உள்ளம் – 27.1

“அப்பா!” பெரும் அலறலுடன் மனோஹரி ரங்காவினருகே செல்ல, குமரன் மீது மொத்தப் பாரத்தையும் சுமத்தியிருந்தார் மனிதர். திவாகர் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிவிட்டு அவருக்கு மறுபுறம் சென்று தாங்கினான். ரங்காவின் விழிகள் மெல்ல மூடத் தொடங்க, முகம் வெளுத்தது.

“என்னங்க… என்னப் பண்ணுதுங்க!” ராதாமணி விழிகளில் சரசரவென நீர் இறங்க, கணவர் கைகளைப் பிடித்தார். சுற்றியிருந்த அனைவரும் அத்தனைப் பதட்டத்துடன் நின்றிருந்தனர். அடுத்து என்னவென ஒருவரும் யோசிக்காமல் நகராது நிற்க, “மனோ… அழுகையை நிப்பாட்டீட்டு வழியை விடு!” என குமரன் அதட்டலில் அனைவரும் தள்ளி நிற்க, அந்தப் பெரியவரை இவன் கைகளில் தூக்கியிருந்தான். அத்தனைக் கணம்தான், அவரால் நடக்க முடியும் என்று தோன்றவில்லை, அதனால் தூக்கியிருந்தான். மணல் மூட்டையைத் தூக்கி உறமேறியிருந்தவனுக்கு, அத்தனை பளுவாகத் தெரியவில்லை. அவன் விரைந்து நடந்து மகிழுந்தருகே செல்ல, கண்கள் சொருகச் சென்ற ரங்காவின் பார்வை முழுவதும் குமரன்தான். அவனைப் பார்த்தவரின் கரங்கள் எழுந்து அவன் முகத்தை வருட, அடுத்த நொடி விழிகளை மூடியிருந்தார்.

அவரை பின்னிருக்கையில் கிடத்தியவன் மகிழுந்தின் முன்புறம் இயக்க அமர, அருகே திவாகர் அமர்ந்தான். தன்னால் தான் தந்தைக்கு இவ்வாறு நடந்துவிட்டது என்ற குற்றவுணர்வு நிமிடத்தில் அவனைக் கொன்று குவிக்கத் தொடங்கியது. மனோ ரங்காவின் தலையைத் தன் மடியில் வைத்து அமர்ந்தாள். அவளது விழிகளில் நீர் நிரம்பி வழிந்து கொண்டே இருக்க, “அப்பா, என் முகத்தைப் பாருங்க ப்பா!” என்று அவரது கன்னத்தைத் தட்டியவண்ணமிருந்தாள்.

மற்றொரு வாகனத்தை ஓட்டுநர் மூர்த்தி இயக்க, ராதாமணி அதில் ஏற, ஷெண்பாவும் ஏறினாள். பத்து நிமிடத்தில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்திருந்தான் குமரன். ரங்கா உடனே அவசரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட, அவருக்கான மருத்துவம் தொடங்கியது.

கலங்கிய முகத்தையும் அகத்தையும் யாரிடமும் காண்பிக்க விழையாது வெளியிலிருந்த இருக்கையில் அமர்ந்த திவாகரின் மனம் அத்தனையாய்த் தவித்துக் கொண்டிருந்தது. தந்தைக்குப் பிடிக்காது எனத் தெரிந்தாலும் அவரிடம் பேசி சமாதானம் செய்யலாம் என்று எண்ணித்தான்
திருமணம் செய்யும் முடிவிற்கு வந்தான். ஆனால் ரங்காவின் தற்போதைய நிலை எதிர்பாராதது. மொத்தமும் உருக்குலைந்து போனான்.

“போதுமா திவா, இதைதானே எதிர்பார்த்து இவளைக் கல்யாணம் பண்ண?” செவியில் மோதிய மனோவின் குரல் இதயத்தை தாக்கியது. திவாகரையும் ஷெண்பாவையும் எரித்தன அவளின் பார்வை.
ஏற்கனவே தன்மீது தான் தவறென உழன்று கொண்டிருந்த மனம், இன்னுமே அவனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. ஷெண்பாவின் பார்வை திவாகரிடம்தான். தன்னுடைய செயல்தான் இத்தனைக்கும் காரணம். தான்தான் காரணக்கர்த்தா என மனம் அவளைச் சாட, விழிகளில் உவர்நீர் நிரம்பியது.

