குமரனுக்கு வங்கியில் கடன் வாங்கியப் பணம் கைக்கு வந்து சேர்ந்திருக்க, செங்கல் சூளை அமைப்பதற்கான பணியில் மும்மரமானான். இடம் பார்ப்பது, அதற்குத் தேவையான எந்திரங்கள் வாங்குவது என நேரம் நகர்ந்தது.
அன்றும் அப்படித்தான் சூளை வேலையாகக் கிளம்பிக் கொண்டிருந்தவனின் பார்வை மனைவியிடம்தான். புதிதாய் ஒரு மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்து, ஒரு வாரமாக சென்று வருகிறாள்.
அவனின் பார்வை உணர்ந்தவள் முறைத்துவிட்டு நகரவும், இவனுக்குப் புன்னகை முகிழ்க்க, நேற்றைய தங்களுக்கு இடையேயான சண்டை நினைவை நிறைத்தது.
ஷெண்பா சென்ற பிறகு மனோஹரி குமரனை முறைத்துக்கொண்டே சுற்றினாள். அறைக்கு வந்தப் பிறகும் அவளது பார்வை மாறாது போக, “ஏய், என்னடி?” எனக் கேட்டான் இவன்.
அதற்குப் பதிலளிக்காதவள், அறைக்கதவை அடைத்துப்பின், மின் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள். அவளுக்கு அருகே படுத்த குமரன் மனைவின் இடையில் ஒரு கையைப் போட்டுத் தன்னை நோக்கி இழுக்க, “என்ன… என்ன வேணும் உங்களுக்கு?” எனக் கேட்டவளின் முகம் அவன் உயிர்ப்பித்த விளக்கொளியில் பொன்னிறமாக மின்னியது.
அன்றைய கூடலுக்கும் இணக்கமான பேச்சிற்கும் பிறகு அது போலொரு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. அடுத்தடுத்த நடந்தப் பிரச்சனைகளில் மனைவியை மறந்திருந்தான். இன்றைக்கு சூழல் சுமூகமாக மாறிப் போனதும், மனதும் கொஞ்சம் இதமாய் உணர்ந்தது. அதனாலே இந்த அருகாமையை மனம் விரும்ப, முறைக்கும் மனைவியின் முகம் கூட அத்தனை அழகாய்த் தெரிந்து தொலைத்தது.
“எதுக்கு இப்போ கோபம்?” எனக் கேட்டவனை பார்வையால் எரித்தவள், “உங்கத் தங்கச்சிதான் திவாகரை அடம்பிடிச்சுக் கல்யாணம் பண்ணி இருக்கா, அவன் மேல எந்தத் தப்பும் இல்லதானே!” என்றாள். அமைதியாய் அவளைப் பார்த்தவன், பதில் உரைக்கவில்லை.
“பாவம் திவா, எல்லாரும் அவனைதானே குற்றவாளியா நிறுத்துனீங்க…” என்றவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவன், “சூழ்நிலை அப்படியாகிடுச்சு மனோ… ஏன் நீ என்னை அடம்பிடிச்சுக் கல்யாணம் பண்ணலையா?” எனக் கேட்டவனை விழிகளால் எரிக்க முடிந்தால், மனோஹரி எரித்திருப்பாள்.
“நானும் உங்கத் தங்கச்சியும் ஒன்னுக் கிடையாது. அதைப் புரிஞ்சுக்கோங்க… நான் என் அப்பா, அம்மா, கூடப் பொறந்தவங்களுக்குத் தெரியாம திருட்டுக் கல்யாணம் பண்ணலை. எப்பவும் பண்ற மாதிரி உங்கத் தங்கச்சிக்கு இப்பவும் சப்போர்ட் பண்ணாதீங்க… கடுப்பாகுது!” என்றவள் பொரிய,
“சரி விடு மனோ. அவ பண்ணது தப்புதான்!” என ஒப்புக் கொண்டான் குமரன். அவன் மேலும் எதையாவது பேசினால், பேச்சு நீண்டுக் கொண்டே செல்லுமென இறங்கி வந்தான்.
“சின்னத் தப்பில்லை. ரொம்ப பெரிய தப்பு, நீங்க செல்லம் கொடுத்துதான் அவளை இப்படியாக்கி வச்சிருக்கீங்க!” என்றவள் மேலே பேசும் முன்னே பேச்சை நிறுத்தியவனின் கரங்கள் மனைவியை வளைத்து சுருட்டி தன்னுள்ளே அடைக்கலம் புக வைத்திருந்தது.
மனோஹரியிடம் மெலிதான எதிர்ப்பு.
அதை குமரன் அழகாய் கையாண்டிருக்க, சிணுங்கலும் சிவந்து போய் நடந்திருந்தக் கூடலை இந்தக் கோபமான கூடல் அமிழ்த்தியிருந்தது. குமரன் மீதான கோபத்தில் மனைவி அவனை ஒரு பாடுபடுத்தியிருந்தாள். மென்மையை என்பது பெயரளவில் இல்லாது வன்மைக்குத் தாவியிருந்தனர்.
அவளது பேச்சில் செய்கையில் கணவனுக்கு அப்படியொரு சிரிப்பு. “சிரிக்காதீங்க…” எனக் கூறி அந்த மீசையைப் பிடித்திழுத்து உதட்டைக் கடித்து வைத்தாள்.
