திவாகர் எதுவும் பேசாது விறுவிறுவென வெளியேறினான். அவன் முகத்தைப் பார்த்தே அகத்தை கணித்த ஷெண்பா, வேதனையுடன் பார்த்தாள். விக்ரம் தங்கையை அழைத்துக்கொண்டு நடக்க, மூவரும் வீட்டிற்குச் சென்று இறங்கினர்.
விஷயம் கேள்விப்பட்ட சுமதியும் தங்கம்மாளும் வாயிலிலே காத்திருந்தனர். இவர்கள் சென்று இறங்கவும், “அடிப்பாவி, பொம்பளை புள்ளையை படிக்க அனுப்பாத, அசிங்கபடுத்திடுவான்னு அத்தனை தடவை உங்கப்பன்கிட்ட சொன்னேனே டி. அவன் எங்க என் பேச்சைக் கேட்டான். ஊரே பேசுறளவுக்கு வச்சுட்டீயே டி!” என்று தங்கம்மாள் தெருவிலிருக்கும் அத்தனைப் பேருக்கும் கேட்குமாறு கிட்டதட்ட ஆதங்கத்துடன் கத்தினார். பேத்தியின் செயல் அவரை அதிரச் செய்திருந்தது. யாருமே எதிர்பாராத ஒன்று.
“என் புருஷனை அசிங்கப்படுத்தீட்டியே டி பாவி மகளே! நீயெல்லாம் எதுக்கு என் வயித்துல வந்துப் பொறந்த! பொறக்காமலே இருந்திருக்கலாம்!” என சுமதி ஷெண்பாவின் கன்னத்தில் அறைய, “ம்மா… என்னப் பண்றீங்க?” என விக்ரம் அவரை அதட்டி விலக்கிவிட்டான். அதற்குள் திவாகர் ஷெண்பாவை இழுத்துத் தன் கைவளைவிலே வைத்தவனின் முறைப்பு சுமதியைத் தொடர்ந்தது.
“சின்ன வயசுல இருந்தே அவளைச் செல்லம் கொடுத்து நீதான் டா கெடுத்துட்ட, இப்படி ஊரே சிரிக்கிற மாதிரி ஓடிப்போய் கல்யாணம் பண்ணீட்டு வந்து நிக்கிறா… ஓடு காலி, பெத்தவங்க உயிரோட தானே இருக்கோம். இவ இஷ்டத்துக்கு எவனையோ இழுத்துட்டு வந்தா, எங்களுக்கு என்ன டா மரியாதை..” என்றவர் ஆத்திரம் தீரக் கத்தித் தீர்த்தார். அவரது பேச்சில் திவாகர் இறுகிப் போய் நின்றான். ஷெண்பா எதுவும் பேசாது தாயை வெறித்தாள்.
“ஏன் டி எதுவும் பேச மாட்ற. உங்கப்பாவை எப்படிடி அசிங்கப்படுத்த மனசு வந்துச்சு? ஏன் இப்படி பண்ண?” என்றவர், “நமக்கு ஆகாத வீட்ல இருக்கவனை கூட்டீட்டு வந்து அத்தனை பேரையும் தலைக்குனிய வச்சுட்டல்ல?” என்று அவர் குரலை உயர்த்தினார்.
“சுமதி, இவன் யாருக்கும் தெரியாம கூட்டீட்டுப் போய் தாலி கட்டுனா ஆச்சா? நீ அவ கழுத்துல இருக்க மஞ்சக் கயிறை அத்து இழுத்துட்டு வா டி!” என தங்கம்மாள் கூறவும், “கிழவி, வாயை வெச்சுட்டு சும்மா இருக்கலை, என்னப் பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது!” என விக்ரம் அதட்டினான்.
திவாகர், ‘என்னைத் தாண்டி அவளது கழுத்திலிருக்கும் கயிறைத் தொட்டுப் பாருங்கள்!’ என்றொரு பார்வைப் பார்த்தான். சுமதி அவனை தீயாய் முறைத்தார்.
“என்னடியவ நீ பார்த்துட்டே இருக்க, தாலியை அத்துப் போடுடி!” தள்ளாடியபடியே தனது உடல் அதிர தங்கம்மாள் கூறவும், “ம்மா… வாயை மூடுங்க, என்ன பேச்சு இது?” என அந்நேரம் வந்த சொக்கநாதன் குரல் அனைவரையும் அடைந்தது.
