உள்ளம் – 29.3

“இந்த சாரி எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?” குமரன் குரலிலிருந்த கேலியில் சிவந்தவள், “எதுக்கோ…” என்றாள். அவள் கன்னம் இரண்டிலும் செம்மை படர்ந்தது. முகத்தை வெட்கத்துடன் அவன் மார்பில் தேய்த்தாள்.

“எனக்கு இந்த வெட்கத்தை விட, அந்தக் கோபமான மனோதான் பிடிச்சிருக்கு…” என்றவன் பேச்சு கிசுகிசுப்பாய் ஒலிக்க, செவியோரம் அழுத்தமாய் முத்தமிட்டான்.

“போதும்… விடுங்க!” என வெட்கப்பட்டு அதை மறைக்க குரலில் கோபத்தைப் புகுத்தியவளின் கரங்களை சிறை பிடித்தவன், “கழட்டுன ஷர்ட்டை யாரு டி மாட்டுவா… ஒழுங்கா ஷர்ட்டை போட்டு விட்டுட்டுப் போ!” என்றான் சன்னமான சிரிப்புடன். அவன் முகத்தைப் பார்க்காது சட்டையை அணிவித்துவிட்டு ஓடியே விட்டாள் மனோஹரி.

மாலை வேலை முடிந்து திவாகர் வீட்டிற்கு வந்திருந்தான். ஷெண்பா அறையில் அமர்ந்து புத்தகத்தை வைத்திருந்தவள், இவன் வரவை உணர்ந்து கதவைத் திறந்துவிட்டாள். அவளது முகத்தைப் பார்க்காது அவன் உள்ளே சென்றுவிட, அவள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்து வந்த நேரமும் அவள் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காதவன், உடை மாற்றி வெளியே கூடத்திற்கு வந்து அமர்ந்தான். அங்கேயே பொழுதைக் கழித்தவன், “ஷெண்பா, ஆர்டர் பண்ண ஃபுட் வந்துடுச்சு!” என அறைவரை கேட்குமாறு கத்தினான். எதுவும் பேசாதவள், வெளியே வர அவளைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டான்.

உணவை மேஜைமீது இருவருக்கும் பிரித்து வைத்தான் திவாகர். அவனுக்கு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தவளின் பார்வை அழுத்தமாக அவனில் படிந்து மீண்டது.

குனிந்து இரண்டு வாய் உணவை உண்டிருந்தவன், ஷெண்பா சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.

“ஏன், என் முகத்தைப் பார்த்து பேச மாட்றீங்க?” இவள் அதட்டலாய்க் கேட்க, அவனிடம் பதிலில்லை.

“உங்களைத்தான் கேட்டேன். என் முகத்தைப் பார்க்க பிடிக்கலையா?” ஷெண்பா கேட்கவும், “ச்சு‌‌… அப்படியில்லை ஷெண்பா… அது நான், சாரி… என் கன்ட்ரோல்ல இல்ல!” எனத் திக்கித் திணறினான் ஆடவன். அவளது மனநிலை என்னவாக இருக்கும் எனத் தெரியாது நெருங்கிவிட்டவனின் குரலில் குற்றம் செய்த பாவனை. இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஷெண்பா தன்னைத் தவறாக எண்ணியிருப்பாளோ என மனம் பரிதவித்தது.

அந்தக் கண்களில் முகத்திலிருந்த பாவனையை உள்வாங்கியவள், பேச வந்தவனின் முன்பு கையை நீட்டினாள். “போதும்…” கோபமாய் உரைத்தவள், விறுவிறுவென உண்டுவிட்டு எழுந்து, “சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாம, சாப்பிடுங்க!” என்று நகர்ந்தாள்.

திவாகருக்கு அவளது மனநிலை என்னவெனப் புரியவில்லை. நெற்றியை சுருக்கியவன் யோசித்துக்கொண்டே உணவை உண்டான்.

கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்த ஷெண்பாவின் நினைவு அவனிடம் தான் பேசிய நாளுக்குப் பிரவேசித்தது.

கூட்டம் மிகுந்திருந்த அந்த உணவகத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் திவாகர். பணியின் நிமித்தம் வெளியே வந்தவன் உணவு நேரத்தைக் கடந்துவிட, அங்கே உண்ண அமர்ந்துவிட்டான். சிறிது நேரத்திலே ஷெண்பாவும் அவளுடன் ஒரு வாலிபனும் உள்ளே நுழைய, இவன் பார்வை அங்கே நிலைத்துப் போனது. அவளது கல்லூரிக்கு அருகே இருக்கும் உணவகம் எனத் தெரிந்துதானே இங்கே வந்திருந்தான். சாப்பிட்டு முடித்தும் எழாது அங்கேயே அமர்ந்திருந்தவனின் பார்வை அவளிடமே குவிந்திருந்தது.

