சிறிது நேரம் பேசி அவளது மனநிலையை மாற்றியவன், அவள் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தான். “இதை செலவுக்கு வச்சுக்கோ… வேற எதுவும் வேணும்னா, கால் பண்ணு. இந்த வீடு ஓகே வா, வேற வீடு வெளிய வாடகைக்குக் கூடப் பார்கலாம்!” எனப் பேசி, அவளது விருப்பத்தைக் கேட்டான்.
“இல்லண்ணா, இப்போதைக்கு இதுவே போதும், எல்லா திங்க்ஸூம் இருக்கு!” என அவனை அனுப்பி வைத்தாள். தனக்கு மட்டும் மாற்றுடை இருக்குமென அவள் பையை ஆராய, திவாகரின் அளவிற்கு புதிய உடைகளும் இருக்க, இவளது உதட்டில் புன்னகை பூத்தது. அத்தியாவசியம் எனத் தனக்குத் தோன்றிய அளவில் விக்ரம் அனைத்தையும் வாங்கி வந்திருக்க, இவளுக்கு அதுவே போதும் என்றானது.
அன்றைய பொழுது அப்படியே கழிய, மறுநாள் ஷெண்பா கல்லூரிக்கு கிளம்பினாள். திவாகரும் மணல் குவாரிக்கு கிளம்பினான். தந்தைக்கும் அவனுக்கும் ஆயிரம் மனஸ்தாபம் இருப்பினும், தொழில் அவர்களுடையதே. இரண்டு நாட்கள் அவரும் அங்கே சென்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். வேலையெல்லாம் நிலுவையில் இருக்கலாம். அவர்கள் செல்லாததைக் கண்டிப்பாக தொழிலாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வேலையைக் கிடப்பில் போட்டிருக்கலாம் என எண்ணம் அதைச் சுற்றியே நகர, தயக்கமிருந்தாலும் கிளம்பிவிட்டான்.
ரங்கராஜன் வந்து அவனைத் திட்டினாலும், வேறு எதுவும் பேசினாலும் சமாளித்துக் கொள்ளலாம் என எப்போதும் போல மணல் குவாரிக்குச் சென்று வேலை பார்த்தான். மகன் அங்கு வந்தது ரங்கராஜன் செவியை அடைந்தாலும் அவர் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தார். ஒருவாரம் அப்படியே கழிந்திருந்தது.
ஷெண்பாவின் இருசக்கர வாகனத்தை விக்ரம் வந்து கொடுத்துவிட்டு செல்ல, அதில்தான் அவள் கல்லூரி சென்று வந்தாள். தினமும் சொக்கநாதன் அழைத்து மகளுக்குப் பேசி விடுவார். அவர் அழைக்கவில்லை என்றாலும் இவளே அழைப்பாள். குமரனுக்கும் சிந்துவுற்கும் அழைத்து சோர்ந்து போனாள். கோபம் குறைந்ததும் பேசுவதாய் அவன் இவளைத் தவிர்க்க, தவித்துப் போனாள். இருந்தும் நடந்ததை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கும் நேரம் தேவைப்படும் என மூளை மனதை அதட்டி அடக்கியது.
கடந்து சென்ற ஒரு வாரத்தில் தர்மனின் மனைவியை அதிகம் தொந்தரவு செய்ய மனமில்லாது அவளளவில் தெரிந்தவற்றை சமைத்தாள். திவாகர் எதுவுமே சொல்லவில்லை, அமைதியாய் உண்டான். முதல் நாள் வாயில் வைக்க முடியவில்லை. அடுத்த நாள் கொஞ்சம் பரவாயில்லை என்றளவில் இருந்தது. இரவுக்கு மட்டும் இவன் வெளி உணவகத்திலிருந்து உணவை வரவழைத்தான். அவன் குவாரி, இவளுக்கு கல்லூரி என எந்த மாற்றமும் இல்லாது நாட்கள் சென்றன.
கல்லூரி முடிந்து ஷெண்பா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். சாலையில் கவனத்தைப் பதித்திருந்தாள். சரியாய் அதே நேரம் எதிரே குமரன் வந்தான். அவனைக் கண்டதும் தன் வாகனத்தை ஓரமாய் நிறுத்தியவள், “குமரா…” என அழைத்தவாறு மறுபக்கம் வாகனம் வருவதை கவனிக்காது சாலையைக் கடக்க, லேசாய் ஒரு வாகனம் அவளை இடிக்குமாறு வந்து கடைசி நொடியில் நின்றிருக்க, அதிர்ச்சியில் மயங்கியிருந்தாள் ஷெண்பா.
தன் பெயரை அழைத்தது யாரெனக் காணத் திரும்பிய குமரன் திகைத்துப் போனான்.
“ஏய், ஷெண்பா…” ஒரு நொடி இதயம் நின்று துடிக்க, வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு தங்கை அருகே விரைந்தான். அதற்குள் ஆட்கள் கூடியிருக்க, இவன் சென்று அவளை மடியில் தாங்கினான். உடலில் அடி எதுவும் படவில்லை என்றதும் மனம் கொஞ்சம் நிதானத்திற்கு வர, அருகிலிருந்த தானியில் அவளைத் தூக்கி அமர வைத்து மருத்துவமனைக்குச் சென்றிருந்தான்.
அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், “பெருசா இஞ்சுரி எதுவும் இல்ல. ஆக்ஸிடென்ட் ஆகப் போகுதேன்ற ஷாக்ல மயங்கிட்டாங்க. நத்திங் டூ வொர்ரி. இப்போ மயக்கம் தெளிஞ்சுடும்…” எனக் கூறி அகல, அப்போதுதான் இவனுக்கு மூச்சே வந்தது.
