உள்ளம் – 28.3

“ஏன் ஷெண்பா இப்படி பண்ண?” அதிர்ந்தக் குரலில் ஆதங்கம்தான் பிரதானமாய் இருந்தது.

“எனக்கு நீ வேணும் குமரா, இத்தனை நாள் வெட்டி ஈகோவுக்காக பிரிஞ்சு இருந்துட்டோம். இனிமேல் அப்படி ஏதாவது நடந்தா என்ன பண்றதுன்ற பயம். எனக்கு என் அண்ணன் வேணும்!” என்றவளின் குரல் தழுதழுக்க, இந்த அன்பில் ஒரு நொடி முழுதாய் நனைந்திருந்தான் குமரன் வார்த்தை வரவில்லை அவனுக்கு. நெஞ்சடைத்துப் போனது.

தங்கை அருகே சென்றவன், “ஏன் ஷெண்பா?” எனக் கேட்டு அவளை வயிற்றோடு அணைக்கவும் தங்கை வெடித்து அழுதாள். இவனது கரங்களில் நடுக்கம். அவளது தலையைத் தடவினான். மனம் முழுவதும் பாரம். தனக்காக இவளது வாழ்க்கை வீணாகிவிட்டதோ என்ற எண்ணம் அவனைக் கொன்றது. அப்படியே அருகில் அமர்ந்தவனிடமிருந்து பிரிந்தவள் எக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டு, “ஐ லவ் யூ குமரா…” என்றாள். இவன் உடல் சிலிர்த்தது.

“எனக்காக ஏன் ஷெண்பா உன் வாழ்க்கையைப் பணயம் வச்ச? திவாகரை எனக்காக கல்யாணம் பண்ணீயா? அவரைப் பிடிச்சுப் போய்தான் இப்படி பண்ணன்னு நான் நினைச்சேன்!” என்றவனுக்கு அந்நொடி கூட நம்ப இயலவில்லை. திவாகர்தான் ஷெண்பாவின் பின்னே சுற்றி அவளை சம்மதம் சொல்ல வைத்து திருமணம் முடித்திருப்பான் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு. தங்கையை துளியளவு கூட அவனால் சந்தேகிக்க முடியவில்லை. ஆனால், அவன் நினைப்பு முழுவதும் பொய்த்திருந்தது.

“உனக்காகத்தான் அவரைக் கல்யாணம் பண்ணாலும், எனக்குப் பிடிச்சுதான் பண்ணேன் குமரா!”

“பொய் சொல்லாத ஷெண்பா, என்னை சமாளிக்கத்தானே சொல்ற?” இவன் குரலில் அப்பட்டமானக் கோபம்‌. தங்கையின் வாழ்க்கை தன்னால் கெட்டு விட்டதோ என்ற ஆதங்கம்.

“அண்ணா, உண்மையா… ஏனோ தெரியலை, அம்மாவும் அப்பத்தாவும் பேசுனப்போ இந்த முடிவை எடுக்கலாம்னு நினைக்கும்போது அவர் முகம் மட்டும்தான் ஞாபகம் வந்துச்சு. அவர் இடத்துல வேற யாரா இருந்தாலும், நான் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். ஏனோ தெரியலை அவர் மேல இந்தளவுக்கு நம்பிக்கை என் மனசுல இருந்துருக்குன்னு அப்போதான் எனக்குத் தெரியும். இந்த நிமிஷம் வரை நான் அவரைக் கல்யாணம் பண்ணதைத் தப்புன்னு ஒரு செக்ண்ட் கூட நினைக்கலை. கண்டிப்பா அவர் எந்த நிலைமைலயும் என்னைக் கைவிட மாட்டாரு குமரா… அவருக்கு நான்னா ரொம்ப பிடிக்கும்! எனக்கும்தான். என் வாழ்க்கையே மொத்தமா அவர்கிட்ட ஒப்படைக்கிற அளவுக்கு அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா, இனிமேலும் இருக்கும்!” என்றவள், “நீ அன்னைக்கு சொன்ன பிறகுதான் அவர் என்னைப் பார்க்குறதை நான் கவனிச்சேன்…” என்றவள் குரலில் கணவன் மீதான நம்பிக்கை மிளிர்ந்தது. குமரனுக்கும் திவாகரைத் தெரியும், அவன் குணத்தை, நடத்தையை என எந்த வகையிலுமே குற்றம் காண முடியாது. அவனறிந்த வரை நல்லவன் என்ற வரையறைக்குள்தான் இருக்கிறான்.

