அவள் முகத்தில் அப்பட்டமான எரிச்சல். எத்தனைக் கூறியும் புரிந்து கொள்ள மாட்டேன் என்பவனை என்ன செய்வது எனத் தெரியாது மனதில் குமைந்து கொண்டிருந்தாள். அகம் முகத்தைப் பிரதிபலித்தாலும், அருகிலிருந்த கனியமுதன் நகர்வதாய் தெரியவில்லை.
அப்போது திடுமென திருக்குமரன் அவர்கள் முன்னே சமீபிக்கவும், அவனை அங்கு எதிர்பாராது திகைத்து விழித்த ஷெண்பாவின் விழிகள் ஒரு நொடி அதிர்ந்து போனது. மறுநொடி லேசாய் விழிகள் கலங்க, அதை அவனுக்குக் காட்டாது முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். நீண்ட நெடிய நாட்கள் கழித்தான சந்திப்பு. உடலும் மனதும் அவனை அணைத்துக்கொண்டு கதறச் சொல்ல, தொண்டை அடைத்துப் போனது. மனம் முழுவதும் சொல்லவொன்னா துயரம் படர, அந்நொடி உடைந்து போனாள். உருண்டு திரண்டு இமைகளை நனைத்த உவர்நீர் வெளியே வரவா? என எட்டி நின்று நலம் விசாரித்தது.
“ஸ்கூட்டீக்கு என்னாச்சு?” குமரன் அவளைப் பார்த்து வினவினான். அவளது முகபாவங்களையும் விழிநீரையும் கண்டவனின் உடலும் மனதும் இறுகிப் போனது.
“யாருங்க நீங்க, அவ ஸ்கூட்டீக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன?” என்ற கனியமுதன் இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி ஷெண்பகம் அருகே செல்லப் போக, குமரன் அவளருகே சென்று அரண்போல நின்றான். அவள் அசையாது நின்றாள். உள்ளம் மட்டும் தவிக்க, உடல் கோபத்தில் தகித்துக் கொண்டிருந்தது.
‘அருகில் வந்தால், உன்னை அடித்து விடுவேன்!’ என்பது போல நின்ற குமரன் கையிலிருந்த செம்பு காப்பைத் திருகினான். அதைக் கண்டு ஒரு நொடி திகைத்த கனி, “ஷெண், இது யாரு, உன் ரிலேட்டீவா?” என அருகே வராது எட்ட நின்று வினவினான். குரலில் லேசான பதற்றம்.
அவனது கேள்வியில் ஷெண்பகத்திற்குக் கோபம் வர, “ரீலேட்டீவா, அப்படி யாரும் இல்லை! எனக்கு இவரை யாருன்னே தெரியாது கனி” என்றவளின் வார்த்தைகளில் அத்தனை காரம். இத்தனை வருட வாதையும் வேதனையும் குரலில் வெளிப்படுத்தினாள். உள்ளம் குமைந்ததில் சினம் மூண்டது. அந்தப் பதிலில் குமரனுக்கு சொல்ல முடியாத வலியொன்று இதயத்தைப் பிழிந்தது.
“அப்புறம் எதுக்கு நீ அவன் பக்கத்துல நிக்கிற?” எனக் கனி ஷெண்பகத்தின் கையைப் பிடிக்கப் போக, நொடியில் குமரன் அவனது கையைப் பிடித்து திருகி முதுகோடு வளைத்திருந்தான்.
இதை எதிர்பாராத கனி, “ஆ…. விட்ருங்க சார். வலிக்குது!” என அலறியபடி துள்ளி விலகப் பார்க்க, குமரனின் பிடி இறுகியது.
“என்னப் பண்ற குமரா, முதல்ல அவன் கையை விடு!” என ஷெண்பா பதறியவள், குமரனைப் பிடித்திழுக்க முனைந்தாள்.
“ஸ்கூட்டில என்ன பிராப்ளம்னு கேட்டேன்!” குமரன் கையைவிடாது அழுத்தமாய் வினவினான். பதில் இயம்பினால் மட்டுமே கனியை விடுவிப்பேன் என குரல் முழுவதும் அழுத்தமிருந்தது.
“பெட்ரோல் தீர்ந்து போச்சு. அதான் பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். போதுமா, முதல்ல அவன் கையைவிடு!” என ஷெண்பா குமரனின் கையைக் கோபமாகப் பிடித்திழுத்தாள். தூரத்திலிருந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மனோவும் திவாகரும் இவன் புதியவனின் கையை முறுக்கவும், பதறிப் போய் அருகே வந்தனர்.
மனோவின் பார்வை ஷெண்பா பிடித்திருந்த குமரனின் கரத்தில்தான் நிலைத்திருந்தது. கனியமுதன் கையைப் பிடித்துக்கொண்டு வலியில் கதற, “கனி, முதல்ல நீ கிளம்பு…” என அவள் கூறவும், அவன் நொடியில் நகர்ந்திருந்தான். செல்லும் அவனின் பார்வை குமரனை ஒரு முறைப்புடன் தொட்டு மீண்டது.
குமரனின் கரங்கள் இன்னும் அவளது கரத்தில்தான் இருந்தன.
“எதுக்கு அவனை அடிச்ச நீ?” தன் கையைப் பட்டென உருவிய ஷெண்பா கண்கள் இடுங்கக் கோபமாய் அவனை உருத்து விழித்தாள்.
“என் முன்னாடியே உன் கையை ஒருத்தன் பிடிக்க வருவான். பார்த்துட்டு சும்மா போக சொல்றீயா?” குமரன் குரல் முழுவதும் சீற்றம். அடித்தக் கையை உதறினான்.
“என்னை தானே பிடிக்க வந்தான். உனக்கு எதுக்குக் கோபம் வருது. நீ யார் எனக்கு? எதுக்காக எனக்கு ஏத்துட்டு அவனை அடிக்கிற?” ஷெண்பாவின் குரலில் நக்கல் தொனிதான். இத்தனை வருடக் கோபம் வார்த்தைகளில் அவனை வதைக்கத் துடித்தது. அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள்.
அதில் இவனுக்கு கோபம் சுறுசுறுவென பொங்கத் துவங்கியது. அருகே இருந்த அவளது இருசக்கர வாகனத்தை ஒரே எத்தில் உதைத்து கீழே தள்ளி இருந்தான். கோபம்! சினம் மூண்டெழுந்தது. யார் மீது, எதன் மீது காட்டுவது எனத் தெரியாது இருசக்கர வாகனத்தின் மீது கொட்டிக் கவிழ்த்தான். அதற்கெல்லாம் அருகிலிருந்தவள் அசருவதாய் தெரியவில்லை. இவனைப் போலவே திமிராய் அலட்சியமாய் நின்றிருக்க, மனோ இவர்களது உரையாடலை உன்னிப்பாய் கவனித்தாள். அவளது விழிகள் யாரிவள் என பதகளிப்புடன் இருவரையும் விழுங்கியது. குமரனின் செயல் இவளுக்குள்ளே பயபந்தை உருளச் செய்தது.
“குமரா, என்னாச்சு, என்ன பிரச்சனை? யார் இவங்க?” திவாகரின் பார்வை ஷெண்பாவைத் தொட்டுத் தடவி மீண்டது. குமரனிடம் ஒரு பெண் இத்தனை உரிமையாய் பேசுகிறாளே என்ற ஆச்சர்யம் அவன் குரலில் கொட்டிக் கிடந்தது.