அவள் விழிக்கட்டும் எனக் காத்திருந்தவனின் அலைபேசி அலற, அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தான். அவன் பேச்சுக் குரல் மெலிதாகவெனினும் இவளது செவியை அடைய, கண்விழித்தாள் ஷெண்பா. குரலை வைத்து தமையன் வெளியே இருக்கிறான் என்பதை உணர்ந்தவளின் விழிகள் ஒரு முறை தனது உடலை தழுவின. விபத்து நேரவில்லை என்பதை மூளை இனம் கண்டறிய, அலைபேசி தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தது.
மேஜை மீதிருந்த கைப்பையையில் அலைபேசியைத் துழாவி எடுத்தவள், அழைப்பை ஏற்றுக் காதில் பொருத்த, “எங்க இருக்க ஷெண்பா, ஏன் இவ்வளோ நேரம் கால் அட்டென்ட் பண்ணலை. வீட்டுக்குப் போகலையா நீ?” திவாகர் குரல் கோபத்தோடு ஒலித்தது. மனைவிதான் அழைத்த அழைப்புகளை ஏற்கவில்லை, கல்லூரியிலிருந்து கிளம்பிவிட்டாள், வீட்டிற்கும் செல்லவில்லை என்றதும் பதைபதைத்துப் போயிருந்தான் ஆடவன். தன்னுடைய பொறுப்பில் தன்னை நம்பி வந்திருக்கும் பெண்ணை, தான் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையோ என்ற எண்ணம் வேறு மனதை அலைக்கழித்திருக்க, அது குரலில் வெளிப்பட்டது.
“ஷெண்பா, லைன்ல இருக்கீயா? இல்லையா?” அவள் அமைதியை உணர்ந்து மீண்டும் வினவினான்.
“லைன்லதான் இருக்கேன். நான் சொல்றதைப் பொறுமையா கேளுங்க…” என்றவள் மருத்துவமனையில் இருக்கிறேன் என்றால் பதறிவிடுவான் என நடந்ததை முழுவதும் ஒப்பித்து முடித்தாள். ஆழ்ந்த அமைதி அவனிடம். அதைக் கிழித்துக்கொண்டு கோபமான வார்த்தைகள் வந்து விழுந்தன.
“அறிவிருக்காடி உனக்கு, ரோட்ல கண்ணை வைக்காம, எங்க வச்சிருந்த… அடிபடலை சரி. இதுவே வேறெதுவும் ஆகியிருந்தா என்ன பண்றது… அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் அறிவில்லையா டி, அவன் ஏற்கனவே விழுந்து வாரிட்டான். அடுத்து நீயா?” மூச்சு வாங்க அவன் கத்த, தமையனைப் பற்றி பேசியதில் ஷெண்பா கோபத்தோடு அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அதில் திவாகர் பல்லைக் கடித்துக்கொண்டு அவளைக் காண விரைந்தான்.
ஷெண்பா முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தாள். திருமணம் முடிந்த கடந்த இரண்டு வாரத்தில் முதன்முதலான சண்டை அவர்களுக்கு இடையில். கோபத்தில் கத்தியிருந்தான் திவாகர். ‘டி’ என்ற அழைப்பு உரிமையைக் கொடுத்திருந்தது.
குமரன் உள்ளே வந்தான். பார்வையில் அனல் தெறித்தது.
“கண்ணை என்ன புடணில வச்சிருந்தீயா?” எனப் பல்லைக் கடித்தான். எதுவும் பேசாது அவனை முறைத்தாள்.
“பதில் பேசு ஷெண்பா…” இவன் அதட்ட, “என்ன பேச சொல்ற..
அதான் டெய்லி அத்தனை கால் பண்றேனே, ஒரு தடவை அட்டென்ட் பண்ணி நீ பேசுறீயா? ஹம்ம்… நான் கல்யாணம் பண்ணீட்டு வந்தேன்னு உனக்கு கோபம் இருக்கது நியாயம். அதை நான் தப்பு சொல்லலை. ஆனால், நான் எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்னு தோணலையா குமரா உனக்கு?” கோபமாய் ஆரம்பித்தவளின் குரல் கடைசியில் வருத்தம் தோய்ந்து கமறிப் போனது. இவன் பதிலில்லாது அவளை வெறித்தான்.
கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “கேட்க மாட்டீயா அண்ணா?” எனக் கேட்டவளிடம் தேம்பல். இத்தனை நேரம் இறுகியிருந்த உடல் அந்த அழுகையில் தளர, “சரி, எதுக்காக அவனைக் கல்யாணம் பண்ண? அதை சொல்லு” எனப் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டான்.
“உனக்காகத்தான் பண்ணேன்!” என்றவளின் பதிலில் அவளை அதிர்ந்து பார்த்தான் தமையன்.
“உனக்காகத்தான் குமரா பண்ணேன்… காலம் முழுக்க என் அண்ணாவோட உறவு எனக்கு வேணும்னு பண்ணேன்!” கைகளை முகத்தில் மூடி உடல் குலுங்க அழுதவள், நடந்த அனைத்தையும் திக்கித் திணறிக் கூறி முடித்திட, அவன் அதிர்ந்து போனான். இந்தப் பெண் தனக்காக வாழ்க்கையையே பணயம் வைத்திருக்கிறாளா? என்ற எண்ணத்தில் இதயம் நின்று துடித்துப் போனது.