குமரனின் கேள்வித் தொடங்கியப் போதே வந்துவிட்ட திவாகர் அவர்கள் பேசட்டும் எனக் காத்திருந்தவனுக்கு மனைவி கூறிய செய்தி புதிது. தன்மீதான அவளின் நம்பிக்கையில் உடல் சிலிர்த்தது. அவள் வாய்வழியாய் தன்னைப் பிடிக்கும் எனக் கேட்டதும் வாயைடைத்துப் போனது இவனுக்கு. குமரனுக்காகத்தான் திருமணம் என அவனிடமே கூறித்தானே சம்மதம் கேட்டிருந்தாள். எந்தக் காரணமாக இருந்தாலும், ஷெண்பா மீதான தன் நேசத்தை மட்டுமே முன்னிலையாய்க் கொண்டுதானே அவன் திருமணம் செய்திருந்தான். இருந்தும் ஒவ்வொரு முறை அண்ணனுக்காகத் திருமணம் செய்தேன் என அவள் கூறும்போது இவனுக்கு ஓரத்தில் வலிக்கும்தான். அதையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டான்.

ஆனால், இந்நொடி உவகையை, களிப்பைப் பகிர வார்த்தைகள் இல்லாது தவித்தவன் முகத்தில் எதையும் காட்டாது உள்ளே நுழைந்தான். அவனின் பார்வை முழுவதும் மனைவியிடம்தான். தன்னிடம் சற்று முன்னர் அவன் பேசிய பேச்சில் முகிழ்த்தக் கோபம் இப்போதும் அவளிடமிருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

திவாகரைப் பார்த்தக் குமரனிடம் ஏகத் தயக்கம். அவனிடம் தான் பேசிய வார்த்தைகள் எதுவுமே நியாயமற்றவை எனப் புரிய, “சாரி திவாகர்… அது!” எனத் திணறினான். அப்போதுதான் அருகிலிருந்தவன் தனது கண்ணிலே பட்டிருக்கிறான் என்பது போல ஒரு நொடி அவன் வார்த்தைகளைக் கிரகித்த திவா, “பரவாயில்லை குமரா, விடு” என எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதைப் போல கூறவும், குமரனிடம் மெல்லிய ஆசுவாசம்.

“வீட்டுக்குப் போகலாம்…” என்ற குமரன் அவர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். வழியில் ஷெண்பாவின் வாகனத்தையும், அவனுடையதையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.

தமையன் தன்னைப் புரிந்து கொண்ட ஆசுவாசம் ஷெண்பாவிடம். சிந்துமாவையும் பேசிப் புரிய வைத்துவிடலாம் என எண்ணம் கொடுத்த நம்பிக்கையில் முகம் மின்னியது.

வீட்டிற்குள்ளே மூவரும் நுழைய, அந்த சத்தத்தில் வெளியே வந்த சிந்து அவர்களைப் பார்த்ததும் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவர், “உள்ளே வாங்க!” என சம்பிரதாயப் பேச்சோடு நிறுத்திக் கொண்டார்.

தமையனைப் பார்த்த மனோ எதுவும் பேசவில்லை. தந்தையின் உடல்நிலை சரியானதும் அவன் மீதான கோபம் இடைப்பட்ட நாட்களில் தணிந்திருந்தாலும், முழுவதும் அகலவில்லை. அவன் செய்த செயலை நினைத்து சினத்தை இழுத்துப்பிடித்து வைத்திருந்தாள்.

திவாகர் இருக்கையில் அமர, “சிந்து மா…” என ஷெண்பா அவரருகில் சென்றாள்.

“காஃபி எடுத்துட்டு வரேன்!” என்றவர் அவளுக்குப் பதில் கூறாது நகர்ந்திருக்க, மெலிதாய் நீர் படலம் மகளது கண்களில். மனோவும் மாமியார் பின்னே எழுந்து சென்றுவிட்டாள்.

ஷெண்பா கவலைப் படிந்த முகத்துடன் குமரனைப் பார்க்க, அவளைப் பார்த்து ஆறுதலாய்த் தலையை அசைத்தவன் சமையலறைக்குள் நுழைந்தான்.

