உள்ளம் – 30.3

“ஏய்… அப்படியெல்லாம் இல்லை ஷெண்பா… அதான் சொன்னேனே, வொர்க் லோட்!” என்றான் பதறிப்போய்.

அந்தப் பேச்சை அப்படியே கத்தரித்தவள், “அங்கிள் என்ன சொன்னாரு?” என வினவினாள். அவளை நிமிர்ந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டவன், நடந்ததைக் கூறி முடித்தான். காலையில் பார்த்த தந்தையின் ஓய்ந்த தோற்றம் இப்போதும் அவனுக்கு கவலையைக் கொடுத்தது. குரலில் வேதனையுடன் அவன் கூறி முடிக்கவும், ஷெண்பாவின் கண் இரைப்பைகள் நீரை உகுக்கத் தயாராகின.

“கொஞ்சம் யோசிச்சுப் பண்ணியிருக்கலாம்னு தோணுது ஷெண்பா. அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்னு இப்போ நினைக்கிறேன். எல்லாம் என் தப்புதான்!” வருத்தம் தோய்ந்து வந்தக் குரலில் இவளுக்கு நெஞ்சடைத்தது.

அவனது முகத்தை தன் வயிற்றிலிருந்து பிரித்தவள், “ஆமா… எல்லா தப்பும் நீங்கதானே பண்ணீங்க, நான் எதுவும் பண்ணலை இல்ல?” உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியக் குரலில் அவள் பேசவும், “ஷெண்பா…” எனப் பதறி கையை நீட்டியவனிடமிருந்து இரண்டி பின்னால் நகர்ந்தாள்.

“உங்க மேல்தான் தப்பு… தப்புன்னு நீங்களே உங்களை பிளேம் பண்ணிக்கிறீங்க. உண்மையா இது எல்லாத்துக்கும் காரணம் நான்தான்.‌ அது உங்களுக்கும் தெரியும். ஆனால், ஏன்?” எனக் கேட்டு ஒரு நொடி நிறுத்தி விழிகளில் வழியும் நீரைத் துடைத்தவள், “ஏன் இதுவரைக்கும் உன்னாலதான் இதெல்லாம்னு ஒரு வார்த்தைக் கூட நீங்க சொல்லலை. அப்படியென்ன நான் உங்களுக்குப் பெருசா போய்ட்டேன்… திட்டுங்க, நான் செஞ்ச தப்புக்கு என்னைத் திட்டுங்க!” என்றவள் சுவற்றில் சாய்ந்து நின்றாள். திருமணம் முடிந்த இந்த இரண்டு வாரத்திற்குள் எத்தனை பிரச்சனைகள், சண்டைகள். அத்தனையும் தனியாளாய் சமாளித்தவன் இவளிடம் ஒரு முகச் சுளிப்பையோ, வெறுப்பையோ உமிழவில்லை. ஏன் அதட்டி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை அவன். அப்படி பேசியிருந்தால் கூட இவளுக்கு வலித்திருக்காதோ என்னவோ.

அவளை ஒரு நொடி கூட குற்றவாளி கூண்டில் ஏற்றாது அனைத்தையும் தன் மீதே போட்டுக் கொள்பவனின் மீது அத்தனைக் கோபம் வந்தது. மனைவியின் அருகே செல்லாது அப்படியே அமர்ந்திருந்தபடி அவளைப் பார்த்தவனின் முகம் கனிந்து போயிருந்தது.

“என் தப்புதான் எல்லாம்… என் தப்புதான்!” என்றவள் தன் கன்னத்திலே அடித்துக் கொள்ளவும், “ஷெண்பா..‌.” என அதட்டலுடன் அவளருகே சென்று கரத்தைப் பிடித்துத் தடுத்தவன் அணைத்துக் கொண்டான். அவன் மார்பில் முகத்தைப் புதைத்தவள், “சாரி, நான் உங்கக் கிட்ட கல்யாணம் பண்ண கேட்டிருக்கக் கூடாது! என் தப்புதான். இல்லைன்னா நீங்க இவ்வளோ கஷ்டப்படத் தேவையில்லைல?” என நிமிர்ந்து கேட்டாள்.