நன்றாய்ப் பேசிக் கொண்டிருந்தவளின் விழிகளிலிருந்து நீர் இறங்கத் துவங்க, அவளது தோளில் கைவைத்து உடன் வந்திருந்தவன் ஆறுதல் கூறவும் இவனுக்கு உள்ளே என்னவோ ஏதோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. அதை விட அந்த வாலிபன் அவளுக்கருகே நெருங்கி அமரவும், உள்ளே புசுபுசுவென பொறாமை உணர்வு மேலெழும்பியது. ஷெண்பாவின் அழுகை நின்றபாடில்லை, இவனுக்கு அந்த இடத்தைவிட்டு அகல முடியுமெனத் தோன்றவில்லை. மூச்சை இழுத்து விட்டவன் விறுவிறுவென அவளருகே விரைந்தான்.

அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவன், “ஷெண்பா…” என அழைக்கவும், அவள் விழிகளில் நீருடன் இவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“யார் சார் நீங்க?” உடன் வந்தவன் கேட்கவும், திவாகர் பார்வை அவளிடம்தான். அவள்தான் கூற வேண்டுமென இவன் மௌனம் காக்க, “ரிலேட்டீவ் தான் பிரான்சிஸ்…” என நண்பனிடம் உரைத்தவள், விழிகளில் வழியும் நீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். பிரான்சிஸ் அலைபேசி ஒலிக்க, அவன் நகர்ந்துவிட்டான்.

“என்னாச்சு ஷெண்பா… அது.. என்ன, ஏன் அழற? என்ன பிராப்ளம்?” பரிதவிப்பும் பதட்டமுமாய்க் கேட்டவன் குரல் முழுவதும் அவளுக்கான நேசம்தான் கொட்டிக் கிடந்தது. எத்தனை முயன்றும் அகத்தை முகம் பிரதிபலிக்க, அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்த ஷெண்பா, “ஒன்னும் இல்ல!” என்றாள்.

“இல்ல… நீ பொய் சொல்ற. என்ன பிரச்சனை, வீட்ல எதுவும்…” எனக் கேட்கத் தயங்கியவனின் வார்த்தைகளின் அக்கறையில் மீண்டும் இவளுக்கு விழிகள் கலங்குவது போலிருந்தது. நீ கூறினால் மட்டுமே செல்வேன் என்பது போல திவாகர் அமர்ந்திருக்க, ஏதோ பேச வந்து வார்த்தையை விழுங்கிய ஷெண்பா, “கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டிருந்தாள்.

ஒரு நொடி அவளின் கேள்வியில் திவாகருக்கு எதுவுமே புரியவில்லை. “என்ன… என்ன ஷெண்பா?” எனக் கேட்டவனின் செவிகள் பொய்யுரைத்ததாய் மனம் கூறித் தொலைத்தது.

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என மீண்டும் அழுத்திக் கேட்டவளுக்குத் தர இவனிடம் பதிலில்லை. திகைத்துப் போனான். முகத்தில் ஆச்சர்யம் நிரம்பி வழிந்தது.

“இல்ல… அது, ஏன் திடீர்னு இப்போ கல்யாணம்… புரியலை!” வார்த்தைகள் கோர்வையாய் வரவில்லை அவனுக்கு. அத்தனை தடுமாற்றம் இந்தப் பெண்ணிடம்.

“பொய் சொல்லவா? உண்மையை சொன்னா, உங்க மனசு கஷ்டப்படும்!” என்றவளுக்கு இவன் தலையை மறுப்பாக அசைத்தான்.

“உண்மையை சொல்லு…” திவா கேட்க, நடந்தது அனைத்தையும் ஒப்புவித்தாள்.

“தெரியலை… உங்ககிட்ட கேட்கணும் தோணுச்சு அதான் கேட்டேன். சாரி, கட்டாயப்படுத்த மாட்டேன். விருப்பம் இல்லைனா வேண்டாம்!” என்றவள் தன் கைப்பையைத் தேடி எடுத்து மாட்டிக்கொண்டு எழுந்து நிற்கவும், திவாகர், “கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றிருந்தான், யோசிக்கவே இல்லை. காரணம் என்னவாக இருந்தாலும் நேசித்த பெண் கைக்கூடும்போது எவுமே அவனுக்குப் பெரிதாகத் தோன்றாது போனது.

இப்படியொரு வாய்ப்பை அவன் நழுவவிடத் தயாராய் இல்லை. ஷெண்பாவிற்கு திவாகரின் பார்வைத் தன்னைத் தொடர்வது எப்போதோ தெரியும். அது தன் பிரம்மை என்று எண்ணி அவள் கடக்க, குமரன் அன்று அவளிடம் கேட்டு அதை உறுதிப்படுத்தியிருந்தான்.

அதிலிருந்து அவளும் அவனைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். திருமணத்தன்றும் தன் முன்னே இதே போல பதகளிப்புடன் நின்ற திவாகர் நினைவை நிறைத்தான். ஒவ்வொரு முறை தான் கலங்கும் போதும் இவனின் அருகாமை தன்னருகே குவிவதை மனம் எடுத்துக் கொடுத்தது‌. அந்நொடி அவனிடம் ஏன் இதைக் கேட்டோம் என இப்போதும் அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவனைத் தவிர வேறு யாரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க முடியாதென மனம் கூறியது. யோசிக்காது பேசியிருந்தாள்.
அடுத்த இரண்டு நாட்களிலே இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது.

நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தவளை கட்டிலின் மெல்லிய அசைவு நிகழ்வுக்குகொண்டு வந்தது. திவாகர்தான் அவளருகே படுத்தான். ஷெண்பா கோபமாய் இருக்கிறாளோ என்ற எண்ணம் அவனது மனதை வியாபித்தது.

அதைவிட நேற்றைய எண்ணங்களும் தொட்டு உணர்ந்த ஸ்பரிசமும் சுகந்தமும் இன்றும் வேண்டுமென மனம் உந்தியது. தலையணையில் முகத்தைப் புதைத்துத் திரும்பிப் படுத்தான். ஏனோ, மனைவி கையருகிலிருந்தால், உறக்கம் வருமென்று தோன்றியது.

மெதுவாய் அவள்புறம் திரும்பியவன், “ஷெண்பா…” என அழைத்துத் தோளைத் தொடவும், அவன் கையை வெடுக்கெனத் தட்டிவிட்டவள், “சாரி கேட்டவங்க யாரும் என்னைத் தொட வேணாம். அப்புறம் நாளைக்கும் சாரி கேட்பீங்க!” எனக் கோபமாய்க் கூறினாள்.

அவள் கூற்றின் அர்த்தம் புரியாது சில நொடிகள் விழித்தவன், புரிந்ததும் உதட்டில் புன்னகை படர, உடலிலிருந்த பதட்டம் வடிந்து தளரந்து போனது. அவளுக்கு அருகே நெருங்கிப் படுத்தவன் வயிற்றில் கையைப் போட்டு மனைவியை பின்னோடு அணைத்தான். “சாரி டி…” செவியோரமிருந்தக் கூந்தலை ஒதுக்கிவிட்டு மென்முத்தமிட்டான். அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

“இதோ, இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே!” அவன் புறம் திரும்பி ஷெண்பா முறைக்கவும், இவனது புன்னகை பெரிதானது.

“என்ன சிரிப்பு…” என முறைத்த மனைவியை ஆசையாய் அள்ளிக் கொண்டான். எஞ்சியிருந்த வார்த்தைகள் எல்லாம் முத்தச் சத்தத்தில் அமிழ்ந்தன.

மறுநாள் காலையில் இருவருக்குமே விடுமுறையாக இருக்க, வெகு தாமதமாகத்தான் விடிந்தது.

திவாகர் எழுந்து கழிவறைச் சென்று வந்தான். தேநீர் குடித்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றவும், ராதாவின் முகம் வந்து போனது. முப்பது வருடமாக காலையில் எழுந்ததும் அவரின் தேநீரில்தான் நாளே தொடங்கும். இந்த சில நாட்களாக அது இல்லாமல் போயிருந்தது.

அடுப்பை எப்படி பற்ற வைப்பது எனத் தெரியாது ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவனின் பின்னே நிழலாட, ஷெண்பா கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். அவளைப் பார்த்தவன் விழித்து அசட்டுச் சிரிப்பை உதிர்க்கவும், அவனை விலக்கிவிட்டு அடுப்பை பற்ற வைத்து பாலை அதில் ஏற்றியவளின் வயிற்றில் கையைக் கோர்த்து நாடியில் முகம் புதைத்திருந்தான் திவாகர்.

ஒரு நொடி உடல் சிலிர்க்க, இருவருக்குமே புன்னகை மிளிர்ந்தது. எதுவும் பேசாதவள் தேநீரை வடிகட்ட, அமைதியாய் இருவரும் அருந்தினர். சற்றே அதிகமாய்விட்ட தேநீரின் கசப்புக் கூட அந்நொடி தித்திப்பை கிழிறக்கவில்லை. திவாவின் அலைபேசி ஒலிக்க, அதை உயிர்பித்துப் பேசினான்.

ரங்கராஜன் அவனைப் பார்த்து பேச விரும்புவதாக ஓட்டுநர் கூறவும், இத்தனை நேரம் அவனிடமிருந்த இலகு பாவனை விடை பெற்று முகத்தில் பதட்டமும் யோசனையும் படர்ந்தது. கணவன் முக மாற்றத்தைக் கவனித்த ஷெண்பா, “யாருங்க ஃபோன்ல?” என வினவினாள்.

“அப்பா பேசணும்னு வரச் சொல்லியிருக்காரு…” குரலில் பதற்றம் மேலிடக் கூறினான். அவன் முகத்தைக் கனிவாய்ப் பார்த்தவள், கரத்தை அழுத்தினாள்.

“ஒன்னும் இல்ல, போய் பேசிட்டு வாங்க. கோபத்துல அவர் எதுவும் பேசுனாலும், நீங்க பொறுமையா இருங்க!” என்றவளின் ஒருக்கரம் உயர்ந்து அவனது முதுகை ஆதுரமாகத் தடவ, பதற்றம் தணிவதை உணர்ந்தான் திவாகர். சில நொடிகளில் இயல்புக்கு வந்தவன், “தேங்க்ஸ் ஷெண்பா…” என அவள் நெற்றியோரம் முத்தமிட்டுவிட்டு குளித்து கிளம்பினான்.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top