“ஏன் டி இப்படி பண்ண? அவனைப் பிடிச்சிருக்குன்னா எங்கக் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல. ஒன்னுக்கு ரெண்டு பேர் இருக்கோமே! செத்துட்டோம்னு நினைச்சு நீயா கல்யாணம் பண்ணீட்டு வந்தீயா?” என அவன் கேட்ட கேள்வியில் ஷெண்பா துடித்துப் போனாள்.
“வாயை மூடுண்ணா. வார்த்தைக்குக் கூட இப்படி பேசாத!” என்றவளின் நெஞ்சுலர்ந்து போனது குமரனின் பேச்சில்.
“வாயைத் திறந்து பதில் சொல்லு திவா! ஏன் டா சிலை மாதிரி நிக்கிற. சொல்லு!” கோபத்தில் மொத்த சக்தியையும் திரட்டி திவாகரின் கன்னத்தில் மனோ அடிக்கவும், உதட்டோரம் குருதி வழிய, விரல்களின் அச்சு அப்படியே பதிந்து போனது.
“எனக்கு அவளைப் பிடிச்சிருந்தது, அதான் கல்யாணம் பண்ணேன்!” என வந்ததிலிருந்து திவாகர் அப்போதுதான் வாயைத் திறந்தான்.
“பொய் சொல்லாத டா!” இவள் பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.
“பொய்யில்லை, எனக்கு அவளை ஆரம்பத்துல இருந்தே பிடிச்சிருந்துச்சு…” உண்மையைத்தான் உரைத்தான் அவன்.
“உன்னை நம்பி தானே டா வீட்டுக்குள்ள விட்டோம். ஏன் டா இப்படி பண்ண? என் அத்தை அவரையும் உன்னையும் ஒன்னாதானே பார்த்தாங்க. அப்படி இருக்கவங்களுக்கு நீ பண்ணது துரோகம் திவா.
அவளைப் பிடிச்சிருக்குன்னா, வீட்ல பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி இருக்கலாமே. எனக்கும்தான் இவரைப் பிடிச்சிருந்தது. ஏன் நான் ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாதா? இத்தனைக்கும் இவர் என்னைக் கூப்பிட்டாரு. இருந்தும் நான் போகலை… அப்பா, அம்மா மேல இருந்த மரியாதை என்னை அப்படி செய்ய விடலை. போராடிதான் இவரைக் கல்யாணம் பண்ணேன். நீயும் வீட்ல பேசி இருக்கலாம்ல, இப்படி திருட்டுக் கல்யாணம் பண்ண இப்போ என்ன அவசரம் உங்களுக்கு?” எனப் பல்லை நறநறத்தாள்.
“அவசியம் வந்ததாலதான் கல்யாணம் பண்ணேன்!” திவாகர் பதிலில் அலட்சியம் இருப்பதாய் தோன்ற, குமரனுக்கு கனன்றத் தொடங்கியது.
“அப்படி என்ன அவசியம் வந்தது? என் மேல, என் பேச்சு மேல இருந்தக் கோபத்துல பழிவாங்க இப்படி பண்ணீங்களா?” எனக் கேட்டவன், அவனே அப்படித்தான் இருக்குமென உறுதியும் செய்து கொண்டான். ஏனோ ஏதுமறியாத தங்கையை இவன்தான் ஏமாற்றியிருக்கக் கூடும் என மனம் நம்பியது. ஷெண்பாமீது துளியளவு கூட சந்தேகிக்க முடியவில்லை. கணவனின் பேச்சில் அதிர்ச்சியாய் அவனை நோக்கினாள் மனோ.
அவளது பார்வை உணர்ந்தவன்,
“ஆரம்பத்துல இருந்தே உங்கண்ணன் பார்வை சரியில்லை. நான் அத்தனை தடவை சொல்லியும் வேணும்னு பண்ணிட்டு வந்துருக்காரு!” என்றான் சினத்துடன்.