தலையை இடம் வலமாக அசைத்தவன், “இப்போ நடக்கலைனாலும், என்னைக்குனாலும் நம்மக் கல்யாணம் நடந்திருக்கும் ஷெண்பா… ஹம்ம், அப்போ எல்லாரோட சம்மதமும் கிடைச்சிருக்கும்னு என்ன நிச்சயம் சொல்லு?” என வினவினான்.

அதில் சமாதானமாகதவள், “இலலை, நீங்க என் பேச்சைக் கேட்டதாலதான் எல்லாருக்கும் கஷ்டம்!” என்று அதையே திருப்பி உரைத்தாள்.

“ச்சு…” என அவள் நெற்றியில் மென் முத்தமிட்டவன், “நீ சின்னப்புள்ளை ஷெண்பா. அப்படிப் பார்த்தா, நீ சொன்னதும் நான் யோசிக்காம செஞ்சுட்டேன். அப்போ என் மேல்தானே தப்பு?” எனக் கேட்டவனை முறைத்தாள்.

“என் மேல்தான் தப்பு… என்னை ஒரு அடியாவது அடிங்க!” என்றவளைப் பார்த்து இவன் முடியாது எனத் தலையை அசைத்தான்.

“அடிக்க முடியுமா? முடியாதா?” என அவள் முறைக்க, “உன்னை அடிக்கணும், அவ்வளோ தானே?” என வினவியவன், குனிந்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான். ஒரு நொடி அதை எதிர்பாராது திகைத்தவளைப் பார்த்து, “அடிச்சது போதுமா?” என சன்னமான சிரிப்புடன் வினவினான். இத்தனை நேரமிருந்த அழுத்தம் விடைபெற்று இருவருமே இலகுவான மனநிலைக்குத் தாவி இருந்தனர்.

“போயா…” அவனை உதறிவிட்டு அறைக்குள் செல்ல முயன்றவளைத் தூக்கி வந்து இருக்கையில் அமர வைத்தவன், “சாப்ட்டு போய் படுக்கலாம் ஷெண்பா!” என அவளுக்கும் உணவை பிரித்து வைத்தான்.

ஒரு வாய் உணவை வைத்தவனுக்கு அப்போதுதான் பசி தெரிந்தது. வேக வேகமாக திவா உண்ண, “மெதுவா சாப்டுங்க!” என அதட்டல் போட்டவள், சாப்பிட ஆரம்பித்தாள்.

“எப்பவுமே என்கிட்ட இப்படி கோபப்படாம உங்களால இருக்க முடியுமா?” எனக் கேட்டவளின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான்.

“ஹம்ம்… பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். இப்போ புது பொண்டாட்டி பவுசு, அதான் பின்னாடியே சுத்தீட்டு இருக்கேன். கொஞ்ச நாள்ல போரடிச்சதும் சண்டையை ஸ்டார்ட் பண்ணிடுவேன்!” குறும்பாய்க் கூறியவனை முறைத்தவள், “ச்சு… நான் கேட்ட கேள்விக்கு இது பதிலில்லை. ஐ வாண்ட் ஆன்சர்!” என்றாள் அடமாய்.

சிரித்தவன், “ஏன் வராம, நாளைக்கே அம்மா, அப்பா கூட நம்ப போய் தங்குனோம்னா, உனக்கும் அம்மாவுக்கும் இடையில எதாவது பிரச்சனை வரலாம். அப்போ உன்னை ரெண்டு அதட்டீட்டு, அம்மாவுக்கு நான் சப்போர்ட் பண்ணலாம். சம்டைம்ஸ் அம்மாகிட்ட, என் பொண்டாட்டிக்கு ஏத்துட்டு சண்டை போடலாம்… ஹம்ம், உங்க அண்ணன் நமக்கு இடையில வந்தா சண்டை போடலாம்… இன்னும் எவ்வளோவோ இருக்கே…” என்றான் சிரிப்பாய்.

