உள்ளம் 3.1

மறுநாள் காலையில் பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டும் எனத் தெரிந்தாலும் தந்தை மீதும் குமரன் மீதும் இருந்தக் கோபத்தில் மனோஹரி கிளம்பவே இல்லை. நடுவீட்டில் நீள்விருக்கையில் அமர்ந்து காலை ஆட்டியவாறு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கோபம் இப்படித்தான் வெளிப்படும். எதையும் செய்யாது, உண்ணாது அமர்ந்திருப்பாள். இன்றும் அவள் அவ்வாறு அமர்ந்திருக்க, ரங்கராஜனுக்கு மகளைச் சமாதானம் செய்ய நேரமில்லை. கட்சிக் கூட்டம் ஒன்றிற்கு செல்லத் தயாராகியிருந்தார்.

“மனோ, ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கு. கிளம்பிப் போய்ட்டு வா!” என்ற ரங்கராஜன் கட்சிக் கூட்டத்திற்குக் கிளம்பினார்.

“என்னால எங்கேயும் போக முடியாது…” இவள் அசட்டையாய்க் கூறினாள்.

“போய்தான் ஆகணும். நான் ஈவ்னிங் வரும்போது ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சிருக்கணும்!” என்று கூறியவர், சின்ன சிரிப்புடன் மகள் கன்னத்தைத் தட்டினார். அவரது கரத்தைத் தட்டிவிட்டாள் மனோ.

“போய்ட்டு வா டா!” என்றவர் விடைபெற, அவரை முறைத்துப் பார்த்தாள்.

குளித்து வந்த திவாகர், “மனோ, பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருக்கணும். போய் ரெடியாகு…” என்றான்.

எதையும் கூறாது அவனையும் முறைத்தவள், “இப்போ வாங்கப் போற லேண்ட்-அ யாரை அடிச்சு வாங்குறோம் திவா?” என காட்டமாய்க் கேட்டாள்.

“லூசாடி நீ, இந்த லேண்ட் ஓனர் ஏதோ கஷ்டம்னு விக்கிறதா சொன்னாரு. அப்பாவும் வாங்கிப் போட்டா, நிலம் அப்படியே காலத்துக்கும் இருக்கும்னு வாங்கப் போறாரு. எப்பப் பார்த்தாலும் கட்டப் பஞ்சாயத்து பண்ற மாதிரி பேசாத மனோ. நம்மளை எதிர்க்குறவங்களைதான் நம்ம அடிக்கிறோம். எல்லாரையும் இல்லை. அதைப் புரிஞ்சுக்கோ! போய் கிளம்பு” திவாவும் பதிலுக்கு இரைந்தான்.

அவனது பதிலும் இவளுக்குத் திருப்தியாய் இல்லை. கோபத்துடனே குளித்து முடித்து வேண்டுமென்றே ஆண்கள் அணியும் கால் சராயும் சட்டையும் அணிந்து வந்தாள். அவளைப் பார்த்த ராதாமணி, “ஏய் மனோ, என்னடி ட்ரெஸ் இது? நாலு பேர் வர்ற இடத்துக்கு இப்படித்தான் போட்டுட்டு போவீயா!” எனப் பொரிந்தார். அவரை சட்டை செய்யாது தலையைப் பின்னலிட்டாள்.

“உன்கிட்டதான் டி பேசீட்டு இருக்கேன். உனக்கு அறிவு இருக்கா? இல்லையா?” கோபமாய் மகள் முகத்தின் முன்னே சென்று வினவினார் ராதா.

“ஏன், உனக்கே இருக்கும்போது எனக்கு இருக்காதா? வீட்ல அத்தனை நடக்குது. உன் புருஷன் அடிதடி, கட்டப் பஞ்சாயத்து எல்லாம் பண்ணீட்டு இருக்காரு. அதெல்லாம் கேட்காத. நான் இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கதுதான் உனக்கு இப்போ பெரிய பிரச்சனை?” மனோ பல்லைக் கடித்தாள்.

“இந்த ட்ரெஸ்ஸோடதான் போவேன். இஷ்டம் இருந்தா அனுப்பு. இல்லை உன் மகன் பேர்லயே ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க!” என்றாள் அலட்சியமாய். அவள் வேண்டுமென்றேதான் செய்கிறாள் என ராதாமணியால் உணர முடிந்தது.

தான் வேண்டாம் என்றுவிட்டால், ரங்கராஜன் வந்து தன்னைத் திட்டி தீர்த்துவிடுவார் என்பதை உணர்ந்தவர், “என்னமோ பண்ணித் தொலை. என் பேச்சைக் கேட்குற வயசை எல்லாம் தாண்டிடுச்சுங்க. கல்யாண வயசுல ஆம்பளைப் புள்ளைங்க போட்ற ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு போய், மானத்தை வாங்கப் போறா!” எனப் புலம்பினார். திவாகர் இதைக் கவனித்தாலும் எதிலும் தலையிடவில்லை. அவன் கேட்டாலும் இப்படித்தானே பேசுவாள். அவளிடம் பேசி ஜெய்க்க முடியாது என விட்டுவிட்டான்.

