உள்ளம் – 30.1

திவாகர் வந்து ரங்கராஜன் அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து பத்து நிமிடங்கள் கடந்திருந்தன. அவனைப் பார்த்ததும் மெதுவாய் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவரின் கரங்கள் மூக்குக் கண்ணாடியைத் துழாவி எடுக்கத் தடுமாற, இவன் எடுத்துக் கொடுத்தான். அதை அணிந்தவர் கட்டிலில் சற்று சாய்ந்தமர்ந்தார். அவன் வீட்டிலில்லாத சில நாட்களிலே அவர் உடல் தளர்ந்து மெலிந்து போய்விட்டதை அவரது சிறுத்திந்த உடல் பறைசாற்றின. விழிகளை ரங்காவின் தலை முதல் கால்வரை படரவிட்டவனின் முகம் வாடிப்போனது. தந்தையின் இன்றைய நிலைக்குத் தான்தான் காரணம் எனப் புரிந்ததும் மனதினோரம் பெரிய பாரம்
வந்தமர்ந்து கொண்டது.

நின்று கொண்டே அவரைக் குற்றவுணர்வோடு பார்த்தவனை அமருமாறு சைகை செய்தார் ரங்கா. அவர் பேசுவதற்கு ஆயத்தமாகிவிட்டார் என்பதை உணர்ந்தவன் மனம் முழுவதும் சஞ்சலம் படர, இருக்கையில் அமர்ந்தான் திவாகர். அவனது முகத்தைப் பார்த்த ரங்கா, தொண்டையைச் செருமினார். ஏனோ இருவருக்கும் இடையே நீண்ட நெடிய இடைவெளி அமைந்தது போலொரு எண்ணம்.

“உன்னோட பொண்டாட்டியைக் கூட்டீட்டு இங்க வந்துடு திவாகர். தனியா இருந்து கஷ்டப்பட வேண்டாம். கல்யாணம் தான் பெத்தவங்க இல்லாம பண்ணிட்ட. உனக்கு எங்க நினைப்பு இல்லாம இருக்கலாம், நாங்க முக்கியமா இல்லாம போகலாம். ஆனால், எனக்கு என் புள்ளை வேணுமே! இத்தனை வருஷம் ஒரு கஷ்டம் தெரியாம வளர்த்துட்டோம். இப்போ திடீர்னு தனியா போய் நீ கஷ்டப்பட்றதைப் பார்க்க முடியலை டா. சரியோ, தப்போ நீ செஞ்சதை நாங்க ஏத்துக்கிட்டுதானே ஆகணும். கொஞ்ச நாள் டைம் கொடுப்பா, ஏத்துக்க…” என்றவரின் குரலில் என்ன இருந்தது என திவாகர் அறிய முயன்று தோற்றான். பிசிறில்லாது ரங்கா பேசப் பேச இவன் முகம் மாறியது. தன் செயலைத் தவறென தந்தையின் வாய்மொழியாய்க் கேட்கவும் இன்னுமின்னும் தவித்துப் போனான்.

“நான் உயிரோட இருக்க வரைக்கும் உங்ககிட்ட கஷ்டத்தை அண்டவிடாம பார்த்துப்பேன் டா! இங்க வந்துடு! நாங்க வேணும்னா வந்துடு டா!” நொடியில் அவரது குரல் உடைந்து போனது. விழியோரம் இத்தனை நேரம் தேங்கியிருந்த ஈரம் கன்னத்தில் படரத் தொடங்க, இறுகியிருந்த ரங்காவின் உடல் லேசாய் உடைந்தது. பேசக் கூடாது என நினைத்தாலும் வார்த்தைகள் கொட்டின. இத்தனை நாள் மனதில் வைத்துப் புழுங்கியவை எல்லாம் அத்தனை மனஅழுத்தத்தை அவரில் உருவாக்கியிருந்தது.

“அப்பா… சாரிப்பா…!” என்ற திவாகருக்கு நெஞ்சடைத்துப் போனது. மனோஹரி குமரனை திருமணம் செய்து கொண்ட போது கூட அவர் இந்தளவுக்கு உடைந்து போகவில்லை. ஏனோ, மகன் செயலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், காலத்தின் கட்டாயம் அதுவென்று இருக்கும்போது கசப்பான உண்மையை, நிதர்சனத்தை உணர்ந்தவரின் உள்ளம் துடித்துப் போனது. திவாகர் திருமணம் செய்து வந்த நொடியை இன்றும் அவரால் நம்ப இயலவில்லை. மகன் இப்படி செய்வான் என கனவிலும் மனிதர் நினைக்கவில்லை. அவரறிந்தவரை தன் சொல்லைத் தட்டாதவன் திவாகர். மனோஹரி கூட அவ்வப்போது எதிர்த்துப் பேசுவாள். ஆனால், இவன் அப்படியெல்லாம் செய்ததில்லை.

ஏனோ அமைதியானப் பயணமொன்றில் ஏற்படும் திடுக்கிடும் வளைவுகள் போல வாழ்க்கை சட்டென மடை மாறியதை ரங்காவால் கிரகிக்க முடியவில்லை. அடுத்தடுத்த இரண்டு அடிகள், துவண்டு போனார். தூக்கி நிறுத்த ஆளின்றி சோர்ந்து போனார்.

