உள்ளம் – 25.1

வெளிச்சம் மங்கி இரவு கவிழத் தொடங்கியிருந்த மாலை பொழுது. வெளியே சென்ற மூவரும் இன்னும் வீடு திரும்பவில்லை என சிந்து திண்ணையிலே அமர்ந்துவிட்டார். அவரது பார்வை நொடிக்கொரு முறை தெருவை மொய்த்தது.

மனோஹரி சிந்து கூறியவற்றிலிருந்து இன்னுமே மீளவில்லை. பெரியவர்தான் அவளை அதட்டி உருட்டி சமாதானம் செய்தார். இருந்தும் அவளது விழிகளில் ஈரம் கோர்க்காமல் இல்லை.

சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு முகத்தை கழுவினாள். இப்போது அழுத தடயங்கள் மறைந்திருந்தன. கொஞ்சம் தெளிவாகியிருந்தாள் பெண். இருந்தும் கணவனை ஒரு முறை பார்த்தால் மனது இன்னுமே ஆசுவாசம் அடையுமென அடம்பிடித்தது. அவன் அருகாமையில் அமைதியாய் அவனுள் பொதிந்திடும் எண்ணம். ஆனால், அவளைக் காக்கவைக்கவென்றே குமரன் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

அவன் சிந்துவிற்கு அழைத்து இரவு உணவு வெளியே உண்டுவிட்டு வருவதாகக் கூறினான். அதனால் மாமியாரும் மருமகளும் மட்டும் அமர்ந்து உண்டனர். மனோஹரி ஏதோ பெயரளவில் சாப்பிட்டு எழுந்தாள்.
உணவு உள்ளே இறங்கவில்லை அவளுக்கு. கணவன் முகத்தைக் காண வேண்டும் என்றொரு உந்துதல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

ஒரு வழியாய் ஊரைச் சுற்றி முடித்து மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். விக்ரம், “டைமாச்சு, நாங்க வீட்டுக்கு கிளம்புறோம் சிந்துமா!” என மகிழுந்திலிருந்தவாறே உரைக்க, குமரன் வாகனத்திலிருந்து இறங்கினான்.

“பார்த்து பத்திரமா வீட்டுக்குப் போங்க. எங்கேயும் சுத்தாம நேரா வீட்டுக்குப் போங்க!” என அவர் கண்டிப்புடன் கூற,
“வீட்டுக்குத்தான் சிந்து மா போறோம்‌…” என தலையை நான்கு புறமும் ஆட்டினாள் ஷெண்பா. அவர்கள் இருவரும் விடைபெற, சிந்து உள்ளே நுழைந்தார்.

குமரன் அறைக்குள் நுழைய, மனோ அமைதியாய் அமர்ந்திருந்தாள். அவன் வந்ததும் நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவளின் வதனத்தில் என்ன இருந்தது என கணவனால் கணிக்க முடியவில்லை. மனைவி கோபமாய் இருப்பாள் அவளை சமாதானம் செய்ய வேண்டும் என எண்ணத்துடன்தான் வந்தான் குமரன். ஆனால், அவன் எதிர்பார்த்தது போல ஒரு பேச்சோ, செய்கையோ அவளிடம் இல்லை. இருந்தும் முகம் ஏதோ அசாதாரணமாய் அவனுக்குத் தோன்றியது. வெளியே நீண்ட நேரம் சுற்றியது கையில் வலியெடுக்க முகத்தைச் சுளித்தான்.

அணிந்திருந்த உடை அசௌகரியத்தைக் கொடுக்க, சட்டையைக் கழற்ற முயன்றவனுக்கு மனைவி உதவினாள். குமரன் உடைமாற்றிவிட்டு கழிவறை சென்று தன்னை சுத்தம் செய்து வந்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளியே சென்று வந்தது கொஞ்சம் மனதிற்குப் புத்துணர்ச்சியை அளித்திருந்தது.

கட்டிலில் சாய்ந்தமர்ந்தவன் பார்வை மனைவியைத் தேட, சிறிது நேரத்தில் அறைக்குள் குவளையுடன் நுழைந்தாள்.
“டேப்லெட்டைப் போடுங்க…” என நீரையும் மாத்திரையும் அவன் முகம் பார்க்காது கூறி நீட்டினாள். யோசனையுடன் வாங்கி மாத்திரையை குமரன் விழுங்க, இவள் விளக்கை அணைத்துவிட்டு வந்து அவனுக்கருகில் படுத்தாள்.

அவளிடம் பேச வேண்டும் என இவன் எண்ணியிருக்க, மனோ உறங்கச் சென்றதை பார்த்துப் பெருமூச்சு விட்டான். ஏகக் கோபத்தில் இருக்கிறாள் என மூளை கூற, சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தான்.

அங்குமிங்கும் அசைந்து கொண்டேயிருந்த மனோஹரி உறங்கவில்லை என்பதை உணர்ந்தவன் எட்டி மேஜைக்கு அருகிலிருந்த விளக்கை உயிர்ப்பிக்க, அறையில் வெளிச்சம் படரத் தொடங்கியது.