“வா டா நான் பெத்த மகராசா, உன் ஆசை மக செஞ்சிருக்க காரியத்தைப் பாரு. இதுக்குத் தான் பொட்டக் கழுதை படிச்சது போதும், கால காலத்துல கல்யாணத்தை பண்ணுன்னு சொன்னேன்… இப்படி ஊர்ல இருக்க கண்ட நாயை இழுத்துட்டு வந்து நிக்கிறா!” என அவர் பேசவும், “அப்பத்தா… இன்னொரு வார்த்தை அவரைப் பத்தி தப்பா பேசுன, நான் கேட்டுட்டு இருப்பேன்னு நினைக்காத. என்னைப் பேச உனக்கு உரிமை இருக்கு… அவரைப் பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல!” என்ற ஷெண்பா பொறுமைக் கடக்கக் கத்தினாள்.
“ஷெண்பா, உள்ள வா முதல்ல,
சுமதி, அம்மாவைக் கூட்டீட்டு வீட்டுக்குள்ள போ!” என்ற சொக்கநாதன், “உள்ள வாங்க!” என திவாகரை அழைத்தான்.
தங்கம்மாளின் பேச்சு திவாகரின் தன்மானத்தை சீண்டியிருக்க, இறுகிப் போய் நின்றிருந்தான்.
“உள்ள வாங்க…” ஷெண்பா அவனது கையைப் பிடித்திழுக்க, அசையாது நின்றவன், “நான் வரலை, நீ போய்ட்டு வா!” என்றான்.
“ஏங்க, ப்ளீஸ் உள்ள வாங்க!” என இவள் இறைஞ்ச, “எனக்கு மானம், ரோஷம் எல்லாம் இருக்கு ஷெண்பா. உன்னைக் கல்யாணம் பண்ணிட்டேன்றதுக்காக அதையெல்லாத்தையும் தூக்கிப் போட முடியாது!” என அவன் குரலில் கண்டனம். தங்கம்மாளின் பேச்சில் விளைந்தது என அனைவருக்கும் புரிந்தது. அவர்கள் மூவரும் நிற்க, இவன் விறுவிறுவென மகிழுந்தில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனைப் பார்த்த ஷெண்பா, “சாரிப்பா… எனக்காகன்னு எல்லா இடத்திலும் பழியை ஏத்துட்டு நின்னாரு அவரு… அவர் உள்ள வராம என்னால வர முடியாது!” என்றவள் மெல்லிய கேவலுடன் தந்தையை இறுக அணைத்தாள்.
“தப்புதான் பா… ஆனால், எனக்கு வேற வழித் தெரியலை. பயமா இருந்துச்சுப்பா, எங்க அம்மாவும் அப்பத்தாவும் பேசுன மாதிரி என்னை யாருக்கோ கல்யாணம் பண்ணிக் கொடுத்து குமரன்கிட்டே இருந்து பிரிச்சிடுவாங்களோன்னு, அதான் இப்படி உங்க யார்கிட்டேயும் செல்லாம கல்யாணம் பண்ணிட்டேன்!” என்ற தங்கையை விக்ரம் அதிர்ச்சியாய்ப் பார்த்தான். சொக்கநாதன் அமைதியாய் நின்றார்.
மகள் திவாகரை திருமணம் முடித்ததை அறிந்ததுமே, காரணம் இதுவாகத்தான் இருக்குமென அவரால் ஊகிக்க முடிந்தது. தான்தான் பெத்த மகனை சரியாய் பார்த்துக் கொள்ள முடியாதக் கோழையாகிப் போனோம். மகளாவது தன் அண்ணன் வேண்டுமென துணிந்து முடிவெடுத்துருக்கிறாள் என உணர்ந்ததும், விழிகள் கலங்கியது அப்பெரியவருக்கு.
எங்கே சுமதியும் தங்கம்மாளும் சேர்ந்து குமரனை இறுதிவரை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயம் அவரிடம் நிரம்பவே இருந்தது. அது மட்டுமல்லாது,
விக்ரமும் ஷெண்பாவும் கோபத்தை இழுத்துப் பிடித்து அவனைத் தள்ளி வைத்த முடிவை மறுபரிசீலனை செய்ய மாட்டார்களோ என எண்ணி மாய்ந்தவருக்கு, அவர்கள் சமாதானம் அடைந்ததில் அத்தனை மகிழ்ச்சி. இப்போது ஷெண்பாவின் செய்கையும் குமரனுக்காக, சிந்துவிற்காக எனும் போது அவரால் எதிர்த்துப் பேச முடியவில்லை. அமைதியாகிப் போனார். ஆனால், மனம் முழுவதும் வருத்தம் எஞ்சியது.
“அப்பா, எதாவது பேசுங்கப்பா, என்னைத் திட்டுங்கப்பா! கோபமா பா?” என்ற ஷெண்பா கலக்கத்துடன் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் அவரை அணைத்தவாறே.
மகளின் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவர், “கோபம் இல்லை மா, வருத்தம்தான். என்கிட்ட சொல்லி இருந்தா, அப்பா உனக்காகப் பேசி இருப்பேனே மா?” என்றார்.