“ம்மா, இப்போ எதுக்கு இங்க வந்து நிக்குறீங்க? ஷெண்பா உங்கக்கிட்டே தானே பேச வந்தா, ரெண்டு வார்த்தைப் பேசுனா என்ன?” என அதட்டலாய்க் கேட்டான். சிந்துவிடம் பதிலில்லை. மனோஹரி கணவனை முறைத்தாள்.

“மனோ, நீ எதுக்கு அவங்கப் பின்னாடியே வந்த, போய் உன் அண்ணன்கிட்ட பேச வேண்டியதுதானே?” அவளிடமும் காய்ந்தான். இரண்டு பெண்களும் அவனது வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை என்பதை உணர்ந்தவன், பெருமூச்சை வெளிவிட்டு, நடந்ததை விவரித்தான்.

அதைக் கேட்டுக் கொதித்த மனோ, “நினைச்சேன், என் அண்ணன் எதுவுமே பண்ணியிருக்க மாட்டான், உங்க தங்கச்சியோட அடமெண்ட்தான் காரணமா இருக்கும்னு!” பல்லைக் கடித்தாள். சிந்து மகன் கூறியதிலே சமைந்து போனார். என்ன இந்தப் பெண்ணிற்கு தன் மகன் மீது இத்தனை நேசம் என மனம் வியந்து போனது.

குளம்பியைத் தயாரித்து எடுத்துச் சென்றவர், திவாகருக்குக் கொடுத்துவிட்டு ஷெண்பாவிடம் நீட்ட, அவள் அவர் முகத்தைப் பாவமாய்ப் பார்த்தாள்.

“காஃபியை எடுத்துக்கோ டி. கல்யாணம் மட்டும் பண்ணத் தெரியுது. காஃபி எடுத்துக்க தெரியாதா?” என்றவரின் குரலில் துளிக்கூட கோபமில்லை என்றுணர்ந்தவளின் விழிகளில் நீர் வழிய, உதட்டில் புன்னகை மலர்ந்தது.

“சிந்து மா…” அவரை இறுக அணைத்தவளுக்குப் பேச்சே வரவில்லை. “சாரி மா…” என இவள் முனங்க, “பைத்தியக்காரி டி… ஏன் இப்படி பண்ண?” என செல்லமாய் அவளை அதட்டியவரிடம், புன்னகைத்தவாறே பதிலளித்தாள் மகள். மனம் அந்நொடி நிறைந்திருந்தது.

அனைவருடைய பார்வையும் அவர்களிடத்தில்தான். திவாகரை யாருடைய பார்வையோ குறுகுறுக்க, மனோஹரிதான் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“மனோ…” எனப் பேச வந்தவனை வெட்டும் பார்வைப் பார்த்து அறைக்குள் சென்றவளின் பின்னே இவனும் நுழைந்தான்.
தமையன் மீது எந்த தவறுமில்லை
என்று தெரிந்தப் பிறகு கோபமில்லை. இருந்தும் ஷெண்பா கேட்டதும் இவன் சம்மதித்து விட்டானென்ற சினம் கனன்றது.

“மனோ, இன்னும் உன் கோபம் போகலையா?” என்றவனை ஏகத்திற்கும் முறைத்தவள், “அவ கேட்டா நீ சரின்னு சொல்லி கல்யாணம் பண்ணுவியா திவா?” எனக் கடுப்புடன் கேட்டாள்.

“ச்சு… மனோ, அவ கேட்டான்றதைத் தாண்டி ஐ லவ் ஹெர். அதான் கல்யாணம் பண்ணேன். அப்போ அந்த செகண்ட் அவளைத் தவிர எதுவுமே தோணலை…” என்றவனின் விளக்கங்களை மனோ நம்பாத பார்வைப் பார்த்தாள்.

“நீ நம்பலைனாலும் அதான் நிஜம். இன்னும் உன் கோபத்தை இழுத்துப் பிடிச்சு என்கிட்ட பேசாம இருக்கப் போறீயா. அம்மா, அப்பா இருந்தும் அநாதை மாதிரி தனியா இருக்கேன். நீயும் உன் பங்குக்கு செய்!” ஆதங்கமாய் அவன் பேசியதில் இவளுக்கு வலித்தது.

“லூசு மாதிரி பேசாத திவா, அநாதையாம்… ஏன் யாருமில்லாம கல்யாணம் பண்ணும்போது அம்மா, அப்பா ஞாபகம் வரலையா உனக்கு?” எனப் பொரிந்தாள்.

