலுக்கு சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். அவளது காதில் இவர்களது உரையாடல் நன்றாய் விழ, பெரிதாய் அலட்டிக்
கொள்ளவில்லை பெண். செய்த தவறுக்கான தண்டனையை அவர்கள் அனுபவித்துதான் ஆக வேண்டுமென நியாய மனது கூறியது.
ஷெண்பா வந்ததும் இவள் வேலை இருப்பது போல சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். ஏனோ அவளது செய்கைகள் அனைத்தும் மனோவை கோபப்படுத்துவது போலொரு எண்ணம். இரண்டு அண்ணன்களுக்கும் ஆசை தங்கையாய் இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் அதை மற்றவருக்கு நிரூபிக்க வேண்டுமென்பது போல அவளது செயல்கள் இருப்பதை மனம் தாமதமாக்கத்தான் உணர்ந்தது. அதிலிருந்தே அவள் மீது வெறுப்பில்லை எனினும் கோபம் அதிகமாய்ப் படர்ந்தது. அதனாலே அவள் வருகையை விரும்பவில்லை என்பதைப் போல முகத்தை வைத்திருந்தவள், அவ்விடத்தைவிட்டு அகன்றிருந்தாள்.
சிறிது நேரம் மௌனம் ஆட்சி செய்ய, “சரி, நீ கண்ணைத் துடைச்சு எழுந்து உட்காரு ஷெண்பா. நான் உனக்குப் புடிச்ச வெங்காய தோசை சுட்டுக்கொண்டு வரேன்!” என சிந்து மகளை எழுந்தமர வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைய, மனோஹரி வெளியே வந்து கூடத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவளது பார்வை ஷெண்பாவை துளைக்க, “என்ன, எதுக்கு இப்படி பார்க்குறீங்க?” என முறைத்தாள் மற்றவள்.
தோளை அலட்சியமாகக் குலுக்கிய மனோ, “அட்லீஸ்ட் இப்போவாது நீ செஞ்ச தப்பை ரியலைஸ் பண்ணியேன்னு நினைச்சதும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. எங்க நீ புடிச்ச முயலுக்கு மூனு காலுன்ற மாதிரி கடைசிவரை அப்படியே இருந்துடுவன்னு நினைச்சேன். பரவாயில்லை, கொஞ்சம் திருந்துற எண்ணமும் இருக்கு போல உன்கிட்ட. ரைட்?” என கேட்டவளின் குரலில் அத்தனை நக்கல்.
“நான் என்ன தப்பு செஞ்சேன், எதுக்காகத் திருந்தணும்?” ஷெண்பா சீறலாய்க் கேட்டாள். அவளது அலட்சிய பாவனை இவளை உசுப்பேற்ற, விழிகளில் வழிந்த நீர் நொடியில் வற்றியிருந்தது.
“பார்த்தீயா, இப்போதான் திருந்தி, செஞ்ச தப்புக்காக பீல் பண்ணி அழுகுறன்னு நினைச்சேன், இல்லைன்னு ஆக்கிட்ட. உங்களுக்கான பனிஷ்மெண்ட் ரொம்ப கரெக்ட். என் அண்ணன் இந்த விஷயத்துல சரியா முடிவெடுத்திருக்கான். கொஞ்ச நாள் ரெண்டு பேரும் தனியா இருங்க. என் அப்பா, அம்மா நிம்மதியா இருக்கட்டும். இருக்க அறைகுறை நிம்மதியையும் பறிச்சு கடைசி காலத்துல அவங்களை நிம்மதியில்லாம அலைய விட்றாதீங்க. அண்ட் என் அம்மா, அப்பாவை கஷ்டப்படுத்துற மாதிரி புருஷனும் பொண்டாட்டியும் எதாவது செஞ்சா, நான் அதைப் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்!” என்றாள் அடிக்குரலில். மெதுவாய் பேசினாலும் அதில் அழுத்தமிருந்தது. சிந்துவின் கவனத்தை ஈர்க்காது மெலிதாய் அதட்டலாய் உரைத்தாள்.
“ரொம்ப பேசுறீங்க நீங்க…” ஷெண்பா பல்லைக் கடித்தாள்.
“என்ன ரொம்ப பேசுறேன் நான், உள்ளதை தானே பேசுனேன். நீங்க செஞ்ச தப்பை சொன்னதும் கோபம் வருதா. உப்பு திண்ணவன் தண்ணிக்
குடிச்சுதான் ஆவனும். அதனால துள்ளாத…” என்றவள், “அதான் அத்தையே சொன்னாங்களே, இன்னும் உன் பாசமான அண்ணன்ங்க ரெண்டு பேரும் உன்னைக் கொஞ்சிக்கிட்டே இருக்கதால நீ சின்ன பாப்பா இல்ல. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி நீ எது பண்ணாலும், என் பொறந்த வீடு, புகுந்த வீடு ரெண்டையும் பாதிக்கும். அதனால நீ என்ன பண்ணாலும் பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைக்காத!” என்றவள் குரலில் அத்தனை தீவிரம்.
“என் அண்ணன் இல்லைன்ற எண்ணத்துல தானே இவ்வளோ பேசுறீங்க. அவன் இருந்தா, உங்களால் பேச முடியாது!” என்றவள், குமரனிடம் அனைத்தையும் ஒப்பிக்க வேண்டுமென மனதில் உருப்போட்டாள்.
