உள்ளம் 3.2

“உன்கிட்ட மனுஷன் பேச முடியாது. அமைதியா வா!” திவா அதட்டலாய் மொழிய, முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள் தங்கை. சிறிது நேரத்தில் பத்திர அலுவலகம் வந்துவிட்டது.

“மனோ, கார்லயே உட்கார்ந்து இரு. நாங்க கூப்பிட வர்றப்போ வந்து சைன் மட்டும் பண்ணு!” என்ற திவாகர் குமரனுடன் உள்ளே நுழைந்தான்.

அவர்கள் சென்று அரைமணி நேரம் கடந்திருந்தது. இவர்களுக்கு முன்பே இருவர் இருக்க, அவர்கள் பதிவு முடிந்து, எல்லாம் பார்க்க நேரமானது. அதனாலே ஆண்கள் இருவரும் முன்னே சென்றனர்.

சிறிது நேரம் மகிழுந்தில் அமர்ந்திருந்த மனோ பொறுமை இல்லாது வெளியே வந்து நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். சில நிமிடங்களில் அவளருகே நிழல் தெரிய, யாரென திரும்பிப் பார்த்தாள்.

வாட்டசாட்டமாய் ஒரு இளைஞன் இவளருகே வர, ‘யார்?’ என்பதாய் அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள். இதற்கு முன்னே அவன் பரிட்சயம் இல்லை என மூளை எடுத்துக் கொடுத்தது.

“ஹாய்ங்க, என் பேர் நீரஜ்!” அவன் கையை அறிமுகத்திற்காக நீட்ட, அவனையும் கையையும் மாறி மாறி பார்த்தவளின் கரங்கள் மரியாதைக்காகக் கூட நீளவில்லை. எதிரிலிருந்தவனின் முகம் லேசாய் சுருங்கிப் போனது.

“இல்லை, தனியா நின்னுட்டு இருந்தீங்க. அதான் சும்மா பேசலாம்னு வந்தேன்!” என்றவன் குரலிலும் விழிகளிலும் ஏக ஆர்வம் மின்னின.

“எங்கப் படிக்குறீங்க நீங்க? எந்தக் காலேஜ்?” அவன் அடுக்கடுக்காய்ப் பேச, மனோ பதில் கூறாது எரிச்சலாய் அவனைப் பார்த்தாள். ஏற்கனவே இருக்கும் கடுப்பில் இவன் வேறு என்ற எரிச்சல் முகத்தில் அப்பட்டமாய்ப் படர்ந்து தொலைத்தது.

அவள் பார்வையை உணர்ந்தவன்,
“ரொம்ப டென்ஷனா இருக்கீங்க, வாங்க ஒரு காபி சாப்டுட்டே பேசலாம்!” என்றான். பேசிக்கொண்டே இரண்டு அடிகள் முன்னே வைத்தவனை உருத்து விழித்தவளின் பார்வை அவளை நோக்கி வரும் குமரனின் மீது படிய, “என் ஹஸ்பண்ட் வர்றாரு. அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு காபி குடிக்கப் போகலாமே!” என்றவளின் இதழ்கள் நக்கலாய் வளைந்தன.

அவளது பதிலில் எதிரிலிருந்தவன் அதிர்ந்து போனான். “ஏங்க, பொய் தானே சொல்றீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகலை தானே?” அவன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியும் ஏமாற்றமும் படர்ந்தன. அதில் மனோவிடம் இத்தனை நேரமிருந்த இறுக்கம் மொத்தமாகத் தளர்ந்து போயிருந்தது.

“ஆமாங்க, என் பொண்ணைக் கூட காலைல ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்தேன்…” மனோ கூறியதும், குமரனைத் திரும்பிப் பார்த்த நீரஜ், “என்னங்க சொல்றீங்க? அவரைப் பார்த்தா ஹல்க் மாதிரி இருக்காரு. நீங்க பார்பி மாதிரி குட்டியா க்யூட்டா இருக்கீங்க, இதுல குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பீட்டு வரீங்களா?” என ஆற்றாமையுடன் வினவினான். விழிகள் முழுவதும் ஏமாற்றம் வியாபித்தது.

“எனக்கு அந்த ஹல்க்கைதான் பிடிச்சிருக்கு மிஸ்டர் நீரஜ்!” என்றவளின் ஓரப்பார்வை மின்னல் வேகத்தில் குமரனைத் தொட்டு மீள, இதழ்களில் இளம்புன்னகையொன்று முகிழ்த்தது.