“தப்புதான், தப்புதான். பண்ணிட்டேன், அதை மாத்த முடியாது. நீ இதை அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும். எனக்குப் பிடிச்சிருந்த ஒரு காரணத்தைத் தவிர என்கிட்ட வேற எதுவும் இல்ல? புரிஞ்சுக்கோ!” என்றவன் தளர்ந்து போய்விட்டான். இதற்கு மேலும் உன்னிடம் விளக்கம் கொடுக்க என்னிடம் தெம்பில்லை என்பது போலொரு பாவனை அவனிடம்.
அவனைப் பார்த்தவளுக்குப் பாவமாய்ப் போய்விட்டது.

“முடியலை மனோ…” என்றவன் குரல் கரகரப்பில், இவளது கரம் உயர்ந்து அவனது தோளை ஆதரவாகப் பற்றியது.

“விடு திவா, நீ சொன்ன மாதிரி நடந்ததையேப் பேசிட்டு இருந்தா, மாறப் போறது இல்லையே! அம்மா, அப்பா கோபம் போனதும் அவங்களே உன்னைக் கூப்பிடுவாங்க. அதுவரை நீ பொறுமையா இரு, நானும் அப்பாகிட்ட பேசுறேன்!” என்றவள் பதிலில் இவனது உதட்டில் ஆறுதலானப் புன்னகை ஜனித்தது. தங்கை தன்னைப் புரிந்து கொண்டதே அந்நொடி அத்தனை நிம்மதியாய் இருந்தது திவாகருக்கு.

சிந்து இருவரையும் இரவுணவு சாப்பிட வைத்தே வீட்டிற்கு அனுப்பினார். சிந்துமாவும் குமரனும் தன்னிடம் பேசியதில் ஷெண்பாவிடம் பழைய துள்ளல் மீண்டிருந்தது. முகம் மலர்ந்து விகசிக்க, உதட்டில் உறைந்தப்‌ புன்னகையுடன் இருக்கையில் விழி மூடி அமர்ந்திருந்தாள்.

திவாகருக்கு இப்போது அருகிலிருக்கும் மனைவி மட்டும்தான் மனதையும் விழிகளையும் நிறைத்தாள். குமரனிடம் அவளின் பேச்சு இப்போது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளைக் கொண்டது. அவளிடம் பேச வேண்டும், அவளை உணர வேண்டும், தன்னைப் பிடித்திருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது எனக் கூறிய உதட்டில் புதைந்து போக வேண்டுமென்றொரு காதல் வேட்கை அவனிடம். சூழ்நிலை கருதி அமைதியாய் இருந்தான்.

மகிழுந்தில் மெல்லிய இசைக் கசிய, சூழ்நிலைக்கு ஏற்ப ஜதி சேர்த்தது அது. இரவுக் காற்றும் குளுமையிலும் இவள் துப்பாட்டாவை எடுத்துத் தன்னை சுற்றிக் கொள்ள, இவனிடம் கள்ளப் புன்னகை. அந்தத் துப்பட்டா அவனாக மாறிவிடத் தோன்ற புன்னகை உதட்டில் மிளிர்ந்தது.

வீடு வந்ததும் அவன் மகிழுந்தை நிறுத்திவிட்டு வருவதற்குள் ஷெண்பா வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தாள். திவாகர் இரண்டு நிமிடங்கள் கழித்து நுழைந்தவன், “ஷெண்பா…” என அழைத்துக்கொண்டே அறையினுள்ளே நுழைய, என்னவென்பதாய் திரும்பிப் பார்த்தவளின் உடல் அவனுள் அமிழ்ந்து போகுமளவு இறுக்கி அணைத்திருந்தான். அவள் திகைத்து விழிக்கும் நொடி இவனது இதழ்கள் அவளது நெற்றியில் அழுத்தமாய்ப் பதிய, உடல் சிலிர்த்தது பெண்ணுக்கு.

“தேங்க்ஸ் டி பொண்டாட்டி!” காதோரம் கரகரத்தக் குரல் அவளது மூளையை மங்கச் செய்ய, என்ன பேசினான், என்ன செய்கிறான் இவன் எனத் தெரியாது மலங்க மலங்க விழித்தாள் ஷெண்பா. அந்த விழிகளுக்கு முத்தமிட்டு மோட்சம் பொறும் எண்ணம் கணவனுக்கு.

தொடரும்…

error: Content is protected !!
Scroll to Top