உள்ளம் – 29.1

ஒரு நொடி அவளுக்கு எதுவுமே புரிபடவில்லை. அவன் அணைப்பிற்குள் இருக்கிறோம் என்பதை தாமதமாய் உணர்ந்த ஷெண்பா, “என்ன… என்ன, எதுக்கு தேங்க்ஸ் சொன்னீங்க?” எனத் திணறலாய்க் கேட்டவளை கணவனின் பார்வை ஆசையாய் மொய்த்தது. அந்தப் பார்வை இவள் அடிவயிற்றில் திகைக்கச் செய்ய, “விடுங்க…” என்றாள் உள்ளே சென்ற குரலில். ஏனோ அவனின் அணைப்பில் அவளது உடல் சிலிர்த்து அடங்கியது. கணவனின் முதல் ஸ்பரிசமும் தன் மீதான நேசப் பார்வையும் இவளைச் சுருட்டிக் கொள்ள விழைந்தது.

உதட்டில் படர்ந்த இளம்புன்னகையுடன் அவளது காதோரம் குனிந்தவனின் பிடி இறுகியதே தவிர, அவளை விடும் எண்ணமில்லை. “ஷெண்பா, என்னைப் பிடிக்குமா உனக்கு, அவ்வளோ நம்பிக்கையா டி என் மேல?” எனக் கேட்டவனின் அடர்ந்தக் குரலில் இவளின் நெஞ்சுக்குழி வரை உலர்ந்து போனதொரு உணர்வு.

‘கடவுளே! இதென்ன இப்படி பேசுறாரு?’ என்று பெண் மனம் அலறியது. திருமணம் முடிந்தால், இந்த நெருக்கம், அணைப்பு எல்லாம் சகஜம் என மனம் உணர்ந்தாலும், இதெல்லாம் அவள் எண்ணியிருக்காதவை. திடீரென ஏற்பட்ட நெருக்கம் அவளை மூச்சு முட்டச் செய்தது.

“பதில் சொல்லு டி…” அதட்டலாய்க் கேட்டவனின் கரங்கள் மனைவியை வளைத்துப் பிடித்தன. தன் தமையனிடம் பேசியவற்றை இவன் கேட்டுவிட்டான் என்பது புரிய லேசாய் சிவந்து போனவள், “முதல்ல என்னை விடுங்க, அப்போதான் பேச முடியும்…” என்றாள் திணறலாய்.

அதை திகட்டாமல் உள்வாங்கியவன் இரண்டு கரங்களையும் அப்படியே விரித்து, மனைவியை விடுவித்தான். முகம் மட்டும் அகத்தைப் புடம் போட்டத் தங்கம் போல பளிச்சென மின்னி மிளிர்ந்து அருகிலிருப்பவளில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. கணவனிடமிருந்து பிரிந்தாலும் இன்னுமே சிலிர்த்து நின்ற காதோர ரோமங்கள் அவனிடம் ஆயிரம் கதையைப் பேசின‌. வயிற்றில் கோர்த்திருந்த கரங்கள் விடுபட்டிருந்தாலும் அதன் கதகதப்பு இன்னுமே அவளுள் அமிழ்ந்த உணர்வு.

நொடியில் அவனிடமிருந்து விடுபட்டு பார்வையைத் திருப்பியிருந்தாலுமே, இதயம் படபடவென அடிக்க, மூச்சை வெளிவிட்டவளிடம் ஏகத்தயக்கம்.
திவாகர் முகத்தைப் பார்க்காது ஜன்னலில் பார்வையைப் பதித்தவள், “பிடிக்கும்…” என்றாள் ஒற்றை வார்த்தையாய்.

‘போதவில்லை…’ என்பது போல திவாகரின் பார்வை அவளிடம் குவிந்தது.

“உன் அண்ணன் கிட்ட சொன்னா போதுமா? என்கிட்ட சொல்ல வேணாமா ஷெண்பா?” வசீகரமான சிரிப்புடன் கேட்டவனின் குரல் பெண்ணின் சிந்தையைச் சிதறடித்தது.