“ஓ…உங்க அண்ணனுக்கு நாங்கப் பயந்துட்டு இருக்கோம் பாரு. அவர் வரட்டும், அவர் முன்னாடியே இதெல்லாம் கேட்பேன். ஏன்னா, நான் எந்த தப்பும் செய்யலை. அதனால யாருக்கும் பயப்படணும்னு அவசியம் இல்ல!” என்று சில நொடிகள் அமைதியாயிருந்த மனோ, “உங்க அண்ணன் ரெண்டு பேரோட அன்புக்கு சுத்தமா தகுதியில்லாதவடி நீ. அவங்க ரெண்டு பேரும் உன்னைத் தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. ஆனால், நீ சுத்த சுயநலவாதி. உனக்கு உன் சந்தோஷம் மட்டும்தான் முக்கியம்!” என்றவளின் பேச்சில்
ஷெண்பாவின் முகம் கோபத்தில் தகித்தது.
“ஷட் அப்!” சீறலாய் உரைத்த ஷெண்பா, “என்ன நான் அப்படி சுயநலமா செஞ்சதைப் பார்த்தீங்க. வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க!” என்றவள் விழிகளில் நீர் கோர்க்கத் தொடங்கியது.
“என்ன சுயநலவாதியா… இதோ எங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணது என்ன பொது நல சேவை செய்யவா? உனக்கு உங்க அண்ணன் கூடவே இருக்கணும். அதுக்கு எவன் வீட்ல என்ன நடந்தா நமக்கென்னன்னு என் அண்ணனைக் கல்யாணம் பண்ணுவ. உனக்கு உன் ரெண்டு அண்ணன் வேணும், சிந்து மா வேணும். அதே மாதிரி அவங்க கூட நீ நினைச்சதைதான் செய்யணும், உன் பேச்சுக்கு தாளம் போடணும். உன் அடமெண்ட் கேரெக்டர் அப்படி. அவங்க நீ நினைக்கிறதை செய்யலைன்னதும் ஈகோவைத் தூக்கிப் பிடிச்சுட்டு பத்து வருஷம் பேசாம ஒதுக்கி வைப்ப. திடீர்னு ஞானோதயம் வந்ததும், அண்ணான்னு கிட்டே வருவ, உருகுவ, அண்ணனுக்காக வாழ்க்கையைத் தியாகம் பண்ணிட்டேன்னு குடும்பத்தையே சமாதானம் செய்வ. அப்புறம் என்ன, எல்லாரும் உன்னை அக்செப்ட் பண்ணதும் உன்னோட கம்ஃபர்ட் சோன் உனக்கு வந்துடுச்சு. குடுத்து வச்ச வாழ்வு தான் ஷெண்பா… இப்போ உன் அண்ணன்களோட சேர்ந்து என் அண்ணனும் உன் பக்கம்தானே நிக்கிறான். நல்ல வாழ்வுதான் போ!” என்றாள் எள்ளலாய். வார்த்தைகளில் கோபம் தெறித்தது. ஷெண்பா விழிகளில் வழியும் கண்ணீரோடு மனோவை வெறித்தாள். தன்னைப் பற்றி அவளின் கருத்துக்கள் அனைத்தும் சரியென மூளை கூற, மனதை முன்னிறுத்தி எதிர்வாதம் செய்தாள்.
“சிந்து மா, சிந்துமான்னு உருகுறீயே… அந்த சிந்துமாவுக்காக என்ன செஞ்ச நீ?” என அழுத்திக் கேட்டவள், “ஒன்னுமே செய்யலை… நீ மட்டும் இல்லை, உன் அண்ணன் கூட இந்த விஷயத்துல செல்பிஷ்தான். அவருக்கு அவரோட அம்மா வேணும், மரியாதை முக்கியம். அதனால அத்தை விருப்பத்தை மதிக்காம தனியா கூட்டீட்டு வந்துட்டாரு. அவர் கூட பரவாயில்லை, நீ ரொம்ப பெரிய சுயநலவாதி. உனக்கு உன் குடும்பமும் வேணும், என் புருஷன், மாமியார் எல்லாருமே வேணும். ஆனால், சிந்து அத்தைக்கு என்ன வேணும், அவங்க விருப்பம் என்னென்னு ஒரு நாள், ஒரு நிமிஷம்… ம்ஹூம்… ஒரு நொடி யோசிச்சு இருப்பீயா? நான் சொல்றேன் சத்தியமா இல்லை தானே?”
“உனக்கு கல்யாணமாகி ஒரு பத்து இல்ல, ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு என் அண்ணன்கிட்டே இருந்து உன்னைப் பிரிச்சு வச்சா, தனியா வாழ முடியுமா உன்னால? நிச்சயமா முடியாது… இந்த வயசுலயே உனக்குத் துணை தேவைப்படுதே, வயசானக் காலத்துல அவங்களுக்கு துணை வேணும்னு நீயும் உங்கொண்ணனும் ஒரு நாள் ஒரு பொழுது நினைச்சுப் பார்த்திருப்பீங்களா?”
“அட! எங்கப்பா உங்களுக்கு பாசமலர் படம் ஓட்ட, நீ நினைச்சதை சாதிச்சுக்கவே நேரம் பத்தாது. அப்புறம் எப்படி என் அத்தையை!” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவள், “என் அத்தையைப் பத்தி, அவங்க தனியா இருக்காங்களே, அவங்களை என் மாமனாரு, அதான் உங்க அப்பாவோட சேர்த்து வைக்கணும்னு நினைக்க நேரம் இருந்திருக்கும். நீங்க உங்க வாழ்க்கையைப் பார்த்துட்டு சந்தோஷமா இருங்க!” என்றவள் வார்த்தையில அத்தனை கொதிப்பு. மனதிலிருந்த அனைத்தையும் வார்த்தைகளாய்க் கொட்டினாள் மனோஹரி. இத்தனை நாட்கள் சேர்த்து வைத்தக் கோபமெல்லாம் பிரவாகமாகப் பொங்கியது.