“எனக்குத் தெரியும் பா… எனக்காக நீங்க எவ்வளோ தூரம் வேணும்னாலும் இறங்கிப் போவீங்கன்னு. எனக்கு உங்களை எங்கேயும் நிக்க வைக்க விருப்பம் இல்லை பா. அதான் நானா முடிவெடுத்துட்டேன்.” என்றவள் அவரைப் பார்க்க, அவரிடம் பதிலில்லை. விக்ரமிற்கு ஏதோ நடந்திருப்பது புரிந்தது.
“அப்பா…” மகள் அழைக்க, “எங்கத் தங்கப் போறீங்க?” என அவர் அடுத்தப் பேச்சிற்கு தாவியிருந்தார்.
“தெரியலை பா… அவர் எதுவும் இடம் பார்ப்பாரு!” எனப் பதிலளித்தாள்.
“ஏன், நம்மளோட இன்னொரு வீடு இருக்கே, அங்க தங்குங்க!” விக்ரம் இடை நுழைய, தலையை இடம் வலமாக அசைத்தாள்.
“இல்லை விக்கி, அவர் ஒத்துக்க மாட்டாரு…”
“ஏன் கூட்டீட்டுப் போய் கல்யாணம் பண்ணத் தெரியுது இல்ல… வீட்டுக்குள்ள வர மாட்டானா? உன்னைக் கல்யாணம் பண்ணுனவன், கடைசி வரைக்கும் இங்க வராமலே இருந்துடுவானா?” பல்லைக் கடித்தான் தமையன்.
“ச்சு, விக்ரம் என்னப் பேச்சு இது, வாயை மூடு!” மகனை அதட்டிய சொக்கநாதன், “வேற எங்கேயாவது இடம் பார்க்க சொல்லவா மா? இந்த டைம்ல எங்கப் போவீங்க?” என கவலையாய் வினவினார்.
“அப்பா, அவர் பார்த்துப்பாரு, நீங்க கவலைப்படாதீங்க!” என தந்தையின் கையை அழுத்தி விடுவித்தாள்.
“பத்திரமா இரும்மா, எப்போ எந்த நேரம்னாலும் எங்களுக்கு போன் பண்ணு மா!” என்றவரிடம் தலையை அசைத்து விடைபெற்றாள். விக்ரமின் பார்வை செல்லும் திவாகரிடம் முறைப்புடன் பதிந்து மீண்டது.
தந்தையும் மகனும் வீட்டிற்குள்ளே நுழைய, தங்கம்மாள் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.
அவரது பேச்சு தரம் தாழ்ந்து மிகவும் மோசமாக இருக்க, “அம்மா, என் வாழ்க்கையில உங்களுக்கு தலையிட உரிமை இருக்கு. என் பொண்ணு வாழ்க்கையை அவளா அமைச்சுக்கிட்டா… அதை கேட்க எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை. தேவையில்லாம எல்லாரோட வாழ்க்கையிலயும் மூக்கை நுழைச்சுட்டே இருக்காதீங்க!” என சொக்கநாதன் கூறிவிட, அதற்கும் அவர் பேச்சு நிற்கவில்லை.
“பார்த்தீயா டி சுமதி, உன் புருஷன் பேசுற பேச்சை… வயசானக் காலத்துல போட்ற சோத்தை தின்னுட்டு அமைதியா இருன்னு
சொல்றான்!” என அவர் பொரும,
‘மத்த நேரத்துல எல்லாம் உங்கப் புள்ளை… திட்றப்போ என் புருஷன்?’ என சுமதிக்கு மகள் மீதிருந்தக் கோபத்தோடு இவரது பேச்சும் எரிச்சலை ஒருங்கே வார்த்தது.
“கிழவி, அவர் சொல்றதும் உண்மை தான்… அமைதியா இருக்குறதுன்னா இங்க இரு. இல்லைன்னா முதியோர் இல்லத்துக்குப் போய்டு!” விக்ரம் காய்ந்துவிட்டு நகர, அதற்கும் ஒரு பாடு பேசித் தீர்த்தார் பெண்மணி.
‘எங்கே செல்கிறோம்?’ எனக் கேட்கக் கூடத் தோன்றாது அமைதியாய் திவாகருடன் சென்றாள் ஷெண்பா. அவன் ஊரின் எல்லையிலிருந்த ஒரு வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி இறங்க, இவளும் இறங்கினாள்.
“மச்சான் வா டா, வாங்க சிஸ்டர்!” என அழைத்தவனின் கையில் ஒருவயது குழந்தை இருந்தது. இருவரும் தலையசைப்போடு நிற்க, “மேல இருக்க வீடும் நம்மதுதான் டா. என் தங்கச்சியும் அவ வீட்டுக்காரரும் வேலை விஷயமா வெளிநாடு போய்ட்டாங்க. இப்போதைக்கு வர மாட்டாங்க, அதான் இங்கேயே தங்கிக்கலாம்னு கூப்பிட்டேன்!” என்றவன் மாடியேறி வீட்டைத் திறந்தான். ஓரளவிற்கு வீடு சுத்தமாக இருந்தது.