அவளது அட்டகாசத்தில் உல்லாசப் புன்னகையுடன் அவளைத் தூக்கித் தன் மீது படுக்க வைத்தவன், “ஏன் டி?” எனக் கேட்டான். பதிலளிக்காது உதட்டைச் சுழித்து முகத்தைத் திருப்பினாள் . முதுகில் அவளது நகக்கண்கள் அழுத்தமாய்ப் பதிந்திருக்க, எரிந்தது அது. வேண்டுமென்றே செய்திருக்கிறாள் என்பது புரியாமல் இல்லை. இருந்தும் மனோவின் இந்தப் பரிமாணமும் அவனுக்குப் பிடித்தது. கோபத்தில் கூட மனைவி அவனை மறுக்கவில்லை. எந்த உணர்வாக இருந்தாலும் தன்னிடம் மட்டும் ஒளிவு மறைவு எதுவுமின்றி அப்படியே வெளிப்படுத்துகிறாள் என்பதில் உதட்டில் புன்னகை விரிந்தது.
அவன் விழிகளை மூட, மெதுவாய் அவனிலிருந்து பிரிந்து அருகே படுத்தாள் பெண். அவள் மீது கையைப் போட்டு இறுக்கியவன், “கோபம் போய்டுச்சா டி?” என கிசுகிசுப்பாய் வினவினான்.
“உங்க மேல இருந்தக் கோபம் போய்டுச்சு. உங்கத் தங்கச்சி மேலதான் செம்ம காண்டுல இருக்கேன்!” என அவள் பல்லைக் கடிக்க, “ஏய், அவகிட்ட எதுவும் சண்டை போடாத டி…” என்றான் கணவன் பதறி. இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை அவன் அறிந்துதான் இருந்தான்.
“எனக்கும் அவளுக்கும் நடக்குற பிரச்சனைல நீங்க உள்ள வரக் கூடாது!” என்றவள் குரலில் கட்டளையிருக்க, குமரனுக்குத் தெரிந்து போனது. பெருமூச்சை வெளிவிட்டவன், அவர்களுக்கு இடையே தான் நுழைய வேண்டாம் என நினைத்து உறங்கிப் போனான்.
இரவு நடந்ததை நினைத்துக் கொண்டே குளித்து முடித்து சட்டையை அணியச் சென்றவனின் பார்வை முதுகில் படர, கண்ணாடி முன்பு நின்று பார்த்தான். ஆங்காங்கே சிவந்து நகத் தடங்கள் இருந்தன.
மனோ தலையைப் பின்னலிட்டு இழுபட்டையை எடுக்க அறைக்குள் நுழைந்தவளின் பார்வையும் அவனிடம்தான். மனைவியை முறைத்த குமரன், “முதுகை என்னடி பண்ணி வச்சிருக்க?” எனக் கேட்டவாறே சட்டையை அணிந்தான்.
மனோஹரி எதுவும் பேசாது வெளியே சென்று அலமாரியில் வைத்திருந்த களிம்பு ஒன்றை எடுத்து வந்தாள். அதை கவனிக்கவில்லை குமரன். கடைசி பொத்தானை அவன் இட்டு முடிய, இவள் அவனருகே சென்று முதல் பொத்தானிலிருந்து ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தாள்.
“ஏய், என்னடி… இன்னும் கோபம் போகலையா? கதவை தொறந்து வச்சுட்டு என்ன பண்ற டி?” உண்மையிலே குமரன் குரலில் பதற்றம்.
கடைசி பொத்தான் வரை அவிழ்த்து சட்டையை கழற்றியவள், அவனை மறுபுறம் திரும்பச் சொல்லி, முதுகிலிருந்தக் காயத்திற்கு களிம்பை பூசினாள். ஜில்லென்று இருந்த அவளின் கரமும் களிம்பும் புண்ணில் குளிமையைப் பரப்ப, அவள் செய்கையில் இவனுக்குப் புன்னகை பிறந்தது. மருந்தை பூசி முடித்தவள் நகரப் பார்க்க, அவளது கையைப் பிடித்திழுத்தக் குமரன் இறுக அணைத்திருந்தான். மனோ பதிலுக்கு அவனை அணைக்கவில்லை. முகத்தில் இன்னுமே கோபத்தின் சுவடு லேசாயிருந்தது.
“சாரி டி…” என்றவன் உதடுகள் மனைவியின் நெற்றியில் மென்மையாய் படர, மனோவிடமிருந்த இறுக்கம் உடைய, உடல் தளர்ந்தது. அந்தக் குரல் அவளை சமாதானம் செய்ய, மெதுவாய்க் கரங்களை உயர்த்தி முதுகோடு குமரனை இறுக்கி அணைத்து மார்பில் முகத்தைப் புதைத்தாள். அந்த அணைப்பு இருவரையும் நிதானமாய் தென்றல் போல தழுவிச் செல்ல, “நானும் சாரி…” என்றாள் மனைவி. பேசியதற்கு மட்டுமல்ல அனைத்திற்குமாய் அவள் மன்னிப்பைக் கேட்க, எதற்கெனப் புரிந்தவன் உதட்டில் குறும்பாய் புன்னகை படர்ந்தது.