திவாகரை நிமிர்ந்த ஒரு பார்வை பார்த்தவள், “ரெண்டு பேரும் இங்க இருந்து கிளம்புங்க. ரொம்ப கோபம் வருது எனக்கு, போங்க!” என சுவாதீனமாகப் பேசியவளுக்கு விழிகள் கலங்கியது. இன்னும் இவர்களிடம் பேச என்ன இருக்கிறது என மனம் தளர்ந்தது.
“நான் போக மாட்டேன்!” என்ற ஷெண்பா, “அண்ணா…” எனக் குமரன் கையைப் பிடிக்கவும், “கிளம்பிடு ஷெண்பா, அடிக்கக் கூடாதுன்னு பொறுமையை இழுத்துப் பிடிச்சு வச்சிருக்கேன்!” என அவள் கையை உதறியவனை அதிர்ந்து பார்த்தாள்.
“சிந்து மா, குமரன் என்னைப் போக சொல்றான்… நீங்க சொல்லுங்க மா!” என தாயிடம் அவள் முறையிட, “நான் வளர்த்தப் பொண்ணு தப்பு பண்ண மாட்டான்னு நினைச்சு இறுமாப்பா இருந்தேன். ஆனால், உனக்கு நாங்க யாரும் கண்ணுக்குத் தெரியலை. பெறாட்டியும் நீயும் என் பொண்ணுதான். என்னைக்கும் நீ நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்க மாட்டேன். நீயா அமைச்சுட்ட வாழ்க்கை, நல்லா இரு. இப்போ நீங்க இங்க இருக்கது சரி படாது. முதல்ல ரெண்டு வீட்டுப் பெத்தவங்க கிட்டேயும் நடந்ததை சொல்லுங்க, கிளம்புங்க!” என்றவர் மறுபுறம் திரும்பி ஈரம் படர்ந்த விழிகளைத் துடைத்தார். இப்போதுதான் மனம் நிதானப்பட்டு நடந்த நிகழ்விலிருந்து வெளிவந்திருக்க, அடுத்து என்னவென வயதுக்கு மூத்தவராய் மூளை கணக்கிட்டது.
“சாரி சிந்து மா!” எத்தனைக் கூறியும் விழிகளில் தளும்பும் நீருடன் நிற்கும் பெண்ணிடம் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை அவரால். அவள் திவாகரை திருமணம் செய்தது அவருக்குப் பெரிதாய் இல்லை. வீட்டிற்குத் தெரியாது இப்படி செய்து கொண்டதைதான் அவரால் எளிதில் ஏற்க முடியவில்லை.
அவளது தலையில் கை வைத்தவர், “நல்லா இரு டா. உன்னை இன்னும் சின்னப் புள்ளன்னு நாங்க நினைச்சுட்டு இருக்கோம். ஆனால், நீ கல்யாணம் பண்ணீட்டு வந்து நிக்கிற… இதுக்குப் பிறகுதான் வாழ்க்கையில நிறையப் பார்க்கணும்… தைரியமா போ!” என கூறியவரின் குரலில் வேதனைக் கொட்டிக் கிடந்தது. குமரனின் இதயத்தின் ஓரம் தங்கையின் கண்ணீரில் ஈரம் சுரந்தது. ஆனாலும் வீம்பாய் விரைப்பாய் நின்றான். கண்டிப்பாக அவள் செயலின் கோபம் குறைய நேரமெடுக்கும்.
“வா போகலாம் ஷெண்பா…” என்ற திவாகர் அவளது கையைப் பிடித்திழுத்துச் செல்ல, விழிகளில் பொங்கும் நீருடன் அவர்களைப் பார்த்தவாறே வெளியேறினாள் ஷெண்பா. குருட்டு நம்பிக்கையின் பெயரில் திருமணத்தை முடித்திருந்தாலும், இவர்களது பேச்சு அவளை அதிகம் வாட்டியது. இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாலும் எப்போதும் அன்பாய் பேசி, தன்னை அரவணைக்கும் கரங்கள் வெளியே போ என தட்டிவிட்டதும் இதயம் துடித்துப் போனது.
திவாகர் மகிழுந்தை இயக்க, இவள் அருகே அமர்ந்தாள். கண் இரைப்பைகள் நீரை உகுத்த வண்ணமிருக்க, அதை துடைக்கத் தோன்றாது அமர்ந்திருந்தாள் பெண்.