பிள்ளைகளைத் தான் சரியாய் வளர்க்கவில்லையோ என்ற எண்ணம் வேறு அவரைத் தின்று தீர்த்தது. பிள்ளைகள், மனைவி என அவர்களுக்காக மட்டுமே வாழ்ந்த வாழ்க்கையை, அவர்களே மதிக்காத போது அதில் தான் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற எண்ணம் வியாபிக்க, எதன் மீதும் பிடிப்பற்றுப் போனார். வாழ்க்கையே வெறுத்த நிலை. ஜாதி, அந்தஸ்து, சொத்து என எதுவுமே அவருக்குப் பெரிதாய் தோன்றவில்லை. உயிருள்ள மனிதர்களே நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறும்போது உயிரில்லாத இவையெல்லாம் எந்த வகையிலும் தன்னைப் பாதிக்காது என வாழ்க்கையின் நிதர்சனம் அப்பெரியவரை சுழற்றிப் போட்டிருந்தது. ஒருவேளை முன்பே இதை உணர்ந்திருந்தால், மகள் திருமணத்தை நன்றாய் நடத்தி இருப்பாரோ என்னவோ? காலம் கடந்த ஞானோதயம்.

தந்தையின் பேச்சில், அழுகையில் திவாகர் துடித்துப் போனான். தவறுதான் தெரிந்து செய்த தவறுதான், இல்லை குற்றம். ரங்காவைப் பொறுத்தவரை குற்றம். இருக்கையிலிருந்து எழுந்து மண்டியிட்டு அவர் முன்னே அமர்ந்தவனின் உள்ளமும் விழிகளும் கலங்க, மெலிதாய் கரங்களில் நடுக்கம் பிறந்தது. தந்தையின் கரங்களை எடுத்து அதை தன் கைக்குள் அடக்கியவன், “சாரின்னு ஒரு வார்த்தையில நான் செஞ்ச தப்பை அடக்க முடியாது பா. எனக்குத் தெரியலை பா, ஷெண்பாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. மனோ மாதிரி நானும் உங்ககிட்ட அடம்பிடிச்சு அவளைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனால், நீங்க அதுக்கு எந்தக் காலத்துலயும் மனசு வந்து சம்மதிக்க மாட்டீங்கன்னுத் தெரியும். அதான் என் முடிவை நானா தேடிக்கிட்டேன்!” என்றவனின் விழியோரம் துளிர்த்த நீர் அவரது கரத்தை நனைத்தது. மனிதர் சிலையாய் அமர்ந்திருந்தார்.

“நீங்க சொன்னது நிஜம்பா. இதுவரைக்கும் கஷ்டம்னு ஒரு வார்த்தை எங்களை அண்டவிடாம பார்த்துக்கிட்டீங்க. ஆனால், அதுக்கு உங்களுக்கு நான் செஞ்சது ரொம்ப பெரிய துரோகம். சூழ்நிலை மேல பழியை போட மாட்டேன். நான்தான் இதைப் பண்ணேன். நான் ஒரு சுயநலவாதி. பெத்த அம்மா, அப்பாவைக் கூட யோசிக்காமல் நானா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால இதுக்கான தண்டனையை நானே அனுபவிச்சுக்கிறேன் பா!” என்றவன் குரல் கரகரத்துப் போனது. தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும், தவறிற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணிவிட்டான்.

ரங்காவை நிமிர்ந்து பார்த்த திவா, ஒரு முடிவெடுத்தவனாய்ப் பேசத் தொடங்கினான். “கண்டிப்பா நான் செஞ்சத் தப்புக்கு நீங்கத் தண்டனை தர மாட்டீங்க. எனக்கான தண்டனையை நானா ஏத்துக்கிறேன் பா. இத்தனை நாள் உங்க காசுல சொகுசா வாழ்ந்துட்டேன். இனிமே கஷ்டம்னா என்னென்னு தெரிஞ்சுக்கிறேன் பா. கொஞ்ச நாள் நாங்க தனியா இருக்கோம். உங்கக் கோபம் குறையட்டும், அதுக்குப் பிறகு இங்க வரோம் பா.
என்னைக் கஷ்டப்பட விடுங்கப்பா!” என்றவன், “என்னை வெறுத்துடாதீங்க பா. நீங்க, அம்மா தான் என்னோட உலகமே. தப்புக்கான தண்டனை முடிஞ்சு திரும்பி வரும்போது என்னை ஏத்துக்கோங்க பா. எனக்கு என் அப்பா, அம்மா வேணும்!” வருத்தம் தோய்ந்து வந்த வார்த்தைகள் முழுவதும் மனதின் வலிதான். விழியோரம் இன்னுமே அதிகமாய் ஈரம் படர்ந்தது. எழுந்து அவரை இறுக அணைத்தான். இருவரது உடலுமே சிலிர்த்தது.

சில நொடிகளில் அவரிடமிருந்து விலகி, “வரேன் பா…” என்று வெளியேறியவனின் நடை ராதாவைக் கண்டதும் நிதானமடைந்தது. அவரும் மகனைத்தான் பார்த்திருந்தார். பிறந்ததிலிருந்து அவனைப் பிரிந்ததாய் நினைவில்லை. இந்த இரண்டு வாரங்கள் தான் அவரறிந்து அவர்களுக்கு இடையேயான நீண்ட நெடிய இடைவெளி. காலையில் தேநீர் முதல் இரவு உணவு வரை மகனுக்கென அத்தனைப் பக்குவம் பார்த்து சமைப்பார் பெண்மணி. அப்படியிருக்கையில் இந்த சிலநாட்கள் மகன் என்ன செய்திருப்பான் எனக் கோபத்திலும் அவனைப் பற்றி யோசிக்கத் தவறவில்லை.

error: Content is protected !!
Scroll to Top