“ஓஹோ… அப்போ உங்கம்மாவுக்கு ஏத்துட்டு என்கிட்ட சண்டை போடுவீங்களோ?” ஷெண்பா இடுப்பில் கையை வைத்து முறைக்க, “பின்ன, என் அம்மாடி அவங்க… சண்டை போட மாட்டேனா?” என்றான் அவனும் விடாமல்.

“இருக்கட்டும், பாத்துக்குறேன். இங்க இருக்கும்போது தான் அப்போ இந்தக் கொஞ்சல் எல்லாம்?” புருவத்தை உயர்த்தி உதட்டைச் சுளித்தாள்.

“ஆமா… இங்க நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம். அதுவும் இல்லாம நீ சின்னப்புள்ளை ஷெண்பா, நமக்கு இடையில எட்டு வருஷ ஏஜ் டிப்ரென்ஸ் இருக்கே! அதனால உன்கிட்ட சண்டை போடத் தோண மாட்டுது!” என்றான் உண்மையாய்.

“எட்டு வருஷம் உங்களுக்கு ரொம்பவா?”

“மனோவே எனக்கு குழந்தை மாதிரி. அவளைவிட உனக்கு வயசு கம்மிடி. நீ இன்னும் எனக்கு சின்னப்புள்ளையாத்தான் தெரியுற!” என்றான்.

“ஓ… சின்னப்புள்ளை கிட்டே நீங்கப் பண்றதெல்லாம் சரியில்லையே. இடத்தைக் கொடுத்தா, மடத்தைப் பிடிக்க பார்க்குறீங்களே!” குனிந்து உண்டு கொண்டிருந்தவனுக்கு அந்தப் பேச்சில் அப்படியொரு சிரிப்பு. ஷெண்பாவின் உதட்டிலும் குறும்பான புன்னகை.

அவள் பேச்சின் சாரம்சம் உணர்ந்து எட்டி அவளது கழுத்திலிருக்கும் தாலியை இடது கையால் பிடித்திழுத்தவன், “மடத்துக்கு சொந்தக்காரன் டி நான். லைசென்ஸ் வாங்கிட்டேன் ப்ராப்பரா. அதனால மடத்தைப் பிடிக்க, கடிக்கன்னு எல்லா உரிமையும் எனக்கிருக்கு…” என்றவன் பேச்சில் சிவந்தவள், அவன் கையைத் தட்டிவிட்டாள்.

இவள் சென்று கையைக் கழுவவும் பின்னாடியே வந்து திவாகரும் குழாயில் கையை நீட்டினான். அவனை செல்லமாய் முறைத்து நகர்ந்தவள், கணவனை பின்னோடு அணைத்து முதுகில் முகத்தைப் பதித்தாள்.

“சாரி… ஹம்ம் அண்ட் தேங்க்ஸ் டூ. அம்மாவும் அப்பத்தாவும் அன்னைக்கு அப்படி பேசலைன்னா, கண்டிப்பா உங்களைக் கல்யாணம் பண்றதைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டேன். நீங்க சொன்னது போல ப்யூச்சர்ல நீங்க என்கிட்ட அப்ரோச் பண்ணியிருந்தாக் கூட, அப்போ என்ன நடந்துருக்கும்னு உத்திரவாதம் இல்ல. பட், இந்த மனுஷனை இழந்திருப்பேன். எனக்காகன்னு குமரன், விக்கியைத் தவிர பெருசா யாரும் முன்னே நின்னது இல்லை. ஏன் சின்ன வயசுல இருந்தே அவங்க ரெண்டு பேரும் நான் செஞ்சத் தப்புக்கு பழியை ஏத்துட்டு முன்னாடி நின்னுடுவாங்க.
ரொம்ப செல்லம்… ஒரு வார்த்தை என்னைத் திட்டு வாங்க விட மாட்டாங்க. கேட்டதை எல்லாம் கைமேல வந்துடும். அதனாலே எனக்கு அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். எந்தளவுக்குன்னா, என் அண்ணனை மிஸ் பண்ணக் கூடாதுன்னு என் லைஃப் பணயம் வைக்கிற அளவுக்கு… இப்போ அந்த லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்துட்டீங்க. அவங்க ரெண்டு பேரும் கொடுத்த செல்லம்தான் என்னை இப்படி அடமெண்டா மாத்தியிருக்கு. அவங்களுக்கு அடுத்து உங்கக்கிட்ட கண்டிப்பா நான் அடம்பிடிப்பேன், செல்லம் கெஞ்சுவேன், ஹம்ம்… அப்புறம் உங்கத் தங்கச்சி உங்கக்கிட்ட க்ளோசா இருந்தா சண்டை போடுவேன். இதெல்லாம் நீங்கப் பொறுத்துப் போய்தான் ஆகணும்… போவீங்க!” என்றவள் பேச்சில் இவனுக்குப் புன்னகை பெரிதானது. எத்தனை பக்குவமானப் பெண்ணாக இருந்தாலும் தன்னவர்கள் என்று வரும்போது ஏதோ சலுகையான இடம்போல செல்லம் கொஞ்ச, மிஞ்சத் தோன்றும். ஷெண்பா மட்டும் விதிவிலக்கா என்ன? என நினைத்துப் புன்னகைத்து அவளை முன்புறம் இழுத்தான்.

