உள்ளம் – 28.1

சில நொடிகள் திவாகர் அமைதியாய் நின்றிருந்தான். ஷெண்பாவின் விசும்பல் அதிகமாகவும், அவளது கைகளைப் பிடித்துத் தன் முன்னே நிறுத்தியவன், “ஷெண்பா, ஏன் இந்த அழுகை, முதல்ல நிறுத்து!” என மெலிதான அதட்டலுடன் அவளது விழிகளைத் துடைத்தான்.

அவனது முகத்தை கலங்கிய உள்ளத்துடன் பார்த்தவள், “ஏன் சொல்லலை?” என ஆதங்கமாய் வினவினாள். அவனிடம் பதிலில்லா மௌனம்.

“உங்கக் கிட்டதான் கேட்குறேன். ஏன் நீங்க எல்லார்கிட்டயும் சொல்லலை, உங்க மேல எந்தத் தப்பும் இல்லையே! எனக்காக ஏன் அடி வாங்குனீங்க?” கோபமா ஆற்றாமையா எனப் பிரித்தரிய முடியாதக் குரலில் வினவினாள்.

திவாகரிடமும் பதிலில்லை. என்ன சொல்லுவான்? உன்னை அந்தளவிற்குப் பிடிக்கும் என்றா? யார் முன்னிலும் உன்னைக் குற்றவாளி கூண்டில் ஏற்றப் பிடிக்கவில்லை என்றா? அவனுக்கே தெரியாத புதிர். இந்தப் பெண்ணை ஏன் இத்தனைப் பிடித்தது என அவனுக்கே தெரியாதது. பிடித்ததுதான், அத்தனை எளிதில் விட முடியாது என மனம் நம்பியது. அதுதான் ஒரு வார்த்தை, ‘திருமணம் செய்து கொள்ளலாமா?’ என ஷெண்பா கேட்டதும் யோசிக்காது சம்மதித்திருந்தான். அந்நொடி தந்தை, குடும்பம் என எதுவுமே சிந்தைக்கு உறைக்கவில்லை. ஏதோ இந்தப் பெண்ணை இந்த சந்தர்ப்பத்தில் மணம் முடிக்காவிட்டால், இனிமேல் எப்போதுமே முடியாது என எண்ணி அந்த ஒரு வார்த்தைக்கு உடனே செவிசாய்த்துத் தலையை அசைத்திருந்தான்.

“தெரியலை, சொல்லணும்னு தோணலை!” என்றவனை இவள் புரியாது பார்த்தாள். பெருமூச்சை வெளிவிட்டவனின் கரங்கள் முன்னே நீண்டு எதிரிலிருப்பவளைத் தன்னோடு அணைத்துக் கொள்ள, அவளை உணர முற்ப்பட்டான். இத்தனை நாட்கள், ஒரு பேச்சு, வார்த்தை ஏன் பார்வைக்குக் கூட பஞ்சமாகியிருந்தது. அப்படியிருக்கையில் இந்த திடீர் திருமணத்தை மனம் நம்ப மறுத்தது. இத்தனை நாட்கள் எட்ட நின்று பார்த்த தவிப்புகளுக்கான ஆறுதல்தான் இந்த அணைப்பு. ஷெண்பா எதுவும் பேசாது அவனுள் அடங்கிப் போனாள்.

ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்த அணைப்பை நிறுத்தியவன், “சாப்பிடு ஷெண்பா, காலைல இருந்து நீ எதுவும் சாப்பிடவே இல்ல!” என்றான் அக்கறையான குரலில்.

“இல்ல, எனக்குப் பசிக்கலை. சாப்பாடு வேணாம்!” என அவள் மறுக்க, “ப்ம்ச்… சாப்பிடாம இருந்தா நடந்த எதுவும் மாறிடாது. போய் சாப்பிடு” என அதட்டினான்.

“நீங்களும் வாங்க, சேர்ந்து சாப்பிடலாம்…” அவள் அழைக்க, தான் உண்ணாவிட்டால் அவள் சாப்பிட மாட்டாள் என்பதை உணர்ந்தவன், தலையை சம்மதமாக அசைத்தான்.

திவா சென்று உடை மாற்றி தன்னை சுத்தம் செய்துகொண்டு வரவும் தர்மன் இருவருக்கும் உணவைக் கொடுத்துவிட்டு சென்றான். வயிற்றுக்கு சிறிது ஈய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இருவரும் உண்டனர். விக்ரம் தங்கைக்கு அழைத்து அவளது பாதுகாப்பை உறுதி செய்தான்.

திவாவும் ஷெண்பாவும் உறக்கம் வராது சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தனர். காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் எல்லாம் நிம்மதியைப் பறித்து, உறக்கமிழக்கச் செய்திருந்தது.

திருமணம் நன்முறையில் நடந்திருந்தால், இந்நேரம் தங்கள் வீட்டில் எப்படி இருந்திருப்போம் என நினைவு எழவும், பெருமூச்சை வெளிவிட்டான் திவாகர். நீண்ட நேரம் கழித்தே இருவரும் உறக்கத்தைத் தழுவினர்.