சில நிமிடங்களில் அவளிடம் தேம்பல் வெளிப்பட்டது. அதில் பதறியவன், “ஏய் மனோ, அழறீயா டி?” எனக் கேட்டு அவளது இடையில் கைக்கொடுத்து முயன்று தன்புறம் திருப்ப, நொடியில் எட்டி அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்தவளிடம் மெல்லிய விசும்பல் வெளிப்பட்டது.

“மனோ, எதுக்கு இந்த அழுகை, என் முகத்தைப் பாரு டி!” என அதட்டி தனது முகம் பார்க்கக் கூறியவனின் குரலிலும் பரிதவிப்புதான். இந்தப் பெண் தாங்கள் மூவரும் தனியாகச் சென்றுவிட்டதால்தான் அழுகிறாளோ? என்ற எண்ணம் அவனுள்.

மனோஹரி குமரனை இறுக அணைத்து அவனது கழுத்தில் முகம் புதைத்திருக்க, அவளது சூடான கண்ணீர் கணவனை நனைத்தது.

“மனோ!” என அதட்டலிட்டு வலுக்கட்டாயமாக அவளது முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான் கணவன்.
விழிகளில் ஈரம் படர அவனைப் பார்த்தாள்.

“என்னடி?” எனக் கேட்டு அவளிடமிருந்த கையை உருவி கண்ணீரைத் துடைத்தான் குமரன்.

“அத்தை சொன்னாங்க!” என்றவள் ஒரு நொடி உதட்டைக் கடித்து அமைதியாய் இருந்தாள். பின்னர், “அத்தை, உங்க வாழ்க்கையில நடந்ததை எல்லாம் சொன்னாங்க. கேட்டதும் ரொம்ப கஷ்டமா போச்சு!” என்றவளின் விழிகளில் உவர் நீர் வழிந்தது. அவளது பேச்சுப் புரியாது ஒரு நொடி விழித்தவன் பின்னர் அதன் சாராம்சம் உறைத்ததில் நன்றாய் சாய்ந்தமர்ந்தான்.

இப்போது ஒருக்கரம் மனைவியை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்டது. உடல் தளர்ந்து போனது. மனம் அவளுடைய அக்கறையில் அழுகையில் கனிந்து போக, பாசமாய் அவளைப் பார்த்தான். கடந்து வந்த பாதை அத்தனை கொடூரமானதுதான். இருந்தும் என்றோ ஒருநாள் ஏற்ப்பட்ட வலிக்கு அருகிலிருப்பவளின் கண்ணீர் மருந்திட, மனதை அது வருடிப் போனது.

“ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?” விழிகளில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டே அவள் வினவ, ஆமாம் என்று கூறாது இல்லையென தலையை ஆட்டாது புன்னகைத்தான் ஆடவன்.

“சொல்லுங்க…” மனோ மீண்டும் வினவ, “தெரியலை, கஷ்டம்தான்! இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனால் அதெல்லாம் கடந்து வந்தாச்சு. நினைச்சு வருத்தப்படுறதுல என்ன ஆகப்போகுதுன்னு நினைக்க மாட்டேன்!” என்றவன் கைகள் மனோவின் கலைந்த கூந்தலை மேலும் கலைத்துவிட்டது.

“சாரி, நடந்தது எதுவும் தெரியாமல் நான் உங்களை நிறையதடவை ஹேர்ட் பண்ணி இருக்கேன்!” என்றவள் அவனது தோளில் தலை சாய்த்தாள்.

“விடு டி, அதுக்கெல்லாம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் காரணம்…” என்றவனை அமர்ந்தவாக்கிலே நிமிர்ந்து பார்த்தாள் மனோஹரி.

“உங்களோட அண்ணனும் தங்கச்சியும் ரொம்ப சுயநலவாதிங்க. நடந்தது புரிஞ்சுக்கிற வயசுல இருந்தாலும் இத்தனை வருஷம் உங்களைப் போட்டுபடுத்திட்டாங்க!” என அவள் கோபத்திலும் ஆதங்கத்திலும் உரைக்க, இவன் முகத்தில் புன்னகை.

“அவங்களோட நிலைமைல இருந்து நீ யோசிச்சா, அவங்க நியாயம் புரியும் மனோ உனக்கு!” குமரன் அவர்கள் இருவரையும் விட்டுக் கொடுக்காது பேச, அவனை முறைத்தாள் மனைவி.

“அதானே! அவங்களை விட்டுக்கொடுத்து பேச மாட்டீங்களே! உங்க தங்கச்சி ரொம்ப மோசம், பிடிவாதக்காரி…” என ஷெண்பாவைத் தாளித்தவள் நினைவு வந்தவளாக, “இன்னைக்கு என்னை கழட்டிவிட்டுட்டுப் போனதுக்கும் அவதான் காரணம். இதான் சாக்குன்னு நீங்ளும் எஸ்கேப் ஆகிட்டீங்க. ஒரு மனுஷி வேலையைக்கூட வேணாம்னு விட்டுட்டு உங்களுக்காக வீட்ல இருந்தா நீங்க கூடப் பொறந்தவங்களைப் பார்த்ததும் பொண்டாட்டியை மறந்துட்டு அவங்கக் கூடப் போய்ட்டீங்க!” என மனோவின் வார்த்தைகள் சூடாய் வந்தன. கணவன் மீது குற்றப்பார்வை வீசினாள்.

error: Content is protected !!
Scroll to Top