குமரன் அடுத்து என்ன எனத் தெரியாது ஸ்தம்பித்துப் போய் தலையில் கையை வைத்து அமர்ந்தான். மூளை தேவையில்லாதக் கற்பனைகளை வாரி வழங்க, பாரம் கூடிக் கொண்டே சென்றது.
ஓய்ந்து போய் அமர்ந்திருந்த மனோவின் உடலில் ஏனோ ஆற்றல் எல்லாம் வடிந்த நிலை. திவாகரை எண்ணி குமைந்த மனம், அவன் வீட்டிற்குச் சென்று மணக்கோலத்தில் நின்றால் ரங்கராஜன் உடல்நலம் பாதிக்கப்படுமோ என பதறி எழுந்தவள், தனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தாள். கைகளில் மெல்லிய நடுக்கம்.
அதைக் கண்ட குமரன் என்ன நினைத்தானோ பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன், எழுந்து நின்றான். “மனோ, வா போகலாம்…” என அவன் வெளியேற, “அத்தை, வீடு வரைக்கும் போய்ட்டு வரோம்…” என சிந்துவிடம் உரைத்துவிட்டு இருவரும் அங்கே விரைந்தனர்.
ரங்கராஜன் வீட்டில் இல்லை. செங்கல் சூளைக்கு சற்று நேரத்திற்கு முன்புதான் கிளம்பி இருந்தார். ராதாமணி மட்டுமே வீட்டிலிருக்க, இருவரும் சென்று இறங்கினர். ஷெண்பா உள்ளே வரத் தயங்க, திவாகர் அவளது கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்து அழைத்துச் சென்றான்.
வாகனச் சத்தம் கேட்கவும் அவர் அறைக்குள்ளிலிருந்து வெளியே வரவும் இவர்கள் கூட்டத்திற்குள் நுழையவும், சரியாய் இருந்தது. மகனை மணக்கோலத்தில் கண்டதும் அவருக்கு ஒரு நொடி எதுவுமே புரியவில்லை.
“டேய் திவா… என்னடா இது?” எனக் கேட்டவரின் பார்வை ஷெண்பாவிடம் அதிர்ச்சியுடன் நிலைத்தது. மகன் செயலின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க ஆரம்பிக்க, “டேய்… என்ன பண்ணீட்டு வந்து நிக்கிற டா… உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாரே டா…” எனப் பதறிப் போய் பேசியவர் அவர்கள் அருகில் வர, மனோவும் குமரனும் உள்ளே நுழைந்தனர்.
“டேய்… பதில் சொல்லு டா!” என அவர் மகனைப் போட்டு உலுக்கினார். அவரையும் அறியாது விழிகள் நீரால் நிரம்பத் துவங்கின. திவாகர் இப்படி திருமணம் செய்துகொண்டு வருவான் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. அத்தனைப் பொறுப்பானவன், வீட்டையும் தொழிலையும் கவனித்துக் கொள்கிறான் தன் மகன் என நினைத்த நினைப்பில் இவன் மண்ணை வாரி இறைத்துவிட்டானே என உள்ளம் தவித்தது.
“மனோ, என்னடி பண்ணிட்டு வந்து நிக்கிறான் உங்கண்ணேன். நீயும் இதுல உடந்தையா டி? வாயைத் தொறந்து சொல்லு டி!” என ராதா மகளைப் போட்டு உலுக்கினார். அவருக்குப் பதில் சொல்லவில்லை பெண்.
“மனோ…” என்றவர் விழிகளிலும் குரலும் கலங்க, “ம்மா… எனக்கு எதுவும் தெரியாது மா. அங்கேயும் இப்படித்தான் கல்யாணம் பண்ணீட்டு வந்து நின்னான் மா!” என்று இவள் தேம்பினாள். ராதாவிற்கு நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. படபடவென வந்தது.
“நீ உட்காரு மா… பதட்டப்படாத!” என அவரை சமாதானம் செய்தாள் மகள்.
