அவரின் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, ஆதங்கம்தான் நிரம்பி இருந்தது. மகன் கணவரிடம் பேசியதையும் கண்ணீர் உகுத்ததையும் பார்த்த பெற்ற உள்ளம் தாயாய்த் துடித்துப் போனது.
அவரறியாது விழிகளில் நீர் நிரம்பத் துவங்க, மகனுக்கு காட்டாது மறுபுறம் திரும்பிக் கொண்டார் ராதா. திவாகர் ஏற்கனவே தாயின் முகத்தைப் கவனித்துவிட்டான்.
“அம்மா…” அவரருகே சென்றவனின் குரல் தவிப்பாய் அவரை சமீபிக்க, “எதுக்கு டா வந்த?” எனக் கேட்டவர் குரல் இடறியது.
கோபத்தைக் காட்ட முடியவில்லை ராதாவால்.
“ம்மா… எங்கப் போக சொல்ற, உங்களைவிட்டா யாரும்மா இருக்கா எங்களுக்கு?” எனக் கேட்டவன் அவரை அணைக்க, அந்தப் பெண்மணியின் உடல் குலுங்கத் தொடங்கியது.
“ஏன் டா திவா இப்படி பண்ண, உனக்கு அவளைப் பிடிச்சிருக்குன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாமே டா. உங்கப்பாகிட்ட நான் பேசியிருப்பேனே டா. ஏன் டா நீயும் கஷ்டப்பட்டு, எங்களையும் இப்படி படுத்திட்டு இருக்க?” என்றவர் குரல் கலங்கியிருந்தது. மகனிடம் பதிலில்லை.
“என்னை மன்னிச்சுடு மா…” என்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ராதா. அமைதியாய் அவரது அடியை வாங்கினான் திவாகர்.
“ஏன் டா… ஏன்?” எனக் கேட்டு அவனை இழுத்து அணைத்தார் பெண்மணி. இவன் உடல் அந்த அணைப்பிலும் அறையிலும் தளர்ந்தது.
“சாரிம்மா…” என முணுமுணுத்தவனின் விழிநீர் அவரை நனைத்தது. சிறிய இடைவெளியிலே தாய், தந்தைக்காக மனம் அத்தனையாய் ஏங்கிப் போயிருந்தது. பிறந்ததிலிருந்தே ரங்காவும் ராதாவும் பிள்ளைகளை கைக்குள்ளே வைத்து வளர்த்து விட்டனர். எதிர்பாராது ஏற்ப்பட்ட இந்தப் பிரிவு இருபுறமும் அதிக பசலையை நோயை விதைத்திருந்தது.
முந்தானையால் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்த ராதா,
“பெரிய இவன்… ஒழுங்கா உன் பொண்டாட்டியைக் கூட்டீட்டு வந்து சேரு டா… அந்த மனுஷன் மனசு நல்லா இருக்கும்போதே இங்க வரப்பாரு!” என்றவரைப் பார்த்து முடியாது எனத் தலையை அசைத்தான் திவாகர். அவன் முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணமில்லை என அழுத்தமான முகம் உரைத்தது.
“பெத்தவங்க பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு இருக்கீயா டா?” அவர் கோபமாய்க் கேட்க, “ம்மா, இந்த விஷயத்துல மட்டும் என்னைக் கம்பெல் பண்ணாத!” என உறுதியாய் மறுத்துவிட்டான்.
ராதா எதுவும் பேசாது அவனை முறைத்தவர், “சாப்ட்டீயா டா?” என விசாரிக்கவும், இவன் முகத்தில் மெல்லிய புன்னகை விரிந்தது.
“முகத்தைப் பார்த்தாலே தெரியுது. சரியா சாப்பிட்றீயா? இல்லையா டா?” எனக் கேட்டவரின் கரங்கள் அவனை இழுத்து உணவு மேஜையில் அமர்த்தின.
கைகள் இட்லியை எடுத்து தட்டிலிட்டு சட்னியைப் பரிமாற, “உன் பொண்டாட்டி எப்படி சமைக்கிறா, நல்லா சமைக்கிறாளா இல்லையா?” என வினவினார். அவர் கேட்டதும் இவனது புன்னகை மேலும் முகம் முழுவதும் படர்ந்தது. எதுவும் பதில் கூறாது இரண்டு வாரங்கள் கழித்து தாயின் கையில் சமைத்த உணவில் அவன் கவனமானான். ஷெண்பா சமைத்த உணவை உண்டு கண்டிப்பாக இரண்டு கிலோ குறைந்திருப்பான் திவாகர். ஆனாலும் அவளிடம் அதை கூற மனதில்லை. தனக்கு சமைக்கத் தெரியாவிடினும் அவனுக்காக என அக்கறையாய் சமைப்பவளை நோகடிக்க மனம் வரவில்லை கணவனுக்கு.
“நீ சிரிக்கிறதுலே தெரியுது டா, அவ சமைக்கிற லட்சணம். இழுத்துட்டு ஓடுனவளுக்கு, கட்டுன புருஷனுக்கு ஒழுங்கா சமைச்சுப் போடத் தெரியாதா? இங்க வரட்டும்…” என அவர் பொரிய, இவனுக்குப் புரையேறியது.