அவன் அருகில் வந்துவிட, “சாரி ப்ரோ…” என நீரஜ் அகன்றுவிட்டான். குமரன் அவன் யாரென மனோஹரியைக் கேள்வியாய் நோக்கினான்.

‘உனக்கு பதில் கூற முடியாது!’ என்ற பாவனையில் அவள் அலுவலகத்தை நோக்கி நடக்க, “அந்தப் பையன் யாரு, தெரிஞ்ச பையனா?” என வினவிய குமரனுக்கு மனோ அவனிடம் சிரித்துப் பேசியது தெளிவாய் விழிகளுக்குப் புலப்பட்டிருந்தது.

“அதை உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை!” அவனைப் போலவே பதில் மொழிந்தாள் மனோ.

“சரி, அவன்கிட்டயே கேட்டுக்கிறேன்…” குமரன் நகரப் போக, பட்டென அவனது வழியை மறித்துவிட்டாள். முதன்முதலாக இதயம் குமரனருகில் படபடவென அடித்துத் தொலைத்தது.

“அது‌‌… காலேஜ்ல கூடப் படிச்ச பையன். அதான் எதேச்சையா பார்த்ததும் பேசுனான்!” என்றவளின் முகம் இவனைக் காணவே இல்லை. லேசாய் படபடத்துப் போன குரலில் பேசியவளின் பாவனையிலும் முகத்திலும் இவனுக்கு ஏதோ சந்தேகம் வந்தது. அவனறிந்தவரை மனோவின் குரலில் முதல்முறையாக தடுமாற்றம். குரலும் நலிந்து ஒலிக்க, கருமணிகள் அங்குங்மிங்கும் உருண்டன. அந்தப் பையனை குமரன் ஒருமுறை திரும்பிப் பார்க்க, அவனும் இவர்களைத்தான் பார்த்திருந்தான். குமரன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து சட்டென வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.

நெற்றியைச் சுருக்கியவன், முதல் வேலையாக அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என நினைக்க, அதை மறுநாளே மனோ உடைத்து விடப்போவதை அறியாமல்.

தான் கூறியதை அவன் நம்பவில்லை என்று உணர்ந்தாலும் மனோ எதுவும் பேசாது முன்னே நடந்தாள். இன்னும் பதற்றம் குறையவில்லை.
இவளும் திவாகரும் கையெழுத்திட்டு முடிய, மேலும் அரை மணி நேரம் கழித்தே வேலை முடிந்திருந்தது. மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாலையில் கவனத்தை வைத்திருந்த குமரனின் கண்கள் எதேச்சையாக வழியிலிருந்த பேருந்து நிலையத்தை கவனித்தன.‌ அங்கே நின்று கொண்டிருந்த ஆடவணையும் பெண்ணையும் கண்டவன் முகத்தில் சிந்தனை முடிச்சுகள் படர்ந்தன. நொடியில் வாகனத்தை நிறுத்தியிருந்தான். மற்ற இருவரும் அவனைக் கேள்வியாய்ப் பார்த்தனர்.

குமரன் பதில் கூறாது கீழே இறங்க, “என்னாச்சு குமரா?” என திவாகர் கேட்ட கேள்வியைப் புறந்தள்ளியவன், விறுவிறுவென சாலையைக் கடந்து மறுபுறம் சென்றான். திவாவும் மனோவும் அவன் செயலைதான் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

“ஷெண், என் கூட வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை. வா, என் பைக்ல நானே உன்னை ட்ராப் பண்றேன்!” இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இளைஞனொருவன் ஷெண்பாவை வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

“இல்லை கனி, உனக்கு எதுக்கு சிரமம். நான் பஸ்லயே போய்க்கிறேன்.
இல்லைன்னா, விக்ரம் வருவான்.‌‌..” ஷெண்பகவல்லி எனப்பட்டவள் பதிலளித்தாள்.

“ப்ம்ச்… பெட்ரோல் காலி. நான் உன்னை வீட்ல ட்ராப் பண்ண போறேன். இதுல என்ன சிரமத்தை நீ கண்ட!” கனியமுதன் மேலும் வற்புறுத்த, பேருந்து வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தாள் ஷெண்பகவல்லி.

error: Content is protected !!
Scroll to Top