“உங்கப்பாவுக்குப் ஃபோன் பண்ணு மனோ… அவரைக் கூப்பிடு!” அவர் பதகளிப்புடன் கூறவும், குமரன் அவருக்கு அழைத்தான். அவனது அழைப்பை யோசனையுடன் ஏற்று ரங்கா காதில் பொருத்தினார். செங்கல் சூளைக்குச் சென்று கொண்டிருந்தார் அவர்.
“வீட்ல பிரச்சனை, கொஞ்சம் கிளம்பி வாங்க…” என்றவன் நடந்ததை விவரிக்கவில்லை. அவன் குரலின் பேதத்தை உணர்ந்தவர், “வரேன்…” என அழைப்பைத் துண்டித்தார்.
ராதா செய்வதறியாது இருக்கையில் தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார். மகன் திருமணம் செய்து வந்ததை விட சொக்கநாதனின் மகளை திருமணம் செய்ததுதான் அவருக்கு பயம் நெஞ்சைக் கவ்வியது. இப்போதுதான் மனோஹரி செயலிலிருந்து கணவர் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நேரத்தில் திவாகரின் செய்கை அவரை உலுக்கியிருந்தது. ரங்கராஜன் வீட்டிற்கு வந்து சேர எடுத்துக்கொண்ட பத்து நிமிடங்களில் முள்ளின் மேல் நிற்பது போலிருந்தார் ராதா.
ரங்கா உள்ளே நுழைய, அனைவரிடமும் அத்தனை அமைதி. அவர் எதுவும் பேசாது எல்லோரையும் பார்த்தார். பார்வை மகனையும் அவளருகிலிருந்த ஷெண்பாவைக் கண்டதும் அங்கேயே நிலைக்குத்தி நிற்க, நடந்தது அவருக்கு மெதுவாய் புரிந்து, புத்தியில் உறைத்தது. மகளின் செயலிலே பாதியாய் உருக்குலைந்தவர், மகனும் தன் பேச்சை, தன்னை மீறிவிட்டான் என்று உறைத்ததும், மொத்தமும் உடைந்து போனார். அவனிடம் விளக்கம் கேட்கவோ, அடிக்கவோ தோன்றவில்லை. அவன் முடிவுதான் பெரிது என நின்றவனிடம் பேச முடியும் எனத் தோன்றவில்லை. பார்வையால் அவனைச் சுட்டார்.
தாயை சந்திக்க முயன்ற திவாகரால் தந்தையின் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் பார்வையின் இயலாமை இவனைச் சுட்டது. இத்தனை நேரமிருந்த தைரியமும் உறுதியும் குலைய ஆரம்பித்தது. தலையைக் கவிழ்த்தான்.
“அப்பா…!” என ஓடிச்சென்று அவரது கையை ஆதரவாகப் பிடித்தாள் மனோ. அவர் பேசாது காத்த மௌனத்தின் ஒவ்வொரு நொடியும் அனைவரிடத்திலும் பூகம்பத்தைக் கிளப்பியது.
குமரன் அவரை வேதனையுடன் பார்த்தான். அவர்களுக்கு இடையே மனக்கசப்புகள் நிகழ்ந்தாலும், இந்த மனிதருக்கு ஒன்றென்னும் போது அவனுக்கும் துடித்துத் தொலைத்தது. இப்படியெல்லாம் இவர் உடையக் கூடுமென எண்ணித்தானே திவாகரிடம் கோப முகத்தைக் காண்பித்து எச்சரித்தான். இருந்தும் இவன் இப்படி செய்வான் என கனவிலும் எண்ணவில்லை. ஷெண்பாவிடம் பேச முயற்சிப்பான், அவ்வளவுதான் திவா என அவன் நினைத்திருந்த அனைத்திற்கும் அப்பாற்பட்டுப் போனான்.
எதுவுமே பேசாதவர் கண்களிலிருந்த கண்ணாடியை அகற்றி சட்டைப் பையில் வைத்தவாறு அறைக்குள் நுழைய இரண்டெட்டு வைத்தார், நடை தள்ளாடியது. மூச்சு விட லேசாய் சிரமப்பட்டவரின் முகம் வெளுத்துப் போக, அவர் கீழே விழும்முன்னே குமரன் தாங்கியிருந்தான்.