“மெதுவா டா…” தலையில் தட்டி நீரைப் புகட்டினார். அமைதியாய் உண்டு முடித்தவனுக்கு மனம் கொஞ்சம் சமன்பட்டது போலிருந்தது.
“வரேன் மா… அப்பாவை நல்லா பார்த்துக்கோ!” என்றவனை முறைத்தவர், ‘இவனாலதான் அவர் இப்படியாகிட்டாரு… பெருசா அப்பாவைக் காப்பாத்த வந்துட்டான்!’ என மனதில் நினைத்ததை வெளியே சொல்லவில்லை. லேசாய் தெளிந்திருந்த மகனின் முகம் மீண்டும் வாடிவிடக் கூடும் என தொண்டை வரை வந்த வார்த்தைகளை உள்ளே அமிழ்த்திவிட்டார்.
திவாகர் நேரே மணல் குவாரிக்குச் சென்றுவிட்டான். கட்டிடப் பொருளகம் வேறு ஆளில்லாது கிடக்க, மதிய நேரத்திலே அங்கே சென்று அமர்ந்து வீட்டிற்கு வர இரவு தாமதமாகிவிட்டது.
ரங்காவிடம் பேசச் சென்ற கணவன் என்னவென தன்னிடம் உரைப்பான் என ஷெண்பா காலையிலிருந்தே காத்திருந்தாள். ஆனால் திவாகர் அவளுக்கு அழைக்காது போக, முனுக்கென கோபம் எட்டிப் பார்த்தது. கதவை திறந்தே வைத்தவள், அறையில் அமர்ந்திருந்தாள்.
திவாகர் உள்ளே நுழைந்தான். மணி ஒன்பதைக் கடந்திருக்க, வர தாமதமாகும் என்று கூட ஷெண்பாவிடம் கூற மறந்து போயிருந்தான். காலையில் நடந்ததிலே உழன்று கொண்டிருந்தவனுக்கு, மனைவி நினைவே அற்றுப் போயிருந்தது. குளித்து முடித்து உடை மாற்றி வந்தான். நேரம் கடந்ததை உணர்ந்து, “சாரி ஷெண்பா, வொர்க் டென்ஷன், நிறைய வேலை. அதான் லேட், சாப்பிடலாமா?” எனக் கேட்டவனின் முகம் வாடியிருந்தது. அத்தனை சோர்வாய் இருந்தான்.
நாற்காலியில் சாய்ந்தமர்ந்திருந்தவள் கால்கள் கட்டில் நீட்டியபடி, கையில் அலைபேசியை வைத்திருந்தாள். அவன் பேசுவது காதில் விழுந்தும் அசையவில்லை.
“ஷெண்பா, பசிக்குது டி… சாப்பிடலாமா?” சோர்ந்திருந்தக் குரல் இவளை அமரவிடவில்லை. பேசாது எழுந்து சென்று திவா வாங்கி வந்த உணவை அவனுக்கு மட்டும் மேஜை மீது பிரித்து வைத்தாள். நீரைக் கொண்டு வைத்தவள், நகரப் பார்க்க, “ஷெண்பா...” என அவளது கையைப் பிடித்தவனைப் பார்த்தாள்.
“நீ சாப்பிட வரலையா?” கணவன் கேட்க, “பசிக்கலை, நீங்க சாப்பிடுங்க…” என்றவள் குரல் லேசாய் கோபமாய் வந்தது.
நெற்றியைச் சுருக்கியவன், “என்ன, என்னாச்சு…?” எனக் கேட்கவும், “ஒன்னுமில்லை…” என்றவள் கையை உருவப் பார்த்தாள். அவளது கோபம் எதற்கெனப் புரியாதவன், “ஏற்கனவே செம்ம டயர்ட்ல இருக்கேன். நீயும் ஏன்டி படுத்துற?” என்றான் சின்னக் குரலில்.
அவனை முறைத்தவள், “என்னப் படுத்துறாங்க உங்களை, நீங்கதான் சும்மா இருக்கவளை என்னென்னு கேட்டு குடைஞ்சிட்டு இருக்கீங்க!” வெடுக்கென கையைத் தட்டிவிட்டவளின் கரத்தைநொடியில் பிடித்திழுத்து அவளது வயிற்றோடு அணைத்துக் கொண்டவன் முகம் அவளுள் புதைந்தது. ஷெண்பா விலகவில்லை. ஆனாலும் உடல் விரைப்பாகத்தான் இருந்தது.
“என்னடி…?” என வயிற்றிலிருந்தே நிமிர்ந்து பார்த்தவனுக்கு அப்போதுதான் மூளையில் விளக்கெரிய, “ச்சு… அது ஷெண்பா, உண்மையா மறந்துட்டேன் டி…” என்றான் பதட்டத்துடன். அங்கே வீட்டிலிருந்து கிளம்பியதும் அவளுக்கு அழைத்துக் கூற வேண்டும் என நினைத்து அலைபேசியை எடுத்தவனுக்கு வேறொரு அழைப்பு வந்துவிட, அதில் இவளை மறந்திருந்தான்.
“என்கிட்ட சொல்லணும்ன்றதை மறந்துட்டீங்களா? இல்ல, பொண்டாட்டி வீட்ல இருக்கதையே மறந்துட்டீங்களா?” என்றவள் குரலில் காரமேறியது.