ஷெண்பாவும் திவாகரும் உள்ளே நுழைந்தனர்.
“இதுல மாத்துறதுக்கு ட்ரெஸ் இருக்கு, மாத்திக்கோங்க டா. நைட்
நம்ம வீட்லயே சாப்ட்டுக்கலாம்!” என்ற தர்மனின் கையிலிருந்த குழந்தை சிணுங்கினாள்.
“தேங்க்ஸ் தர்மா!” திவா கூறவும், “டேய், பிச்சிடுவேன்… போங்க, போய் ட்ரெஸ் மாத்தீட்டு ரெஸ்ட் எடுங்க!” என தோளிலிருந்தக் குழந்தையைத் தட்டிக்கொடுத்துக் கொண்டே தர்மன் விடை பெற்றான்.
இருவரிடமும் அத்தனை அமைதி. ஷெண்பாவின் அழுது சிவந்திருந்த முகத்தையும் தடித்திருந்த இமைகளையும் பார்த்த திவாகர், “போய் ஃபேஸ் வாஷ் பண்ணீட்டு, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ ஷெண்பா!” என்று கூறவும், எதுவும் பேசாது தலையை அசைத்து அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தாள்.
இவன் அப்படியே அமர்ந்துவிட்டான். தந்தைக்கு உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? வீட்டிற்கு வந்து விட்டார்களா? என்ன செய்கிறார்கள் என சிந்தனை முழுவதும் வீட்டைச் சுற்றி மட்டுமே இருந்தது. அலைபேசியை எடுத்து மனோவிற்கு அழைத்தான். ஐந்து முறை அழைத்தும் அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.
பெருமூச்சு விட்டவன், குமரனுக்கு அழைக்க, இரண்டு அழைப்பு துண்டாகி மூன்றாம் முறையாக ஏற்றிருந்தான். “சொல்லுங்க திவாகர்!” அவன் குரலில் இறுக்கமோ அந்நியத்தன்மையோ வெளிப்பட்டது. ஆனால், அதை கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை இவன்.
“அப்பா எப்படி இருக்கார்? வீட்டுக்குப் போய்ட்டீங்களா?” திவா வினவ, “நல்லா இருக்காரு, வீட்டுக்கு இப்போதான் வந்தோம்!” எனக் குமரன் பதில் இயம்பினான்.
“வேற எதுவும் பிரச்சனை இல்லையே!”
“ஏன், வேற என்னப் பிரச்சனை ஆகணும்னு நினைக்குற? அதான் மொத்தத்துக்கும் அவரைப் படுக்க வச்சுட்டீயே!” குமரனிடமிருந்து அலைபேசியைப் பறித்து மனோ கோபமாய்க் கத்தவும், திவாவிடம் பதிலில்லை.
“மனோ, ஃபோனைக் கொடு முதல்ல!” என அவளை அதட்டி அலைபேசியை வாங்கியக் குமரன், “காலைல பேசலாம் திவாகர்!” என அழைப்பைத் துண்டித்தான். தங்கையின் குரல் செவியில் ஒலித்த வண்ணமிருக்க, திவாகர் அப்படியே நின்றான். ஜன்னலருகே சென்றவன் வானத்தையே வெறிக்க, ஷெண்பா அறையிலிருந்து வெளியே வந்தாள்.
வேதனை அப்பிக் கிடந்த அவனுடைய முகம் இவளுக்கு வலித்தது. காலையிலிருந்து அத்தனைப் பேரிடம் ஏச்சுப் பேச்சுகள் வாங்கி, அடியைத் தாங்கி எனத் தனக்காக முன்னின்றவனின் மீது ஒரு சதவீதத் தவறு கூட இல்லை என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை. ஏனோ கண்கள் கலங்கி தொண்டை அடைத்துப் போக, அவன் பின்னே சென்று நின்று இறுக்கி அணைத்து முதுகில் முகத்தைப் பதித்தாள். உதடுகள், “சாரிங்க…” என முணுமுணுத்தன.
ஒரு நொடி இதை எதிர்பாராது திகைத்த திவாகரின் உடல் அந்த அணைப்பில், அது கொடுத்த உணர்வில் தளர்ந்து போனது. முதுகில் பதிந்த கதகதப்பான சூட்டில் இவனுள்ளே ஏதோ அடங்கிப் போன உணர்வு. இத்தனை நேரமிருந்த அலைப்புறுதலுக்கு இந்த அணைப்பு
கொஞ்சம் சுகமாக இதமாக இருக்க, உள்ளமும் உடலும் இந்தப் பெண்ணருகே இயல்பாய் தளர்ந்தது.