மறுநாள் காலையில் எழுந்த ஷெண்பா என்ன செய்வது எனத் தெரியாது அப்படியே அமர்ந்திருந்தாள். திவாகர் சிறிது நேரம் கழித்து எழ, தர்மனின் மனைவி தேநீரையும் காலை உணவையும் கொடுத்துவிட்டு சென்றாள். தேவையில்லாமல் அவர்களைத் தொந்தரவு செய்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு. அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது. வீட்டில் அனைத்தும் சரியாகும் வரை இங்கே இருந்தாக வேண்டிய கட்டாயம். வேறு வழியும் அவர்களுக்கு இல்லை.

திவாகர் குமரனுக்கு அழைத்து அங்கே நிலவரம் என்னவென விசாரித்தான். ரங்கா இப்போது நலமுடன் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார் என்ற செய்தி அவனுக்குத் திருப்தியாய் இருந்தது.

சிறிது நேரத்தில் யாரோ கதவைத் தட்ட, இவன் எழுந்து சென்று திறந்தான். விக்ரம்தான் வந்திருந்தான். திவாகர் எதுவும் கூறாது வழிவிட, அவனை முறைத்துக் கொண்டே நுழைந்தவனின் கைகளில் பைகள் தொங்கியது.

தமையனைக் கண்டதும் ஷெண்பாவின் முகம் மலர்ந்து விட, “வா விக்கி… உள்ள வா!” என்றாள்.

“உட்காரு…” என அவனுக்கொரு இருக்கையை இழுத்துப் போட்டாள்.

அதில் அமர்ந்தவன், “இதுல உனக்கு ட்ரெஸ் இருக்கு. அப்புறம் உன் காலேஜ் புக்ஸ், நெசசரி திங்க்ஸ் இருக்கு…” என பைகைளை அவளிடம் நீட்டினான். எதுவும் கூறாதவள், தலையை அசைத்துவிட்டு அறைக்குள் நுழைய, இவனும் பின்னே சென்றான். திவாகர் கவனித்தாலும் அவர்கள் பேசட்டும் என அங்கேயே அமர்ந்துவிட்டான்.

“ஷெண்பா…” என்றவன் குரல் அருகே கேட்கவும் பையை வைத்துவிட்டு திரும்பியவள், “என்னண்ணா?” என்றாள் பார்வையில் கேள்வியைத் தேக்கி.

“அம்மாவும் அப்பத்தாவும் என்ன சொன்னாங்க, எதுக்காக நீ இப்படி அவசரக் கல்யாணம் பண்ண?” நிதானமாய் அதே சமயம் அழுத்தமாய்க் கேட்டான்.

ஒரு நொடி தயங்கியவள், “ஒருநாள் குமரனைப் பார்த்துட்டு லேட்டா வீட்டுக்கு வந்தேன். அப்போ அம்மாவும் அப்பத்தாவும் எங்கப் போற, வர்றன்னு அதட்டிக் கேட்கவும், கோபத்துல அவனைதான் பார்க்குறேன்னு சொல்லிட்டேன். அதுல இருந்து ரெண்டு பேரும் என்னை வாட்ச் பண்றதையே வேலையா வச்சிருந்தாங்க…”

“அந்தக் கிழவி வேற இவ படிச்சது போதும், எங்காவது தூரம் தொலைவுல கட்டிக் கொடுத்து, அவன்கிட்ட இருந்து பிரிச்சுடலாம். இல்லை குமரன் இதுதான் சாக்குன்னு ஒட்டிக்கிட்டு வந்து சொத்துல பங்குக் கேட்பான்னு சொல்லவும், அப்பா அதட்டுனாரு அப்பத்தாவை. இருந்தாலும் அது மாப்பிள்ளை பார்க்கத்தான் போறேன்னு யார்கிட்டேயோ போன் போட்டு பேசுச்சு… அம்மாவும் அப்பாவை சம்மதிக்க வச்சுடுவேன்னு என்கிட்ட சொல்லவும் பயமா போச்சு, அப்பா அப்பத்தா பேச்சைக் கேட்டு எப்பவும் போல அமைதியா இருந்துட்டா என்ன பண்றது. இதுக்கு மேலேயும் குமரனைப் பிரிஞ்சு கஷ்டப்படக் கூடாதுன்னு இப்படி பண்ணிட்டேன்!” சின்னக் குரலில் கூறி முடித்தவளின் விழிகள் கலங்கி கண்ணீர் கன்னம் தொட்டது.
மெல்லிய விசும்பல் அவளிடம் வெளிப்பட, அவளைத் திட்ட வந்த வார்த்தைகளை விழுங்கினான் விக்ரம்.

“அந்தக் கிழவி சொன்னதுக்கு பயந்துட்டா டி இப்படி பண்ண?” என குரலை உயர்த்தியவன், “என்கிட்ட சொல்லி இருந்தா, அப்போவே அது வாயை அடைச்சிருப்பேனே!” என்றான் ஆதங்கமாய். தங்கம்மாளின் பேச்சிற்குப் பயந்து தங்கை இப்படி செய்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கோபம் வந்தது, வீட்டிற்கு சென்று அவரையும் தாயையும் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவன்,
“சரி, அழாத ஷெண்பா…” எனத் தங்கையை சமாதானம் செய்தான்.

error: Content is protected !!
Scroll to Top