“என்ன… எதுக்கு இப்படி சிரிக்குறீங்க? அதான் அண்ணன் கிட்டே பேசுனதைக் கேட்டீங்களே. அப்புறம் என்ன?” தப்பித்துப் போகும் எண்ணத்துடன் பார்வையை அறையின் வாயிலில் வைத்து இரண்டெட்டு எடுத்து வைக்க முயன்றவளை மறைத்தது போல நின்றவன், “அவன்கிட்ட சொன்னா போதாது, என்னைத் தானே பிடிக்கும். அப்போ என்கிட்ட சொல்லணும், என் முகத்தைப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து சொல்லணும்…” என்றவனின் குரலில் அத்தனை அடம்.

‘கடவுளே!’ மனம் அலற, விழிகளை மலர்த்திப் பார்வையை அவன் முகத்தில் பதித்தாள் ஷெண்பா. குரல் அடைத்து சதி செய்ய, “பி.. பிடிக்கும்… நம்பிக்கை எப்படி வந்ததுன்னு தெரியலை. அண்ணாகிட்டே சொன்னது எல்லாம் உண்மைதான். உங்க இடத்துல வேற யாராவது இருந்தா நிச்சயமா கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன்!” என்றவளின் பேச்சு கணவனின் உதட்டுக்குள் புதைந்து போனது. நொடியில் அவளது இடையில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவளின் பேச்சும் உடலும் அவனுள் அடங்கியிருந்தது.

ஷெண்பா இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்தவள் அவனிடமிருந்து பிரிய முயற்சிக்கவில்லை. மனம் அவனது முத்தத்தில் மயங்கத் தொடங்க, “ஐ லவ் யூ ஷெண்பா, என்னடி பண்ற என்ன… பார்த்த நாள்ல இருந்து இப்போ வரை உள்ள போட்டுக் குடைஞ்சுட்டே இருக்க. இப்படி பக்கத்துல உன்னை வச்சுட்டு கண்ணியமா இருக்கதெல்லாம் கொடுமை டி!” என்றவனின் இதழ்கள் மெல்ல அவளில் ஊறத் தொடங்க, ஷெண்பா அந்தப் பேச்சில் சிவந்தாள், லயித்தாள், வெட்கினாள்.

முத்தமும் அணைப்பும் போதவில்லை போல, முன்னேறச் சொல்லி மனம் தூண்ட, திவாகர் இந்தப் பெண்ணிடம் திணறினான். தொட்டால் விட முடியாது எனத் தோன்றினாலும் மனைவியைத் தொட்டு, உணர்ந்து ஸ்பரிசிக்கத் தொடங்கினான்.

ஷெண்பா அவனை விலக்கவே இல்லை. காதோரம் கிசுகிசுப்பான அவன் பேச்சும் செய்கையும் அவளை எதையுமே சிந்திக்கவிடவில்லை. கணவன் மட்டுமே அந்நொடி பிரதானமாகிப் போனான்.

எதில் தொடங்கி எதில் முடிக்க எனத் தெரியாது திக்கித் திணறி என மனைவியை மொத்தமாய் தன் வசப்படுத்தியிருந்தான் திவாகர். சில கணங்களில் பயந்து விழித்தவளை அரவணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தவன், “ரிலாக்ஸ் ஷெண்பா… ரிலாக்ஸ்!” என முணுமுணுத்தவன், முழுதாய் அவளை ஆண்டிருந்தான்.

மனைவி களைத்து கலைந்து சிணுங்கி அவனைச் சிதறச் செய்து கொஞ்சம் சித்தம் கலங்கச் செய்தாள். இந்தப் பெண் தன் கை சேரவே போவதில்லை என எட்ட நின்று எட்டிக்காயாய் கசந்த நொடிகளை எண்ணி, இந்நொடி அவளைக் கைவளைவில் வைத்து தித்திக்கச் செய்தான்.

நீண்ட நெடிய இரவு பொழுதில் அவளை உணர்ந்து, ஸ்பரிசித்து, நுகர்ந்து தன்னை அவளுக்குப் புரிய வைத்து என எப்போது நான்கு விழிகள் உறக்கத்தினை தழுவின என இருவருமே அறியாது போயினர். இன்னுமே அவளை விடாது தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டான் திவாகர்.