“அந்த மனுஷன் ஹாஸ்பிடல்ல படுத்திருக்கதைப் பார்க்கத்தான் இப்படி பண்ணியா டா? சொல்லு டா!” பல்லிடுக்கில் மனோவின் கனல் பார்வையும் பேச்சும் இவனை குற்றக் குழியில் தள்ள, தங்கையை அமைதியாய் நோக்கினான்‌. குமரன் இதைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

ஏனோ திவாகரின் முகபாவனைகளும் வேதனைகளும் மனைவியை அதட்டச் சொல்லிக் கட்டளையிட, “மனோ, கொஞ்சம் நேரம் அமைதியா இரு!” என அவளது கையைப் பிடித்திழுக்கொண்டு நகர்ந்தான்.
ராதாமணி யாரிடமும் பேசாது அமைதியாய் ஒரு மூளையில் அமர்ந்திருந்தார். தற்போதைய எண்ணம் முழுவதும் கணவரிடம் தான். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் விளைந்துவிடக் கூடாது என தவித்த மனம், அத்தனைக் கடவுளிடமும் இறைஞ்சியது‌.

அரைமணி நேரங்கள் அனைவரையும் காக்க வைத்த மருத்துவர் வெளியே வந்தார். அனைவருடைய பார்வையும் அவரை எதிர்பார்ப்புடன் தழுவின.

“இப்போ ஹீ இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர், திடீர்னு பீபீ ஷூட் அப் ஆகிடுச்சு. அதான் அவருக்கு மூச்சு வாங்கி, மயங்கியிருக்காரு. இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாயிருந்தா, கண்டிப்பா ஹார்ட் அட்டாக்தான். இப்படி பீபீ அதிகமாகுற அளவுக்கு கவனக் குறைவா இருந்திருக்கீங்களா? டேப்லெட் சரியா போட்றாரா இல்லையா? ஸ்ட்ரெஸ் ஆர் எனிதிங்க் எல்ஸ்?” எனக் வினவிய மருத்துவரிடம் கண்டனப் பார்வை.

ரங்காவிற்கு ஒன்றுமில்லை என்ற செய்தியில் அத்தனைப் பேருக்கும் நிம்மதி பிறந்தது. திவாகரின் மனம் இவ்வளவு நேரம் அலைப்புறுதலைக் கைவிட்டிருந்தது. மருத்துவர் வினவிய கேள்விக்கு ஒருவரும் பதிலளிக்க விழையாது அமைதி காத்தனர்.

“பயப்பட்ற அளவுக்கு ஒன்னுமில்லை‌. ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். இனிமேல் கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க. இல்லை சீரியஸாக நிறைய சான்ஸ் இருக்கு…” என்ற எச்சரிக்கையுடன் அவர் நகர, மனோவும் ராதாவும் ரங்காவின் அறைக்குள் நுழைந்தனர்.

விழியோரம் துளிர்த்த நீரை யாருமறியாது திவாகர் துடைத்து நிமர, அவன் முகத்திலே ஓங்கி ஒருக் கரம் குத்தியிருந்தது. அதை எதிர்பாராது தடுமாறி சுவற்றில் மோதியிருந்தான். மெதுவாய் பார்வையை சிமிட்டி அவன் நிமிர, விக்ரம் உக்கிரமாய் நின்றிருந்தான்.

நொடி நேரத்தில் இது நிகழ்ந்திருக்க, “அண்ணா…” என ஷெண்பா விக்ரமிற்கும் திவாகருக்கும் இடையில் நுழைந்திருந்தாள். தங்கையின் திருமணம் விஷயம் கேள்விப்பட்ட விக்ரம் கொதித்துப் போய் இங்கே வந்திருந்தான். திவாகர் மீது கண்மூடித்தனமாய்க் கோபம் வந்தது. எப்படி இவன் என் தங்கையை யாருமில்லாது திருட்டுத்தனமாகத் திருமணம் செய்தான் என்ற சினம் மூண்டெழுந்தது.

“எவ்வளவு தைரியமிருந்தா இப்படி பண்ணியிருப்ப டா!” என மீண்டும் திவாவின் சட்டையின் நுனியைப் பிடித்து அவனை சுவரோடு சாய்த்திருந்தான். குமரனுக்குத் திவாகர் அத்தனை வருடப் பழக்கம் என்றதால் அவனால் எளிதில் கைநீட்டி விட முடியவில்லை. ஆனால், விக்ரமிற்கு அப்படியில்லை. யாரோ ஒருவன் என்று நினைத்திருந்த மூன்றாம் மனிதன் தன் தந்தையை, அவரது மரியாதையைக் கீழிறிக்கியதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“விக்கி, ப்ளீஸ், அவரை விட்று. பாவம் அவரு… அவருக்கு ஒன்னும் தெரியாது!” என ஷெண்பா கெஞ்ச கெஞ்ச விக்ரமின் பிடி இறுக, வேறு வழியில்லாது தமையனின் காலில் விழுந்திருந்தாள்.