“இதை மட்டும் என் தங்கச்சி கேட்கட்டும். உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா!” என்றான் சன்னமான சிரிப்புடன்.

“ஏன்… ஏன் எங்களுக்கு வாய் இல்லையா? நாங்கப் பதிலுக்கு பேச மாட்டோமா?” ஷெண்பா சண்டைக்கு நின்ற பாவனையில் அவளை அள்ளி அணைத்த திவாகர், “வாய் வாய் டி உனக்கு!” என அவள் உதட்டிலே அழுந்த முத்தமிட்டான்.

அவன் முகத்தைக் கை கொண்டு பின்னே தள்ளியவள், “இப்போ எனக்குத் தெரிஞ்சாகணும், உங்கத் தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணுவீங்களா, எனக்குப் பண்ணுவீங்களா?” என அதிதீவிரமாய் வினவினாள்.

“இப்போ, இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையாடி?” மெல்லிய சலிப்புடன் கேட்டான்.

“ஆமா… எனக்குத் தெரிஞ்சாகணும்!” வீம்பாய் கேட்டாள் மனைவி.

“நியாயம் யாரு பக்கம் இருக்கோ, அவங்கப் பக்கம்தான் டி பேசுவேன்!” என்றவனை முறைத்தவள், “22ந்தேதியில இருந்து உங்களோட நியாயம் என் பக்கம் மட்டும்தான்… உங்கத் தங்கச்சி பக்கம் போகக் கூடாது!” விரல் நீட்டி மிரட்டியவளைப் பார்த்து கணவனுக்கு சிரிப்பு பொங்கியது.

“இதெல்லாம் அநியாயம் டி…” போலி கோபம் அவன் குரலில்.

“கல்யாணம் முடிஞ்சப் பிறகு, பொண்டாட்டியோட நியாயம்தான் உங்களுக்கு நியாயம், அவளோட அநியாயம் தான் உங்களுக்கு அநியாயம்… புரிஞ்சுதா மிஸ்டர்!”

“ஓ… அப்போ குமரன் என் தங்கச்சிக்குத்தான் எப்பவும் சப்போர்ட் பண்ணணும். அப்படித்தானே ஷெண்பா?” எனக் கேட்டவனை முறைத்தவள், “நோ… அவனுக்கும் உங்களுக்கும் ஒரே ரூல்ஸ்தான்!” என்றாள் விரைப்பாய்.

“இதென்னடி கேடித்தனமா இருக்கு!” திவாகர் மனம்விட்டு சிரிக்க, “ஆமா… ஆமா…” சடைத்துக்கொண்டு முன்னே நடந்தவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“அதான் நான் கேடியாச்சே. நியாயம் இல்லை என்கிட்ட?” போலியாய் முறைப்புடன் துள்ளினாள் பெண்.

“இப்போதைக்கு என் நியாயம் எல்லாம் நீதான் டி!” என கிசுகிசுப்பாய்க் கூறியவனின் பேச்சோடு அவளது பேச்சும் தடை பட்டிருந்தது.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top