இருவரும் உண்டு தயாராக, குமரன் வந்துவிட்டான். மூவரும் மகிழுந்தில் திருச்சியிலுள்ள பத்திர பதிவு அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். குமரன் வந்ததிலிருந்து மனோவின் பார்வை முழுவதும் அவனிடம்தான். அவனது புருவங்கள் கேள்வியாய் சுருங்கின. ஆனால், அவனாக எதையும் கேட்க விழையவில்லை.

“இப்போ நம்ம வாங்கப் போற லேண்ட் ஓனர் யாரு?” மனோவின் குரல் மகிழுந்தில் உரக்க எதிரொலித்தது.

திவாகர் ஏதோ பேச முனைய, “நான் உன்கிட்ட கேட்கலை திவா!” என அவன் வாயை அடைத்துவிட்டாள். குமரன் செவியில் விழுந்தாலும் பதிலளிக்கவில்லை.

இவள் விடவில்லை. அவனைத்தான் அழுத்தமாய்ப் பார்த்தாள். வாகனத்தை லாவகமாய் இயக்கிக் கொண்டிருந்தவனுக்கு அந்தப் பார்வை தொல்லை செய்தது. ஆனாலும் எதுவும் பேசவில்லை.
‘உனக்கு கேட்க வேண்டும் என்றால் நேரடியாய் என்னிடம் கேட்க வேண்டும். அப்போதுதான் பதில் கூறுவேன். இவள் நேரடியாய்க் கேட்காமல், யாரிடமோ வினவுவதைப் போலக் கேட்டால், என்னால் பதில் சொல்ல முடியாது!’ என அவனும் அசிரத்தையாய் இருந்தான்.

ஒரு நொடி விழிகளை மூடித் திறந்தவள், “நான் உங்ககிட்டதான் கேட்குறேன். பதில் சொல்லுங்க!” என்றாள் பொறுமையாய். அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“அதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை!” என்றான் திமிராய்.

“ஏன்? ஏன் இல்ல? நான் உங்க ஓனரோட பொண்ணு. அடுத்த ஓனர் கூட. என்கிட்ட நீங்க சொல்லித்தான் ஆகணும்!” குரலில் சீற்றத்துடன் வினவினாள்.

அவளைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவன், “லேண்ட் ஓனர் பேர் காசி. லால்குடில தான் லேண்ட் விக்கிறாரு!” என்றான்.

“அவர் லேண்டை திடீர்னு உங்ககிட்ட எதுக்கு விக்கணும்?” மனோ அடுத்ததாய்க் கேட்க,
“அதை நீ அவர்கிட்டதான் கேட்கணும்‌…” என்றான் குமரன்.

“ஏன், உங்களுக்குத் தெரியாதா என்ன, அதான் முழு ஜாதகத்தையும் எடுத்து இருப்பீங்களே!” நக்கலாய் அவன் முகத்தைப் பார்த்து உதட்டை சுழித்தாள்.

“வீட்ல ஏதோ பிராப்ளம். அதான் விக்கிறேன்னு சொன்னாரு…” என்ற குமரனின் கரங்கள் வலதுபக்கமாய் திசைமாற்றியை இயக்க, மகிழுந்தின் வேகத்தை உயர்த்தினான். அது அவனின் கோப அளவைப் பறைச்சாற்றியது. இவள் தொடர்ந்து கேள்வியெழுப்ப, அவனுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது.

“ப்ராப்ளம் அதுவா வந்துச்சா? இல்லை நீங்களா வர வச்சீங்களா?” இப்போது மனோவின் குரலில் இருந்த எள்ளலில் அலைபேசியை எடுத்து நில உரிமையாளரை அழைத்தான் குமரன்.

அழைப்பு ஏற்கப்பட்டதும், “காசி அண்ணா, கிளம்பீட்டிங்களா?” என விசாரித்தான்.

“வந்துட்டே இருக்கோம் தம்பி…” அவர் பதிலளிக்க, அழைப்பை ஒலிப்பெருக்கிக்கு மாற்றியவன், “இந்த நிலத்தை ஏன் திடீர்னு விக்கிறேன்னு சொன்னீங்க, என்ன பிரச்சனை?” என வினவினான்.

“என் அப்பாவுக்கு உடம்பு முடியலை பா. ஹாஸ்பிடல்ல வச்சு பார்க்குறோம். ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. அதான் இதை வித்துடலாம்னு முடிவு பண்ணேன் பா…” அவரது பதிலை மனோவும் கேட்டுக் கொண்டேதான் இருந்தாள்.

“சரிங்க அண்ணா, நேர்ல பேசிக்கலாம்!” என அழைப்பைத் துண்டித்தவன், மனோஹரியை அழுத்தமாய்ப் பார்த்தான். அவளும் பதிலுக்கு சளைக்காமல் பார்த்து வைத்தாள்.

“மனோ, இப்போ போதுமா உனக்கு? எல்லாத்தையும் குற்றக் கண்ணோடப் பார்க்காத!” திவாகர் தங்கையைக் கடிந்தான்.

“இதுக்கு முன்னாடி நீங்க எல்லாம் காந்தி மாதிரி அகிம்சை வழியை ஃபாலோ பண்ணீங்களா திவா?” நறுக்குத் தெரித்தாற் போலக் கேட்டாள் மனோஹரி.

error: Content is protected !!
Scroll to Top