மெல்லிய வெளிச்சம் அறைக்குள் படர, இமைகளை முயன்று பிரித்தான். கன்னத்தில் பதிந்த மென்மையில் நெற்றியைச் சுருக்கியவனின் பார்வை தன் முகத்தோடு புதைந்திருந்த ஷெண்பாவின் கரத்தில் நிலைத்தன. தான்தான் அவளின் கையை கன்னத்தில் வைத்து அழுத்தியிருக்கிறோம் என்பது புரிய மெதுவாகப் பார்வை மனைவியினுள் குவிந்தது. அளவாய் அடர்த்தியாயிருந்தக் கூந்தல் அவன் மீது படர்ந்து மணத்தைப் பரப்பியிருக்க, இருவரும் ஒரு போர்வையில் சுருண்டிருந்தனர்.

அவனையொட்டிப் படுத்திருந்த ஷெண்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இரவு தோன்றாத எண்ணங்கள் எல்லாம் இப்போது முகிழ்க்கவும் மெல்ல குற்றவுணர்வு படரத் தொடங்க, நெற்றியைத் தட்டினான். வீட்டில் இன்னுமே தீர்க்கப்படாத பிரச்சனைகள் எல்லாம் வரிசையில் நிற்கின்றன. தந்தையின் உடல்நிலை தேறியிருந்தாலும், இப்போது தன் செயல் கொஞ்சம் அதிகமாய்த் தோன்றித் தொலைத்தது. அதைவிட ஷெண்பாவின் மனநிலை என்னவென அவனுக்குத் தெரியவில்லை.

பேச வேண்டும் என்றுதான் அவளை அணைத்து முத்தமிட்டது எல்லாம். ஆனால், அடுத்து நடந்தது எல்லாம் அவனை மீறி நடந்தது. பெருமூச்சை வெளிவிட்டவன் எழுந்து குளித்து வேலைக்குச் செல்ல ஆயத்தமானான்.

ஷெண்பா எழவே இல்லை. நன்றாய் போர்வையை இழுத்துப் போர்த்தி துயில் கொண்டிருந்தாள். எழுப்ப மனம் வரவில்லை திவாகருக்கு. சனிக்கிழமை அவளுக்கு கல்லூரி விடுமுறை வேறு. அதனால்
ஒரு காகிதத்தில் தான் வேலைக்குச் செல்வதாய் எழுதி மேஜை அருகே வைத்துவிட்டு அகன்றிருந்தான்.

அவள் பத்து மணிக்கு மேல்தான் கண்விழித்தாள். இன்னுமே உறக்கத்திற்கு விழிகள் கெஞ்ச, அதை விரட்ட முயன்று எழுந்து சென்று குளித்து வந்தாள். இரவு நிகழ்ந்தவை எல்லாம் மெதுவாய் சிந்தையை ஆக்கிரமிக்க, உதட்டோரம் புன்னகை வழிந்தது.

மேஜை மீதிருந்தக் காகிதம் காற்றில் படபடக்க அதை எடுத்துப் பார்த்தாள். வேலைக்குச் செல்வதாகக் கூறியிருந்த திவா, மறக்காது சாப்பிடுமாறு வலியுறுத்தியிருந்தான். அதில் இன்னும் புன்னகை பெரிதானது.

சொக்கநாதன் மகளுக்கு அழைக்க, அவரிடம் பேசினாள். அடுத்து விக்ரம் பேச, சுமதியிடம் அலைபேசியைக் கொடுக்க சொன்னாள். ஏனோ எத்தனை செய்தாலும் தாய் என்ற எண்ணம் அவரிடம் பேசச் சொல்லித் தூண்ட, முனைந்தாள். ஆனால், அவர் பேசவில்லை. மகள் மீதான கோபத்தில் அவர் மறுத்திருக்க, இவள் விட்டுவிட்டாள்.

குமரனுக்கு அழைத்து அவர்களிடம் பேசினாள். காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து பருப்பு சாதம் வைத்துவிட்டு, கல்லூரி வேலைகளில் மூழ்கிப் போனாள்.

error: Content is protected !!
Scroll to Top