“அண்ணா, வேணாம்… உன்னைக் கெஞ்சிக் கேட்குறேன்!” என குரல் தழுதழுத்துப் போய் தன் முன்னே மண்டியிட்ட தங்கையைக் கண்ட விக்ரமின் கைகள் தளர்ந்தன. நிராதரவாக தன் முன்னே அமர்ந்திருப்பவளைக் கண்டவனின் இதயம் ஆடிப்போனது. அத்தனை செல்லமாய், ஒருவரை ஒரு வார்த்தைக் கூற விடாது வளர்த்த தங்கை இன்று தன் முன்னே மண்டியிட்டதும் உள்ளம் பரிதவித்தது.

“ஷெண்பா, முதல்ல எழுந்திரி…” கலங்கிக் கரகரத்துப் போனக் குரலை மறைத்து விக்ரம் அதட்ட, “நீ அவரை அடிக்க மாட்டேன்னு சொல்லு, அப்போதுதான் நான் எழுந்திருப்பேன்!” என்றாள் குரலில் வேதனையுடனும், பார்வையில் இறைஞ்சுதலுடனும்.

“அவனை அடிக்க மாட்டேன், எழுந்திரி!” இவன் பல்லைக் கடிக்க, ஷெண்பா எழுந்து நின்றாள். இத்தனை சண்டைக்கும் திவாகர் சிலை போல நின்றிருந்தான். தனக்காக மண்டியிட்ட ஷெண்பாவிடம் அவனது பார்வை நிலைத்தது.

“என்னை மன்னிச்சுடு விக்கி…” என்று தேம்பியடி விக்ரமை இறுக அணைத்துக்கொண்டு அழுகையில் குலுங்கிய தங்கையை விலக்க முடியாது நின்றிருந்தவனின் உடலில் இத்தனை நேரமிருந்த கோபம் வடிந்தது. சிறு வயதிலிருந்தே ஷெண்பாவின் ஒரு நொடி அழுகையைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடிந்தது இல்லை. இனியும் அப்படி இருக்க முடியும் எனத் தோன்றாது போக, “தப்புதான், நான் செஞ்சது தப்புதான். குமரன் மாதிரி நீயும் என்னை வெறுத்துடாத அண்ணா, என்னால நீங்க ரெண்டு பேரும் இல்லாம இருக்க முடியாது!” திக்கிக் திணறி அழுகையுடன் தவிப்பாய் உரைத்தவளின் தலையை இவனது கரம் தானாகத் தடவியது. கோபமிருந்தாலும் ஷெண்பாவின் அழுகை இவனை அசைத்துப் பார்த்தது.

“சாரி ண்ணா… சாரி ண்ணா!” என உளறியபடியே தேம்பினாள். வார்த்தைகள் வராது அழுகை முட்டியது அவளுக்கு.

“வீட்டுக்குப் போகலாம் வா!” விக்ரம் கூறவும், அவனைப் பரிதவித்துப் பார்த்தாள் பெண்.

“அவரில்லாம நான் வரமாட்டேன் விக்கி!” எனத் தவிப்பாய்க் கூறினாள். திவாகரை ஒரு நொடி முறைத்த விக்ரம், “அவனையும் கூட்டீட்டு வா, போகலாம்!” என்றான். இவளது முகம் சற்றே நிம்மதியடைந்தது. திவாகரைப் பார்த்தாள்.

“அப்பாவைப் பார்த்துட்டு போகலாம்!” என்றவன் அறைக்குள் நுழைந்தான். ரங்கா மருந்தின் உதவியால் ஆழ்ந்து துயில் கொண்டிருக்க, மற்றவர்கள் அருகே அமர்ந்திருந்தனர். மனோ தந்தையின் கையைப் பிடித்து தன் கரத்தில் வைத்தவாறு அவரை கவலையுடன் பார்த்திருந்தாள்.

திவா நுழைவதைப் பார்த்து எழுந்து வந்த ராதா, “எங்க டா வர்ற? எதுக்கு வர்ற… அவரு கண்முன்னாடி வராத டா. என் புருஷன் உசுரு எனக்கு முக்கியம்! உன்னாலதான் அவர் இப்படி கிடக்காரு… இதுக்கு மேல அவரோட உயிரை எடுக்கணும்னு வந்தீயா?” எனக் கோபமாய் பேசிவிட, இவன் முகம் விழுந்து போனது.

“முதல்ல இங்க இருந்து கிளம்பு, வீட்டுக்கு வந்துடாதா டா!” என்றவரின் குரலில் அவர் சொல்வதை செய்தே ஆக வேண்டும் என்றொரு கட்டாயமிருந்தது. எங்கே திவாகரைப் பார்த்தால் மீண்டும் கணவருக்கு ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்ற பயம் நெஞ்சுக்குழி வரை இருந்தது அப்பெண்மணிக்கு. காலனின் கையில் சிக்காது அவரை உயிருடன் பார்த்துக் கொள்வதே தற்போது அவருடைய பிரதானக் கடமை. மகன் இரண்டாம்பட்சமாகிப் போனான்.

error: Content is protected !!
Scroll to Top